நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் பெரும் சவாலாக அமைந்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினரிடம் நிதிப் பலமும் ஆயுத பலமும் தாராளமாக இருக்கின்றன. இதுதவிர, பொலிஸ் சேவையில் உள்ள சிலர் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு உதவுகின்றனர்.
தகவல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துகின்றனர். இதைவிட, படைத் தரப்பிடமிருந்து ஆயுதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தவிர, போதைப்பொருள் வர்த்தகத்துடனும் பாதாள உலகக் குழுவுடனும் தொடர்புபட்டவர்கள் அரசியலிலும் உள்ளனர்.
எனவே இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பலமாகப் போராட வேண்டியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் 23ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவன இயக்குநர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்தார்.
அந்த சந்திப்பின் நோக்கம், போதைவஸ்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு ஊடகங்களின் பூரணமான ஒத்துழைப்பைக் கோருவதும் போதை ஒழிப்பு நடவடிக்கையை தேசிய ரீதியில் முன்னெடுக்கின்ற செயற்றிட்டத்தைத் தெளிவுபடுத்துவதுமாகும்.
குறித்த சந்திப்பில் போதைப்பொருள் வியாபாரம் - பாதாள உலகக் குழு - அவர்களிடம் இருக்கக்கூடிய நிதி மற்றும் ஆயுத பலம் படைத்தரப்பிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்த ஆயுதங்கள் - பொலிஸார் சிலர் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு தகவல்களை வழங்குகின்ற நிலைமைகள் என்ற எல்லைக்குள் நின்று, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க தனது கருத்துக்களை விபரித்திருந்தார். நயத்தக்க நாகரிகம் கருதி சில உண்மைகளை அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.
அதில் இந்த நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் இத்துணை தூரம் விஸ்பரூபமெடுப்பதற்குப் பின்னணியில் ஆட்சித் தரப்புகள் இருந்துள்ளன என்ற தகவல் ஜனாதிபதி அநுரவின் உரைக்குள் புரையோடியிருந்ததைக் காண முடிந்தது.
இதுதவிர, போதைப்பாவனைக்கு அடிமையானவர்களின் பரிதாபகரமான நிலைமைகள் மற்றும் உழைத்து தமது வீட்டைப் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகள் தமது வீட்டில் உள்ள உடைமைகளைக் களவெடுத்து போதைப்பொருள் வாங்குவதன் காரணமாகப் பெற்றோர்கள் அடைந்திருக்கக்கூடிய அவலங்களை விபரித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க; போதைவஸ்துக்கு குறித்த சில பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் ஆளாகியுள்ளனர் எனக் கூறியபோது, போதைவஸ்தை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற மனநிலை அனைவரையும் ஆட்கொண்டது.
ஆக, எங்களை நாங்களே அழிப்பதாக இருக்கக்கூடிய போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு ஏதோவொரு வகையில் அனைவரும் பங்காற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்
இதை நாம் செய்யத் தவறுவோமாயின், அவரவர் தத்தம் சொந்த வாழ்க்கையிலும் போதைப் பயன்பாட்டால் ஏற்படும் அவலத்தைச் சந்திக்க நேரிடலாம்.
ஆசிரியர் வலம்புரி பத்திரிகை 25.10.2025
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.