வல்வெட்டித்துறை இணையத்தின் 15 வது ஆண்டு நிறைவு - ச. ச. முத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2026 (திங்கட்கிழமை)
பதினைந்து ஆண்டுகள். மிகப் பிரமிப்பாக இருக்கிறது. இந்த பதினைந்து வருட வல்வெட்டித்துறை இணையத்தின் பயணமும் அதனுடைய தொடர்ந்த உழைப்பும் நேர்த்தியும். இந்த தொடர் பயணத்தின் முன்னவராக இருந்து இந்த இணையத்தை ஆரம்பித்து நடாத்தி கொண்டிருப்பவருக்கும், அவருடன் கூட இருந்து இந்து சமூகத்தின் இந்த ஊரின் செய்திகளை கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து செயற்படும் வல்வெட்டித்துறை இணைய குழுவினருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இனி விசயத்துக்கு வருவோம்.
ஒரு இணையத்தின் பதினைந்து ஆண்டு பயணம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்போம்.
ஒரு சமூகம் அல்லது ஊர் என்பது வெறுமனே அது கட்டி எழுப்பும் கட்டிட உயர்வுகளாலோ அல்லது அது நிகழ்த்தும் விமரிசையான விழாக்களாலோ அல்லது அந்த ஊர் அளிக்கும் தங்கப்பதக்க பரிசுகளாலோ வரலாறு அளவிடாது.
மாறாக அந்த ஊர் அல்லது சமூகம் வெளிப்படுத்தும் கருத்துகளின் கனதியை வைத்தே அந்த சமூகத்தின் வரலாற்று வகிபாகம் கணக்கிடப்படும்.
அந்த வகையில் ஒரு ஊரின் செய்திகளை அது சார்ந்த நிகழ்வுகளை வெளிட்டு அத்துடன் தமது கருத்துகளையும் ஒரு இணையம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக பதிந்து கொண்டே வருவது என்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய ஒரு பயணம்தான்.
இன்னுமொரு விடயம் இந்த இணையத்தின் மிக மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் அது எந்த வொரு கழகத்தினதும் செய்திகளை அதிகம் பிரசுரித்து, அந்த கழகத்தின் ஆட்களை பார்வையாளராக இழுக்கும் உத்திகள் எதுவும் செய்வதில்லை. இத்தனைக்கும் இந்த இணையத்தின் பொறுப்பாளரும் வல்வையின் ஒரு கழகத்தின் உறுப்பினர்தான். வல்வையில் இருந்கும் வல்வையில் இருந்து இப்போது புலம் பெயர்ந்திருக்கும் எல்லாருக்கும் அவர்களின் பெயர் அடையாளத்துக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் ஏதோ ஒரு கழக அடையாளமும் இருக்கும்.
வல்வெட்டித்துறை இணையத்தின் பொறுப்பாளருக்கும் ஒரு கழக அடையாளம் இருக்கு. ஆனால் நான் கவனித்திருக்கிறேன். அவர் எந்த தருணத்திலும் தான் சார்ந்த கழகத்தின் செய்திகளை வலுக்கட்டாயமாக இந்த இணையத்தில் திணித்தது கிடையாது. இந்த நேர்மை மிகவும் பாராட்டதக்கது. நாமும் பின்பற்ற கூடியது.
இன்றைக்கும் நான் எழுந்ததும் பார்ப்பது இந்த இணையத்தையே.நான் மட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் தினமும் எழுந்ததும் எங்கிருந்தாலும் எமது மண்ணின் நாம் வேர்விட்டெழுந்த ஊரின் செய்திகளை நிகழ்வுகளை பார்ப்பது இந்த இணையத்தை கிளிக் செய்தே என்று அறியும்போது இந்த இணையம் என்ன ரசவாதம் செய்து இப்படி ஈர்த்து வைத்திருக்கிறது என்று எண்ண தோன்றும்.
புகைப்படங்களையும் நேரலை ஒளிபரப்புகளையும் வீடியோக்களையும் வெளிட்டு பார்வையாளர்களை ஊரவர்களை ஈர்க்க என்னென்னவோ செய்கின்றபோது, வல்வெட்டித்துறை இணையம் அது வெளியிடும் கருத்துகள் செய்திகள் நிகழ்வுகள் பற்றிய பகுதியில் மேலே ஒரு தலைப்பு அதற்கு ஒரே ஒரு போட்டோ மட்டுமே.
முழுக்க முழுக்க எழுத்து வடிவத்திலேயே செய்தியோ நிகழ்வோ இருக்கிறது. ஆனாலும் போட்டோக்களை பகுதி1 பகுதி 2 (நான் இதை தவறு கூறவில்லை) என்று நீட்டி வெளியிடும் இணையங்களை விட அதிகமான பார்வையாளர்கள் அதிகமான ஊரவர்கள் பார்ப்பதன் காரணம் வல்வெட்டித்துறை இணையம் வெளியிடும் செய்திகளின் நேர்த்தியும் உண்மையும்ஆகும்.
இதனை தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களாக அச்சரம் பிரழாமல் நடாத்தி வருவது இந்த இணையத்தின் பொறுப்பாளருக்கும் அவருடன் இணைந்து பணிபுரியும் பெருமைக்குரிய ஒன்றாகும், எமக்கும்தான்.
ஒரு ஊரின் இணையமாக ஊருக்கான இணையமாக ஆரம்பித்து, இன்று ஊரின் பெருமைக்குரிய அடையாளம் என்ற இடத்தை நோக்கி வெற்றிகரமாக பயணப்பட்டுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை இணையத்துக்கு மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நாம் எல்லோரும் அந்த கடற்கரை அலை சத்தத்தையும், சோளக காற்றையும் வாடைகாற்றின் தலைவருடலையும், எங்கள் ஊரின் அன்னியோன்னியமான உறவுமுறை அழைத்து கதைக்கும் மண்ணையும் விட்டு, தொலைவில் வெகு தொலைவில் வெகு வெகு தொலைவில் இருந்தாலும் வல்வெட்டித்துறை இணையம் தன் எழுத்தால் வெளியீட்டால் எம்மை அந்த அற்புதமான மண்ணுடனேயே இணைத்து வைத்திருக்கிறது.
அதற்காக வல்வெட்டித்துறை இணையத்துக்கு நன்றிகளும்தான்.
சச்சிதானந்தவேல் முத்து
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஆறுமுகம் ராஜ்குமார் (Canada)
Posted Date: October 20, 2026 at 21:31
முத்து,
இந்தக் கருத்தாக்கம், இவ் இணையத்தைத் தொடுபவர் பலரின் உள்ளக்கிடக்கை,
உங்கள் வாய் உதிர்ந்திருக்கிறது.
நன்றிகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.