நாளை இந்துக்களின் சிறப்புப் பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு தினம் ஆகும். ஆடிப்பிறப்பையொட்டி ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
ஆடிப்பிறப்பு
இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. முன்னோர்கள் சூரியனின் வடதிசை மற்றும் தென்திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப்பிறப்பு நாளாகக் கொண்டாடி வந்திருந்தார்கள். அதுவே இப்பொழுதும் தொடர்ந்துவருகின்றது.
இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது. அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (நாளை) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது. இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆடிப்பிறப்பு நாளில் இங்கு யாழ்பாணத்தில் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்க்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுவது வழமையாகும்.
ஆடிப்பிறப்பு பற்றி நவாலியூர் சோமசுந்தரப்புலவர்.......
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.