"ஒருபோதும் நான் என் தந்தையின் மகளில்லை" - பாமினி செல்லத்துரை (பாகம் 1)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2026 (வியாழக்கிழமை)
எனது மகளாகிய பாமினி செல்லத்துரை எழுதிய Never My Father’s Daughter என்கின்ற ஆங்கில நாவலை தமிழாக்கம் செய்து நான்கு பாகங்களாக வெளியிடுகிறேன். வாசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
சபா.இராஜேந்திரன்
""ஒருபோதும் நான் என் தந்தையின் மகளில்லை" - - பாமினி செல்லத்துரை
பாகம் 1
முகவுரை – வெளிச்சங்கள்
பிரகாசித்தபோது
அருவி,
25 ஜூலை 2025, மெல்பேர்ண்
இருபத்தி நாலு மணித்தியாலங்களுக்கு முன் நான் புயலென வெளியேறிய வீடு இதுவல்ல. அன்பையும் கடுமையான உழைப்பையும் சிரிப்பையும் கலந்து மிகுந்த சிரமத்துடன் அம்மா வாழ்ந்த வீடு இதுவல்ல. அந்த வீட்டிலே அடுப்படி எப்போதும் சூடாக இருக்கும், இருப்பதற்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும், அன்பாகக் கேட்பதற்கு ஒரு காது இருக்கும். அத்துடன் சிரிப்பலைகள் ஒருபோதும் தூரத்தில் இருக்கவில்லை.
ஆனால் இப்போது இந்த வீடு ஒரு குற்றவியல் நாடகத்தில் வரும் ஒரு காட்சி போலுள்ளது. கார் நிறுத்துமிடத்தில் சிவப்பும் நீலமுமான வெளிச்சங்கள் விட்டுவிட்டு எரிந்து கொண்டிருந்தன; கட்டப்பட்டிருந்த மஞ்சள் நாடாவிற்கு வெளியே திரண்டிருந்த அயலவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன நடந்ததென்று அறிய முயன்று கொண்டிருந்தார்கள். முன் கதவு திறந்திருந்தது. அதனூடாக பொலிஸ் துப்பறிவாளர்கள் உள்ளும் வெளியும் போய்வந்தபடி இருந்தனர். அந்த வீட்டிலிருந்த அன்பையும் சௌகரியமான சூழ்நிலையையும் காணமுடியவில்லை. அங்கே ஒரு விதமான அச்சமூட்டும் அசைவின்மை நிலவியது.
“Brad! அம்மாவிடம் என்னை உடனே அழைத்துச்செல். மினைக்கடாதே. சும்மா அப்படியே நிற்காதே” Zoe இடம் இருந்து போனில் வந்த செய்தியைக் கேட்டதும் Brad ஐப்பார்த்து அழுதுகொண்டே நான் கத்தியதைக் கேட்டதும் அவர் என்னை ஒரு ஆச்சரியத்துடன் உற்றுப்பார்த்ததையிட்டு அவரைக் குற்றம் சொல்லமுடியாது.
ஒரு சில நொடிகளுக்கு முன்பாகத்தான் அடுப்படிக்குள் அங்கே அடுப்பிலே வேகிக்கொண்டிருந்த இறைச்சியில் இருந்து வந்த இன்சுவையான மணத்தை நுகர்ந்துகொண்டே Brad இற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே நன்றியுடன் சொன்னேன், “ இது நல்ல மணமாயுள்ளது. அதிக நேரமெடுக்காமல் குளித்துவிட்டு வருகிறேன்”
குளியலறையை நோக்கி நடந்தவாறே எனக்குள்ளே யோசித்தேன். “நான் எப்படி இந்தளவு அதிர்ஸ்டசாலியானேன்?” இன்றிரவு நான் Brad ஐ எதிர்பார்க்கவில்லை. ஒருவித சோகத்துடன் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். நேற்றைய தினம் அம்மாவுடன் நான் கடுமையாக முரண்பட்டபடியால் இன்று தனிமையில் இருப்பதற்கு நான் கஸ்டப்படுவேனென அவருக்குத் தெரியும்.
அம்மாவைப்பற்றி நினைத்தவுடனேயே எனது கோபம் உடனடியாக உச்சத்திற்குச் சென்றது. பகல் முழுவதும் அடக்கி வைத்திருந்த கோபம் இப்போது பொங்கி எழும்பியது. அவவை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
அப்போதுதான் எனக்கு அறிமுகமில்லாத ஒரு போனில் இருந்து அழைப்பு வந்தது. நான் அதை அலட்சியப்படித்தினேன். உடனடியாக திரும்பவும் அடித்தபடியால் எடுத்தேன்.
“ஹலோ!” நான் சத்தமிட்டேன்.
“ அருவி அருவி” என்று சொல்லியபடி யார் அழுவது?
“அருவி, நான் Zoe பேசுகிறேன். உடனடியாக வா. அம்மா….”
“ இனிமேல் ஒருபோதும் அவவைப் பார்க்க மாட்டேனென்று அம்மாவீற்கு சொல்”
“ அம்மா இறந்து போனா. அருவி. அம்மா இறந்து போனா”
நான் காரிலிருந்து இறங்கியதும் Zoe ஓடிவந்து என்னைக் கட்டி அணைத்தாள். அப்போது நல்ல கருப்பான கூந்தலுடன் சூரிய ஒளியில் பிரகாசிக்கும் பூமியின் நிறத்தைக்கொண்டவளுமான ஒரு வசீகரமான இளம்பெண் எனக்கு முன்னே வந்து கேட்டாள், “நீங்கள்தான் சீதா முருகதாசின் மகளாகிய அருவி முருகதாசா?”
அவள் என்னை நெருங்கும்போது அவள் என்னைப்போலவே இருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அந்த ஒப்பீடு அத்துடன் நின்றுவிட்டது,
அவளுடைய குரலில் இருந்த ஆளுமை, ஒரு கர்வத்துடன் நிமிர்ந்தபடியான நாடி, பொலிஸ் உத்தியோக சின்னம் இவையெல்லாம் தனது இனம், சட்டம் ஆகியவற்றை தனது தோளிலே சுமந்து கொண்டுள்ள பெண் என்று அடையாளம் காட்டின.
அந்த கதவைத் தாண்டி உள்ளேபோய் அம்மாவிற்கு என்ன நடந்ததென்பதைப் பார்க்க விருப்பமில்லாமல் அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து அவள் கருணையுடன் சொன்னாள், “ நான் துப்பறியும் துப்பறிவாளர் Amantha Williams. நீங்கள் உள்ளே போய் அந்த உடம்பை அடையாளம் காட்டவேண்டும்”
நான் அவ்வளவு தடுமாறாமல் இருந்தது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. உடனடியாக Brad என்னை ஒரு பக்கம் தாக்குப் பிடிக்கவும் மறுபக்கம் Zoe பிடிக்கவும் நான் மெதுவாக முன்னே சென்றேன். வாசல் வழி மிகுந்த குறுகியதாயும் பயமூட்டுவதாயும் இருந்தது. முக்கியமான படுக்கை அறையைத்தாண்டி இடதுபக்கம் அடுப்படியும் வலதுபக்கம் வரவேற்பறையையும் கொண்ட மண்டபத்தை அடைந்தோம். பின் திண்ணக்குப் போகும் கதவு சிறிதே திறந்திருக்க அதனூடாக வந்த மெல்லிய குளிர் காற்று எனது பற்களைத் தாளம் போடவைத்தன.
சுற்றிப்பார்க்கிறேன். அம்மாவைக் காணவில்லை. துப்பறிவாளர் Williams அடுப்படியை நோக்கி நடந்தபடியே என்னை வருமாறு சைகை செய்தார்,
நான் Brad ஐ திரும்பிப் பார்க்கிறேன். அவருடைய ஆதரவை எனது களைப்படைந்த கண்கள் தேடின. அவருடைய முகமும் இறுக்கமாயிருந்தபோதிலும் என்னை ஊக்கிவிப்பதற்காக ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னை அணைத்தபடி அடுப்படியில் உள்ள உயரமான மேசைக்குப் பின்னால் கொண்டுசென்றார்.
அடுத்ததாக எனக்குத் தெரிந்ததென்னவென்றால் அங்கே நிலவிய நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு கிளம்பிய யாரோ ஒருவருடைய துயரக் கதறல். நான் சிந்திக்க அவகாசம் வேணும் இந்தக் கதறலை நிற்பாட்டுங்கள் என்று சொல்ல நினைத்த எனக்கு நான்தான் அப்படிக் கதறினேன் என்பது புரியச் சிறிது நேரம் எடுத்தது. Brad இன் கைகளிருந்து என்னை பலவந்தமாக விடுவித்துக்கொண்டு எனது வாயை கைகளால் இறுக மூடினேன். Brad என்னைத் திரும்பவும் ஒரு பக்கம் பிடித்துக்கொண்டு மறுபக்கம் பிடிக்கும்படி Zoe விற்கு சைகை செய்தார்.
இரண்டு பேருக்கும் நடுவில் நின்ற நான் அந்தக் கோரமான காட்சியைப் பார்த்தேன்: எனது அழகான, எதற்கும் வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்கும் சுயநலமற்ற எனது தாயார் தரையிலே இரத்த வெள்ளத்திலே நிலைகுலைந்து போயிருந்தார். அவவின் நடு வயிற்றிலே அவ ஆசையுடன் பொக்கிசமாய் வைத்திருந்த சமையல் கத்தியின் பிடி வெளியே தெரிந்து மின்னிக் கொண்டிருந்தது.
அத்தியாயம் 1 – ஒரு தமிழ்
பெண்ணின் கதை
அருவி,
13 ஜூலை 2025
மெல்பேர்ண் ஐ விட இது ஒரு வேறொரு உலகம்
மெல்பேர்ண் ஐப்பற்றி நினைத்தவுடன் எனது கிளினிக்கிலே நான் இருப்பது தெரிகிறது. என்னுடைய அடுத்த நோயாளியை அனுப்புமாறு எமிலிக்கு நான் சைகை செய்வதும், கணினியின் தட்டச்சைத் தட்டியபடி Augmentin என்ற மருந்தை இன்னொருமுறை எழுதுவதோ அல்லது இப்போது பிரபல்யம் அடைந்து வரும் Ozempic என்ற மருந்தை எழுதுவதோ என்ற சங்கடம் ஞாபகத்திற்கு வருகிறது.
கிருமிகள் அகறறப்பட்டுத் தூய்மையுடனுள்ள எனது ஆலோசனை அறைக்குள் எட்டிப்பார்த்து தனது குறும்புச் சிரிப்புடனும் சிமிட்டலுடனும்
வழக்கமாக நாங்கள் பகிர்ந்துகொள்ளும் பகிடியை எமிலி ஒருவேளை சொல்லக்கூடும்.
“ இவர் ஒரு பாசாங்குப் பேர்வழி – சுகமில்லை என்ற மருத்துவச் சான்றிதழிற்காக வந்திருக்கிறார்”
ஆனால் அங்கே மெல்பேர்ண் இல் உள்ள வாரண்டைற் என்ற இடத்தில் உள்ள யூக்கலிப்டஸ் மரம் தரும் இதமான குளிர் காற்றைச் சுவாசிப்பதற்குப் பதிலாக இங்கே உயிருடன் கலந்திட்ட அடர்த்தியான காற்று – பழுத்த மாம்பழங்களின் சுவை, காற்றிலே மிதந்து வரும் உப்பு வாசனை, இடைவிடாது தொடர்ந்து ஜொலிக்கும் சூரியனின் வெப்பத்தினால் அவிந்துபோன புழுதியின் வெப்பம்- இந்த வாசனைகள் எல்லாம் அன்னியம் போலத் தோற்றமளித்தாலும் எனக்குள்ளே புதைந்து கிடந்த ஏதோ ஒன்றை கலக்கி மேலே கொண்டுவந்தது.
இப்போது மாத்திரம் Brad இங்கிருந்தால்! அவருடைய ஞாபகம் என்னைச் சுழற்றி அடித்தது- அவரில்லாத வெறுமையை உணர்ந்தேன். ஆனால் மனதை அலைபாய விடுவதற்கான தருணம் இதுவல்ல என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். என்னோடு வருவதற்கு அவருக்கு விருப்பம். ஆனாலும் இது நான் தனி ஆளாகச் செய்யவேண்டிய வேலை என்று அவருக்குப் புரிந்திருந்தது. என் தலையை ஒரு உதறு உதறி பழைய நினைவுகளிருந்து விடுவித்து நடைபெறும் கணத்திற்குத் திரும்பிவந்தேன்.
இந்தத் தருணத்திற்காக எனது வாழ்நாள் பூராகக் காத்திருந்தேன். எதிர்பார்த்திருந்த அந்தத் தருணம் வந்துள்ளபோது எனது ஆர்வம் பயத்தினால் சூழப்பட்டிருக்கிறது. என்னில் ஒரு பகுதி இங்கே யாழ்ப்பாணத்தில் புதைந்து கிடக்கிறதென்று எனக்கு கனகாலம் தெரியும். அதை வெளியே கொண்டுவருவதற்கு நான் கங்கணம் கட்டியிருந்தேன்- நான் ஒரு சிறு பெண்ணாக இருந்த காலத்திலிருந்து என்னைத் திணறடித்த புதிரை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.
இப்போதும் அந்தச் சிறுபெண்ணின் சில இயல்புகள் என்னுள்ளே இருக்கின்றன. மிகுந்த ஆடம்பரமான Mary’s Lane Reception Centre என்ற அந்த வரவேற்பு மண்டபத்தில் ஒரு திரைச்சாலைக்குப் பின்னால் இருந்து அச்சமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்,
“அருவி! சும்மா ஆந்தைபோல் முழிக்காதே. வழியை மறிச்சுக்கொண்டு நிற்காமல் நல்லபிள்ளை போல நட”
சொன்னதோடு நிற்காமல் கீதா மாமி என்னை ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டா. என்னைக் குனிந்து பார்த்த அவ தன்னுடைய கருமையான கண்களைச் சிமிட்டிக்கொண்டு என்னில்மேல் பல குற்றங்களை அடுக்கினா.
“எங்கே உன் பொட்டு? . ஏன் உன்னுடைய காற்சட்டையுடன் நிற்கிறாய்? மற்றப்பெண்கள் மாதிரி பாவாடை கட்டியிருக்கவேணும். இது ஒரு கல்யாணம். ஓடிப்பழகும் பூங்கா இல்லை என்பது உனக்குத்தெரியாதா? எங்கே உன் அம்மா? சீதா! இவளுடைய தலையை ஒழுங்காகப் பின்னியிருக்கலாம்தானே?”
அப்போதுதான் நான் எனக்குள்ளே ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒரு நாள் நான் யாழ்ப்பாணம் போய் நாள் முழுவதும் ஒரு பாவாடை அணிந்து, நெற்றியின் மையத்திலே ஒரு பெரிய பொட்டிட்டு, எனது தோள்களிலே தொங்கிக்கொண்டிருக்கும் எனது இரட்டைப் பின்னல்களிலே நறுமணம் வீசும் மல்லிகை தவழ எப்படி ஒரு தமிழ்ப்பெண் இருக்கவேணுமோ அப்படியே இருப்பேன்.
இந்த ஆடம்பர மண்டபத்தில் இருக்கும் தமிழ் சிறுமிகளுடன் நான் போட்டி போட முயற்சிப்பதில் அர்த்தமில்லை. அவர்களுடைய தாய்மார் அவர்களைப் பார்த்து சத்தம் போடுவதில்லை. “அருவி! எழுந்திரு. நீ என்னை நேரம் கழித்துப் போகவைத்துவிடுவாய். சமையல்காரர் வரமுன்பேயே நான் அடுப்படிக்குப் போயாகவேண்டும். இல்லையேல் நான் என்னுடைய வேலையை இழக்கவேண்டியிருக்கும்”. நன்றாக விடியமுன்னேயே இந்தக் கூக்குரல்.
அவர்களுடைய தாய்மார் அவர்களை சோடிப்பதைவிட மேசையிலே சாப்பாடு வைப்பதும் தலைக்குமேலே ஒரு கூரை இருப்பதையும் முக்கியமாக நினப்பதில்லை.
அதிலும் முக்கியமாக அந்தச் சிறு பிள்ளைகளுக்கு தகப்பன்மார் இருந்தார்கள்.
கீதா மாமியின் கழுகுப்பார்வையில் இருந்து தப்பி யாருடைய கண்களிலும் படாமல் மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்தவாறே உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மனதைக்கவரும் சிறுபெண்கள் குதூகலமாய் சிரித்தபடி துள்ளி விளையாடுவதையும், ஒரு புது நண்பர் வந்தபோதோ அல்லது அவர்களுடைய சகோதரர்கள் மண்டபமூடாக அவர்களைத் துரத்தியபோதோ அவர்கள் எழுப்பிய அந்த இனிமையான கூச்சல் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தவாறே இருந்தேன்.
பலவிதமான நிறங்களுடன் கவர்ச்சிகரமாகப் பின்னப்பட்ட பட்டாடைகள் அணிந்த சின்னச்சிறு அப்சரஸ் போல இருந்தார்கள். அவர்களுடைய சின்னஞ்சிறு உடம்புகள் தங்கத்தினாலும் பட்டினாலும் மின்னிக்கொண்டிருந்தன.
அவர்கள் எல்லோரும் ஒரு சமையல்காரரின் உதவியாளரின் மகளாகிய என்னை ஒதுக்கவில்லை, ஒரு சிலர், ஆர்வத்தினாலோ அல்லது அன்பினாலோ, என்னையும் தங்கள் விளையாட்டில் கலந்துகொள்ள வருமாறு அழைத்தார்கள். ஆனால் என்னுடைய வெட்கம் அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும். அவர்கள் அந்த இடத்திலேயிருந்து திரும்பவும் எல்லா இந்து கல்யாணவீட்டிலே கலந்திருக்கும் வர்ணங்களுடனும் ஓசைகளுடனும் இணைந்துகொண்டார்கள்.
சமையல் ஊழியர்கள் மத்தியில் அவர்கள் ஒவ்வொருமுறையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு சிரிப்பு கலந்த செய்தி உள்ளது. நாதஸ்வர ஓசை படிப்படியாக உயர்ந்து தனது உச்சத்திற்குப் போகும்போது அம்மா அடுப்படியில் இருந்து மாயமாகிவிடுவா.
மாப்பிள்ளை கொடுத்த கூறைப்புடவையை மாற்றி அணிந்து வருவதற்கு மணப்பெண் அதிகநேரம் எடுத்ததினால் சிறிது எரிச்சலுற்ற ஐயர் “கெட்டி மேளம்! கெட்டி மேளம்!”என்று படபடப்புடன் கூற அந்தச் சமிஞ்சைக்காகக் காத்திருந்த நாதஸ்வர வித்துவான் அந்த மண்டபமே அதிரும்படியாக நாதஸ்வரத்தை வாசித்தார்.
கடவுள்களுக்கு அறிவித்தாகிவிட்டது. அவர்களும் ஆசிர்வதிப்பதற்கு தயாராகிவிட்டார்கள். வீணாக்குவதற்கு நேரமில்லை.
“மாப்பிள்ளை! இந்தத் தாலியை வாங்கிக்கொள்ளுங்கள். சீக்கிரம் “ ஐயர் கட்டளையிட்டார்.
எனக்குப் பக்கத்திலேயிருந்த அம்மா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். தனது தெய்வீகக்காப்புடைய மந்திரத்தைச் சொல்வதில் ஐயர் பிழைவிடலாம். ஆனால் அம்மா விடமாட்டா. ஐயர் சமஸ்கிருதத்தில் சொல்வதை அம்மா தமிழில் முணுமுணுத்தா.
மணப்பெண்ணின் கழுத்திலே தாலியை மாட்டி முதலாவது முடிச்சை மாப்பிள்ளை போட்டார்: நான் உன்மேல் அன்புசெலுத்தி உன்னை கடைசிவரை காப்பாற்றுவேன். வேறொருவரையும் இல்லை.
வேறொன்றும் செய்யத் தெரியாமல் ஒரு சந்தோஷமான சிரிப்புடன் மாப்பிள்ளையைப் பார்த்தபடியே மணமகள் இருந்தாள்: இந்த இரண்டாவது முடிச்சின்மூலம் எங்கள் இருவரது குடும்பங்களின் இணைப்பை உறுதிப்படுத்துகிறேன்.
இப்போது மாப்பிள்ளை தன்னைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளலாம். சோடிக்குப் பின்னே நின்றிருந்த மணமகனின் சகோதரியின் கடமை இப்போது.
மூன்றாவது முடிச்சுடன் அவர்களது இணைப்பை அவள் உறுதிப்படுத்தினாள்: மணமகனின் குடும்பமான நாங்கள் இனிமேல் உன்னை அக்கறையுடன் கவனிப்போம்
மணமகன் தனது அன்புக்குரியவளைக் கைகளால் பிடித்திருக்க கணவன் மனைவியாகத் தமது முதல் அடிகளை எடுத்துவைத்தனர். வேத மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வளர்த்த புனித அக்னியைச் சுற்றியபடி இந்த அடிகள் எடுத்து வைக்கப்படவேண்டும். அப்போதுதான் இந்த வேதாக்கினி அவர்கள் ஒருவருக்கொருவர் எடுத்துக்கொள்ளும் ஏழு சபதங்களுக்கும் சாட்சியாக இருக்கமுடியும்.
ஐயர் தாராளமாக ஊற்றும் நெய்யினால் தளதளவென்று எரியும் அந்த தெய்வீகச் சுவாலைகளை அந்த மணமக்கள் சுற்றி வரும்போது எடுக்கின்ற சபதங்கள் எல்லாவற்றையும் அம்மா எப்போதும்போல முணுமுணுத்தபடியே இருந்தா.
அந்த ஐந்தாவது சுற்றுத்தான் என்னை மிகவும் கவர்ந்தது: எங்களைப் பெருமை கொள்ள வைக்கும் கடமை உணர்வு கொண்ட பிள்ளைகளை எங்களுக்கு அருளவும்.
அம்மா உங்களுக்கு நான் இருக்கிறேன்! சத்தம் போட நினைத்தேன். உங்களுக்குத் தாலியில்லை என்றால் என்ன? கணவர்தான் இல்லையென்றாலும் என்ன?
அம்மாவை நான் ஒருபோதும் வார்த்தைகளால் ஆறுதல் படுத்தியதில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சிகரமான திருமணம் முடியும்போது உறவினர்களும் நண்பர்களும் கைதட்டி ஆரவாரிக்கும்போது நான் அவவின் கைகளை மெதுவாக அழுத்தி இந்த கெட்ட பெரிதான உலகத்தை அவ தனிமையில் எதிர்நோக்க வேண்டியதில்லை என்பதை நாசூக்காக வெளிப்படுத்துவேன்.
மெதுவான ஒரு சோகச்சிரிப்புடன் என்னை மெதுவாகத் தள்ளியபடி ,” குஞ்சு! நீ இப்போது நல்லபிள்ளையா இருக்கவேண்டும். நான் இப்போது அடுப்படிக்குச் செல்லவேண்டும்”
சில நாட்களில் அம்மாவைப் பின்தொடர்ந்து அடுப்படிக்குச் செல்வேன். அங்கு பூரணத்துவத்தை நோக்கி செய்யப்படும் காரியங்களைப் பார்த்தபடி என்னையே மறந்துவிடுவேன் – கொதிக்கும் எண்ணையிலே வெடித்துச் சிதறும் வெந்தயத்தின் நறுமணம், தேங்காய் சொதியினிலே வட்டமிட்டுச் சுழலும் கறிவேப்பிலை, பொரித்து, அவித்து, நசித்து அல்லது வறுக்கப்பட்ட காய்கறிகள்.
வேறு சில நாட்களில் குளியல் அறையில் ஒளிந்துகொள்வேன்.
ஆனால் அடிக்கடி, ஒரு பெரிய மேசை உறையினால் முற்றாக மூடப்பட்டிருந்த ஒரு மேசைக்குக் கீழே அடைக்கலம் எடுத்துக்கொள்வேன்.
நான் அதிர்ஸ்டம் செய்த நாட்களிலே எல்லோரும் என்னை மறந்திருப்பார்கள். மண்டபத்திலே சிரிப்புடனே நடனமாடிக் கொண்டிருக்கும் பெண்களில் என்னையும் ஒருத்தியாக நினைத்து கற்பனையிலே சொர்க்கத்திலே மிதந்து கொண்டிருப்பேன்.
ஆனால் நான் மக்களால் மறக்கமுடியாத சாறு நிறைந்த அவதூறு – யுத்தம் தந்த பூரணத்துவம் பெற்ற ஒரு புயல், நாடகம், அவமானம்.
நான் எங்கு ஒழிந்திருந்தாலும் பரவாயில்லை. விரைவில் அந்த கோரமான வார்த்தைகள் நான் இருக்கும் வழியே வரும்: கற்பழிப்பால் வந்த பிள்ளை!
அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் முழுசாகத் தெரியாது- ஆனால் அது பெருமைக்குரிய வார்த்தை இல்லையென்பது தெரியும். பல வருடங்களுக்குப் பின்னர்தான் அதன் முழு அர்த்தமும் எனக்குத் தெரியும். அது தெரியும்போது PLC (Presbyterian Ladies’ College) பாடசாலையில் சேர்ந்திருந்தேன். இந்தப் பாடசாலையைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனேயொழிய அதில் படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னுடைய கல்வித் திறமையைக்கண்டு மற்றைய பிரபல்யமான பாடசாலைகள் திறமான வசதிகளுடனான வாய்ப்பை வழங்குவதற்குமுன் என்னைத் தமது பாடசாலையில் சேர்த்துவிட்டார்கள்.
பெண்மையின் ஆழத்திலுள்ள அதிசியங்களை அறிந்து கொள்ளும் ஆவலுள்ள வாலிப மங்கைகள் சூழ்ந்திருந்த அந்தத் தருணத்திலேதான் அந்த வார்த்தையின் முழு அர்த்தம் எனக்குப் புரிந்தது.
ஒருவித தயக்கமுமில்லாமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் பதின்மவயதுப் பெண்களின் பேச்சிலிருந்தும், கல்யாணமண்டபங்களில் கசிந்துவந்த கிசுகிசுக்களிலிருந்தும், எனது உறவினர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டும் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டேன். எனது தாயார் கற்பழிக்கப்பட்டபோதுதான் நான் உருவானேன்.
காதல் மேம்பட்ட உறவினால் உருவாகியவள் இல்லை: வன்முறையினால் உருவாகியவள். பெண்களை அன்புக்குரிய பொருளாகப் பார்க்காமல் அவர்களை ஒரு யுத்தத்தின் கருவியாகப் பார்த்த பெயர் தெரியாத ஒரு பகைவன் தொடுத்த வன்முறையினால் உருவாகியவள்.
அவர்களுடைய இலக்கு மோகத்திற்கு அப்பாற்பட்டது. தமிழர்களை ஆதிக்கம் செய்யவேண்டும், சீரழிவைக் கொண்டுவரவேண்டும், தமிழர்களுக்கு முக்கியமான எல்லாவற்றையும் வேணுமென்றே காயப்படுத்தவேண்டும்.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் ஆண்கள் சுதந்திரத்திற்காக தமது உயிரையே கொடுக்கத் துணிந்தவர்கள். ஆனால் அவர்களின் பெண்கள் கறைப்படுவதை இறப்பதைவிட கொடியதாகப் பார்க்கிறார்கள். இது அவர்களுடைய தற்பெருமையை, வீரத்தை முக்கியமாக என்ன விலை கொடுத்தேனும் அடைந்தாக வேண்டுமென்ற தமிழ் ஈழம் என்னும் தாகத்தை சற்று மழுங்கடிக்கிறது.
அத்தியாயம் 2 – மாமரத்திற்கு
என்ன தெரியும்
அருவி,
13 ஜூலை 2025,
வல்வெட்டித்துறை
நான் கட்டுநாயகாவில் வாடகைக்கு எடுத்த, ஒரு காலத்தில் வெள்ளை நிறமாயிருந்திருக்கும், Toyota Corolla அம்மாச்சி வீட்டுக்கு முன்னால் ஒரு குலுக்கலுடன் நின்றதும் கடந்தகாலத்தைப்பற்றிய எனது பகற்கனவும் அப்படியே முடிவுக்கு வந்தது.
வல்வெட்டித்துறைக்கு நான் வந்தது ஒரு அதீத கற்பனை போலத் தோன்றியது. கடலோடும் நகரான வல்வெட்டித்துறை என்ற பெயர் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனது கற்பனையில் வாழ்ந்துகொண்டிருந்தது. கடலின் உப்பினாலும் சூரிய வெப்பத்தினாலும் கனமூட்டப்பட்ட காற்று பாக்கு நீரிணையில் தவழ்ந்து வரும் அலைகள் ஏற்படுத்திய ஓசையையும் தன்னில் சுமந்துகொண்டிருந்தது.
இதுதான் எனது முன்னோர்களின் நிலம். எனது குடும்பமும் ஊர்ச் சமுதாயமும் ஒரு கம்பீரத்துடன் ஆட்சி செய்த கடலோரம். கடலுக்கும் அவர்களுக்குமான பந்தம் காலத்திற்கு முந்தியது. இவையெல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பையன் பிறப்பதற்கு முன்பேயே; இந்தச் சிறிய ஊரை உலக அரங்கிலே தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் (LTTE) அறிமுகப்படுத்துவற்கு முன்பேயே.
பணிந்த கூரைகளுக்கு மேலே உயர்ந்து நின்ற முத்துமாரி அம்மன் கோபுரத்தை நான் நின்ற இடத்திலிருந்து பார்க்கக் கூடியதாயிருந்தது. இந்த அம்மனின் அருள் இந்த ஊரை எப்போதும் பாதுகாத்து வந்ததென்று எமது முன்னோர்கள் நம்பினார்கள். ஆரம்பகால விடுதலைப்புலிகள் மத்தியிலே உயிரைக் கொடுத்தேனும் சமூகநீதி காப்பாற்றப்படவேண்டுமென்ற வேகத்தை முத்துமாரி அம்மன் ஆதரித்தா.
இங்கே வரலாறு என்பது பாடநூல்களில் தங்கியிருக்கவில்லை. காற்றிலே கலந்திருந்தது. சிவத்தப் புழுதியிலே படிந்திருந்தது. கடந்து செல்லும் வாகனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் கண்களிலே காணக்கூடியதாக இருந்தது.
இந்த ஊரிலே எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். வேகமாகச் செல்லும் Corolla காரைவிட வேகமாக செய்திகள் பரவிவிடும்.
குளிரூட்டப்பட்ட காரில் இருந்து நான் இறங்கும்போது என்னை வரவேற்பதற்காக அந்த ஊரே வந்ததுபோல இருந்தது. பல கதைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த அந்த ஊர்க்காற்றுடன் சேர்த்து அம்மாவின் கடைசித் தங்கையான முத்துச் சித்தி என்னை கட்டியணைத்துக்கொண்டா.
என்னுடைய பெயரை மாத்திரம் முத்துச் சித்தியால் சொல்லமுடிந்தது ---- “அருவி, அருவி”
அவ என்னை இறுகக் கட்டிப்பிடித்தா. எங்கள் குடும்பத்திற்குப் ஒருகாலத்தில் பெருமைசேர்த்த எங்கள் வீட்டின் முன்னிலையில் எங்கள் இருவரது கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிப்பட்டது. இப்போது சிறிது பழுதடைந்திருந்தாலும் தனது சொந்த இரத்தம் திரும்பி வந்ததாலோ என்னவோ வீடு உயிர் உள்ளதுபோல இருந்தது.
தேய்ந்துபோன மூலைகளிலும் உடைந்த சுவர்களிலும் அமைதிக்குணம் கொண்ட அம்மாச்சியின் ஆத்மா என்னை வரவேற்பதாக உணர்ந்தேன்..
நான் அம்மாச்சியை ஒருபோதும் பார்த்ததில்லை. வல்வட்டித்துறையை விட்டு அம்மா வெளியேறிய அந்த ஆபத்து நிறைந்த பயணத்தில் அம்மாச்சி சேரவில்லை. சக்தி மிகுந்த மோட்டார் ஒன்றை மீன்பிடிப்படகொன்றில் விடுதலைப்புலிகள் இணைத்திருந்தனர். அதில் அம்மாவை ஏற்றிச் செல்லுமாறு பொறுப்பாளரிடம் அம்மாச்சி மன்றாடினாள்; விவாதித்தாள்; ஒருவாறு அவரைச் சம்மதிக்கவைத்தாள்.
அது ஒரு சாதாரண பயணம் இல்லை. இரவு நேரத்தின் பாதுகாப்பிலே கருமையான நீரிலே வழுக்கிக்கொண்டு செல்லும் நிழல்போல கடற்படையின் கண்ணில் படாமல் போகவேண்டும்.
பத்துப்பன்னிரண்டு புலிகள் பாக்கு நீரிணையைக் கடப்பதற்கு ஏன் நடுச்சாமத்தில் போகிறார்களென்று அம்மாச்சிக்கு சரியாகத் தெரியவில்லை. ஜெயா பெரியம்மா சொல்லியதிலிருந்து அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அருகிலுள்ள தமிழ்நாட்டுக் காடுகளை நோக்கித்தான் இந்தப் பயணம் எல்லாம்.
அம்மாவைப் பொறுத்தமட்டில் பலவித இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த அவள் மிகுந்த பயத்துடன் இருந்தாள். இன்னுமொரு சிறு உயிரை தனது வயிற்றிலே சுமந்து கொண்டிருந்த அவளை அம்மாச்சி பலவந்தமாக அந்த மீன்பிடிப் படகிலே ஏற்றிவிட்டா.
அவள் ஊரிலே பார்த்திருக்கிற பையன்கள் அந்தப் படகிலே இருந்தார்கள். அவர்களுடைய முகங்கள் அவர்களின் இலட்சியத்தாலும் இழப்புக்களாலும் கூர்மை அடைந்திருந்தன. அவர்கள் சிறுவயதினர்தான்; தங்களைவிட பெரிதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் இலட்சியம்- தங்கள் கௌரவத்தை மறுதலிக்கும் கயவர்களிடமிருந்து தமது தாய் நாட்டை மீட்டெடுக்கவேண்டுமென்ற இலட்சியக்கனவு- கண்களின் ஊடாக மின்னிக்கொண்டிருந்தது.
இந்தப் பையன்கள் அதிர்ஸ்டசாலிகள். அவர்கள் வயதை ஒத்த வேறு பலர் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு ஒன்றில் சுடப்பட்டிருப்பார்கள் அல்லது பூசா காம்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்கள். பிற்காலத்தில் இந்த பூசா காம்ப் சித்திரவதை செய்யும் இடங்களில் ஒன்றாகப் பட்டியல் இடப்பட்டது. ஒரு ஆணாக, இளமையாக, தமிழராக இருந்ததுதான் இவர்கள் செய்த குற்றம்- இராணுவத்தினரைப் பொறுத்தமட்டில் ஒரு போராட்ட குழுவில் இருப்பதற்கான அம்சங்கள் இவை.
வல்வெட்டிதுறையைச் சேர்ந்த பல பதின்ம வயதுப் பையன்களுக்கு - இப்போது பெண்களுக்கும் இராணுவத்தினரது கையில் இறப்பதை விட விடுதலைப்புலிகளுடனோ அல்லது மற்றைய விடுதலைக் குழுவுடனோ சேர்வது புனிதமானதாகத் தெரிந்தது.
விடுதலை என்ற இலட்சியம் இறப்புக்கான நோக்கத்தை காட்டியது. புதுவரவுகளுக்கு குறைவில்லை. பையன்கள், சிறுமிகள் சுதந்திரமாக வாழமுடியாவிடில் சுதந்திரத்திற்காக இறப்போம் என்று நம்பினார்கள்.
அம்மாவுடன் பயணித்த மற்றவர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் இதயம் நொருங்கிப் போயிருந்த அம்மாவிற்கு நோக்கம் ஒன்றுமில்லை. இந்தப்பயணம், இந்த வாழ்க்கையே எங்கே முடியப்போகுமேயென்று அவளுக்கு ஒரு தெளிவு இல்லை.
இந்தப் பயணத்தைப்பற்றி அம்மா ஒரேயொரு தடவைதான் எனக்குச் சொல்லியுள்ளா.
“ அந்தப் படகில் இருந்த நான் ஒருத்திதான் கழுத்திலே சைனைட் குப்பியைக் கட்டியிருக்கவில்லை. அந்தக் குப்பியிலேயே எந்நேரமும் கையை வைத்துக்கொண்டிருந்த பையன்கள் தமக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டார்கள், “ யாராவது கடற்படையைக் கண்டால் உடனடியாக எல்லோருக்கும் சொல்லுங்கள். நாம் ஒன்றாகச்சாவோம்”
“அவர்கள் என்னை யாரென்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இங்கே என்ன செய்கிறேன் என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். என்னிடம் சைனைட் குப்பி இல்லை. ஆகவே நான் ஒரு பெண்புலி இல்லை”
“ அவர்களுடைய அறிவுரை என்னவென்றால் “ அக்கா! கடற்படை எங்களை மறித்தால் கடலுக்குள் குதிப்பது புத்திசாலித்தனம். அந்தக் காவாலிகளின் கைகளில் மாட்டுப்பட்டால் அவர்கள் உங்களை என்ன செய்வார்களோ தெரியாது””
அம்மா சொல்லிக்கொண்டிருந்தபோது நான் ஆடாமல் அசையாமல் ஒரு சுண்டெலி போலக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் நாங்கள் தனித்து இல்லை அங்கே வேறு யாரோவும் நிற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அம்மா சொல்வதை நிறுத்திவிட்டா. அவவின் உதடுகள் பேசாவிட்டாலும் கண்கள் கதை சொல்லின.
அம்மாவின் பயணம் அங்கிருந்து எப்படி மெல்பேர்ண் க்கு வந்தது என்று முழுக்கதையையும் அறிவதற்காக அவவின் சகோதர்களிடம் கேட்டுப்பார்த்தேன்.
எங்கள் குடும்பம் பிரிந்த அந்த மறக்கமுடியாத இரவில் என்ன நடந்ததென்று ஜெயா பெரியம்மாதான் எனக்குச் சொன்னா.
“ ஒரு மாவீரன் இறந்துவிட்டான். அவனுக்காக புலிகள் ஒரு சிறப்பான இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்பா என்னைப் போகவேண்டாமென மறித்துவிட்டார். ஆனால் நான் போனேன்.
காவியா என்னுடன் வருவதற்கு பிடிவாதமாயிருந்தாள்.
இறந்த பையன் பதினெட்டு வயதுதான்.
துயரத்தின் எல்லைக்கே போயிருந்த அவனுடைய பெற்றோர் இரு துருவத்திற்கு மத்தியில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். தனது சனங்களுக்காக ஆகக்கூடிய தியாகத்தைச் செய்த மகனைப்பற்றிய ஒரு கசப்பும் இனிப்பும் கலந்த பெருமை, மகனை இழந்த தாங்கமுடியாத பெரும் சோகம்.
தமிழ் ஈழக் கொடி அவன் மார்பிலே சுற்றப்படும்போது அவனுடைய தாயார் நிலத்திலே வீழ்ந்து தனது மார்பில் அடித்துக்கொண்டு பெருத்த சத்தத்துடன் அழுதாள், “ ராசா! ராசா! ஏன் என்னை விட்டுப் பிரிந்துபோனாய்? உன்னுடைய சிரிப்பை நான் இன்னொரு முறை பார்க்கமுடியாதா? உனக்காக என்னுடைய உயிரை நான் தரமுடிந்தால்!””
அந்த மோசமான நினைவுகளால் பாதிக்கப்பட்டு, சிறிதுநேரம் கழித்து நான் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்ததால் தொடர்ந்தாள்
“ அவளுடைய கண்கள் வெறித்தனமாயிருந்தது. ஒரு சிறு குழந்தையைப் போலிருந்த மகனுடைய உடம்பை நெருப்புத் தழுவி பூதாகாரமாக எரிந்தபோது அவள் அவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒரு காட்டுமிருகம் போல உறுமிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினாள்.
விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் அவளுக்கு முன்னால் வந்து சலாம் செய்து, “அம்மா! அழாதீர்கள். உங்களுடைய மகன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன், மாவீரன். அவர் போய்விட்டானென வருந்தாதீர்கள். அவர் விதைத்த விதை ஆயிரக்கணக்கான மாவீரர்களை உருவாக்கும். அவருடைய தியாகம் ஒருநாளைக்கு எங்கள் மக்களை விடுவிக்கும்”
அவருடைய வார்த்தைகள் அலங்காரத்திற்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் இல்லை: அந்த இடத்திலேயே நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தமது பெயரைப் பதிந்துகொண்டனர்.
அதில் நான் ஒருத்தி. என்னுடைய அறிவுரையையும் மீறி காவியாவும் சேர்ந்தாள்.
அந்த இரவுதான் எங்கள் எல்லோருடைய எதிர்காலத்தை மாற்றியமைத்த நாள். அம்மா அப்பாவிற்கு பிரியாவிடை சொல்ல நாங்கள் வீட்டிற்கு போனபோது உன்னுடைய அம்மா போய் வெகு நேரமாகிவிட்டது”
முத்து சித்தி என்னை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தா,
“அருவி! உன்னுடைய அம்மா இந்த வீட்டிற்குத் திரும்பிவர மனமில்லாமல் இருக்கிறது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னுடைய அம்மா, உன்னுடைய அம்மாச்சி இந்த வீடு உன்னைத்தான் சேரவேண்டுமென உண்மையிலே மனதார விரும்பினா. நீ – அவவுடைய ஒரே பேத்தி அவவிற்கு மிகவும் பிரக்தியானவள். உன்னை அவ சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் உன்னையும் உனது அம்மாவையும்தான் அவ தன்னுடைய இறுதி மூச்சுவரை நினைத்துக்கொண்டே இருந்தா”
கடந்த காலத்தில் இந்த வீட்டிற்கு இருந்த வெகுத்துவம் மறுக்கமுடியாது. காலத்தினால் இயற்கையாக ஏற்பட்ட பழுதுகள், பல வருடங்களாக நடத்தப்பட்ட ஆகாயக் குண்டுவீச்சுக்களால் ஏற்பட்ட சேதங்கள் இவை அனைத்தையும் தாண்டி இப்போதும் இந்த வீடு பெருமையுடன் நிற்கிறது. முத்து சித்தியும் தீபன் சித்தப்பாவும் இந்த வீட்டைப் பராமரிப்பதில் காட்டிய அக்கறை தெளிவாகத் தெரிந்தது – ஆங்காங்கே ஏற்பட்ட வெடிப்புகளைச் சரிசெய்த ஒட்டுவேலைகள், உடைந்த ஓடுகளுக்குப்பதிலாக மாற்றம் செய்த புது ஓடுகள், புதிய வர்ணம் பூசப்பட்ட மேற்பரப்புகள்.
மலேசியாவில் வசிக்கும் அம்மாவின் மாமனின் மகனாகிய கவர்ச்சிக்குரிய மோகன் எதற்காக இந்த வீட்டை அம்மாவிடமிருந்து வாங்க முயல்கிறான் என்பதற்கான காரணம் தெரிந்தது.
ஆனால் அம்மா அதற்கு இடம் கொடுக்கவில்லை.
“அருவி! இந்த வீடு சாதாரணமாக சும்மா கல்லும் சீமெந்தும் கலந்து கட்டிய வீடில்லை- எங்கள் குடும்பத்தின் பயணத்தைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு அல்பம்”
எப்படியான ஒரு பயணம் – நான் சிந்தித்தேன். மாமரக் கிளைகளூடாக வந்த சூரியக் கிரணங்கள் என்னைச்சுற்றி தரைமீது புள்ளிபுள்ளியாக பல கோலங்களை உருவாக்கியிருந்தன. நான் சுற்றாடலை மகிழ்வுடன் ரசித்தேன்- அடர்த்தியான இலைகளுக்கு ஊடாக வந்த காற்று அந்த பளபளக்கும் இலைகளை தாளம்போட வைப்பதையும், கீழே தொங்கிக்கொண்டிருக்கும் மாங்காய்கள் மெதுவாக ஆடியபடியே முருகதாஸ் குடும்பத்தின் பல கதைகளைக் கேட்குமாறு என்னை அழைப்பதுபோல இருந்தது.
சில கதைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் அம்மாவிற்கு மகிழ்ச்சி.
மெல்பேர்ண் இல் கூதல்காற்று அடித்துக்கொண்டிருந்த ஒரு இரவிலே அம்மா சோபாவிலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வெதுவெதுப்பாய் இருப்பதற்காக அவவின் கைகளுக்குள் நான் இருந்தேன். பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் சினிமாவில் ‘காதல் கடிதம்’ என்ற பாட்டைப் பாடுவதை இரசித்துக் கொண்டிருந்தோம். எனது தலையை அவ மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தபோதும் அவவின் நினைப்பெல்லாம் வேறெங்கோ இருந்தது.
“ யாரோ உங்களுக்கு காதல் கடிதம் தந்ததா?” எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. அம்மாவின் வாழ்க்கையிலே ஒரு ஆணுக்கும், அவள் கொடூரமாகத் தாக்குப்பட்டதைத்தவிர , இடமிருக்கவில்லை என்று நினைத்திருந்தேன்.
“ ஓம். கடிதத்தை எனக்குத் தருவதற்காக எனது வீட்டு வாசலிலே முரளி காத்துக்கொடிருந்தான். ஆனால் அப்பா அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டார். ஓடுகிற அவசரத்தில் அந்த முட்டாள் பதினொரு வயதேயான முத்துவிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவசரஅவசரமாக சைக்கிளில் பறந்துவிட்டான். என்னைவிட முத்துவிற்கு இன்னும் நான்கு சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை அவன் மறந்திருக்கவேண்டும். முத்துவிடம் அவன் சொன்னதெல்லாம் ,” உனது அக்காவிடம் இதைக்கொடு”
அப்பா உள்ளே வந்ததும் முத்து சரியான வசைக்கு உள்ளானாள்.
“யாருக்கு இந்தக் கடிதம்?” அப்பா உறுமினார். “கயல்!கயல்! இங்கே காவாலிகள் எங்கள் பெட்டையளைக் கெடுக்க முயலும்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மஹா, சுபா, ஜெயா, சீதா, காவியா எல்லோரும் இங்கே வாருங்கள்”
கடிதத்தை திறந்து பார்த்தார். அவரது நாடி நரம்பெல்லாம் கடுஞ்சினத்தால் துடித்தது. கடிதப் பக்கத்தையும் எங்களது முகங்களையும் மாறிமாறிப் பார்த்தார்.
“யாரிந்த முரளி? ஒன்றுக்கும் உதவாக்கரை! என்னுடைய வீட்டுவாசலுக்கு வர அவனுக்கென்ன தைரியம்?””
“அது உங்களுக்குத்தான் என்று நீங்கள் சொன்னீர்களா?”
அம்மா என்னை செல்லமாகப் பார்த்தா. “உனக்கு உன்னுடைய தாத்தாவைப்பற்றி தெரியாது. உன்னுடைய அப்பாச்சியை அவவுடைய தகப்பனின் கண்காணிப்பையும் மீறி அவர் மயக்கினார். ஆனாலும் தனது மகள்களின் வாழ்க்கை கெடும்படியாக அந்த வரலாறு திரும்ப வருவதை விரும்பவில்லை.
ஆண்களைப்பற்றி பேச்செடுத்தாலே அதை ஒரு பாவமாகக் கருதுவதுமாதிரி பாசாங்கு செய்துகொண்டு நிலத்தைப் பார்த்தபடி நின்றோம். இரகசியமாக எனது சகோதரிகள் என்னைப்பார்த்து கபடமாகச் சிரித்தனர்
வழக்கம்போல இனிய மகா என்னைக் காப்பாற்றுவதற்காக அப்பாவைச் சமாதானப்படுத்தத் தடுமாறினாள். மகாவின் நல்ல குணம் - தான் மூத்த சகோதரி என்பதால் மற்றவர்களைப் பாதுகாக்கவேண்டியது தனது கடமை என்று நம்பியதால் பலமுறை எங்களைச் சிக்கலில் இருந்து காப்பாற்றுவதற்காக அப்பாவின் கோபத்திற்கு உள்ளாகியிருந்தா.
“ அப்பா! இந்தக் கடிதத்தில் ஒரு பெயரும் இல்லை. இது எங்களில் ஒருவருக்கும் இல்லாமல் இருக்கலாம். பிழையான வீட்டிற்கு வந்திருக்கலாம்”
அப்பா அவளை முறைத்துப்பார்த்துக்கொண்டே அந்தக் கடிதத்தை கிழித்துத் தரையில் எறிந்துவிட்டு வீட்டிற்குள்ளே வேகமாக நுழைந்தார். பர்மாத் தேக்கு மரங்களால் ஆன கதவுகளுடன் அவரது பரந்த தோள்கள் ஐக்கியமாவதுபோலத் தெரிந்தது. வல்வெட்டித்துறையிலுள்ள உருப்படாத வாலிபர்களுக்கு அவருடைய செய்தி மிகவும் தெளிவாக இருந்தது – அவருடைய பெட்டைகளுடன் ஒருவரும் உரசிப் பார்க்கேலாது.
அப்பா அந்தப்பக்கம் போனவுடன் எனது சகோதரிகள் அந்தத் துண்டுகளை அள்ளியெடுத்து ஒன்றாக்கி சத்தம்போட்டு வாசித்தார்கள்: என்னுடைய அன்பே, என்னுடைய வாழ்க்கையின் அம்சமே! நீ இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை .
எனக்குத்தெரியும் இவ்வளவு கவித்துவமாக அந்த முட்டாள் முரளியால் எழுதியிருக்கமுடியாது. நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.
என்னுடைய சகோதரிகள் என்னைப் பார்த்தவிதம் எனக்குப் பிடித்துக்கொண்டது - பாதி நையாண்டி, பாதி பொறாமை. ஆளாளுக்கு அவனுடைய சார்பிலே தாங்கள் கண்டுபிடித்த காதல் கவிதைகளைச் சொன்னார்கள்
ஒரு சில கணங்கள் அம்மாவின் முகத்திலே இளமை திரும்பியது.
அம்மாவின் முகத்தில் புன்னகை தோன்றியது. நினைப்பதின் மூலமாவது கவலைகளோ, சிக்கல்களோ இல்லாத ஒரு உலகத்திற்குத் திரும்புவது மாதிரியான முக உணர்வு இருந்தது.
வெதுவெதுப்பிற்காக அவவிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கிக் கேட்டேன் , “முரளிக்கு என்ன நடந்தது?”
தோளைச் சுருக்கியபடி, “ அவன் புலிகளுடன் சேர்ந்தபோது அவனது தைரியத்தை மெச்சினோம். ஆனால் அந்த முட்டாள் சேர்ந்த அடுத்தநாளே இராணுவத்தால் கொல்லப்பட்டான்”
கிளைகளிலே பழங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் மாமரத்தைக் கடந்து வாசல் வழியே உள்ளே போகும்போது இந்த இடத்தில்தான் முரளியின் இதயத்தை தாத்தா உடைத்திருப்பார் என்று நினைத்தேன். ஒரு காலத்தில் பெருமைமிக்க பர்மாத் தேக்கினால் செய்யப்பட்ட கதவுகள் இப்போது துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு களையிழந்திருந்தது. அம்மாச்சியின் குளிர்ந்த உள்வீட்டுக்குள் நுழையும்போது கடந்தகாலம் அங்கே மூச்சுவிட்டுக் கொண்டிருந்ததுபோல இருந்தது.
நான் ஒரு முழுவட்டம் வந்துள்ளேன். இந்த இடத்தில்தான் எனது தந்தை தாயார் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதலை நடத்தினார். இங்கேதான் எனது வாழ்க்கையைத் தொடங்கி சிறகடித்தேன். எதைக் கேட்கக் கூடாதென்று இதுவரை முயன்று வந்தேனோ அந்த உண்மையை இந்தச் சுவர்கள் வெளிக்கொணரும்போது என்னுள்ளே ஒரு நடுக்கம் ஏற்பட்டது.
நான் சிறுபெண்ணாக இருந்த காலத்திலே அம்மா பக்கத்திலே இல்லாதபோது ஜெயா பெரியம்மா சுபா பெரியம்மாவிடம் மெதுவாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.
“ பாவப்பட்ட சீதா- புலிகளைத்தேடி அந்த சிங்கள வெறியன் கதவை உடைத்துக்கொண்டு வந்தபோது காவியாவையும் முத்துவையும் பாதுகாத்துக் கொண்டு தனிமையில் இருந்த சீதா எவ்வளவு பயத்தில் இருந்திருப்பாள். நான் அங்கிருந்திருந்தால் என்னைத்தான் தாக்கியிருப்பான்.”
அந்த நினைவை மறப்பதற்காக எனது தலையை உதறினேன். அம்மா என்ன கொடுமைக்கு உள்ளாகி இருப்பாளென்ற காட்சி அந்த அறைக்குள்ளே நான் சென்றபோது வந்தது.
எனது மூச்சை சீராக்கிக்கொண்டு அம்மா சொன்ன மகிழ்ச்சிகரமான கதைகளை ஞாபகத்திற்கு கொண்டுவர முயற்சித்தேன்.
அம்மாவும் சகோதரிகளும் மாமரத்தில் ஏறி இனிப்பு வந்து சேருவதற்கு முன்பேயே காய்களைப்பறித்து அந்த புளிப்பை சுவைத்ததை:
தன்னுடைய வீட்டைக் கட்டுவதற்கு பர்மாவிலிருந்து தனது தந்தை தேக்குமரத்தை இறக்குமதி செய்தார் என்று வருபவர் போறவர் அனைவரிடமும் அம்மாச்சி பெருமையுடன் சொன்னதை:
அம்மாச்சியின் ஆறு பிரவசங்களின்போதும் டாக்சிக்குக் காத்திருக்கும் நேரத்திலே எப்படி பாட்டன் படபடப்புடன் நடந்ததை.
அத்தியாயம் 3 – ஒரு கூரையின்
கீழ் ஆறு லஷ்மிகள்
சீதா
1990
வல்வெட்டித்துறை
அப்பாவையிட்டு வருத்தப்படவேண்டும்தான். ஒவ்வொருமுறையும் அம்மா பிரசவித்தபோது ஆஸ்பத்திரியின் தாழ்வாரத்திலே நடந்தபடி படபடப்போடு எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு கிடைத்த செய்தி, “ இன்னுமொரு பெண்”
ஜெயா பிறந்தபோது பக்கத்துவீட்டு ஆச்சியின் கதறலைப்பற்றிய கதையைக் கேட்டுள்ளோம். அவளை முதன்முதலாகப் பார்த்தபோது ஆச்சி போட்ட ஒப்பாரி கடுமையான பிரசவத்திற்குப் பிறகு ஒய்வெடுத்துக் கொண்டிருந்த அம்மாவை எழுந்திருக்கவைத்தது.
“ குழந்தை இறந்துவிட்டதா?” திணறிக்கொண்டே தலையணையிலிருந்து எழும்ப முயற்சித்தபடி அம்மா கேட்டா.
“இல்லை! இல்லை! சாகவில்லை, ஆனால் ஒரு பொம்பிளைப்பிள்ளை. உனக்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள். இந்தமுறை உனக்கு ஆண்பிள்ளைதான் எண்டு நான் உன்ரை புருசன் தாஸுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்”
ஆச்சிக்கு கட்டுமஸ்தான மூன்று ஆண்பிள்ளைகள் என்ற செருக்கு. தன்னுடைய புருசனுக்கான கடமையில் அவள் தவறிவிட்டாள் என்று ஒருவரும் சொல்லமுடியாது. தன்னுடைய அந்த அதிர்ஸ்டத்தை தனது அயலவருடன் பகிர்ந்துகொள்ள விருப்பப்பட்டாள்; இவர்களுக்கு ஒரு ஆண்பிள்ளை வேணும். அவர்களுடைய மரபுரிமை மற்றும் இரத்தபந்தந்திற்கு ஒரு வாரிசு வேண்டும்.
ஆனால் விதி வேறு திட்டங்கள் வைத்திருந்தது. ஆறு பெண்கள் – மஹா, சுபா, ஜெயா , நான், காவியா, முத்து – வரிசைவரிசையாக வந்தோம். நம்பிக்கையோடு இருந்த ஆச்சியின் முகச்சுளிப்போடு நாங்கள் வரவேற்கப்பட்டோம். கடைசியில் முத்து பிறந்தபோது விதி தன்னை தோற்கடிக்க வைத்துவிட்டதென்று சிரித்தபடியே ஒத்துக்கொண்டா.
எங்கள் பெற்றோர் தமக்கு ஆண்பிள்ளை இல்லை என்பதற்காக வருத்தப்பட்டார்களா என்று நாங்கள் யோசிப்பதுண்டு. ஒருவேளை தனது இதயத்தின் ஒரு மூலையிலே அம்மா ஆசைப்பட்டிருக்கக்கூடும்; ஆனால் அப்பா ஒருபோதுமில்லை.
தனக்கு ஆறு பெண்கள் என்று பெருமைப்பட்டபடி அதையே எங்களைச் சுற்றிய கேடயமாகப்பாவித்தார். மகனில்லையே என்று சொல்லி யாராவது அனுதாபப்பட்டால், தனது பெண்கள் உயிருடன் இருக்கும் எந்த ஆணையும் விட குறைவானவர் இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார் – இதில் எங்களுக்கு ஒருவிதமான சந்தேகமும் இல்லை.
அத்துடன், எங்கள் தற்போதைய வாழ்க்கை சாதரணமாக இருந்தபோதிலும், நாங்கள் புகழ்பெற்ற மகாலிங்கத்தின் மகள்வழிப் பேத்திகள். குற்றம்குறையில்லாத அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
தனது தகப்பனின் திடீர் மறைவுக்குப் பின் பதின்ம வயதினனான மகாலிங்கம் பாட்டன் தமது குடும்பத் தொழிலை பொறுப்பெடுத்தார். ஒரு சிறிய நிறுவனத்தை ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமயமாக்கிய அவரது சாதுரியத்தை அந்த ஊரே பாராட்டியது. அவருடைய தகப்பனார் தமிழ்நாட்டு வியாபாரிகளுடன் தொழில் செய்தார். பாட்டனோ ஒரு படி மேலேபோய், பெரிய வருமானம் தரும் பாக்கு நீரிணையை கிட்டத்தட்ட முழுக்கட்டுப்பாட்டையும் தான் வைத்திருந்தார். அவருடைய படகிலே பதியப்பட்ட பொருட்களைவிட கடத்தல் பொருள்களே அதிகம் இருந்ததென்றும், இந்த சட்டத்திற்கு மாறாக வந்த லாபத்தை எல்லாம் தங்கப்பாளமாக மாற்றி வைத்திருக்கிறார் என்றும் ஒரு வதந்தி ஊரார் மத்தியில் உலாவியது.
தனது தீர்க்கமான சிந்தனை மூலம் தொழிலை விருத்தி செய்ததுமாதிரி தனது குடும்பத்தின் எதிர்காலத்தையும் திட்டமிட்டிருந்தார். மலேயாவில் இருந்த பிள்ளையில்லாத தனது மாமனிடம் தனது இரண்டு மகன்களையும் அனுப்பியிருந்தார். புகையிரத இலாக்காவிலே ஒரு உயர் பதவியில் இருந்த அவர் இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பான மதிப்புக்குரிய வேலை எடுத்துத் தருவதாக உறுதியளித்திருந்தார். 1930 ம் ஆண்டுகளிலே யாழ்ப்பாணத்தை விட்டு பிரிட்டிஷ்காரருக்காக வேலை செய்வதற்காக அவர் சென்றிருந்தார். மலாயாவில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிபுபடுத்துவதற்காக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் தேவைப்பட்டார்கள். பல கிருஸ்துவக் கல்லூரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்ததால் அங்குள்ள நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் சரளமாக இருந்தனர். இங்கிலாந்திலிருந்து எழுத்தர்களைக் கொண்டுவருவதிலும் பார்க்க இந்த யாழ்ப்பாண மக்களை வேலைக்கமர்த்துவது இலகுவாக இருந்தது.
மலேயா மாமா அம்மாவையும் மறக்கவில்லை. அங்கேயுள்ள ஒரு தரமான மாப்பிள்ளையை அம்மாவிற்குப் பிடித்துத் தருகிறேனென பாட்டாவிற்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.
வசீகரமான கயல் மீனின் கண்களைப் போன்ற கண்களைக்கொண்ட தனது மகழுக்கு கயல்விழி என்று பெயரிட்டு ஆசையோடு வளர்த்த தனது மகளுக்காக பெரிய கனவுடன் இருந்தார். தனது அருமைச் சிநேகிதனின் மகனாகிய கேம்ப்ரிட்ஜ் இல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தவருக்கு கயலைத் திருமணம் செய்ய ஒழுங்கு செய்துவிட்டார். இந்தத் திருமணம் இரண்டு புகழ்பெற்ற குடும்பத்தினரை இணைத்து அவர்களின் பெயரை காலம் காலமாக உயரத்திலேயே வைத்திருக்கும்.
அதற்கு மாறாக தன்னுடைய தகப்பனாரின் இருதயத்தை சுக்கு நூறாக்கி புதிதாக ஊருக்கு வந்த தபால்கந்தோர் அதிபருடன் அம்மா ஓடிவிட்டா. அந்த அதிபருடைய வசீகரமான கண்களும் பேச்சுத்திறனும் அவவை தன்னுடைய தகப்பன் பார்த்து வைத்திருந்த மருத்துவ மாப்பிள்ளையை மறக்க வைத்தது.
அதிலும் ஆக மோசம் என்னவென்றால் அவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் இல்லை. மலையகத்திலேயுள்ள தேயிலைத்தோட்டத்தைச் சேர்ந்தவர். இவர்களை பாட்டனார் கூலித்தொழிலாளர்கள் என்று நினைத்தாரேயொழிய சமமானவர்கள் என்று நினைக்கவில்லை.
ஒருவேளை காலம் செல்ல பாட்டா அம்மாவை மன்னித்திருக்கக்கூடும்.ஆனால் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை காட்டிய ஊர்மக்கள் இப்போது அவர் முதுகின் பின்னால் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்: வீட்டிலே இளம் பொம்பிளைப்பிள்ளையளை வழிகாட்டுவதற்கு ஒரு பெண் இல்லையென்றால் இதுதான் நடக்கும். – இதை இன்னும் மோசமாக்கி – அந்தப்பெண் கேட்ட எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்த இவருக்கு இன்னும் வேணும்.
இரண்டு மாதங்களின்பின் ஏற்கனவே மருத்துவ மாப்பிள்ளைக்கென்று செய்துவைத்த ஐம்பது பவுண் தங்கநகைகளை அம்மாவிற்குக் கொடுத்துவிட்டு தனது மகன்களோடும் அவர்கள் குடும்பத்தோடும் இருப்பதற்காக மலேசியா புறப்பட்டுப் போய்விட்டார்.
அப்பாவின் மேல் இருந்த அவரின் அவநம்பிக்கையால் தான் ஆசையாகக் கட்டிவைத்த வீட்டை அம்மாவின் பெயருக்கு எழுதத் தயங்கினார்.
அதற்குப்பதிலாக, அவ விரும்பும்வரை அந்த வீட்டில் இருக்கலாமென்றும் தான் இறந்தபிறகுதான் அந்த வீடு உண்மையிலேயே அவவிற்குச் சொந்தமாகும்.
அதற்குப்பிறகு எனக்கு பத்து வயதாகும்போது ஒருமுறை வந்தார். அவருக்குப் பிடித்த அந்த சாய்மனைக் கதிரையில் இருந்தவாறே எங்களை ஒவ்வொருவராக நோட்டமிட்டார். அவரின் அந்த நீண்ட எடைபோடும் பார்வை எங்களை சங்கடமான மௌனத்திற்குத் தள்ளிவிட்டது, முக்கியமாக அவர் அம்மாவைப் பார்த்துச் சொல்லியபோது,” இவ்வளவு பெண்கள், ஒரு பையன் கிடையாது”
அப்பட்டமான அவரது ஒத்துக்கொள்ளாமையைக் கேட்ட அம்மாவின் முகம் வாடிவிட்டதை நாங்கள் அவதானித்தோம். ஆனால் தான் அன்பு வைத்திருந்த தகப்பன்மேல் உள்ள மரியாதையால் தன்னுடைய மகள்களை அவர் ஏற்றுக்கொள்ளாதலால் ஏற்பட்ட காயத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்திருந்தா.
பாட்டனின் அநியாயமான வார்த்தைகளைக்கேட்டு அப்பாவின் நாடி இறுகியது. அம்மாவையும் எங்களையும் தற்காப்பதற்காக ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால் அடுத்ததாக பாட்டன் சொன்னது ஓரளவு அம்மாவைச் சாந்தப்படுத்தியது. “ என்ன இருந்தாலும் அவர்கள் உன்னைப்போல இருக்கிறார்கள், கயல்”
அங்கேயிருந்த எளிதில் உடையக்கூடிய அமைதியைக் காப்பாற்றுவதற்காக அப்பா தனது அதிருப்தியைக் காட்டவில்லை.
அந்தஒருமுறைதான் பாட்டன் எங்களைப்பற்றிக் கதைத்தார். மற்றும்படி அவர் தங்கியிருந்த காலமெல்லாம் பிழை கண்டு பிடிப்பதிலேயே இருந்தது: மூச்சைத் திணறவைக்கும் ஈரத்தன்மை; கடவுளே ஒதுக்கிவிட்ட இந்த நாட்டிற்கு திரும்பவும் வந்த அவலம்; எப்படி மலேசியாவில் உள்ள பேரப்பிள்ளைகளை, முக்கியமாக தனக்குப் பிடித்த மோகனை விட்டு விலகியிருப்பது.
எங்கள் மண்டபத்து நடுவில் அறையை இரண்டாகப் பிரித்தபடி, ஆனால் முற்றாக மூடாதபடி ஒரு பழையகால செங்கல் அரைச் சுவர் உள்ளது. முதன்முறையாக இந்த ஊருக்கு பர்மாவிலிருந்து தேக்கமரத்தை அவர் கொண்டுவந்து வீட்டை அலங்கரித்தாரோ அதேமாதிரியாக இந்த அரைச்சுவரும் இந்த ஊருக்கு புதிய கட்டிடக்கலையை அறிமுகம் செய்து வைத்துள்ளதென்று அம்மா அடிக்கடி பீற்றிக்கொள்வா. முதலாவதோ என்னவோ, அந்த சுவர் வீட்டை இரண்டாகப் பிரித்தபடி , ஆனால் அதேநேரம் திறந்த வெளித்தன்மையையும் கொடுத்து வீட்டிற்கு ஒரு அழகைக் கொடுத்தது. சுவரின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. அந்த மேசைகளில், மூன்று பேர் ஒரு மேசையில் என்று நாங்கள் பாடவேலைகளைச் செய்தோம்.
பாட்டன் தனது சாய்மனைக்கதிரையை அந்த சுவருக்கு அருகிலே கொண்டுபோய் வைத்து எங்களை மேலும் சலிப்படைய வைத்தார். அவர் வந்த மறுநாள் நாங்கள் பாடசாலையிலிருந்து வந்தபோது தனது சாய்மனைக்கதிரையில் அவர் உறங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி அவருடைய போதனையைக் கேட்பதைவிட நாங்கள் மறு பக்கத்தில் ஒரு மேசையில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டிருந்து படித்தோம். அவருடைய பார்வையில் நாங்கள் படவில்லை. ஆனாலும் சுவர் கூரையைத் தொடாதபடியால் எங்கள் சத்தம் அவரை எழுப்பாமல் பார்த்துக்கொண்டோம். இல்லையென்றால் அவரை எழுப்பியதற்காக எங்களை ஏசுவது மாத்திரமல்லாமல், தேவையில்லாமல் தன்னுடைய மலேசியப் பேரப்பிள்ளைகளுடன் எங்களை ஒப்பிடுவார்.
அதிகநாட்கள் தங்காததையிட்டு அவருக்கு நன்றிகள்.
அவர் புறப்பட்ட நாளிலே அவருடைய ஆசீர்வாதம் வாங்க நாங்கள் வரிசையாக நின்றோம்.
“பாட்டா! இப்போது நீங்கள் போகிறபடியால் இந்த நாட்டை கடவுள் மாத்திரம் ஒதுக்கவில்லை, பாட்டனாரும் ஒதுக்கி வைத்துள்ளார்” என்று சுபா சொன்னதும் நாங்கள் எங்கள் சிரிப்பை அடக்கக் கஸ்டப்பட்டோம்.
அம்மாவாலும் தனது சிரிப்பை மறைக்கமுடியவில்லை. ஆனால் தன்னை பகிடி பண்ணுகிறார்கள் என்பதை உணராமல் மலேசியாவின் பெருமைகளை சொல்லி மகிழ்ந்து எங்களையெல்லாம் அந்த நாட்டுக்கே வந்து வாழச் சொன்னார்.
அதன்பிறகு அவரைப்பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் அம்மா இருந்திருந்து பழையகதை சொல்வா. “ ஒருநாள் அந்த மருத்துவ மாப்பிள்ளையின் தகப்பனிடம் கல்யாணத்திற்குப் பீறகு அவருடைய மகனுக்கு நூறு தங்கப்பவுணால் மாலை போடுவேன் என்று அப்பா சொன்னதைக் கேட்டேன்”
அதற்கு அப்பா சொன்னார், “ அந்த டாக்டர் மடையனுக்கு என்ன தெரியும்? உன்னை அவன் பார்த்திருந்தால் எவ்வளவு தங்கத்தையும் விட நீ எவ்வளவு பிரகாசமானவள்”
அப்பாவைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்துவிட்டு அம்மா தொடர்ந்தா, “ அவர் புறப்படும்போது எனக்கு ஐம்பது தங்கப்பவுண் மாத்திரம் தந்தார். மற்றைய ஐம்பதையும் தன்னுடன் கொண்டு போயிருக்கவேண்டும். எனது சகோதரர்களின் மனைவிகளுக்கு கொடுத்திருப்பாரோ என்று நினைக்கிறேன்
அவர் தனது தங்கப்பவுணை பெரிதாக விரும்பினார். நான் சிறு பெண்ணாக இருந்தபோது தான் உருவாக்கிய ஐந்து தங்கப்பாளங்களை எனக்குக் காட்டினார்.
அவை எப்படிப் பிரகாசித்தன என்று இப்போதும் ஞாபகமாயுள்ளது. ஒன்றைத் தூக்க முயற்சித்தேன். உடனே கீழே வைத்துவிட்டேன். அவ்வளவு பாரம்!
மலேசியா போகும்போது அவர் அவற்றைக் காசாக மாற்றிக்கொண்டு போயிருக்கவேண்டும். தன்னோடு கொண்டு போவதற்கு அவை மிகுந்த பாரம்”
“ அவர் அந்தத் தங்கங்களையோ அல்லது செல்வத்தையோ என்ன செய்தார் என்று நாங்கள் கவலைப்படத்தேவையில்லை. நாங்கள் ஒருவருக்கொருவரும் எங்கள் அழகான பெண்களும்” அப்பா சொன்னார்.
“ அவருடைய காலத்திற்குப்பின்பு சட்டப்படி இந்த வீடு உனக்குச் சொந்தம். அதுவரை வாடகை இல்லாமல் இந்த வீட்டில் வசிப்பதையிட்டு நான் நன்றியுள்ளவன். வீடுமில்லாமல் ஐம்பது தங்கப்பவுணும் இல்லாதிருந்தால் என்னுடைய தபால் அதிபர் சம்பளத்தை வைத்துக்கொண்டு உனக்கும் எங்கடை மகள்களுக்கும் நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை அமைத்துத்தர என்னால் ஒருபோதும் முடிந்திருக்காது”
அப்பா இதைச் சொல்லும்போதெல்லாம் சிறிது கூச்சப்படுவார். தன்னை ஏற்றுக்கொள்ளாத மாமனாரின் தயவில் வாழ்வதை அவர் விரும்பாதபோதிலும் அவரின் கர்வத்தைவிட எங்கள் மேலுள்ள அன்புதான் அதிகமாயிருந்தது.
அவர் என்னைத்தைச் சொல்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகவே புரிந்தது. அம்மா அதிகமாய் அணியாத நகையை மெதுவாக தனது சட்டைப்பையில் எடுத்துச் சென்று வேறொருவருக்கும் தெரியாமல் விற்று அந்தப்பணத்திலே எங்களை யாழ்ப்பாண நகருக்கு அழைத்துச்சென்று நன்றாகச் சாப்பிட்டு, கடைகளில் சாமான்கள் வாங்கி கொலிவூட் சினிமாப்படங்கள் பார்த்து மகிழ்ந்துவருவோம்.
அடிக்கடி அம்மா அப்பாவை எச்சரிக்கை செய்வா: “தாஸ்! நகைகளை நீங்கள் விற்கக்கூடாது. சீதனமில்லையென்றால் எப்படிப் பெண்களை மணமுடித்துக் கொடுக்கலாம்?”
அப்பாவின் மறுமொழி எப்போதும் ஒன்றுதான் “ ஹா! என்னுடைய பெண்களுக்குச் சீதனம் தேவை மாதிரி! அவர்கள் தங்களுடைய செல்வத்தை அவர்களே தேடிக்கொள்வார்கள். அவர்களின் பெயரில் ஏன் செல்வத்தின் கடவுள் லக்ஷ்மி யின் பெயரை வைத்துள்ளேன்?”
அப்பாவின் இந்த வசனம் எங்களைத் தூண்டிவிடும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் சொல்வோம்.
“ நான் மகாலக்ஷ்மி. லஷ்மிகளில் சிறந்தவள்”, மகா சொல்வா.
“நான் சுபலக்ஷ்மி. மிகவும் மங்களகரமானவள்”
“நான் ஜெயலக்ஷ்மி. எப்போதும் வெற்றியடைபவள். பொறுத்திருந்து பாருங்கள். வயது வந்ததும் நான் ஒரு பெண்புலியாகி எங்களை வாட்டி வருத்தும் சிங்களவர்களை அழிப்பேன்”
“ நான் அழகின் குவியல், காவியலக்ஷ்மி”
“ ஆனால் உள்ளதிற்குள் நான்தான் மிகச்சிறந்தது. நீங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறீர்கள். முத்துலக்ஷ்மி, கடலின் அடியிலிருந்துவந்த ஒளிமயமான முத்து, நம்பிக்கை நட்சத்திரம்”
எதிர்பார்ப்போடு அப்பா என்னைப் பார்த்தார்.
நான் புலம்பினேன், “ ஏனப்பா என் பெயரைச் சீதாலக்ஷ்மி என்று வைத்தீர்கள்? உலகமெல்லாம் அவளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தினர். அவளுடைய கணவர் உட்பட. ஒரு லக்ஷ்மியாம் அவள்! தனது தலைவிதியையே மாற்றும் சக்தி இல்லாதவள்”
அப்பா என்னை அணைத்தவாறே சொன்னார், “ சீதாதான் தூய்மையும் முழுமையும் கலந்த பெண், உன்னைப்போல குஞ்சு”
நீண்ட காலம் இதை நான் நம்பிக்கொண்டிருந்தேன்.
அத்தியாயம் 4 – துப்பாக்கியுடன்
பையன்
சீதா
1990
வல்வெட்டித்துறை
மாலைநேரங்களில் எங்கள் வீட்டில் வழமையாக ஒரு விடயம் நடக்கும். அம்மாவும் அப்பாவும் வராந்தாவில் இருப்பார்கள். மற்றைய நாங்கள் வீட்டிற்குப் பின்புறம் உள்ள கிணற்றடியில் நாள் முழுவதும் அம்மா பாவித்த சட்டி பானைகளைக் கழுவிக்கொண்டிருப்போம். தவறாமல் எங்களுடைய சிரிப்பும் கூச்சலும் அம்மாவிடமிருந்து ஒரு அன்பு கலந்த ஏச்சாக வரும்.
“பெட்டையள்! கொஞ்சம் சத்தத்தைக் குறையுங்கள். நீங்க அடிக்கிற கூத்தைப் பார்த்து இது ஒரு பொம்பிளைப்பிள்ளைகள் உள்ள வீடு என்று ஒருவரும் நினைக்கமாட்டார்கள்”
இது எங்களை மேலும் சத்தம் போடவைத்தது.
“இது ஒரு பெண்கள் வீடு என்று யார் சொன்னது? ஜெயாவும் காவியாவும் ஆம்பிளைகளுக்குச் சமமானவர்கள்”
அண்றிரவு சுபா எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தாள். அவள் எப்போதும் நல்ல கதைகள் சொல்வாள்.
“ நான் அந்த வசந்தியை ஒரு கை பார்க்கப்போகிறேன்”
“ஏன்? ஏன்?” நாங்கள் கூட்டாகக் கேட்டோம். வசந்தி சுபாவின் நெருங்கிய நண்பி: இவளைப்போலவே துடுக்கான இனிமையானவள்.
“ உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைக்கு பாடசாலைக்குப்போகும் வழியில் ஆகாயப்படை ஒரு தாக்குதல் நடத்தினார்கள்” அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் உன்னிப்பாகக் கேட்பதைத் தெரிந்த அவள் உச்சத்தில் இருந்தாள்.
“அது எங்களுக்குத் தெரியும். நாங்களும் பள்ளிக்குப் போறதுதானே”
“விமானம் வந்த சத்தத்தைக் கேட்டதும் நான் தரையில் படுத்துவிட்டேன். தரை ஈரமோ இல்லையோ என்று நான் கவனிக்கவில்லை. அப்புறம் ஆசிரியை என்னைத் திட்டினா அதெப்படி மற்றப் பெண்களின் சீருடைகள் துப்பரவாக இருக்கிறது . என்னுடையது மாத்திரம் அப்படியில்லை”
முத்து கூச்சலிட்டாள். பதினொரு வயதேயான அவளுக்கு இன்னமும் வானத்திலிருந்து கிழமைக்கு ஒருமுறையாவது பொழியும் குண்டுகளையிட்டு பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது தெரியாது.
சுபாவின் வேகத்தை இது குறைக்கவில்லை. உசாருடன் தொடர்ந்தாள், “ கீழே விழுந்திருந்தபடி திருவள்ளுவரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ‘ஒரு குறளைப் பாடமாக்குவதற்கே கஸ்டமாக இருக்கும்போது ஏன் 1330 குறள்களை இயற்றினார்.’ வசந்தி என்னைவிட வேகமாக செயல்பட்டாள். விமானங்கள் மறைந்த மறு கணமே நான் வள்ளுவரை வசைபாடி முடிக்கமுதலே துள்ளிப்பாய்ந்து எனது சாப்பாட்டுப்பெட்டியைத் தூக்கிகொண்டு ஓடிவிட்டாள்”
“என்ன? ஏன்?”
இது உண்மையாக இருக்கமுடியாது. அம்மாவின் வழமையான உப்புமாவை வசந்தி ஏன் எடுக்கவேண்டும்? அவளுடைய பெற்றோர் பிரபல்யமான கொத்துரொட்டிக்கடை நடத்துகிறார்கள் – அங்கெல்லாம் முதல்நாளே சொல்லிவைக்காவிடில் வாங்குவதென்பது அரிதாகும்.
“உண்மைதான். அவள் சொன்னாள் தனது தாயார் ஒருபோதும்------------” சுபாவின் குரல் தடுமாறியது. தனது கதையை உச்சத்திற்குக் கோண்டுபோவதற்கான அவவுடைய தந்திரம் என நினைத்தோம். சுபா ஒருபோதும் தனது கதையை செழுமையாக வளர்க்காமல் சொல்லமாட்டா.
அப்போது எங்களுக்குக் ஏதோ கேட்டதோ இல்லையோ அவளின் பார்வை நிலைகுத்தியிருந்த இடத்தைப் பார்ப்பதற்காகத் தலையைத் திருப்பினோம். எங்களுடைய சகோதரி வார்த்தை வராமல் ஒருபோதும் தவித்ததில்லை. திரும்பிப்பார்த்து என்ன நடந்ததென்று புரிந்தபோது நாங்களும் சத்தமில்லாமல் கல்லாக உறைந்துபோனோம். முத்து தனது இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி இருந்தாள். காலையில் நடந்த ஆகாயத்தாக்குதலைவிட இது மோசமானதென்று அவளுக்கே தெரிந்தது.
சந்திரனின் வெளிச்சத்திலே அரைகுறையாகத் தெரிந்த ஒரு முகம்- வலந்துருவாக்கப்பட்ட ஒரு அசட்டுச்சிரிப்பு, ஒரு கன்னத்திலே தென்பட்ட ஒரு குழிவு. அப்புறம் ஒரு கணத்தில் கன்னத்துக் குழிவு மறைந்து போய் அசட்டுச்சிரிப்பு முகச்சுளிப்பாய் மாறி சில அடிகள் முன்னேவந்து நிலத்திலே விழுந்தான் – அவனுடைய கையிலிருந்து ஒரு துப்பாக்கியும் நழுவி விழுந்தது. இப்போது முத்துவை ஒன்றும் தடுக்கவில்லை. ஓவென்று அலறினாள்.
முத்துவிற்குப் பக்கத்தில் நின்ற காவியா முத்துவின் சத்தம் வெளியே கேட்காததுமாதிரி அவளது வாயைப் பொத்தினாள்
ஜெயாவும் சுபாவும் விழுந்து கிடந்தவனைப் பார்க்க அவனுக்குக் கிட்டப் போனார்கள்.. நானோ நின்ற இடத்தில் நின்றுகொண்டே எங்கடை காணியையும் பக்கத்துவீட்டுக் காணியையும் பிரிக்கும் செங்கல்வேலியைப் பார்த்தபடி நின்றேன். பக்கத்து வீட்டுக்காரர் தமது வேலியை எங்கள் வேலியைவிட ஐந்து மீற்றர் தூரத்தில் எழுப்பியிருந்தார். இரண்டு வேலிகளுக்கும் நடுவில் இருந்த ஒழுங்கை ஒரு குறுக்கு வழியாக பலராலும் பாவிக்கப்பட்டது. இந்த ஒழுங்கை மூலம்தான் இந்த எதிர்பாராத விருந்தாளி வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் யாரிடம் இருந்து தப்பி வந்திருக்கிறார் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.
உண்மையில் அப்பா அம்மாவிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“எங்களுடைய பையன்கள் இனிமேல் அதிககாலம் ஒளிந்திருக்க சிரமப்படுவார்கள். இப்போது இராணுவத்திற்கு வல்வெட்டிதுறையை உள்ளும் புறமும் நன்கு தெரியும். இந்தமாதிரிச் சின்ன ஒழுங்கைகள்தான் அவர்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது. இதைவிட்டால் பையன்களுக்கு வேறு இடங்கள் இல்லை”
பையன்கள் என்று அப்பா குறிப்பிட்டது எங்கள் சொந்த ஊரிலிருந்து மிகுந்த ஈடுபாட்டுடன் LTTE என்ற விடுதலை இயக்கத்துடன் இணைந்த இளைஞர்களைத்தான். எமது ஊரிலே ஆரம்பித்த இந்த இயக்கம்தான் மற்றைய இயங்கங்களைவிட பலம்வாய்ந்தது,
அவர்களுடைய தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு உள்ளூர்ப் பையன். அவருடைய உணர்ச்சியூட்டும் பேச்சுகள் தமிழர்களை புலிகளோடு ஒப்பிட்டதோடு இந்த பலமான சின்னம்தான் தமிழ்நாட்டை ஆண்ட சோழமன்னர்களின் சின்னம் என்று கூறிய அவரது பேச்சுகள் இளைஞர் பெரியோர் என்று ஆயிரக்கணக்கான மக்களை யுத்தத்திற்கு அழைத்துச் சென்றது.
சில நாட்களுக்கு முன்பாக அப்பாவை ஒருமுறை கேட்டேன்,” அப்பா, நீங்கள் இளமையாக இருந்த காலத்தில் இந்த போராட்டக் குழுக்களில் எதாவது ஒன்றில் சேருவதைப்பற்றி யோசித்தீர்களா?”
அதுதான் அவருக்குத் தேவையானது. அவருக்குத் தான் சொல்வதைக் கேட்கும் ஆட்கள் இருந்தால் போதும்- முக்கியமாக அவரின் மகள்கள். நாங்கள் நிலத்திலே சம்மாலிகோலியிருக்க அவர் தனது நாற்காலியில் வசதியாக உட்கார்ந்துகொண்டு தனது கதையை ஆரம்பித்தார்.
“ நீங்கள் பிள்ளைகள் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும். நான் வளர்ந்துவந்த காலத்து இலங்கை இதுவல்ல. எந்நேரமும் பிறகால் இருந்து தாக்குதல் வருமோ என்று பயந்து பயந்து திரிந்தவர்கள் இல்லை. பிரச்சனை இல்லாத முழுமையான வாழ்க்கை என்று சொல்லமுடியாது, ஆனால் வெறுப்பு என்ற விஷம் அப்போது இருக்கவில்லை. உண்மை என்னவென்றால் தமிழரும் சிங்களவரும் பல விதத்திலும் ஒரே மாதிரி. அதிகமான நேரங்களில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துவந்தோம்.”
சுபா முன்னுக்குச் சாய்ந்தபடி,” இது எப்போ தொடங்கிற்று, அப்பா?”
அவர் பெருமூச்சுவிட்டார்,” உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இதனுடைய ஒரு பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கியது. அவர்கள் எங்களை வெகுகாலம் ஆண்டார்கள். அந்தநேரத்திலே அரசாங்க உத்தியோகத்திற்கு தமிழருக்கே முன்னுரிமை கொடுத்தார்கள், நாங்கள் அவர்களைவிட சிறந்தவர்கள் என்பதல்ல; தமிழர்களுக்கு நல்ல கிறிஸ்துவ பாடசாலைகளினால் நல்ல ஆங்கிலக்கல்வி கிடைத்தது. இந்தக் கல்வித்திறமைக்கு ஆங்கிலேயர் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.”
ஓரு கணம் நிறுத்தி எங்கள் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.
“1948 ல் சுதந்திரம் வந்தபின்பு சிங்களவர் ஆட்சிப்பொறுப்பேற்றனர் – நியாயப்படி அவர்கள்தானே பெரும்பான்மையினர். ஆனால் வெறுப்பு மெதுவாகப் பரவத்தொடங்கியது. நடைமுறையில் இருந்த ஏற்றத்தாழ்வை திருத்தமுற்பட்டனர். ஆரம்பத்தில் சிங்களமொழி, சிங்கள கலாச்சாரம், சிங்களவருக்கான வேலைகள் என்று எவரும் சந்தேகப்படாதமாதிரி மெதுவாக ஊக்கப்படுத்தப்பட்டன.”
அவருடைய கண்கள் கடுமையாகின,” ஆனால் ஆரம்பத்தில் சிறிதாக இருந்தது வேகமாக வளர்ந்து முழுமையான பாகுபாடாக மாறியது. சட்டங்களினாலும், வேலை வாய்ப்புக்களாலும், தொழில் ரீதியிலும் தமிழர்களின் உலகம் சுருங்கிக்கொண்டேவந்தது. இப்போது எல்லாத்துறையிலும் உள்ளது”
ஜெயா பெருமையுடன் இடைமறித்தாள்,” ஆனபடியால்தான் புலிகள் உருவாகினார்கள்!”
அப்பா தலையாட்டினார்,” உண்மைதான். எப்பொழுதெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தங்களுக்குப் பாதுகாப்புத் தருபவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள். அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகள் முயற்சி செய்யப்பட்டன, ஆனால் மாற்றம் ஒன்றுமில்லை. எங்களுடைய இளைஞர்களில் சிலர் நியாயத்திற்காகவும், நீதிக்காகவும் காத்திருந்து களைத்துப்போனார்கள். திருப்பித் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லையென்ற முடிவுக்கு வந்ததால் புலிகள் உருவானார்கள்”
எங்களுடைய இளமையான முகங்களைப் பார்த்த அவருக்கு எப்படியான உலகம் எங்களுக்குக் காத்திருக்கிறது என்பதுபற்றிய ஒரு அச்சம் தோன்றியது.
“ஆனால் இதை ஞாபகம் வைத்திருங்கள்”, மென்மையாகச் சொன்னார்,” இலங்கை ஒருபோதும் இப்படி இருக்கவில்லை. ஒருநாள் இப்படி இல்லாமல் இருக்கக்கூடும்”
கீழே வீழ்ந்த உருவத்தை நான் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எனது சகோதரிகள் பீதியில் என்னைச்சுற்றி நின்றார்கள், அப்பாவின் வார்த்தைகள் எதிரொலித்தன - அநியாயத்திற்கு எதிராகப் போராடுவதற்கு துணிச்சல்மிக்க எமது இளைஞர்கள் எப்படித் தள்ளப்பட்டார்கள்.
என்ன நடந்ததென்று என்னால் ஊகிக்கமுடிந்தது. ஊரின் வெளியிலே தங்கியிருந்த இராணுவத்தினரின் கண்களில் இந்த அனுபவம் இல்லாத எமது அழையா விருந்தாளி பட்டிருக்கவேண்டும்.
ஒருவேளை அப்படி அனுபவம் இல்லாதவன் இல்லை. மாறாக அண்மையில் புலிகளின் பெரு வெற்றிகளினால் அதிகூடிய நம்பிக்கையால் உந்தப்பட்டவரோ?
வழக்கமாக ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் ஈடுபடும் கூந்தலைச் சீவுதல், பின்னுதல், வாய்ச்சண்டை ஆகியவற்றில் பரபரப்பாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அன்று காலை அப்பா அங்கே வந்தார். பல வருடங்களாக நாங்கள் எங்கள் செய்கைமுறையை சீராக ஒழுங்குபடுத்தியிருந்தோம். முன் வராந்தாவில் ஒரு நேர்கோட்டில் இருந்து தனக்கு முன்னால் இருந்த சகோதரியின் பின்னலைப் பின்னுவோம். ஆரம்பத்தில் வயசுப்படி இருந்தோம். பின்பு படிப்படியாக உயரத்திற்கேற்றமாதிரி மாற்றிக்கொண்டோம்.
ஜெயா உயரமாக இருந்ததாலும் தலைமைக்குணம் கொண்டிருந்ததாலும் தலைமை இடத்திலே அவள் இருப்பாள். அவளுடைய தடிப்பான கூந்தலை அழகுபடுத்த ஒருவரும் இருப்பதில்லை. அவளுடைய உயரத்தை அடையக்கூடியவள் காவியாதான். ஆனால் 12 வயதேயான காவியா இன்னமும் ஒரு சாண் கட்டைதான். அத்தோடு அவளுக்கு பின்னல் பின்னும் பொறுமை இல்லை. ஆகவே அதிகமான நாட்களில் ஜெயா தனக்குத்தானே பின்னிக்கொள்வாள். சிலநேரங்களில் எங்களில் ஒருவர் பின்னிவிடுமாறு மயக்கிவிடுவாள்.
அல்லது அவளுக்கு அதிர்ஸ்டமான நாட்களிலே அம்மாவுடனோ அல்லது அப்பாவுடனோ ஊரிலே நடைபேற்றுக் கொண்டிருக்கும் அவதூறுச் செய்தியைப் பற்றிக் கதைப்பதற்காக ஆச்சி வந்திருப்பா. அவவை தன்னுடைய பின்னலைப் பின்ன சம்மதிக்க வைத்துவிடுவாள்.
மற்றைய நாட்களில் அம்மா தனது அடுப்படி வேலைகளை விட்டுவிட்டு ஜெயாவிற்குப் பின்னாலிருந்து அவளுடைய அலைபாயும் கருமையான கூந்தலை இரண்டு பின்னல்களாகப் பின்னி இரண்டு தோள்களிலும் தவழ்விடுவாள். அவ ஜெயாவின் பின்னலை முடிக்கமுன்பேயே மற்றவர்களெல்லாம் தாங்கள்தான் அடுத்தது என்று நிற்போம். சில நாட்களில் அம்மாவிற்கு நேரம் இருந்தால் மல்லிகைச்செடியிலிருந்து நல்ல வெண்மையான பூக்களைப் பறித்து அழகாகக் கோர்த்து மாலையாக்கி எங்கள் தலையில் சூடுவார்.
சில வருடங்ககளுக்கு முன்னாடி இளம் செடிக்கு அப்பா மரத்தால் ஒரு பந்தல் கட்டியபோது நாங்கள் உதவி செய்துள்ளோம். அது இப்போது பசுமையான இலைகளுடனும் வெண்மையான பூக்களுடனும் வர்ணம் தீட்டிய ஒரு திரைச்சீலை போலிருந்தது: ஒவ்வொரு இலையும் ஒரு புதிய வாழ்வைப்பற்றி முணுமுணுத்தது, ஒவ்வொரு பூவும் இயற்கையின் அதிசயங்களை ஞாபகப்படுத்தியது.
ஒவ்வொருவருடைய கூந்தலைப் பின்னுவதிலும் அம்மாவின் கவனிப்புக்காக சண்டை போடுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததைக் குலைக்கும் விதமாக அப்பா தடாலென வந்தார்.
“ இனி ஒருவருக்கும் பாதுகாப்பில்லை. ஆகக் குறைந்த வயதினரையும் முதியவர்களையும் தவிர மற்றெல்லாரையும் கைது செய்கிறார்கள். கயல்! நாங்கள் என்ன செய்யப்போகிறொம்? கயல்! “
அம்மா எங்களுக்குப் பின்னால் நிற்பதை அவதானித்த அப்பா நிறுத்தினார்.
“ இன்று காலை 11 பையன்களை வளைத்துப் பிடித்து ஒரு வெள்ளை வானிலே ஏற்றிச் சென்றது உங்களுக்குத் தெரியுமா?. அவர்களுடைய பெற்றோர்கள் சந்தையிலே அழுதபடி உள்ளனர்; அவர்களை எங்கே போய்த்தேடுவது? உயிரோடுதான் இருக்கிறார்களா? நல்ல காலம். எங்களுக்கு எல்லாம் பெட்டைகள். இவர்கள் தேவையில்லாமல் வெளியே போகாமல் பார்த்துக்கோ. இந்த சிங்களநாய்களை நான் நம்பமாட்டேன்”
“நீங்கள் ஏன் சந்தைப்பகுதிக்குப் போனீர்கள்? உங்களை அவர்கள் பிடித்துக்கொண்டு போயிருந்தால்?”
அப்பா பதில் சொல்லமுன்னாடி ஜெயா சீறினாள்,” அப்பா என்னை நீங்கள் அனுமதித்தால் புலிகளுடன் இணைந்து இந்த இராணுவத்தை விரட்டிவிடுவேன். சில மாதங்களுக்கு முன்னால் மீனாவின் அக்கா வீட்டைவிட்டோடி புலிகளின் போராட்டத்தில் இணைந்தாள். நேற்று அவள் ஒரு துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்ததாக மீனா சொன்னாள்”
“யார் அந்தப் பையன்கள், அப்பா? யாராவது எங்களுக்குத் தெரிந்தவர்கள்?”
“ அவர்கள் புலிகளே இல்லை என்று நான் பந்தயம் கட்டுவேன். அப்படி இருந்திருந்தால் பிடிபடுமளவுக்கு முட்டாளா இருந்திருக்கமாட்டார்கள். தாங்கள் கொண்டு திரிகிற சைனைட்டை விழுங்கியிருப்பார்கள்”
“ரொம்பவும் மோசம். அப்பா! அவர்களை நிற்பாட்ட உங்களால் ஒன்றும் செய்யமுடியாதா? ஏதோ ஒரு வழியில் உதவிசெய்ய ஆசைப்படுகிறேன்”
இப்படியெல்லாம் கதைத்திருந்தோம்.
அப்படியான உதவி செய்வதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால் திடீரென, அந்தமாதிரி எங்களால் தைரியமாக இருக்கமுடியவில்லை.
ஒரு சிலர் அசையாமல் விழுந்து கிடந்த அந்த உடம்பைச் சுற்றிநிற்க, வேறு சிலர் முத்துவைத் தேற்றுவதில் மினைக்கட நான் அப்பாவைத் தேடி உள்ளே ஓடினேன். அவர் தன்னுடைய வழக்கமான நாற்காலியில் இருந்து மெதுவாக ஆடிக்கொண்டிருக்க பக்கத்தில் இருந்த அம்மா தாராளமாகத் சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை அப்பாவிற்குக் கொடுத்துக்கொண்டிருந்தா,
“அப்பா! அம்மா! சீக்கிரம் வாருங்கள்”
அவர்களிடமிருந்து பதிலொன்றையும் எதிர்பார்க்காமல் நான் என்னுடைய சகோதரிகள் இருந்த இடத்திற்கு ஓடினேன்.
தாங்கள் நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் தன்மதிப்புடைய தமிழர்கள் காட்டும் எதிர்ப்பா?
பல தசாப்தங்களாக அடக்கிவைத்திருந்த போராட்டத்தையும் மௌனத்தையும் கிளறிவிட்டு விடுதலைப்புலிகள் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தந்துள்ளார்களா?
அல்லது ஒரு இளம் வயதினன் சாகும் தருவாயில் இருப்பதனால் ஏற்பட்ட சாதாரண அனுதாபமா?
என்ன காரணமாக இருந்தாலும் எமது பெற்றோரின் கட்டளை உடனடியாக வந்தது.
“பிள்ளைகள், என்ன முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவனை உள்ளே கொண்டுபோங்கள்- உடனடியாக”
இனிமேல் இந்த யுத்தம் மற்றவர்களின் சகோதரர்கள் மாத்திரம் பங்குபற்றும் யுத்தமில்லை. எங்களுக்குள்ளும் வந்துவிட்டது.
அத்தியாயம் 5 – அவள் வந்த நேரம்
சீதா
1990 இலிருந்து 1996
வல்வெட்டித்துறை மற்றும் மெல்பேர்ண்
தேடப்படும் ஆளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது ஆபத்தான காரியம்; கண்டுபிடித்தால் முழுக்குடும்பத்தின் முடிவாக இருக்கும்.
அன்றைய இரவு எங்களுடைய வீடோ அல்லது பக்கத்து வீடுகளோ சோதனையிடப்படாதது ஒரு அற்புதம். காயம்பட்ட புலி இங்கே பக்கத்திலேதன் ஒளிந்திருக்கவேண்டுமென்று இவரைச்சுட்ட இராவணுவத்தினனுக்குத் தெரியவேணும். ஒருவேளை புலிகள் காயம்பட்ட தமது சகாவை தாங்கள் புதிதாக வாங்கிய விரைவுப்படகு மூலம் பாக்கு நீரிணையைத் தாண்டிக் கொண்டு போயிருக்கலாமென அவன் நினைத்திருக்கலாம்.
அல்லது தனது குறி தவறிவிட்டது என்பதைச் சத்தம்போட்டு சொல்லாமலிருப்பதற்குச் சுட்ட சிப்பாய் தீர்மானித்திருக்கக்கூடும்.
என்ன காரணமாயிருந்தாலும் சிவா பூசாவிற்குக் கொண்டு போகப்படுதலிலிருந்தோ அல்லது அன்றே இறப்பதிலிருந்தோ தப்பிவிட்டார்.
சில வாரங்களிலேயே சிவா அடைக்கலம் தேடிவந்த ஒரு ஆபத்தான விருந்தாளி என்ற ஸ்தானத்திலிருந்து ஆண்பிள்ளை இல்லையென்றிருந்த எமது பெற்றோருக்கு ஒரு மகனாக மாறினார்.
எங்களுக்கோ எமது கதவுக்கு வெளியே உள்ள உலகை எட்டிப் பார்க்கக் கூடியதாக இருந்தது. சுதந்திரமும் கூச்சலும் நிறைந்த ஒளிமயமான கட்டுப்பாடற்ற முரட்டுக்காளைகள்போல ஆண்கள் வளர்ந்தார்கள். ஆனால் நன்கு வளர்க்கப்பட்ட பெண்களுக்கு இந்த உலகம் மூடப்பட்டிருந்தது. அந்த உலகம் இந்தப் போரிலினால் சுருங்கிக்கொண்டே வருகிறது. ஆனால் பெண்கள் நிறைந்த எங்கள் வீடு அமர்க்களத்தில் இருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் பாடசாலை விட்டதும் அவசர அவசரமாக வீடு திரும்புவோம். வெளியுலக செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் அன்றைய தினம் அவருடைய பிரத்தியேக பணிப்பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த அவசரம்.
இருந்தும், ஆரம்பத்திலிருந்தே மகாவும் சிவாவும் கொஞ்சம் அதிகநேரமே ஒருவருக்கொருவர் புன்னகை செய்வதை நாங்கள் அவதானித்தோம். அவர்கள் ஒருவரோடு ஒருவர் அதிகம் கதைப்பதில்லை. ஆனால் கதைக்கும்போது அவர்களுடைய இதயங்கள் ஒரே சந்தத்தை தேடுவதுமாதிரியான வெறி தெரியும். மற்றவர்கள் எல்லோரும் முதல் தடவையாக மகாதான் எங்களில் மூத்தவர் என்பதையிட்டு பொறாமைப்பட்டோம்.
முருகதாசின் பெட்டைகள் எல்லோரும் ஒரேவயதினாராக இருந்தால் அவர்களிடையே ஒரு வித்தியாசமும் இருக்காது என்று ஊரார் கதைப்பதுண்டு: அம்மாவின் ஒளிவீசும் சீமைத்தேக்குமரம் பொன்ற தோல், நடு இரவு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் அவவின் கண்கள், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் துள்ளி விளையாடும் அவவின் நீண்ட கூந்தல். . நாங்கள் ஊரின் அழகிகளாகக் கருதப்பட்டதன் காரணம் எங்களில் காணப்பட்ட அம்மாவின் அழகோ அல்லது அப்பாவின் மற்றவர்களைக் கவரக்கூடியதான கவர்ச்சியோ என்பதில் ஒத்த கருத்தில்லை.
“இது நீதியில்லை. நான் மாத்திரம் மூத்தவளாயிருந்தால் சிவா மகாவைவிட என்னைத்தான் விரும்பியிருப்பார். அவள் அந்தமாதிரி ஒரு பயந்தாங்கொள்ளி. அவருடைய வீரத்திற்கு இணையாகமாட்டாள்”, ஜெயா சத்தம் போட்டாள்.
“ ம்ம்ம். ஒருபோதும் இல்லை. அவருக்கு என்னைத்தான் அதிகம் பிடிக்கும். நான் பள்ளியிலிருந்து தாமதமாக வந்தால் நான் எங்கே என்று அவர் கேட்பதாக அம்மா சொல்லுவா”, நான் பதிலுக்கு சொல்வேன்.
ஒன்று மாத்திரம் நிச்சயம். சிவா என்னைக் கூப்பிட்டு தனக்கு அருகில் இருக்கச் சொல்வார். பெரிய பெருமையுடனும் கண்களில் குறும்பு தெரிய அவர் சொல்லும் கதைகளை நான் ஆவலுடன் கேட்பேன்.
அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சொல்லுவார், “ கயல், நான் சொல்வதை எழுதிவை. ஒரு நாள் சீதா பல்கலைக்கழகம் போவா. அவள் கேட்கின்ற கேள்விகளும் கற்க வேணுமென்ற அவாவுமே சொல்கின்றன”
அம்மா மறுப்பாள்,” நீங்களும் உங்கள் கனவுகளும். சீதா கெட்டிக்காரி என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் குண்டுவீச்சாலும் சண்டையாலும் இவையள் பள்ளிக்கூடத்தைவிட அதிகமான நாட்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். அத்தோடு இப்போது தமிழர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து குறைக்கவேண்டுமென்பதற்காகவே அரசாங்கம் தரப்படுத்தல் என்ற ஒன்றைக் கொண்டுவந்துள்ளது”
அம்மா சொன்னதுதான் சரியாயிருந்தது. நான் பல்கலைக்கழகத்திற்குப் போகவில்லை.
பல வருடங்களுக்குப்பின்னர் ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது சுபா என்னை ஊக்கப்படுத்தினாள், “சீதா, உனக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகுது. பல்கலக்கழகத்தில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை விட நீ அதிகம் மூத்தவளல்ல. நீ ஆசைப்பட்டமாதிரியே ஒரு பேராசிரியராக வருவதற்காக படிக்கவேண்டும். என்னைப்பார்! கலைத்துறையில் டீக்கின் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். நீ எவ்வளவோ என்னைவிட கெட்டிக்காரி. உன்னுடைய ஆங்கிலமும் சிறந்தது.”
நான் அவளுக்கு நன்றி சொன்னேன். ஆனால் என்னுடைய தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது.
நான் பிள்ளைத்தாச்சி என்று தெரிந்தவுடனே அம்மா எனக்கு எப்படியும் மெல்பெர்ன் க்குப் போவதுக்குரிய ஆஸ்திரேலியா விசா எடுத்துத்தருமாறு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சுபாவிற்கு எழுதினா. எனக்கும் எனது பிள்ளைக்கும் நல்ல வாழ்க்கை அமையவேணுமென்று விரும்பினா.
சுபா தனது குழந்தைப்பருவ இனியவனும் அவளது சிறந்த நண்பியாகிய வசந்தியின் சகொதரனுமாகிய தேவா வை மணமுடித்து கடந்தவருடம் ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ளாள். ஒரு வெளிநாட்டு மாணவனாகிய தேவாவின் சிறப்பான கல்விச் சாதனைகள் அவருக்கு நிரந்தர வேலை விசாவும் அதைத் தொடர்ந்து குடியுரிமையும் கிடைத்தது. அவர்களது திருமணம் முடிந்த பின்னரும் மகா, சிவா, ஜெயா மற்றும் என்னை குடும்ப குடிபெயர்தல் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால் சுபாவிற்கு அம்மா மாதிரியான முடிவில்லா ஊக்கச்சக்தி உண்டு. ஒவ்வொருவரையும் வரிசையாகக் கொண்டுவந்துவிட்டாள். நான்தான் முதலாவதாக வந்தேன். ஏனென்றால் எனது குழந்தை ஆஸ்திரேலியாவில்தான் பிறக்கவேண்டுமென்று அம்மா பிடிவாதமாக இருந்தா.
எனக்கோ எனது பிள்ளைக்கோ தமிழ்நாட்டு அகதிமுகாமில் எதிர்காலம் இல்லையென்று அம்மாவிற்குத் தெரியும். அந்த முகாமில் என்னுடைய வயிறு சிறிதுசிறிதாக வளர்வதைப் பார்த்துக்கொண்டு அந்தரத்தில் இருந்தேன். வல்வெட்டித்துறையை விட்டு நான் புறப்பட்ட அந்த படகிலே பெற்றோலைக் காட்டிலும் வியர்வையும் பயமும்தான் அதிகம் இருந்தது. தப்புவோமா என்பது கேள்விக்குறியாயிருந்தது. அளவுக்குமேல் ஆட்கள் நிறைந்த அந்த படகு பல தடவைகள் கிட்டத்தட்ட முழுகியமாதிரித்தான். மிகுந்த குளிராகவும் ஈரமுமாக இருந்த அந்த இரவிலே அதிர்ஸ்டவசமாக நாங்கள் உயிர் பிழைத்தோம்.
எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கை இழந்து அந்த இருண்ட அகதிமுகாமிலே இருக்கும்போது என்னை அன்புடன் கவனிக்க முற்பட்ட அவ்வூர் மக்களிடமிருந்து விலகியே இருந்தேன். மற்ற அகதிகளின் தற்காலிக நட்பையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லோருடைய கண்களும் எனது வயிற்றைச்சுற்றி வட்டமிட்டபின் பதமாக என்னுடைய கணவர் யார் என்று கேட்பார்கள். என்னுடைய மௌனம் அவர்களுக்கு பதில் சொல்லிற்று. இந்த யுத்தத்தின் இழப்புகளில் ஒன்றுபோல என்னுடைய கணவரும் மாண்டிருக்கவேணும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதை மறுத்துச் சொல்ல எனக்கு மனம் வரவில்லை. உண்மையைச் சொல்வதைவிட ஒரு யாழ்ப்பாணத்து யுத்த விதவையாக இருப்பது எளிதானது.
சிந்தித்துப் பார்த்தால் மெல்பேர்னுக்கு வந்தபோதும் அந்தக் கதையையே தொடர்ந்திருக்கலாம்.
அருவிக்கும் எனக்கும் இந்தச் சில வருடங்கள் இலகுவாக இருந்திருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே பல துன்பங்களைச் சுமந்து கொண்டிருந்த எனது சமூகத்திற்கு எனது துரதிஸ்டம் ஒரு பேசும் பொருளாக இருந்தது; அவர்களுடைய துயரங்களுக்கு என்னுடைய கதை ஒரு மருந்தாக இருந்தது.
நான் மெல்பேர்ன் வந்து சேர்வதற்கு முதலேயே எனது கதை வந்துவிட்டது. யுத்தத்தால் ஏற்பட்ட ஒவ்வொரு இழப்புடனும் எனது கதையும் பேசப்பட்டது.
வயிற்றிலே பிள்ளையைச் சுமந்தபடி 1996 சித்திரை மாதம் நான் ருலாமரின் விமானநிலையத்தை அடைந்தபோது என்னைப்பற்றியோ குழந்தையைப்பற்றியோ ஒருவித கரிசனமும் இல்லாமல் இருந்தேன். சுபா படபடப்புடன் பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்திலே வசந்தி புதிதாகத் தான் திருமணம் செய்துகொண்டவருடன் நின்றா. தனது தூரத்துச் சொந்தக்காரனாகிய ஒரு மருத்துவரை மணம் புரிந்திருந்தா.
வசந்தியின் பெற்றோர் அவள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழவேண்டுமென்பதற்காக ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணுமென்பதில் உறுதியாயிருந்தனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொருத்தமான மாப்பிள்ளையைக் கவருவதற்காக தாராளமான சீதனம் கொடுக்கத் தயாராக இருந்த பெற்றோர் மெல்பெர்ன் புறநகரில் மருத்துவராக வேலைசெய்த ரவியைத் தேர்ந்தெடுத்தார்கள். இவரைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் வசந்தியுடைய சகோதரன் தேவாவும் அந்த நகரிலே வாழ்ந்ததுதான்.
அவர்களுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் இந்தப் பாழாய்ப்போன யுத்தத்தினால் அவர்கள் ஆசையாசையாய் திட்டமிட்டிருந்தபடி ஒரே மகளின் திருமணத்தை ஆடம்பரமாய் நடத்தவில்லையென்றதுதான். முத்துமாரி அம்மன் கோயில் மணி ஒலிக்க , சுற்றிவர எங்கும் மல்லிகை மணம் வீச, பட்டுப்புடவையுடனும் தங்கநகைகளுடனும் பளபளப்பாக இருக்கும் அவர்கள் மகள் மாப்பிள்ளையுடன் கை சேர்த்து புனித அக்னியைச் சுற்றிவரவில்லையென்பதுதான்.
அதற்குப் பதிலாக அவர்கள் திருமணம் மெல்பெர்ன் இல் நடந்தது. வசந்தியின் பெற்றோர் நினைத்ததுமாதிரியே திருமணம் ஆடம்பரமாக நடந்தது- ஆனால் வழமைக்கு மாறாக ரவியின் பெற்றோர்தான் முன்னின்று நடத்தினார்கள்.
சென்ற கார்த்திகை மாதம் அம்மாவிற்கு பயணம் சொல்ல வந்த வசந்தியின் தாயார் சொன்னது ஞாபகமாயிருக்கிறது,
“கயல், இந்த யுத்தம் எங்களுக்கு என்ன செய்திருக்கிறதென்று பார். கல்யாணம் என்றால் பெண்வீட்டார்தான் எல்லா ஒழுங்குகளையும் செய்யவேண்டும். ஆனால் எங்கடை ஒரே மகளுக்கு எங்களால் செய்யமுடியவில்லை”
அம்மாவுடைய குரலில் அவவின் சொந்தக்கவலை தெரிந்தது, “ எப்படியென்றாலும் வசந்திக்கும் ரவிக்கும் முறைப்படி திருமணம் நடந்தது. ஆனால் சுபாவிற்கும் உங்கடை சிறீக்கும் நடந்ததுமாதிரியில்லை. மெல்பெர்ன் சிவன் கோயிலில் சிறீ சுபாவிற்குத் தாலி கட்டும்போது ஒரு சிலர்தான் நின்றார்கள்”
என்னை விமான நிலையத்தில் கண்ட சுபாவும் வசந்தியும் ஓடோடி வந்து இறுகத் தழுவினார்கள். அந்தத் தழுவலின்போது அதிகம் சிரிப்பு இருந்தபோதிலும் ஒரு சுமை நீங்கின ஆறுதலும் கலந்திருந்தது.
திருமணமாகி ஒரு மாதத்திலேயே இருபக்க பெற்றோரின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக கர்ப்பம் தரித்த புதுப்பெண்ணாகிய வசந்தியின் முகத்திலே கறையில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவளுடைய அன்பு கலந்த தெளிவான குரல் என்னை வரவேற்றது,
“ சீதா! கடைசியில் வந்து சேர்ந்துவிட்டாய்! விசாவுக்கான வேலைகள் எல்லாம் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே என்று சுபாவும் நானும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். அகதிமுகாமிலேயே நீ பிள்ளை பெற்றுவிடுவாயோவென்று நாங்கள் நிம்மதி இல்லாமல் இருந்தோம். நாளை காலையில் முதல்வேலையாக ஒரு மருத்துவரைப் பார்க்கவேணும்”
என்னுடைய வயிற்றை மென்மையுடன் தடவிய அவள் தன்னுடைய வயிற்றையும் பெருமையுடன் பார்த்தாள்.
“ எனக்கு செப்டெம்பர் மாதம் 27ம் திகதி . உன்னுடையது எப்போது?” புளகாங்கிதத்துடன் கேட்டாள்.
ஒரு வெறுமையுடன் அவளை உற்றுப் பார்த்தேன்; அதைப்பற்றி எனக்கென்ன ஆர்வம்?
நான் பிள்ளைத்தாச்சி என்று அறிந்தவுடனேயே அம்மா என்னை மந்திகை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று கர்ப்பத்தைக் கலைத்துவிடுவமன்று கேட்டாள். யுத்தத்தின் கோரத்தினால் சிதைந்துபோன உடல்கள், காணாமல் போன உடல் உறுப்புகள், ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள் இவற்றுடன் மல்லாடிக் கொண்டிருந்த ஊழியர்கள் எங்களை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டார்கள், “ இங்கே நீங்கள் நிற்கவேண்டிய அவசிய காரணம் இல்லாவிடில் இங்கிருந்து போய்விடுங்கள். எந்த நேரத்திலும் ஆஸ்பத்திரியும் தாக்கப்படலாம்”
தமிழ்நாட்டு அகதிமுகாமிலும் வித்தியாசம் இல்லை. உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டிய பலருக்கு மத்தியில் ஆரோக்கியமான ஒரு கர்ப்பிணிப்பெண் இலகுவாக ஒதுக்கப்பட்டாள். விரைவில் கர்ப்பம் அதிகம் வளர்ந்துவிட்டதால் அதைக் கலைக்கும் ஆபத்தான காரியத்தை ஒரு மருத்துவரும் செய்யமாட்டார். அந்த நீண்ட நாட்களில் எனக்கு விருப்பமில்லாத குழந்தை வளர்ந்து வருவதை பெருத்துவரும் எனது வயிறு உணர்த்தியது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்த நான் எனது உடம்பிலிருந்தும் குழந்தையிடமிருந்தும் என்னைத் தனிமைப்படுத்த பழகிக்கொண்டேன்.
என்னுடைய அலட்சியத்தைத் தெரிந்துகொண்ட சுபா வசந்தியின் காதில் முணுமுணுத்தாள், “ நவம்பர் 8ம் திகதிதான் பிள்ளை உருவாயிற்று. என்னுடைய கணக்கின்படி, பிரசவ நாள் ஜூலை கடைசியில் வரும்”
தலையை மெதுவாக ஆட்டிய வசந்தி என்னைப் பார்த்து அன்புடன் கடிந்துகொண்டாள்.
“சீதா! ஒரு கர்ப்பணிப்பெண்ணான நீ மிகவும் ஒல்லியாயிருக்கிறாய். உன்னை நாங்கள் கொழுக்கவைக்கவேண்டும். ஆரோக்கியமான உண்வுதான் பிள்ளைப்பேறு சிரமமில்லாமல் நடப்பதை உறுதி செய்கிறது. நான் என்ன சாப்பிடுறேனென்று ரவி கவனித்துக்கொள்வார்- பிள்ளை நன்றாக வளர்வதற்கும் தாயின் ஆரோக்கியத்திற்கும் சத்தான உணவு முக்கியம் என்று அவர் சொல்லுவார்.”
இடைமறித்த சுபா,” ம்ம். நான் ஒரு மருத்துவர் இல்லை. ஆனால் எனக்கும் அது தெரியும்”
என்னைப்பார்த்து அன்புடன் சொன்னாள்,” சீதா! எப்படி நடந்தாலும் இதுதான் எங்கள் குடும்பத்தின் முதல் பேரப்பிள்ளை. சமூகத்தைப்பற்றியோ அல்லது குழந்தைக்குத் தகப்பன் இல்லையோ என்று நீ கவலைப்படக்கூடாது. உன்னையோ உனது குழந்தையையோ நாங்கள் கை விடமாட்டோம்”
அவள் சொன்னதுமாதிரி 1996 ஜூலை 10 ம் திகதி அருவி கத்திக்கொண்டே இந்த உலகத்தை வந்தடைந்தபோது சுபா பக்கத்தில் இருந்தாள்.
பார்ப்பதற்கு நான் விரும்பவில்லை. எனக்கு விருப்பமேயில்லாமல் பல மாதங்களாக சுமந்துவந்த அன்னிய உடம்பை என்னிடமிருந்து விலக்கிவிட்ட நிம்மதியில் சுருண்டு படுத்து முடிவில்லாத் தூக்கத்தில் இருக்க விரும்பினேன். ஆனால் சுபாவின் ஆர்ப்பாட்டத்திற்குக் குறைவில்லை. அந்த நேரம் எனது சகோதரிகளில் அவள் மாத்திரம் மெல்பெர்ன் இல் இருந்தாள். மற்றைய சகோதரிகளையும் அம்மாவையும் அவள்தான் பிரதிபலித்தாள்.
என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியமுதலே நல்ல மெல்லிய பருத்தித் துண்டினால் சுற்றப்பட்ட ஒரு பொதி என் கைகள் மீது திணிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அதை வேண்டாவெறுப்பாகப் பார்த்தேன். மெதுவாக என்னைச் சுற்றியிருந்த இருண்ட உலகம் நான் இதுவரை பார்த்திராத வர்ணங்களுடன் மினுமினுக்கத் தொடங்கியது. உடைந்துபோன எனது இதயம் நிமிர்ந்தது; நானே பார்த்துப் பயப்படும்படியான ஒரு அன்பு வெள்ளத்தில் என்னைத் தடுமாறவைத்தது. இந்த மிகச்சிறிய முழுமையான ஜந்துவை ஒரு அழையா அன்னியன் என்று எப்படி என்னால் நினைக்கமுடிந்தது? இவளை எப்படியாவது அழித்து விடவேணுமென்று எப்படி ஆசைப்பட்டேன்? பால் மணத்துடன் மெதுவான கணகணப்புடன் இருந்த அந்த எழிலரசி , ஒரு நொடியில், எனது வாழ்க்கையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது.
“அருவி!” மெதுவாக முணுமுணுத்தேன்.
நான் சொல்வதைக் கவனமாகக் கேட்க முயன்ற சுபா, “ என்ன சொன்னாய்?” என்று கேட்டாள்.
“அருவி” நிமிர்ந்து பார்த்து திடமாகச் சொன்னேன்.
சுபாவுடைய கண்கள் எனது கண்களைப் பார்த்தது. அவளுக்கு வேறொன்றும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது தமிழ்நாட்டிலுள்ள குற்றாலத்திற்குப் போயிருக்கிறோம். சிங்கள இராணுவமோ அல்லது இந்திய அமைதிப்படையோ யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து பிரயாணங்களைக் கடுமையாக்கி, ஒரு கட்டத்தில் துப்பரவாக முடியாதென்ற நிலைக்குத் தள்ள முந்திய காலகட்டத்தில் போயிருந்தோம்.
சாந்தம் நிறைந்ததும் பிரமாண்டதுமான தொன்மை வாய்ந்த சிவன் கோயிலில் எமது பெற்றோரும் மற்றைய சகோதரிகளும் லயித்துப் போயிருந்த நேரத்தில் சுபாவும் நானும் அங்கே விழுந்து கொண்டிருந்த பல நீர்வீழ்ச்சிகளில் எங்களை மறந்திருந்தோம். இந்த நீரில் குளித்துத் தங்களைச் சுத்தம் செய்தபின்னர்தான் அங்குள்ள பல கோயில்களுக்கும் பக்தர்கள் போவார்கள்.
ஒரே நேரத்தில் உயிரோட்டத்தையும் முழு அமைதியையும் கொடுக்கும் அந்த அருவியை (நீர்வீழ்ச்சியை) மீண்டும் போய்ப்பார்க்கவேணுமன்று நாங்கள் கனாக்கண்டோம்.
எனது கைகளில் இருந்த சிறிய பொதியை மெதுவாகத் தடவியபடி “அருவி!” என்று சுபா மீண்டும் முணுமுணுத்தாள்.
தனது கண்களை மூடிக்கொண்டு உடம்பையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்துகின்ற அந்தக் குளிர்மையான நீரிலே தான் இருப்பதாக கற்பனையில் இருந்த சுபாவின் முகத்திலே ஒரு சாந்தமான புன்னகை தவிழ்ந்தது.
ஆனால் என்னுடைய சிந்தனையோ வேறெங்கேயோ இருந்தது.
அந்த முழுமையான சிறிய முகத்தைப் பார்த்தபோது எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தது- எனக்குப் பக்கத்திலே ஒரு ஆடவனும் தேவையில்லை, அருவிக்கும் ஒரு தகப்பனும் தேவையில்லை.
அவளுக்கு நான் இருக்கிறேன். அது போதும்
சுபாவும் தேவாவும் தாங்கள் உதவி செய்வதாயும் தங்களுடன் எங்களை இருக்குமாறும் கெஞ்சினார்கள். அவர்களுடைய கருணை ஏதோ தர்மம் செய்வதுபோல இருந்தது. ஏற்கனவே போதுமானளவு என் தன்மானத்தை இழந்துவிட்டேன்.
“சீதா! நீ பல்கலைக்கழகமும் போய் அருவியையும் தனியே வளர்ப்பதென்பது முடியாத காரியம். கடைசி அப்பா,அம்மா மற்றவர்களும் வரும்வரையாவது எங்களுடன் இரு. அதன்பிறகு நீ மாறிமாறி இருக்கலாம்”
“ஆனால் நான் மேலே படிக்கப்போகவில்லை. குணா அண்ணாவை உனக்கு ஞாபகம் இருக்குத்தானே? அவருடைய சாப்பாட்டுக்கடைக்கு என்னை அடிக்கடி கூட்டிக்கொண்டு போவாயே?.கிழமைநாட்களில் அவருடைய சாப்பாட்டுக்கடையிலும் வார இறுதி நாட்களில் மேரி லேன் மண்டபத்திலும் வேலை செய்வதற்கு மணித்தியாலம் 10 டொலேர்ஸ் தருவதாகச் சொல்லியிருக்கிறார் அருவியையும் என்னோடு அழைத்துச் செல்லலாமென்று சொன்னார். எனவே எனக்கு உங்கடை உதவி தேவைப்படாது”
சுபாவின் குரல் தடுமாறியபோதும் தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு என்னைக் கடிந்துகொண்டாள்,” நீ ஒரு முட்டாள் சீதா! இந்த முட்டாள்தனமான உன்னுடைய தற்பெருமைதான் உன்னுடைய வீழ்ச்சிக்கு வழி கோலப்போகுது. அருவியினுடைய வாழ்க்கையை நாசம் பண்ணாமல் பார்த்துக்கோ”
அத்தியாயம் 6 – கூண்டில்
அடைபட்ட பெண்புலி
சீதா
2000 – 2003
மெல்பெர்ண்
வன்னி, வல்வெட்டித்துறை பின்னோட்ட நினைவுகள்
என்னைப் பாதுகாக்க சுபா எவ்வளவு திடமாக இருந்தாளோ அதைவிட நான் திடமாயிருந்தேன், மற்றவர்கள் உதவியில்லாமல் அருவியை நான் வளர்ப்பேன்.
அருவியின் முதலாவது பிறந்தநாளுக்கு முன்னரே சாதாரணமான ஒரு பலகையிலான வீட்டிற்கு குடிபுகுந்தேன். பல மாதங்களாக Marys Lane இல் நான் நீண்டநேரம் வேலை செய்யும் நாட்களிலே சுபாவும் தேவாவும் தங்களால் முடிந்த நாட்களில் அருவியைத் தூக்கிச்செல்வதைத் தமது பணியாகக் கொண்டனர்.
சுபாவிற்கும் தேவாவிற்கும் இரண்டு ஆண்குழந்தைகள், குரு, அஸ்வின் ஆகியோர் பிறந்தபின்புதான் நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது வந்து அருவியைத் தூக்கிச் செல்லும் பழக்கம் குறைந்தது. இதே வேளை மகாவும் சிவாவும் தமது மகனாகிய ஆனந்துடன் மெல்பெர்ன் வந்து சேர்ந்தனர். சிதறிப் போயிருந்த எமது குடும்பம் ஒருவழியாக மீண்டும் மெல்பேர்ண் இல் வேர்விடத் தொடங்கியது.
2003ம் ஆண்டு அருவி முதலாம் தரம் படித்துக் கொண்டிருந்தபோதுதான் துக்கம், கோபம், குற்ற உணர்வு ஆகியவற்றால் மனமுடைந்து போயிருந்த ஜெயாவும் மெல்பேர்ண் வந்து சேர்ந்தாள்.
அம்மா என்னை ஊரைவிட்டு அனுப்பிய அந்த மோசமான இரவிலே அவளும் காவியாவும் புலிகளுடன் இணைந்து கொண்டனர். தன்னுடைய பயமின்மையினாலும், எதற்கும் துணிந்த போக்கினாலும், கூர்மையான அறிவினாலும் ஜெயா விரைவாகவே படிப்படியாக பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணத்திலுள்ள பெண்புலிகளுக்குத் தலைவியானாள்.
அவள் அனுப்பிய அவளது துணிவான தடுமாற்றமில்லாத கைகளினால் எழுதிய கடிதங்களைப் பெற்றது எனக்கு இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தையும் அகண்ட சமுத்திரத்தையும் தாண்டி வந்த தபால்கள் குறைவுதான். ஆனால் வந்த எல்லாக் கடிதங்களும் கிட்டத்தட்ட ஒரே விஷயத்தைக் கொண்டிருந்தன – நாட்டுப்பக்தி, அராஜகத்தை எதிர்த்தல், எங்கள் மேலுள்ள அதீத அன்பு
அவளுடைய குரலில் இருந்த ஏமாற்றத்தை இப்போதும் கேட்கக் கூடியதாயுள்ளது,
“காவியா சரியான பிடிவாதக்காரியாயுள்ளா. சண்டை போடுவதை நிறுத்தும்படி நான் சொன்னாலும் அவள் கேட்கமாட்டாள்.
நானும் காவியாவும் வன்னியில் இருக்கும்வரை அம்மாவும் அப்பாவும் மெல்பெர்ன் க்கு வரமாட்டார்கள். அவர்களை விட்டு முத்துவும் வரமாட்டாள்.
காவியா மாத்திரம் போவதற்கு சம்மதம் தெரிவித்தால் அம்மா, அப்பா, முத்து ஆகியோரை சம்மதிக்கவைக்கலாம்.
ஒருவருக்குமே பாதுகாப்பு இல்லாத யுத்தபூமி இது. அவர்களுடைய பாதுகாப்பை நாங்கள் சீரழிக்கக்கூடாதென்பதை காவியா புரிந்துகொள்ளவில்லை.
நான் இங்கிருந்து சண்டை போடத்தான் வேண்டும். எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவராவது இருக்கத்தான் வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார் “எங்களுடைய தேச விடுதலைக்காக ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரைத் தரவேண்டும்”
ஆனால் காவியா கேட்கமாட்டாள். அவள் சொல்கிறாள், “அக்கா, இருவரும் ஒன்றாகப்போவோம் அல்லது ஒன்றாகச் சாவோம்””
முடிவிலே காவியா தனியாக இறந்தாள்- அதுவும் ஜெயாவால் அந்த இறப்பை நோக்கி அவள் அனுப்பப்பட்டாள்.
சண்டைத்தளத்திலிருந்து காவியாவை விடுவிப்பதற்காக அவளை புலிகளின் பிரச்சார சேவையில் பயிற்சி பெற ஜெயா அனுப்பிவைத்தாள். அவசரத்திற்கும் வசீகரத்துக்கும் இடையில் நர்த்தனமாடும் கணீரென்ற குரலோடும் எந்தப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அழகைப் பிரதிபலிக்கும் முகத்தையும் கொண்டிருந்த காவியா புலிகளின் அன்றாட செய்தியைச் சொல்வதற்கான சரியான நபர்.
சமீபத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட களைப்பினால் புலிகளின் படையில் சேரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மக்களை ஊக்குவிக்கும் பலமான பிரச்சாரம் தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரனின் நேர்காணல் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதிய ஜெயா தங்களுடைய வன்னிக்கூடாரத்திலிருந்து காவியாவை அனுப்பிவைத்தாள்.
காவியா இதற்குமுன்பும் செய்திருந்த இந்த வேலை மிகவும் இலகுவானது. இலட்சியவாதியான கவர்ச்சியும் செல்வாக்குமுடைய தலைவரின் ஐந்து நிமிட நேர்காணல் கொஞ்சம் மங்கிப் போய்க்கொண்டிருக்கிற போராட்டக் கனலை ஊதிவிடும்- இதுவரை பலரைப் பலி கொடுத்த இந்த நெருப்புக்கு இன்னமும் ஆட்கள் தேவைப்பட்டது.
அவளுடன் சென்ற ஒளிப்பதிவாளரால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டாள் என்று சிலர் கதைத்தார்கள். அதற்குப் பிறகு அவனையும் ஒருவரும் பார்க்கவில்லை. ஒருவேளை காவியா மாதிரி அவனும் எரிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புலிகளின் பிரச்சாரத்தை திறம்படச் செய்து கொண்டிருந்த காவியாவைப் பிடிப்பதற்கு உதவியதற்காக அவனுக்கு அரசாங்கம் தாராளமாகக் கொடுத்த வெகுமதியைக் கொண்டு அவன் வெளிநாடு ஒன்றில் சுகமே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.
வேறு சிலர் புலிகள் தங்கள் பலத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்று தமக்குள் கதைத்தனர். இல்லாவிடில் எப்படியாக இராணுவத்தால் தலைவரின் குகைக்குக் கிட்ட வரமுடியும்? ஒருவேளை விரைவில் தலைவரும் தன்னைத் தற்காக்க முடியாதிருக்கும் என்று நம்பிக்கையிழந்து முணுமுணுத்தினர்.
ஒரு சதத்திற்கும் மதிப்பற்ற அப்படியான சிந்தனை ஜெயாவிற்கு வரவில்லை. அவளுடைய சிந்தனைகள் எல்லாம் “ நான் இன்னுமொரு சகோதரி விடயத்திலும் தோற்றுவிட்டேன். சீதா கேவலமாகத் தாக்கப்பட்டபோது மற்றைய சகோதரிகளை நான் காப்பாற்றுவேன் என்று சத்தியம் செய்தேன். அப்படியிருந்தும் இந்த முறைகெட்டுப் பிறந்த நாசகாரர்களின் கைகளுக்கு நானே அனுப்பிவைத்தேனே. என்னை ஒருகாலமும் மன்னிக்கமாட்டேன்”
சில நாட்களில், கடைசி நேரத்தில் காவியா பட்ட துன்பம் வெளிச்சத்திற்கு வந்தது.
முதல் வெளியான வீடியோவில் அரை நிர்வாணத்துடன் திக்குத்திசை தெரியாத குழப்பத்துடன் தரையில் கிடந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது சுற்றிவர நின்ற ஐந்தாறு பேர்கள் காமவெறிபிடித்த அசிங்கமான கைச்சேட்டைகள் செய்தபடி நின்றனர்
அடுத்து வந்த வீடியோவில் காவியாவின் உடல் நெருப்பில் எறியப்படுவதையும் அங்கே நின்ற ஒருவன் வெறிபிடித்த குரலில், “ இன்னுமொருமுறை இவளுடன் நான் உடலுறவு வைக்க முடியுமானால்” என்று கூச்சலிட்டான்.
அரை டசின் இராணுவத்தினருக்கு மேல் அவளை மிருகத்தனமாகத்தாக்கியிருந்தபோதும், அவள் குழப்பமாயிருந்தபோதிலும் அவள் அவர்களை எதிர்த்தும் இடம் கொடுக்காமலும் இருந்தாள். ஒவ்வொருவராக அவளை அனுபவிக்க வந்த ஒவ்வொருவர் முகத்திலும் காறித் துப்பினாள் என்று சிலர் தமக்குள் பேசிக்கொண்டனர்.
ஒவ்வொரு புதுச் செய்தியும் வர வர ஜெயாவின் தாங்கொணாத் துக்கமும் அவளது குற்ற உணர்வும் காட்டுத்தீ போலப் பெருகியது. அவளைச் சுற்றியிருந்தோர்கள் அவளின் நிலைகண்டு அஞ்சினார்கள். தன்னுடைய வழியில் அவர்களைப் பழிவாங்கத்துடித்த அவளுக்கு தலைவர் பிரபாகரன் மறுத்தது ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவளால் நம்பமுடியவில்லை.
“ஜெயா! வீட்டுக்குப் போய் உன்னுடைய பெற்றோருக்கு ஆறுதல் சொல். அவர்கள் இப்போதுதான் ஒரு மகளை இழந்துள்ளார்கள். நீ அவர்களுடன் இருக்கவேண்டும்”
அவர் சொல்லும்போது ஆறுதலுக்காக அவர் பிடித்த கையைத் தட்டிவிட்டு பைத்தியம் போல் நின்றாள். சுற்றவர இருக்கிற எல்லோரையும் எல்லாவற்றையும் துவம்சம் செய்யப்போகும் ஒரு சூறாவளி போல இருந்தாள். தலைவர் விட்டுக் கொடுக்கவில்லை. அவளுடைய கையை இறுகப்பற்றியதும் அவள் ஓரளவு சாந்தமானாள். கண்களைக் கீழே குனிந்து பார்த்தமாதிரி அவருக்கு முன்னால் இருந்தாள்.
இறுதியில் பலவருடங்களாக எடுத்த பயிற்சியின் காரணத்தால் எலும்பிலே கலந்துவிட்ட கட்டுப்பாடு தனது கையால் பழி வாங்கவேண்டுமென்ற எண்ணத்தைப் போக்கிவிட்டது.
ஆனாலும் தலைவர் ஏமாறவில்லை. ஜெயாவைச் சுற்றியுள்ளவர்களுக்குச் சொன்னார், “ இவள் ஒரு நடமாடும் எரிமலை. ஒரு நாள் இந்த எரிமலை வெடிக்கும். அப்போது பல அப்பாவிகள் பலியாகக்கூடும். நிச்சயமாக அவள் தன்னை அழித்துக்கொள்வாள்”
அம்மா, அப்பா, முத்து ஆகியோர் அவள் வரவிற்காக வல்வெட்டித்துறையில் காத்திருந்தனர். காவியாவின் இறப்பு பற்றிய கோரமான விபரங்களையெல்லாம் ஜெயா வருவதற்கு முன்பேயே அவர்களுக்குத் தெரியும்.
“ ஜெயா தன்னை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. அவள் ஒரு மதம் கொண்ட யானை போல் எல்லாவற்றையும் அழிக்கிறேன் என்றிருப்பாள். கண்ணில் படும் சிங்கள இராணுவத்தினரைக் கொல்வதிலேயே குறியாயிருப்பாள். நான் அதை அனுமதிக்கமுடியாது. எப்படியான முடிவாக அது இருக்கும் என்று என்னால் அனுமானிக்கமுடியும். இன்னுமொரு மகளை என்னால் இழக்கமுடியாது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவளை மெல்பேர்ண் க்கு அனுப்பவேண்டும்”
அப்பா நேராக விறைத்துப் பார்த்தபடியே இருந்தார். அவருடைய தொங்கிக்கொண்டிருந்த தோள்களையும், இன்னும் வெளியே கொட்டுப்படாத கண்ணீரைத் தேக்கி வைத்திருந்த கண்களையும் வழக்கத்திற்கு மாறான அமைதியையும் பார்த்த அம்மாவிற்கு பயமாக இருந்தது – ஆனால் அவ இப்போது ஜெயாவின் விடயத்தைக் கவனிக்க வேண்டியிருந்தது.
முத்துவின் நிலையோ இருதலைக்கொம்பு எறும்பு போல அவதிப்பட்டாள். ஒரு பக்கம் கிட்டத்தட்ட தன்னுடைய வயதுள்ள காவியாவின் கொடுமையான இறப்பு, மறுபக்கம் மற்றொரு சகோதரிக்கும் அந்த நிலை வராமல் பாதுகாக்கவேண்டும். அம்மாவளவு ஓர்மம் அவளுக்கு இல்லையென்றாலும் தன்னுடைய கவலையை முகமூடி போட்டு மறைத்துவிட்டு ஜெயாவிற்கு உறுதுணையாக இருப்பதற்குத் தீர்மானித்தாள். இன்னும் பசுமையாய் மறக்கமுடியாதபடி ஜெயா தன் நெஞ்சுக்குள்ளே வைத்திருக்கும் குற்ற உணர்வை நீக்கி அவளைச் சாந்தப் படுத்துவதென்று முத்து தீர்மானித்தாள்.
ஆனால் எதுவுமே ஜெயாவைச் சாந்தப்படுத்தவில்லை. கூண்டுக்குள்ளே அடைபட்ட புலிபோல சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே உறுமினாள், “அந்த வெறி பிடித்த நாய்களை ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்து அவர்களைத் துண்டுதுண்டாக்குவேன்!”
அம்மாவின் குரல் அசாதரணமான அமைதியைக் கொண்டிருந்தது, “என்னுடைய இறந்த உடலின்மீதுதான் நீ அதைச் செய்வாய்”
“இவவைப் பாருங்கோ அப்பா! இவவுக்குச் சொல்லுங்கோ – அந்தக் காட்டுமிராண்டிகளை இந்தப் பூமியிலிருந்தே விரட்டுவது நான் காவியாவிற்குச் செய்யவேண்டிய கடமை”
அந்த வார்த்தைகள் அப்பாவைத் துவள வைத்துவிட்டது. தரையைப் பார்த்தபடி இருந்தார் – ஜெயாவைப் பார்க்கவே கூசினார். ஒருவாறு அவர் அவளைப் பார்த்தபோது அவருடைய கண்களிலே இருந்த தளர்வு அவளுக்குத் தெரிந்தது. தோள்களில் இருந்த தளர்வைக் காட்டிலும் இது மோசமாக இருந்தது. ஜெயா முத்துவைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் முத்து சோகத்துடன் தலையாட்டினாலேயொழிய ஒரு வார்த்தையும் பேசவில்லை.
அம்மாதான் மீண்டும் பேசினா, “நீ கொழும்புக்கு உடனடியாகப் போகிறாய். உன்னை பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்ப புலிகள் உத்தரவாதம் தந்துள்ளார்கள். தபால் கந்தோரிலிருந்து நான் சுபாவுடன் கதைத்தேன். ஆஸ்திரேலிய தூதகரத்துடன் கதைத்து உனக்கு விசா ஒழுங்கு பண்ணிவிட்டாள். விமானத்திற்கான பயணமும் ஒழுங்கு செய்தாகிவிட்டது”
ஜெயா பதிலுக்கு உறுமினாள், “நான் போய் அந்த பிளேனில் ஏறுவதாவது? என்னுடைய இடத்தில் முத்து போகட்டும். இல்லையேல் நீங்கள் போகலாம். நான் வன்னிக்குத் திரும்பப் போனபின் அந்த நாசகாரருக்கு என்ன செய்கிறேன் என்று பாருங்கள்”
அம்மாவுடைய முடிவிலே எந்த மாற்றமும் இல்லையென்பதை அவளது இறுகிய முகத்திலிருந்து புரிந்துகொண்ட ஜெயா தொடர்ந்தாள், “ நான் ஒரு பையனாக இருந்தால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள். நாங்கள் எல்லோரும் பெண்களாய் இருப்பதால் என்னுடைய தங்கைக்கு நடந்த கொடூரம் பழிதீர்க்கப்படாமல் போய்விடக்கூடாது. முதல்வேலையாக நாளை காலை நான் வன்னிக்குப் போகப்போகிறேன்”
“அப்படியே இருக்கட்டும்,” அம்மா சொன்னா, “நீ வன்னிக்குப் போன மறு நிமிடம் நான் கிணத்திலே குதித்துச் செத்துப்போகிறேன்”
முத்து திடுக்கிட்டுப் போனாள். அப்பாவின் வெறுமையான கண்களில் ஒரு சோகம் பளிச்சிட்டது. ஜெயா தனது வாயைத் திறந்தாள். ஆனால் ஒரு வார்த்தையும் வரவில்லை. அம்மா தனது மிரட்டலைச் செய்தே தீர்வாள் என்பதில் அவர்களுக்குச் சந்தேகமேயில்லை.
மறுநாள் காலை ஜெயா கொழும்பு சென்று சில நாட்களில் மெல்பேர்ண் அடைந்தாள். இலங்கையில் தொடர்ந்தும் வன்முறை நீடித்துக் கொண்டிருந்ததால் அவளுடைய விசா நீடிக்கப்பட்டது. இறுதியில் அவளுக்கு ஆஸ்திரேலியாவின் நிரந்தர வசிப்பிடம் கிடைக்கப்பெற்றது.
அத்தியாயம் 7 – தயக்கத்தில்
புலி
அருவி
2003 இலிருந்து 2018
மெல்பேர்ண்
சிவாவினுடைய வல்வெட்டிதுறைக்கான பின்னோட்டம்
ஜெயா பெரியம்மா மெல்பெர்ன் இல் பிளேனிலிருந்து இறங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பல வருடங்களாக மகா, சுபா பெரியம்மாக்கள் காட்டி வந்த அன்பையும் பாசத்தையும் போலவே ஜெயா பெரியம்மாவிடமிருந்தும் எதிர்பார்த்தேன். ஆனால் அவவுடைய துளைக்கும் பார்வை, குற்றம் சாட்டுவது போன்ற பார்வை என்னைத் தடுமாற வைத்தது.
ஜெயா பெரியம்மா அம்மா பக்கம் திரும்பி,” இவளைப் பார்த்தால் தமிழச்சி போலிருக்கிறது. ஆச்சரியமாயுள்ளது”
எனக்குத் தடுமாற்றமாய் இருந்தது. அவர்கள் போல நானும் ஏன் தமிழச்சியாய் இருக்ககூடாது?
நான் ஆஸ்திரேலியாவில் பிறந்ததினால் வெள்ளைத் தோலுடன் இருக்கவேண்டுமென்று நினைக்கிறாவோ?
காலம் செல்லச்செல்ல நாங்கள் ஒன்றாக நேரத்தைக் கழித்ததாலும் கபடமற்ற கலந்துரையாடலாலும் ஜெயா பெரியம்மாவின் கடுமை குறைந்தது. சுபா பெரியம்மா முன்பு கூறியதுமாதிரி ஜெயா பெரியம்மாவின் அன்றாட வாழ்க்கையிலே மையமாகத் திகழ்ந்தேன்.
சில வருடங்களுக்குப் பின்பு தனது வாழ்க்கையை மறுபடியும் புனரமைப்பதற்கு முயன்று கொண்டிருந்த பாலா என்கின்ற முன்னாள் புலி உறுப்பினரை மணந்துகொண்டாள். அவர்களுடைய பாதைகள் மெல்பேர்ண் இல் குறுக்கிட்டபோது என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிணைப்பு அவர்களிடம் ஏற்பட்டது- ஒரே யுத்தத்தில் தப்பிப் பிழைத்தவர்களிடம் மாத்திரம் ஏற்படக்கூடிய புரிதல்.
சிறுவர்களாக இருந்தபோது ஆனந்த், குரு, அஸ்வின் மற்றும் நான் பாலா பெரியப்பாவைச் சூழ்ந்துகொண்டு அவரைக் கேட்போம்,” பெரியப்பா! உங்கடை துப்பாக்கிக் காயங்களைக் காட்டுங்கள்”
தாங்கமுடியாத வலி இருப்பது மாதிரி நடித்துக்கொண்டு எதையென்று கேட்பார்,
“உங்கள் வயிற்றில் உள்ளதை”, நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
“ அதில்லை, உங்கடை தோளிலே ஒரு நட்சத்திரம் மாதிரி இருக்கிறதே அதை நான் பார்க்கவேண்டும்”, ஆனந்த் இடை மறித்தான்.
“சித்தப்பா, உங்கடை வலது முழங்காலுக்கு மேலுள்ள அந்தப் பிரமாண்டமான காயம்தான் எனக்குப் பிடித்தது” தன்னுடைய தமையன் குருவிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட புது வார்த்தையைப் பாவித்ததில் அஸ்வினுக்கு சந்தோஷம்.
பாலா பெரியப்பாவிற்கு மொத்தமாக ஏழு காயங்கள் இருந்தது எங்களுக்குத் தெரியும். அவருடைய காயங்களால் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி போய்வருவார்.
இந்தக் காயங்களின் காரணத்தால் அவர்களுக்குப் பிள்ளை பிறக்கும் சாத்தியம் குறைவு என்று அம்மா சொல்லி வருத்தப்பட்டா. ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு தனது இறந்துபோன சகோதரியின் பெயர்வைக்க ஜெயா பெரியம்மாவிற்கு தீராத விருப்பம். அதற்குப் பதிலாக எங்களுக்கு அவள் செவிலித்தாயாக வந்தாள். அவர்கள் எங்களைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களிலே தாங்கள் எப்படி அந்தப் பயந்தாக்கொள்ளி இராணுவத்தினரை எதிர்த்து எப்படி முன்னேறினார்களென்ற கதைகளைக் கேட்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தோம்.
“சித்தி, நீங்கள் யாரையாவது கொன்றீர்களா? நீங்கள் எப்படி சித்தப்பா?”,
ஆனந்த் ஆச்சரியத்துடன் கேட்டான்.
நான் உரத்த குரலில் குறுக்கிட்டேன், “கொல்லுவது பாவம். Ms Sincook சொன்னவ நீங்கள் யாரையாவது கொன்றால் ஜெயிலுக்குப் போகவேணும்”
ஜெயா பெரியம்மாவின் கண்களில் கோபம் கொந்தளித்தது. வார்த்தைகளில் விஷம் இருந்தது, “கெட்ட மனிதர்கள் கொல்லப்படவேண்டியவர்கள். அந்த சிங்கள வெறிநாய்கள் ஒருநாளைக்கு அனுபவிப்பார்கள்”
பாலா பெரியப்பா தனது கைகளால் அவவது கைகளை மென்மையுடன் பிடித்து கண்டிப்புடன் சொன்னார்,” இந்தக் கதை போதுமானது. பிள்ளைகள், யாரெல்லாம் கண்ணாமூச்சி விளையாடத் தயார் என்று சொல்லுங்கள்”
தன்னுடைய கடந்தகால வன்முறையான வாழ்க்கையை ஒதுக்கித்தள்ளின பெரியப்பாவின் திறமையை சிறுவர்களாகிய நாங்கள் புரிந்துகொள்ளவில்லை. சண்டைகள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தபோதிலும் முன்னாள் புலியான அவர் தனக்குள்ளே இருந்த கோபம், பயம், ஏமாற்றம் எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளிவிட்டு இரத்தம் தோய்ந்த யாழ்ப்பாணத்திலிருந்த வாழ்க்கையைவிட்டு ஆஸ்திரேலிய வாழ்க்கைக்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியாவை ஒரு அதிர்ஸ்டம் நிறைந்த நாடென்று எப்போதும் சொல்லிக்கொள்வார். பழி தீர்க்கவேண்டுமென்ற வன்மத்தைவிட அமைதியையே நாடினார். யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஏற்படுத்திய முழு வலியையும் ஒருவருடனும் முக்கியமாக தனது ஆசை மனைவியான ஜெயாவிடமிருந்தும் மறைத்துவந்தார்.
அவருக்கு ஐம்பத்தொரு வயதேயானபோது, பதின்மூன்று வருட இணக்கமான திருமணத்தின் பின் அவர் இறந்தபோது ஜெயா பெரியம்மா அழுது ஒருவரும் பார்க்கவில்லை. ஆனால் அவளுடைய சிதைந்துபோன கண்களும் அவள் திடமாகக்கூறிய வார்த்தைகளும் அவளுடைய பெரும் வேதனையை வெளிப்படுத்தின, “ அந்த முறைதவறிப் பிறந்தவர்கள் என்னுடைய தங்கையை முதலில் என்னிடமிருந்து பிரித்தார்கள். இப்போது என்னுடைய ஆன்மாவையே என்னிடமிருந்து எடுத்துவிட்டார்கள். அவர்களை இதிலிருந்து தப்ப விடவேமாட்டேன்”.
பாலா பெரியப்பாவின் இறப்பினால் யோசனைக்குள்ளான ஆனந்த் தாயிடம் சொன்னான்,” அம்மா, நாங்கள் அப்பாவைச் சரியாகச் சோதிக்கவேண்டும். அவரும் LTTE ஐச் சேர்ந்தவர்தானே? நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவரும் நீங்களும் சந்தித்ததன் ஒரே காரணம் இராணுவத்தால் அவர் சுடப்பட்டபோது அவர் உங்கள் வீட்டில் ஒளிந்துகொண்டதுதான்”
அம்மாவுடைய சகோதரிகளில் மகா பெரியம்மாதான் மென்மையானவளும் கருணையுள்ளம் கொண்டவளும். சுபா பெரியம்மாவின் சுறுசுறுப்பு, ஜெயா பெரியம்மாவின் பழி தீர்க்கவேண்டுமென்ற அவளது தாகம், அம்மாவின் கடந்தகாலத் துயரை மறக்கவேண்டுமென்ற ஆசை இவையொன்றும் மகா பெரியம்மாவிடம் இல்லை. அதற்குப் பதிலாக அவவுடைய சாதாரணமான வீட்டுச் சமையல் உணவுகள், காதுகொடுத்துக் கேட்கும் பண்பு, கடந்த காலத்தில் நடந்த இன்பகரமான நிகழ்வுகளை கதைபோல் சொல்லி பிரச்சனையில்லாத உலகத்தைக் உருவாக்கும் திறமை ஆகியன அவவின் பலம்.
எல்லோரிடமும் அவ பிரியமாயிருந்தபோதிலும் அம்மா மேல் அதிகப் பிரியம் வைத்திருந்தா. ஏனென்றால் அம்மாவும் அவவுடைய சிறிய விருப்பத்தையும் எப்படியும் நிறைவேற்றிவிடுவா.
சுபா, ஜெயா பெரியம்மாக்கள் தங்களிடையே நீண்ட நாட்களாக சிரித்து மகிழும் பகிடி ஒன்றுள்ளது. ஒரு நாள் சுபா பெரியம்மா அம்மாவிடம் சொன்னா, “மகாவிற்கு கூழ் குடிக்கவேணுமென்ற ஆசையாம்”
இரண்டு நாட்களாக அம்மா சந்தையெல்லாம் அலைந்து திரிந்து கூழுக்குத்தேவையான கூட்டுப்பொருட்களையெல்லாம் வாங்கிவந்தாள். நன்றாகத் தயாரித்தபின் மகா பெரியம்மா சுவைத்துப் பார்த்துவிட்டு,” சீதா! ரொம்ப நல்லாயிருக்கிறது. இன்றைக்கு என்ன விஷேசம்? இது உன்னுடைய வழக்கமான சாப்பாடில்லையே?”
மகா தடுமாற்றத்துடன் பார்த்தாள். இரண்டு பெரியம்மாக்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், “எங்கள் இரண்டு பேருக்கும்தான் கூழ்மேல் ஆசை. உனக்கு வேணுமென்று சொன்னால் சீதா ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையில் ஓடித்திரிந்து எப்படியும் செய்வாள் என்று எங்களுக்குத் தெரியும்”
சீதாவை தேவைப்படாமல் கரைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டார்களேயென்ற கோபத்தில் அவர்களை ஏச முற்பட்ட மகாவைப் பார்த்து ஒரு அசட்டுச்சிரிப்புடன் அம்மா சொன்னா,” பரவாயில்லை அக்கா! அவர்களாலே நாங்கள் இன்றைக்கு நல்ல கூழ் குடித்ததற்கு அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்”
இப்படியான நிகழ்வு மிக அரிதானது, ஏனென்றால் வழக்கமாக நாம் சிறுவயதில் சாப்பிட்டு ரசித்தவற்றை மகா பெரியம்மாதான் சமைத்துத் தருவா. பாலா பெரியப்பா இறந்து ஒரு மாதத்திற்கு மேலான இன்று ஆனந்தும் நானும் அடுப்படி மேசையில் இருந்தபடி எங்களுக்கு அவ உறுதியளித்திருந்தபடி ஆட்டு பிரியாணி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இடையிடையே முறுக்கும் சாப்பிட்டுக்கொண்டு பாலா பெரியப்பாவுடன் நாங்கள் கழித்த இன்பகரமான நாட்களை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் ஆனந்த் தனது தகப்பனின் நலனைப்பற்றி அக்கறையுடன் கேட்டான்.
அவவின் புருவத்திலே ஒரு சாடையான கோடு தென்பட்டது. சிறிது யோசித்துவிட்டு சொன்னா,” உன்னுடைய அப்பாவிற்கு ஒரேயொரு துப்பாக்கிச் சூடுதான், அதுவும் காலிலே. ஆனால் பாலா பாவம். அவருக்கு உடம்பு முழுதும் காயங்கள். உன்னுடைய அப்பாவிற்கு நடந்து நீண்டகாலமாகிவிட்டது. 1990 ம் ஆண்டு. அவர் எங்கடை வளவுக்குள்ளே வந்து விழுந்தபோது நாங்கள் எல்லோரும் இளம் வயதினர். அவருடைய முழங்காலுக்குக் கீழேதான் துப்பாக்கிச்சூடு. அங்கிருந்து இரத்தம் ஒழுகினதைப் பார்த்து நாங்கள் பயந்துவிட்டோம். சாகப் போறாரென்று நினைத்தோம்”.
நான் பெருமூச்சு விட்டேன்,” எப்படியான காதல் காவியம். இறப்பின் வாசலிலிருந்து அவரைக் காப்பாற்றினீர்கள். அப்புறம் இருவரும் காதலித்தீர்கள்”
ஆனந்த் எரிச்சலில் தலையாட்டினான், “ அருவி! நீ இப்ப மருத்துவக்கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கிறாய். மெல்பெர்ன் யூனியில் இதுதான் படிப்பிக்கிறீர்களா?. நாங்கள் அப்பாவின் நலனைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கையில் நீ புத்தியில்லாமல் ஒரு கோணத்தில் போகிறாய்”
மகா பெரியம்மா என்னை அனுதாபத்துடன் பார்த்தா.
“ ஆனந்த், உன்னுடைய அப்பா பிழைத்துவிட்டாரென்று அவளுக்குத் தெரியும். உண்மையில் அவருடைய உயிருக்கு ஒருபோதும் ஆபத்திருக்கவில்லை என்பது அப்புறம் எங்களுக்குத் தெரியவந்தது. அவருடைய முழங்காலுக்குக் கீழே சும்மா உரசிக்கொண்டுதான் போயிருக்கு. சிறிய இரத்தக்குழாய்கள்தான் பாதிக்கப்பட்டன. அன்றிரவு அப்பா எங்க ஊர் மருத்துவரை உடனே கூட்டிவந்து, அவர் காயத்தை நன்றாகச் சுத்தம்செய்து மருந்து போட்டார். சில நாட்களில் பூரண குணம் வருமென உறுதியளித்தார். குணம் வந்தவுடனே அவர் இயக்கத்திலிருந்து விலகினார். அவர் ஒருபோதும் வான் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. ஆனபடியால் அவர் உடம்புக்குள்ளே உலோகத்துண்டுகள் இருக்க வாய்ப்பில்லை. யுத்தக் காயத்தினால் அவர் இறக்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை”
“ அப்படியென்றால் புலிகளோடு அவர் இருந்த நேரத்தைப்பற்றியோ அல்லது பொதுவாக யாழ்ப்பாணம்பற்றியோ கதைப்பதற்கு அவர் ஏன் தயங்குகிறார்? அவரைப்பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றில் நீங்கள் சொல்லி அல்லது சித்திமார் சொல்லி”
“ஆனந்த், இது என்ன கேள்வி? ஏதோ உன்னுடைய அப்பா எதைப்பற்றியாவது கதைக்கிறதுமாதிரி? அவர் எவ்வளவு அமைதியானவர் என்று உனக்குத் தெரியும்தானே?”
அது உண்மைதான். எங்கடை குடும்பம் சத்தம்போட்டு, பலவித அபிப்பிராயங்களோடு தொடர்ந்து கதைத்துக்கொண்டே இருக்கும் குடும்பம். சிவா பெரியப்பா வித்தியாசமானவர், அமைதியான மனிதன். எங்கள் சம்பாஷனையில் அதிகமாகக் கலந்துகொள்ளமாட்டார். உண்மையில் நாங்கள் ஒன்றாயிருக்கும்போது கலந்துகொள்வது அபூர்வம். குடும்ப நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தார். ஆனந்த் பெரியம்மாவைக் காரில் அழைத்துச் செல்ல முடியாத நாட்களில் அல்லது அவவை வேறொருவரும் கூட்டிச் செல்லாத நாட்களிலேயே தவிர்க்கமுடியாமல் கலந்துகொள்வார். தொழிற்சாலையில் அவரது வேலை அவரை மிகவும் களைப்படையச் செய்வதென்றும், அதனால் வேலை முடிந்ததும் அமைதியான வீட்டிலே ஓய்வாக இருப்பதுதான் தனக்கு விருப்பமானது என்றும் சொல்வார்.
ஒருநாள் இரவு சுபா பெரியம்மா வருத்ததுடன் சத்தம்போட்டுச்சொன்னா,” சிவா, கல்யாணம் முடித்தவுடன் இப்படி நீங்கள் மாறுவாய் என்று யார் கண்டது! முதன்முறை நீங்கள் வீட்டிற்கு வந்தபோது கதைக்கிறதை நிற்பாட்டவே மாட்டீர்கள். உங்களுடைய எத்தனையோ கதைகளைச் சொல்லும்போது உங்கள் கண்கள் எப்படி மின்னும். இப்போது உங்களைப் பாருங்கள்!. உங்களைப் பேசவைப்பதற்கு நாங்கள் காசு தரவேணும்போல!”
தன்னுடைய கணவனை ஒருவரும் குறைவாகப் பேசுவதைப் பொறுக்காத மகா பெரியம்மா அவரைத் தற்காத்துப் பேசினாள்.
“சுபா, அவர் அதே ஆள் இல்லையென்பது உண்மைதான்- நாங்களும் அப்படி இல்லைத்தான். சிவாவிற்கு இந்த காலக்கட்டம் மிகவும் கடுமையானது. என்னை அவர் கல்யாணம் பண்ணியபோது எங்கள் பெற்றோருக்கு மகன் இல்லாத குறைபோக்க மகனாக வந்தார். கவலையற்றுத் திரிந்த இளம்பையனாக தொடர்ந்தும் இருக்கமுடியாது. திடீரென்று எங்களுக்கெல்லாம் ஒரு மூத்த சகோதரனாக வந்தார்.
காவியா கொல்லப்பட்டபோது எப்பிடித் துடித்தார். சீதா, நீ அந்த தட்டுமுட்டுப் படகிலே எங்களை விட்டுப் போன இரவு ஞாபகமிருக்கா? . நீ அந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளப்போவதைத் தெரிந்திருந்தால் தான் அதை மறித்திருப்பேன் என்று எப்போதும் சொல்வார்.”
மகா பெரியம்மாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தவுடனேயே அவவிற்கு தனது பிழை தெரிந்துவிட்டது. ஒரு திகிலுடன் தனது வாயை மூடிக்கொண்டு, “எப்படி ஒரு உணர்வில்லாமல் நான் பேசுறேன். என்னை மன்னித்துக்கொள் சீதா, அந்த இரவைப் பற்றி நான் கதைத்திருக்கக்கூடாது. அதை நினைக்கும்போது எனக்கே சிம்மசொப்பனமாயுள்ளது. உன்னை எந்தளவு வாட்டிவதைக்கும் என்று எனக்குத் தெரியும்”
ஓரு ஆயிரம் உணர்ச்சிகள் அம்மாவின் முகத்திலே அலையோடின. தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அம்மா மென்மையாகச் சொன்னா, “
“அக்கா, அந்த இரவு செத்துப்போக நினைத்தேன். குளித்துவிட்டு சில உடுப்புகளைத் தயார்செய்யும்படியும் நான் வெளியூர் போகிறேன் என்றும் அம்மா சொன்னா. கிணற்றிலே குனிந்து பளிங்கு போன்ற நீரின் மேற்பரப்பைப் பார்த்தபோது அதற்குள்ளே குதித்து, அதன் ஆழத்திலே மறைந்து கவலைகள் இல்லாத எல்லாவற்றையும் மறந்துபோகிற உலகத்திற்குப் போகலாமாவென நினைத்தேன்.
நான் என்ன நினைக்கிறேன் என்பது அம்மாவிற்குப் புரிந்திருக்கவேண்டும். திடீரென எங்கிருந்தோ வந்து என்னப்பார்த்துக் கூச்சலிட்டாள், “உனக்கு விருப்பமென்றால் குதி. உனக்குப் பின்னால் நானும் குதிப்பேன்”
அவளது கைகளிலே என்னைப் புதைத்துக்கோண்டேன். அவ சொன்னா,” சீதா, நீ இந்தியாவிற்குத் தப்பிப் போய்விடவேண்டும். நான் சுபாவுடன் பேசி காலம்கடத்தாமல் உன்னை ஆஸ்திரேலியாவிற்கு அழைக்கச் சொல்வேன்”
நான் மறுத்தபோது அவ தொடர்ந்தா,” இன்றிரவு நீ அந்தப் படகிலே ஏறாவிட்டால் நாளை காலை என்னுடைய உடம்பை இந்தக் கிணற்றில் இருந்து எடுக்கலாம்”
தனது அம்மாவின் நினைவுகள் எனது அம்மாவின் கண்களைப் பளிச்சிடச்செய்தது.
இந்த தகவலைக் கேட்டதும் அங்கே பூரண அமைதி நிலவியது. சுபா பெரியம்மாதான் ஒரு சிரிப்புடன் அந்த மௌனத்தைக் கலைத்தாள்., “ சூழ்ச்சிக்கார கிழவி- ஒவ்வொருவரையும் எப்படி ஆட்டிவைக்கலாமென்று தெரிந்தவள்”
அவவின் சகோதரிகள் அவவுடன் சேர்ந்து சிரித்தனர். அவர்களது தாயாரின் மூர்க்கத்தனத்துடன் புத்திசாலித்தனமும் கலந்த அன்பை நினைத்து மகிழ்ந்தனர். சிவா பெரியப்பாவும் தனக்கு தாய்மாதிரி இருந்த அந்த அசாத்தியமான பெண்மணியை நினைத்து இலேசாகப் புன்னகை செய்தார்.
சிரிப்புகள் அடங்கியபின், தான் சொல்வது மற்றவர்களுக்கு கேட்டுப் போய்விடுமோ என்று பயப்படுவதுமாதிரி மிகவும் மென்மையாக அவர் சொன்னார், “ உங்கடை அம்மா எனக்குத் தெரிந்த பெண்களில் மிகவும் குறிப்பிடக்கூடியவர். அவவும் மாமாவும் என்னுடைய உயிரை இரண்டுமுறை காப்பாற்றினார்கள். நான் அதற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டவன்………. ஆனால் நான் அவவின் நம்பிக்கையைக் கெடுத்துவிட்டேன்”
அவருடைய குரலிலே இருந்த வருத்தத்தைக்கண்ட மகா பெரியம்மா உடனடியாக பதிலளித்தா, “சிவா, அம்மா உங்களையிட்டு அதிருப்தி அடையவில்லை. நீங்கள் சிறு பையனாக இருந்தபோதே புலிகளிடம் சேர்ந்ததும் அதனால் பெரிய படிப்பும் படிக்கவில்லை என்பது அம்மாவிற்குத்தெரியும். அதனாலென்ன? நீங்கள் தொழிற்சாலையில் கடுமையாக உழைக்கிறீர்கள். எனக்கும் ஆனந்திற்கும் தேவையானவற்றைத் தருகிறீர்கள்”
தனது தாயின் பேச்சை தொடரவிடாமல் தகப்பனின் கதையை விரிவாகக் கேட்க ஆசைப்பட்ட ஆனந்த் ,” அப்பா, இரண்டு முறைகள் என்று சொன்னீர்கள். இராணுவத்தால் சுடப்பட்டபோது முதல்தடவை அவர்கள் காப்பாற்றியது எனக்குத் தெரியும். அடுத்தது எப்போ?”
தன்னை அறியாமலேயே வார்த்தைகளை வெளியே விட்டுவிட்டேனா என்பது மாதிரி தனது உதடுகளை இறுக்கமூடினார்.
எல்லோரும் அவரைப் பார்த்தபடி இருந்தனர். ஆனந்த் விடவில்லை.
“அப்பா, உங்களுக்கு இரண்டாவது முறையும் குண்டடி பட்டதா?”
ஒரு கரகரத்த குரலில் சிவா பெரியப்பா சென்னார்,” இன்னொருமுறை நான் சுடப்படவில்லை. நான்தான் சுட்டேன். ஒரு ஆமிக்காரனை அவனது இருதயத்திற்கூடாக நான் சுட்டேன். அவன் தன்னைச் சுடாதீர்கள் என்று கெஞ்சிக்கொண்டிருந்தபோது நான் அவனைக் கொன்றேன்”
ஆனந்தின் முகம் வெளுத்துவிட்டது. இதை அவன் எதிர்பார்க்கவில்ல – அவனுக்குத் தெரிந்த தகப்பன் இவரில்லை.
சிவா பெரியப்பா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார், “ யாழ்ப்பாணத்தை இராணுவம் நெருக்கிக்கொண்டு வந்தது. வல்வெட்டித்துறையை புலிகள் இழந்துவிடுவார்கள் என்பதை ஒருவரும் நம்பயிருக்கவில்லை. ஆனால் Operation Riviresa எங்களை விளிம்புக்குத் தள்ளியது. நான் உனது அம்மாவைக் கல்யாணம் செய்தபின் புலிகளிடமிருந்து விலகியிருந்தேன், ஆனால்……”
மூச்சு விடுவதற்கே பயந்துகொண்டு தகப்பன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆனந்தின் மேல் சிவா பெரியப்பாவின் பார்வை நிலைகுத்தியது. அவருடைய பெருமூச்சு மெதுவாக ஆனால் பலமாக வந்தது, இனிமேல் தொடர்ந்து சொல்லாமல் நிறுத்தமுடியாதென்பது அவருக்குத்தெரியும். சில கதைகள் ஆரம்பித்தபின் சொல்லி முடிக்கப்படவேண்டும்.
1995 ஒக்டோபர் மாதம் 20ம் திகதி என்னால் மறக்கமுடியாத நாள். அப்போதுதான் எங்களுக்குத் திருமணமாயிற்று. வெளியே துவக்குச் சத்தமும், பயமும், ஆட்கள் இடம்மாறி ஓடுவதுமாயிருந்தது. ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒருபோதும் இல்லாதளவு மகிழ்ச்சியாயிருந்தேன்- உனது அம்மாவின் அரவணைப்பிலே, அவவின் குடும்பத்தால் சூழப்பட்டு இருந்த நான் அந்த மகிழ்ச்சியை ஒருவராலும் உடைக்கமுடியாதென்று நம்பினேன்.
ஆனால் அந்த நாளில் எல்லாமே மாற்றப்பட்டுவிட்டது. வித்தியாசமான வழியிலே செயல்பட்டிருக்கலாமென இப்போது விரும்புகிறேன்”
“ என்ன நடந்தது அப்பா?” ஆனந்த் மென்மையாகக் கேட்டான்.
அடுத்த பகுதியைக் கேட்பதற்காக நான் முன்னால் அரங்கினேன். அம்மாவும் சகோதரிகளும் களையிழந்து காணப்பட்டார்கள், ஆனால் ஒருவரும் பேசவில்லை.
.
“ஏதாவது புதுச் செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்பதற்கு நகரின் சந்திக்கு சென்றேன். அதிகமான குடும்பங்கள் தங்கள் கைகளில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டே போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் மாமாவும் மாமியும் மறுத்தார்கள். உன்னுடைய அம்மாவும் சகோதரிகளும் அவர்களை விட்டுப் போகமாட்டார்கள். சுபா, நீ ஒருத்திதான் அங்கே இல்லை. நீ ஏற்கனவே மெல்பெர்ன் வந்துவிட்டாய்”
சுபா பெரியம்மா மெதுவாகத் தலைஆட்டினார்.
“சந்தியிலே எனது பழைய கூட்டாளிகளான சசியும் கதிரும் ஒரு ஜீப்பில் இருப்பதைப் பார்த்தேன். பார்த்தவுடனே அது புலிகளின் வாகனம் இல்லை என்று தெரிந்துவிட்டது. புதிதாகவும் பளபளப்பாகவும் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியரின் முத்திரையும் பதித்திருந்தது. அவர்கள் ரோந்து வரும்போது தாக்கிப் பறித்திருக்கவேண்டும்.
ஆனால் அந்த ஜீப்பை மாத்திரம் அவர்கள் எடுத்திருக்கவில்லை.
ஜீப்பின் பின்புறம் இரண்டு இராணுவத்தினர் கட்டப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரையும் ரோட்டிலே மேலும் கீழும் இழுத்துக் கொண்டிருந்தார்கள். வேகத்தைத் திடீரெனக்கூட்டியும், திடீரென்று பிரேக்கும் பிடித்தபடி சசி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். அந்த சிதைந்து போன உடம்புகளைப் பார்த்த அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளித்திருந்து பார்த்தார்கள். நானும் ஒடியிருக்கவேண்டும். நான் அதைப் புரிந்துகொண்ட நேரத்திலே அது பிந்திவிட்டது.
சசி என்னைக் கண்டுவிட்டான். “சிவா! ஏ சிவா!. இப்போ நீ கல்யாணம் முடிச்சுவிட்டாயென்று கேள்விப்பட்டேன். கிட்ட வா, உன்னை நன்றாகப் பார்க்கவேண்டும்.”
வேறு வழியில்லாமல் நான் அவர்களை நோக்கி நடந்தேன். அந்த இராணுவத்தினரை ஒரு ஏளனச் சிரிப்புடன் பார்த்து,” இந்த நாய்களைப் பார், எங்கடை ஒரு டசின் பெடியளைக் கொன்றவர்கள். இப்ப அவ்வளவு தைரியமுள்ளவர்களாகத் தெரியவில்லை, அப்படியில்லையா?”
சிவா பெரியப்பாவின் குரல் தழுதழுத்தது. மகா பெரியம்மா ஆனந்தை முறைத்துப் பார்த்து, அவரை இந்த வலிக்கின்ற நினைவுகளை மீண்டும் நினைக்கவைத்துவிட்டாயே என்று மௌனமாகவே திட்டினா. பெரியப்பா தொடர்ந்தார்,
“ஆழ்ந்த சிராய்புகளுடனும் கிழிந்த தோல்களுடனும் இருந்த அவர்களை நான் பார்த்தேன். ஒருவன் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றவன் தேம்பித் தேம்பி சிணுங்கியபடியே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினான். சசி என்னுடைய கையிலே துவக்கைத் திணித்து,” இந்த நாயைக் கொல்வது இலகுபோல் தெரியவில்லை. இவன் சாகும்வரை ரோட்டிலை இழுத்துக்கொண்டுபோக எங்களுக்கு நேரம் இல்லை. சிவா, நீ இவனைக் கொல். உன்னுடைய குறி எப்போதும் திறமையானது. அது உன்னில் இன்னும் இருக்கிதா என்று பார்ப்போம்”
வார்த்தைகளின்றி நான் அவனை உற்றுப் பார்த்தேன். நிச்சயமாக அவனைக் கொல்லும்படி என்னைச் சொல்லவில்லை- ஆனால் அவன் அதைத்தான் என்னைச் செய்யச்சொன்னான்.
என் முகத்தில் இருந்த கலவத்தைப் பார்த்த கதிர் சொன்னான்,” சசி, என்னிடம் துவக்கைத்தா- நான் செய்கிறேன். சிவா இப்போது எங்களில் ஒருவர் இல்லை.”
நான் நன்றியுடன் கதிரைப் பார்த்தேன். ஆனால் சசி வெடித்தான்,” இவர் ஒரு காலத்தில் எங்களோடைதானே? அவரை இயக்கத்தை விட்டுப்போக அனுமதித்தது அவருடைய அதிர்ஸ்டம். என்னைக் கேட்டிருந்தால் இவர் போகிறதற்கு அனுமதித்திருக்கமாட்டேன். இவர் இன்னும் தமிழ் ஈழத்தில் நம்பிக்கை உள்ளவரென்று நிரூபிக்கட்டும். இராணுவம் விரைவில் இங்கு வந்துவிடுவார்கள்; நாங்கள் எப்படி எங்கள் மாவீரர்களுக்காக பழி வாங்குவோமென்று அவங்களுக்குப் புரியவேணும். புலிகள் என்று நினைத்தாலே நடுங்கவேணும்”
சிவா பெரியப்பா இடைநிறுத்தி தனது நெற்றுப்பொட்டைத் தடவினார். நாங்கள் ஒருவரும் பேசவில்லை; திகைப்புடன் மௌனமாக அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது மூச்சை ஒரு சீராகக் கொண்டுவந்தபின் தொடர்ந்து சொன்னார்.
“ நான் அவனை வெறித்துப் பார்த்தேன். அவன் எப்போதும் ஒரு கோணல் பேர்வழி. அவன் பின்வாங்கமாட்டானென்று எனக்குத்தெரியும்.
கதிர் இன்னுமொருமுறை சசியை மாற்ற முயன்றான்,” சசி! தலைவர் ஒரு நேர்மையான யுத்தம் பற்றி எப்போதுமே பேசுவார்- பிடிபட்டவர்களை மரியாதையோடும் கருணையோடும் கவனிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வார். சித்திரவதை தடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இப்படி ஜீப்பிலே எதிரிகளைக் கட்டி இழுத்தது பற்றி அவர் கேள்விப்பட்டால் சந்தோஷமாக இருக்கமாட்டார். ஒரு சாதாரண குடிமகனைக் கொல்லுமாறு கட்டளையிடுவதை நிச்சயம் விரும்பமாட்டார். நாங்களே இவனைச்சுட்டு விஷயத்தை முடித்துவிடுவோம்.”
ச்சி அவன் சொன்னதை பொருட்டாக எடுக்கவில்லை. “சிவா! இப்போது நீ இவனைச்சுடு அல்லது நான் உன்னைச்சுடுவேன். உன்னை ஒரு துரோகி என்று எல்லோரிடமும் சொல்வேன்.”
சொன்னதைச் செய்யக்கூடியவன் என்று அவன் குரலிலிருந்து தெரிந்தது.
“எனக்கு வேறு வழியில்லை என்று எனக்குப் புரிந்தது. இப்போது நான் சுடப்பட்டாலும் என்னுடன் உறவாடும் உன்னுடைய அம்மாவின் குடும்பமும் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். ஏற்கனவே இராணுவம் இங்குள்ள தமிழர்கள் எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள். அவர்களை புலிகளும் இழிவுபடுத்துவதை நான் அனுமதிக்கமுடியாது”
சிவா ஆனந்தின் கண்களைப் பார்த்தார், “ நான் அவனைச் சுட்டேன். நான் அவனைச்சுட்டேன் ஆனந்த்.”
அவருடைய கைகள் நடுங்கின. ஆனந்தும் நானும் இதை நம்பமுடியாமல் திகைத்துப்போய் நிற்க அவர் தொடந்தார்.
“ நான் சசியிடம் துவக்கைத் திணித்தபோது சிணுங்கிக்கொண்டிருந்த அந்த மனிதன் சலனமற்றுப் போனான். அந்த ஜீப்பிற்கு சொந்தக்காரனான பிரிகேடியர் அவன்தானோ? சொல்லத் தெரியவில்லை. எனது வயிறு குமட்டிக்கொண்டு வெளியே வருவதுபோல இருந்தது. தட்டுத்தடுமாறி நடந்துபோய் உனது அம்மாச்சியின் வீட்டை அடைந்தேன். செய்தி கேட்பதற்காக என்னை எதிர்பார்த்து உனது அம்மாச்சி வாசலில் காத்திருந்தாள். மற்றவர்களும் என்னைச்சுற்றிப் பயத்துடன் நின்றபோது அவ தீர்மானித்துவிட்டா, “ இன்றிரவு நீங்கள் இங்கே தங்கமுடியாது. இராணுவம் உங்களை வேட்டையாடும். நீங்கள் போகவேண்டும்!”
சிவா தன்னுடைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விம்மினார்.
மகா பெரியம்மா எழும்பி அவருடைய கைகளைத் தன்னுடைய கைகளினால் மெல்லப் பிடித்துக்கொண்டு,” ஆனந்த்! போதும். உனக்குத் தெரிவதைவிட உன்னுடைய அப்பா அதிகம் நொந்துபோனார். நடந்தவற்றை மறப்பதற்கு எத்தனையோ வருடங்கள் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். அந்த நினைப்பு இன்றையவரையில் அவரை நிலைகொள்ளாமல் தவிக்கவைக்கிறது. அவர் செய்த அந்தக் காரியம் அவருக்குள் இருந்த எதையோ உடைத்துவிட்டது. அதற்குப்பிறகு அவர் முந்திய ஆள்போல இல்லை. இப்ப உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இந்த விடயத்தை இனிமேல் ஒருநாளும் கிளப்பாதே”
என்ன செய்வதென்றறியாமல் ஆனந்த் என்னைப் பார்த்தான். நான் அம்மாவையும் ஜெயா பெரியம்மாவையும் திரும்பிப் பார்த்தேன். என்ன நடந்தது என்று வேறொரு நாளில் அவர்களைக் கேட்கலாம் என்றமாதிரி கண்களால் சைகை செய்தேன், வார்த்தைகள் வரவில்லை.
ஆனால் அவர்கள் இருவரும் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதது எங்களுக்கு ஏமாற்றமாயிருந்தது.
ஜெயா பெரியம்மா சொன்னதெல்லாம் இதுதான்,
“ அன்றைய இரவு அவரை ஊரைவிட்டு வெளியே அனுப்புவது ஆபத்தான காரியமென்று அம்மா நினைத்தாள், ஆனால் அவர் வீட்டிலும் இருக்கமுடியாது. அவவின் தாயாருக்குச் சொந்தமானதும் இப்போது கை விடப்பட்டதுமான ஒரு கோழிக்கூட்டில் சிவாவைத் தங்கவைப்பதற்காக அப்பாவுடைய சயிக்கிளில் அனுப்பிவைக்க அம்மா முடிவுசெய்தா. அங்கே இப்போது கோழிகளும் இல்லை, வேறொன்றும் இல்லை. ஆனால் கோழிக்கூடு அப்படியே இருக்குது. சிவா அங்கே ஒளிந்திருக்கலாம்.
அந்த இடத்தை சிலநாட்கள் புலிகள் ஒளிந்திருக்கும் இடமாகப் பாவித்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புலிகளின் கட்டுப்பாடுள்ள பிரதேசத்தில் அதிகமாக நடமாட்டம் இல்லாத அந்த இடத்தை, அதுவும் இரவினிலே இராணுவம் தேடுதல் நடத்தமாட்டார்களென்பது அம்மாவின் அனுமானம். அந்த ஊர் ஆட்களுக்குத்தான் அந்த இடத்திற்கான வழி தெரியும். சிவா அம்மாவுடன் விவாதிக்கவில்லை. எங்களுடன் தங்கியிருப்பது எங்கள் எல்லோருக்கும் ஆபத்து என்பது அவருக்குத் தெரியும். அன்றிரவு அந்தக் கோழிக்கூட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் வன்னிக்குத் தப்பிச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மகாவும் அங்கே சென்றுவிட்டாள்
ஆனந்த், அந்த இரவைப்பற்றி இதற்குமேலும் தெரியவேண்டுமென்றால் சீதாவைக் கேட்டுப்பார். அவளுக்கு இதற்கு மேலேயும் ஏதும் தெரியும் “
நானும் ஆனந்தும் ஓட்டை விழும் சில இடங்களை நிரப்புவாவென நினைத்து அம்மாவை ஆவலுடன் பார்த்தோம். அவவுடைய பதிலோ ரொம்பக் கறாராயிருந்தது.
“ இரண்டுபேரும் இப்படி அதிகமான கேள்விகளைக் கேட்பதை நிறுத்தவேண்டும். எங்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத் திரும்பவும் நினைத்துப்பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை. அந்த யுத்தத்தின் கோரம் உங்களுக்குப் புரியவில்லை- அதையிட்டு சந்தோஷப்படுவோம். தயவுசெய்து இனிமேல் அதைப்பற்றிக் கதைக்காதையுங்கோ”
அப்படியே விட்டுவிட ஆனந்திற்கு விருப்பமில்லை. தாய் பக்கத்தில் இல்லாதபோது கடந்தகாலத்தைப்பற்றி அறிவதற்காக தகப்பனை தொந்தரவு பண்ணுவான். ஆனால் சிவா பெரியப்பா சோகமாக புன்னகைப்பாரே தவிர ஒன்றும் சொல்லமாட்டார்.
எனக்கும் அன்றைய இரவு அவரை எப்படிப் பாதித்தது என்று அறிய விருப்பம்தான். ஆனால் அவரோடு எனக்கு அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லாதபடியால் தன்னுடைய கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பாதது என்னை அதிகம் வருத்தவில்லை. எனது குழந்தைப்பருவத்தை பாலா பெரியப்பா சொல்லிய பல கதைகள் நிரப்பியது.
தன்னுடைய தகப்பனின் குற்ற வாக்குமூலத்தைக் கேட்டபின் அவன் உடைந்து போனதைப் பார்த்தபோது என்னுடைய மனமும் சஞ்சலம் அடைந்தது. ஒரு திடமான சூதுவாதற்ற மனிதராக நான் கற்பனை செய்திருந்த சிவா பெரியப்பாவின் பிம்பத்தின் ஓரத்தில் வெடிப்புகள் வந்ததுபோல இருந்தது. எனக்குள்ளே ஒரு கேள்வி எழும்பியது: ஒரு கணநேர வன்முறை அவரை இவ்வளவு பாதித்திருக்கென்றால் அம்மாவுடைய வாழ்நாள் மௌனத்தை உருவாக்க எத்தனை சொல்லமுடியாத வேதனையான விடயங்கள் நடந்திருக்கவேண்டும்.
இந்தக் கேள்வி வேரூன்றமுன்னரே என்னுடைய சிந்தனைகள் வேறுபக்கம் திரும்பியது. யுத்தத்தினால் பாதிக்கப்படாத தேவா பெரியப்பாவைப் பற்றிய யோசனை வந்தது. மெல்பெர்ன் இல் கல்விப்படிப்பு, மடிப்புக்கலையாத உடுப்புகள், ஒரு முயற்சியுமில்லாமலே அவரில் இருந்து வெளிப்படும் தன்னம்பிக்கை மற்றவர்களிடமிருந்து அவருடைய வேறுபாட்டை இலகுவாகக் காட்டியது. அவருடைய வாழ்க்கை மற்றைய எல்லோரினதும் கடந்தகால சரித்திரத்திற்கு மாறுபட்டது.
அவருடைய மருமகளான உமாவையும் என்னையும் நண்பர்களாக ஆக்குவதற்கு அவர் ஊக்குவித்தார். என்னைவிட இரண்டு மாதங்கள் இளமையான உமாவின் தாயார், வசந்தி மாமியும் உமாவையும் என்னையும் நண்பர்களாக ஆக்குவதற்கு ஊக்குவித்தார். இது அவ்வளவு சுலபமானதாயுருக்கவில்லை. தன்னுடைய சமூக அந்தஸ்திற்கும் ஒரு டாக்டரின் மனைவிக்குள்ள அந்தஸ்திற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து வெட்கப்பட்ட அம்மா எமக்குள் நட்புத் தொடர்வதை விரும்பவில்லை. ஆனால் அம்மாவின் பலவிதமான ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாமல் வசந்தி மாமி உமாவும் நானும் விளையாடுவதற்காக பல நாட்களை ஒழுங்குபடுத்தினா.
நான் ஆரம்பப்பள்ளியில் இருந்த நாட்களில் வசதிபடைத்த எவரும் எங்கடை வாழ்க்கைக்குள் நுழையாமல் இருப்பதற்காக அம்மாவிற்கு கடந்தகாலத்தில் ஏற்பட்ட அவமானத்திற்குள்ளே ஒளிந்துகொண்டேன். உமா பிறந்தவுடனேயே பதிவுசெய்திருந்த PLC என்கின்ற தனியார் பாடசாலையில் சேர்ந்து அவள் இப்போது இளநிலை பாடசாலை தலைவி. அதற்கு எதிர்மாறாக அரசாங்கப்பாடசாலையில் மற்றவர்களின் அடாவடிக்குள்ளானேன். என்னுடைய தோலின் நிறம், ‘மணக்கின்ற’ உணவு, சிநேகிதர் இல்லாமை, அதிலும் மேலாக என்னுடைய படிப்புத்திறமை எல்லாம் சேர்ந்து என்னைக் கொடுமைப்படுத்தக் காரணங்களாயிருந்தன.
அண்மையில் நான் NAPLAN tests என்கின்ற சோதனையில் முதலாவதாக வந்தேன். சுபா பெரியம்மா வசந்தி மாமியிடம் பெருமையாகப் பேசுவதற்கு இது போதுமானதாயிருந்தது.
“அருவி மிகத்திறமையானவள், தாயைவிட சாமர்த்தியசாலி. அவள் நிச்சயமாக ஒரு டாக்டராக வருவாள் என்று நான் பந்தயம் பிடிப்பேன்.
PLC எப்போதும் புத்திசாலிப் பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருப்பார்கள். புலமைப்பரிசில் சோதனையை அருவி எடுக்கவேண்டும். அங்கே எடுபட்டால் யோசித்துப்பார் – உமாவும் அவளும் எங்களைப்போலவே நல்ல நண்பர்களாயிருப்பார்கள், சுபா!”
சுபா பெரியம்மாவின் வற்புறுத்தலாலும் வசந்தி மாமியின் மென்மையான பரிந்துரையாலும் அம்மாவின் எதிர்ப்பு மறைந்துவிட்டது. பலவருடங்களாக ஒட்டுக்கேட்பதின்மூலம் கூர்மையடைந்திருந்த என் காதுகளுக்கு அவர்கள் தங்களுக்குள்ளே பேசியவை துண்டுதுண்டாக வந்து விழுந்தன – பிடிவாதக்கார மனுசி…… சம்பளம் குறைந்த வேலையில் கஸ்டப்பட்டு வேலை செய்தல்……… உன்னைப்போல……..வசந்தி மாமியின் உருக்கமான வேண்டுதல், சீதா, அருவி நல்ல கெட்டிக்காரி……PLC க்குப் போனாள் என்றால் எவ்வளவோ அநுகூலங்கள்…..
இறுதியில் அம்மா ஒத்துக்கொண்டா. அந்த முக்கியமான நாளிலே எனக்குச் சொன்னதுமாதிரிச் செய்தேன் – பென்சிலைக் கூராக்கினேன், நல்ல காலை உணவு சாப்பிட்டேன் - சோதனையில் திறம்படச் செய்தேன்.
பெரியம்மாக்கள் மிகுந்த பரவசத்திற்குள்ளானார்கள்; தேவா மற்றும் பாலா பெரியப்பாக்கள் எனது முதுகிலே தட்டி மகிழ்ந்தார்கள். சிவா பெரியப்பாவும் தனது மௌனத்தைக் கலைத்துக்கொண்டு, “நன்றாகச் செய்தாய், அருவி” என்று சொன்னார்.
அம்மா சொன்னதெல்லாம், “நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேலை செய்யவேணுமென்று நினைக்கிறேன்”
அம்மா முறைத்தபடி நின்றாள்,” அருவி, வா போகலாம். நாளைக்கு எனக்கு அதிகாலையிலேயே வேலை இருக்குது”
வீட்டுக்குப் போகிறவழியிலே அவ அதிகமாகப் பேசவில்லை. ஆனால் அவவின் முகத்தில் ஏற்பட்ட முறுவலும், அவ நடக்கும்போது அந்த நடையில் இருந்த துள்ளலும் அவவின் மனநிலையைப் பறைசாற்றின. அவவுடைய மகள் Vermont Secondary என்கின்ற அரசாங்கப்பாடசாலைக்குப் போவதையிட்டு அவவிற்கு ஆட்சேபனையில்லை – ஆனால் இப்போது எனக்கு ஒரு டாக்டரின் மகளுக்குக் கிடைக்கும் அதே கல்வி கிடைக்கப்போகுது. தன்னுடைய மதிப்பில்லாத வேலையை வைத்துக்கொண்டே எனக்கு எல்லா வசதியையும் செய்து கொடுக்கமுடியுமென்று தனது சகோதரிகளுக்கு நிரூபித்துவிட்டாள்.
திடமான குரலுடன் சொன்னாள்,” அருவி, இப்போது நீ ஒரு புதுப் பள்ளிக்கூடத்திற்குப் போகப்போகிறாய். உமாவைப்போல புதிய நண்பர்களைப் பிடிக்கவேண்டும். உன்னுடைய ஆரம்பப்பள்ளி நண்பர்களுடன் சேர நேரமிருக்காது”
அவ பெயரைச் சொல்லவேண்டியதில்லை. யாரைச் சொல்கிறா என்பது தெளிவாகவே தெரிந்தது – Zoe Simpson, என்னுடைய ஒரே நண்பி.
எங்களுடைய நட்பு பள்ளியின் ஆரம்ப வாரங்களில் மெதுவாக ஆரம்பித்தது. எனது மதிய உணவுக்காக அம்மா முட்டைப்பொரியலுடன் புட்டு அல்லது ரொட்டி செய்து தருவா. எனது வகுப்பு மாணவர்கள் இறைச்சியும் பாலாடைக்கட்டியும் கொண்ட அல்லது காய்கறிகளைக்கொண்ட பாண் கொண்டுவருவார்கள். அவர்களுடைய உணவிலே அவ்வளவு மணம் இருக்காது. எனது உணவிலேயுள்ள மூக்கைத் துளைக்கும் வாசனையால் அவர்கள் என்னிடம் ஆர்வத்தினால் பல கேள்விகள் கேட்பார்கள். அவர்களின் இடைவிடாத கேள்விகளால் தொந்தரவுக்குள்ளான நான் அவர்கள் விளையாட்டுமைதானத்தில் உண்டாக்கும் சிரிப்புச் சத்தமும் சப்பாத்துகளின் உரசொலியும் கேட்கும்வரை காத்திருந்தபின்னர்தான் அமைதியாகச் சாப்பிடச்செல்வேன்.
மைதானத்தின் ஒரு மூலையில் இருந்த யூகலிப்டஸ் மரம்தான் எனக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது. ஒரு காற்பந்து நான் இருக்கும் இடத்திற்கு வந்தாலொழிய நான் எனது உணவை ரசித்து மெதுவாக உண்ணலாம். மைதானக்கடமையில் இருந்த ஆசிரியர்களின் கழுகுப்பார்வையிலும் சிக்குவதில்லை.
அன்று காலை நான் எழும்பும்போதே அம்மாவின் நெய்யிலே வதக்கப்பட்ட உப்புமாவின் செழிப்பான, ருசியுள்ள வாசனை மூக்கைத் துளைத்தது. அன்றிரவு தனது தாயாரை அம்மா கனவு கண்டிருக்கவேண்டும். அந்த உப்புமாவை நான் ரசிச்சுச் சாப்பிடும்போது நான் ஒருகாலமும் சந்தித்திராத எனது அம்மாச்சியை நினைத்துக்கொண்டேன். அப்போது ஒரு ஆர்வத்துடன் கூடிய குரல் கேட்டது,” என்ன சாப்பிடுகிறாய்? நல்ல வாசனையாயுள்ளது”
தேமல் நிறைந்திருந்த அவளின் மூக்குச் சுருங்கியது – அது அருவருப்பினால் இல்லை, ஆச்சரியத்தினால்.
“உன்னுடைய தொப்பியை இரவல்தர முடியுமா? என்னிடம் இல்லை. Ms Sincook தொப்பியில்லாமல் நான் வெய்யிலில் விளையாடமுடியாதென்று சொல்கிறா. நீ இப்போது நிழலில் இருக்கிறாய். உனக்குத் தேவையில்லை. தேவையா?”
அவள் பேசிக்கொண்டிருக்கையில் அவள் வயிற்றில் இருந்து ஒரு மெதுவான குமுறல் சத்தம் கேட்டது. தனது வயிற்றை விறுவிறுப்பாகத் தேய்த்தவண்ணம் தனது உதட்டைப் பிதுக்கியபடி என்னைப்பார்த்த அவளின் கண்களில் பல்லாயிரம் நட்சத்திரங்கள் பளிச்சிட்டதுமாதிரி இருந்தது.
“இன்று மதிய உணவிற்கு நான் ஒரு மியூஸ்லி பட்டை (காலையில் சாப்பிடும் ஒரு உணவு) சாப்பிட்டேன். நேற்று அம்மாவிற்குச் சுகமில்லாமல் இருக்கவில்லை என்பதால் கடைக்கு சாமான் வாங்கப்போனோம். மியூஸ்லி பட்டைகள் குறைந்த விலையில் இருந்தது. அம்மா ஒரு பெட்டி வாங்கினா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக இந்தக் கிழமை பூராய்ச் சாப்பிடலாம்.”
Zoe பேசிக்கொண்டிரிருக்கையில் தனது ஒழுங்கற்றுக்கிடந்த வெளிர்மஞ்சள் நிற கூந்தலை தனது முகத்திலிருந்து பொறுமையற்றுத் தள்ளிவிட்டுக்கொண்டே இருந்தாள். அவளுடைய களைவாய்ந்த பச்சைநிறக் கண்கள் நட்பைப் பறைசாற்ற,” ஆனால் எனக்கு இன்னும் பசியாயுள்ளது. உன்னுடைய உணவை கொஞ்சம் சாப்பிட்டுப் பார்க்கலாமா?”
நான் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து எனது கரண்டியை அவளிடம் கொடுத்தேன். நாங்கள் அங்கே இருந்து உப்புமாவைவிட அதிகமானவற்றைப் பகிர்ந்துகொண்டோம். அவள் முதல் வாயை எடுத்தபோது உடனடியாக அவள் கண்கள் விரிந்ததையும் அவளுடைய உதடுகள் திருப்தியில் சுருண்டதையும் பார்த்தவுடன் இவள்தான் எப்போதுமே எனது சிறந்த நண்பியாக இருப்பாளென்று முடிவுசெய்தேன்.
மணி அடித்ததும், என்னுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வண்ணம், எனது கைகளைப் பிடித்தபடி அவள் சொன்னாள்,” இனிமேல் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். ஒவ்வொருநாளும் ஒன்றாக மதிய உணவருந்தலாம்”
அன்று அம்மா வேலையில் இருந்தபடியால் சுபா பெரியம்மா என்னை பாடசாலையில் இருந்து அழைத்துச்சென்றா. அந்த நிமிடம் தொடங்கி அம்மா என்னைப் படுக்கையில் போர்வைக்கடியில் மூடும்வரை Zoe வைப்பற்றிக் கதைப்பதை நான் நிற்பாட்டவில்லை,” எனக்கு ஒரு புது நண்பி கிடைத்துவிட்டா. அவளின் பெயர் Zoe. அவளுக்கு உங்கடை உப்புமா பிடித்துவிட்டது”
அம்மா சிரித்துக்கொண்டே என்னைக் கட்டிப்பிடித்தாள்,” அது மிகவும் சிறப்பானது, குஞ்சு. இரண்டுபேரும் தங்கடை சாப்பாட்டை பகிர்ந்தீர்களா?”
“இல்லை, அவ தனது மதிய உணவாக ஒரு மியூஸ்லி தான் வைத்திருந்தபடியால் பகிரவில்லை. அம்மா, அவவுடைய அம்மாவிற்குச் சுகமில்லை. உங்களைபோல சமைக்கவும் தெரியாது”
அம்மா முகத்தைச் சுளித்தபடி,” பாவம், அவள் பசியோடை இருந்திருக்கவேணும். அவளுடைய தகப்பன் என்ன வேலை?”
“அவளுக்குத் தகப்பன் இல்லை. அவளும் அவளின் தாயாரும்தான்- உங்களையும் என்னையும்போல. அம்மா, Zoe வும் நானும் சிறந்த நண்பர்களாக இருக்கப்போகிறோம். நீங்களும் Susan உம் சிறந்த நண்பர்கள் ஆகலாம்”
“ Susan எங்கே வேலை பார்க்கிறா?” எப்போதும் ஆட்களைப்பற்றி அம்மா கேட்கும் முதல் கேள்வி.
அடுப்படியில் உதவியாளராக வேலை செய்வதால் தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருந்த அம்மா தன்னுடைய ஏமாற்றத்தை மறைப்பதற்காக தன்னைவிட சமூக அந்தஸ்தில் கூடியவர்களை முடிந்தவரையில் தவிர்த்துவந்தாள். அந்த வகையில் Susan பற்றி அம்மா பயப்படத் தேவையில்லை என்பதைச் சொல்ல எனக்கு நல்ல சந்தோஷம்.
“ Susan வேலை செய்வதில்லை, அம்மா. அவவிற்கு சரியான சுகமில்லை, ஒவ்வொருநாளும் மருந்து எடுக்காவிடில் ரொம்ப வலியுடன் இருப்பா. அதுதான் உணவு மலிவான விற்பனையில் இருக்கும்போது தாங்கள் வாங்குவதாக Zoe சொன்னாள். மருந்து வாங்க நிரம்பப் பணம் வேணுமாம்.”
“அம்மா, Zoe விற்கு நிரம்ப மாமாக்கள் இருக்கிறார்கள்- என்னைவிட அதிகம். சிலநேரங்களில் அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்வார்கள். ஆனால் Zoe விற்கு அவர்களைப் பிடிக்காது – சிலர் ரொம்ப கீழ்த்தரமானவர்கள். ஒருமுறை ஒரு மாமா தாய்க்கு அடிப்பதைப் பார்த்துள்ளாள். அப்புறம் அவர் கதவை அடிச்சுச் சாத்திக்கொண்டு போய்விட்டார். இப்போது வீட்டிலே ஒரு மாமாவும் இல்லை. தான் தாயுடைய கட்டிலில் படுக்கலாம் என்பதில் Zoe விற்குச் சந்தோஷம்”
அம்மா ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவவுடைய புருவத்திற்குப் பக்கத்தில் இருந்த பள்ளம் கொஞ்சம் பெரிதாகியது. தன்னுடைய உதட்டையும் கடித்துக்கொண்டா. அவ என்னைக் கட்டிப்பிடித்தபோது அவவின் தாறுமாறான மூச்சு மூக்கின்வழியே வெப்பத்துடன் வந்ததை நான் உணர்ந்தேன்.
ஆனால் நான் ஒரு நண்பியைப் பிடித்துவிட்டேன் என்ற உற்சாகத்தை ஒன்றுமே மழுங்கடிக்கவில்லை. ஒவ்வொருநாளும் பாடசாலைக்கு ஓடிச்சென்று அங்கு Zoe வும் நானும் எங்களுக்குள் பல இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வோம்.
Zoe மதிய உணவுக்காக மியூஸ்லி கொண்டுவருவதை நிறுத்திவிட்டாள்; உண்மையில் சாப்பாடு கொண்டுவருவதையே நிறுத்திவிட்டாள். அதற்குப்பதிலாக என்னுடைய பள்ளிப்பை இரண்டு பசியுள்ள சிறுமிகளுக்கான உணவுடன் பெருத்திருந்தது. அம்மா எனக்கென்ன டிபன் பெட்டியில் கட்டினாளோ அதேமாதிரி Zoe விற்கும் கட்டினா.
ஒருமுறை Susan க்கும் உணவு கொடுக்க முயற்சித்தா. அது ஒரு சனிக்கிழமை நாள். முதல் நாள் இரவு முழித்திருந்து அம்மா பலவகை பாஸ்டா உணவுகளை பரீட்சார்த்தமாய் செய்துபார்த்தா. இறுதியில் தான் செய்த லசானியா என்ற உணவை மற்றவர்களுடன் பகிரலாம் என்று முடிவெடுத்தா.
நாங்கள் போனபோது Zoe தான் கதவைத் திறந்தாள். நாங்கள் உள்ளே அடியெடுத்து வைத்ததும் அம்மா முகத்தைச் சுளித்தா. நாங்கள் உள்ளே போனதும் அங்கே அடித்த புளிச்ச வாசனை என்னையும் பின்வாங்கச் செய்தது. அது எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே பரவலாகத் எறிந்து விடப்பட்ட வெறும் போத்தல்களும், மூலையில் குவிக்கப்படிருந்த வெறும் போத்தல்களையும் காண எனக்குப் புதினமாகப்பட்டது. ஒரு உடைந்து போன சிகரெட் சாம்பல் கிண்ணம் காப்பி மேசையில் கிடந்தது. நாங்கள் உள்ளே வருவதைக்கண்ட Susan தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைத்தாள்.
அவ எழும்பிநின்று தெளிவுடன் கேட்டாள்,”
Zoe! இவதான் உன்னுடைய கறுத்த நண்பியா?”
Zoe இன் முகம் வெளிறிப்போனதை அவள் கவனிக்கவில்லை.
“ இவள் நல்ல அழகாயுள்ளாள்”
அவ என்னைப்பார்த்தபோது எனது வயிற்றிலே சிறிய தாக்கம் ஏற்பட்டது. அவவுடைய கண்கள் சரியாக Zoe இனது மாதிரியே- பளபளவென்று மின்னும் பச்சை நிறம். கூந்தல் நிறமும் அதேதான். ஆனால் எங்கேயோ பிழை உள்ளது. அவவின் உதடுகள் காய்ந்துபோய் உரிந்து கொண்டிருந்தது. அவவின் கன்னங்கள் சிவந்து காய்ச்சல் உள்ளவள் போலத் தெரிந்தா. நிற்பதற்குக்கூட கஸ்டப்பட்டவள்மாதிரி மெதுவாக முன்னுக்கு வந்தா.
அம்மா புன்னகையோடு தான் கொண்டுவந்த லாசானியாவைக் கொடுத்தா.
“நீங்கள் எனக்குக் கறி கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். நான் கறி சாப்பிடுவதில்லை. ஓஓ.. இது லாசானியா. ஆனால் இதுவும் கறிபோல மணக்கிறது.”
வெறித்தனமாக சிரித்தபடி சொன்ன அவவிற்கு மூச்சுக்கிடையே விக்கல்கள் வந்தபடி இருந்தன.
நாங்கள் அதிகநேரம் அங்கே தங்கவில்லை. அதன்பிற்பாடு அந்த வீட்டிற்கு ஒருநாளும் போனதில்லை. அம்மா வெளிப்படையாக ஒன்றும் சொல்லாதபோதும் என்னால் அவவின் வெறுப்பை உணரக் கூடியதாக இருந்தது. தன்னுடைய வீட்டிற்கு வரும்படி Zoe அதன்பிறகு அழைக்கவேயில்லை. அதற்குப்பதிலாக பாடசாலை முடிந்தவுடன் ஒவ்வொருநாளும் எங்கள் வீட்டிற்கு வந்து இரவுச் சாப்பாட்டின் பின்புதான் தன்னுடைய வீட்டிற்குச் செல்வாள்.
என்னுடைய பெரியம்மாக்கள் வரும்போது அவர்களை வரவேற்க தானே முன்னுக்கு ஓடி,” ஹலோ, பெரியம்மா! உங்களைப் பார்ப்பதில் எனக்குச் சந்தோஷம்”
ஏற்கனவே அம்மா தனது சகோதரிகளிடம் Susan ஐப் பற்றிய விபரங்களைச் சொல்லியுள்ளா. அவர்களும் Zoe வை குடும்பத்தில் ஒருவராக நினைத்தனர். ஒவ்வொரு வருடமும் அவளின் பிறந்தநாளுக்கு மகா பெரியம்மா ஒரு கேக் செய்வா. கை தட்டி சந்தோஷத்துடன் குதிக்கும் Zoe தன்னுடைய வாழ்நாளில் மிகச் சிறந்த கேக் இதுதான் என்று கூறுவாள். ஆனந்த், குரு மற்றும் அஸ்வின் ஆகியோர் தாங்கள்தான் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்போம் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். Zoe ஆட்சேபிக்கமாட்டாள். அவள் ஒரு மகிழ்ச்சியின் மையம், எந்நேரமும் சிரிப்பும் விளையாட்டும்தான் - முக்கியமாக அம்மாவும் சகோதரிகளும் அன்போடு தெரிவு செய்திருந்த பிறந்தநாள் பரிசுகளைத் திறக்கும்போது.
நாங்கள் ஆறாம் தரம் படிக்கும்போது முதல்தடவையாக இருவரும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம். அந்த வருடம்தான் பெரியம்மாக்கள் எனக்கான பிரத்தியேக திட்டத்தை வைத்திருந்தார்கள். அவர்களை ஏமாற்றக்கூடாதெனத் தீர்மானித்த நான் Ms Roberts இடம் மேலதிகமான பரீட்சைத்தாள்களை வாங்கி பாடசாலை முடிந்தபின்னரும் மிகுந்த அக்கறையுடன் படித்தேன். மதிய நேரத்தில் விளையாட்டு இடத்தைவிட்டு அமைதி நிறைந்த வாசிகசாலையில் நேரத்தைக் கழித்தேன்.
ஆரம்பத்தில் Zoe என்னுடைய ஆர்வத்திற்கு ஈடுகொடுத்துப் படித்தா, இருவரும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டோம். ஒருவேளை என்னுடைய பிழையாயிருக்கலாம்; Zoe என்னிடமிருந்து விலகிப்போனதை நான் கவனிக்கவில்லை.
மதியநேரத்தில் நூலகத்தில் என்னைச் சந்திப்பதை நிறுத்தினாள். பாடசாலையில் இருந்து வீட்டிற்குப் போகும்போது எனக்குப் பக்கத்தில் கயிறடித்துக்கொண்டு வருவதும் நின்றது. இப்போது நாங்கள் வளர்ந்துவிட்டதால் பெரியவர்கள் துணையின்றி வீட்டிற்கு நடந்து போகலாமென்று அம்மாவையும் சகோதரிகளையும் ஒத்துக்கொள்ளவைத்தோம்.
ஆனால் இப்போது தனிமையில் நான் நடக்கவேண்டியிருப்பதை நான் உணர்ந்தேன். எமது நடையின்போது கூடவே வரும் அந்தக் கலகலப்பான சிரிப்பு இப்போது இல்லை.
சில நாட்களின் பின்னர் எனது பாடசாலைப் பையை சுத்தம் செய்து கொண்டிருந்த அம்மா கேட்டா,” Zoe வுக்கு என்ன சுகமில்லையா? சில நாட்களாக அவளைக்காணவில்லை. பள்ளிக்கூடத்திற்கு அவள் ஒழுங்காய் வருகிறாளா?”
“ அவள் நல்ல சுகமேயுள்ளாள், அம்மா. அவள் பாடசாலைக்கு வருவாள். ஆனால் தாய்க்குச் சுகமில்லாதபடியால் தான் நேரே வீட்டுக்குப் போகவேண்டுமென்று சொல்கிறாள்”
ஒரு கணநேரம் எனக்குள்ளே ஒரு குற்ற உணர்வு தோன்றியது. ஒருவேளை அவளுக்கே சுகமில்லையோ? இப்போதெல்லாம் அவள் கதைப்பதே அரிது. அவளுடைய மரகதக்கண்கள் என்னைப் பார்த்து சிமிட்டுவதேயில்லை. ஆனா அவவிற்குச் சுகமில்லையென்றால் என்னிடம் ஏன் சொல்லவில்லை?. இப்போதெல்லாம் எல்லா நேரமும் நான் படித்துக்கொண்டிருப்பதையிட்டு அவளுக்குக் கோபமாயிருக்கலாம் என்று நினைத்தேன்.
“அவள் பாடசாலைக்கு வருவதாயிருந்தால் நான் அவளுக்கென்று அனுப்பும் மதியபோசனத்தை ஏன் சாப்பிடுவதில்லை? தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் இது தொடப்படவேயில்லை”
“நான் அவளைக்கேட்டேன். தான் இப்போது சமைக்கப் பழகுவதாயும் தன்னுடைய உணவைத் தானே தயாரிப்பதாயும் கூறினாள்.”
ஒரு கணநேரம் அம்மாவின் புன்னகை மந்தமாகியது. பின்பு மெதுவாகச் சொன்னா,” அவளைக் காணாதது எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவளுக்கு எப்போது முடியுமோ அப்போது என்னை வந்து பார்க்கும்படி சொல்.”
மறுநாள் பாடசாலையில் அம்மா அவளைப்பற்றி விசாரித்ததைக் கூறினேன். ஒரு கணநேரம் சிக்கலை அவிழ்ப்பதுமாதிரி அவளுடைய சுருக்கங்கள் நிறைந்த முகத்திலே ஏக்கம், கடும்துயரம், பயம், வருத்தம், அருவருப்பு எல்லாமே தோன்றி ஒரு வெறுமையில் நின்றது.
“எனக்கு வேறு வேலைகள் இருக்கென்று அம்மாவிடம் சொல். உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்க முடியாது”
என்னுள்ளே கோபம் சிறிதுசிறிதாகக் கூடியது. நாங்கள் ஏதோ அந்நியர் போல ஏன் பாராமுகம் காட்டுகிறாள்?
Zoe குனிந்து நிலத்தைப்பார்த்தாள். அவள் தன்னுடைய முட்டியை இறுக்கப்பிடிப்பதை அவதானித்தேன். நான் அந்த இடத்தை விட்டுச் செல்ல யோசித்தபோது அவள் சொன்னாள்,” சரி,சரி! நான் உன்னோடை வருகிறேன். அதற்குமுதல் எனக்கு ஐஸ்பழம் சாப்பிடவேணும்போல் உள்ளது. கடைக்கு முதலில் போவோம்”
அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் எனக்கு மங்கலாகவே இருக்கிறது. கடையிலே Zoe ஐஸ்பழத்திற்குக் கிட்டவே போகவில்லை. அதற்குப் பதிலாக தன்னுடைய சட்டைப் பைக்குள்ளும் எனது சட்டைப் பைக்குள்ளும் பல வடிவத்திலும் அளவிலும் இருந்த சொக்கலேற், சூயிங்கம், முட்டாசிகள் என்று பலவற்றைத் திணித்தாள்.
“வா போகலாம்” என்று சொன்னாள்.
நான் மயக்கநிலையில் உள்ள ஒரு சடலம் போலிருந்தேன். வார்த்தைகள் ஏதுமின்றி அவள் பின்னே சென்றேன். நாங்கள் அதிகதூரம் போகவில்லை. நாங்கள் வெளியே போக முயற்சிக்கையில் ஒரு உருவம் சத்தமில்லாமல் எங்களுக்கு முன்னாடி வந்து கனமான குரலில்,” இரண்டு பெண்களும் உங்கள் சட்டைப்பைகளிலுள்ள பொருட்களை எடுங்கள்”
“ஓடு, அருவி, ஓடு” Zoe சத்தம் போட்டாள். அந்த மனிதனின் முழங்காலுக்குக் கீழே பலமாக உதைந்துவிட்டு ஆட்கள் நிறைந்திருந்த தெருவழியே குறுக்குமறுக்கமாய் ஓடி பாடசாலையை விட்டுப்போகும் மாணவர்கள், பெற்றோர்களிடையே மறைந்துவிட்டாள்.
நான் அரங்கவில்லை. என்னால் அரங்கமுடியவில்லை. அதிர்ச்சியினால் உறைந்துபோய் அப்படியே நிற்கும்போது அம்மா வந்தா. கடைக்காரருக்கு Zoe எங்கள் பைக்குள் திணித்ததைக் காட்டிலும் அதிகமாகப்பணம் கொடுத்து, பொலிசைக் கூப்பிடாமல் தன்னைக்கூப்பிட்டதற்கு அவருக்கு நன்றி சொன்னா.
Zoe வின் வீட்டிற்குப் போவதென்று அம்மா முடிவெடுத்து அங்கு போகும்வரை அழுதுகொண்டே போனேன். Susan வந்து கதவைத் திறக்கும்வரை அம்மா கதவைப் பலமாகத் தட்டினாள். நிற்பதற்கே தடுமாறிக் கொண்டிருந்த அவளின் முகம் சிவந்து போயிருந்தது. முகத்திலே சூரிய ஓளி விழுந்ததால் கண்களைக் கூசியபடி , அவளுடைய கன்னத்திலே கண்ணுக்குப் போட்ட மை வழிந்தோட,
“உங்களுக்கு என்னவேணும்”, வார்த்தைகள் தடுமாறின, ஆனால் அவவின் மரியாதையின்மை வெளிப்படையாகத் தெரிந்தது.
அம்மா அமைதியாகச் சொன்னா,” நாங்கள் Zoe வுடன் பேசவேண்டும்”
“Zoe உங்களுடனோ அல்லது உங்கள் மகளுடனோ பேசுவதற்குப் பிரியப்படவில்லை. உண்மையில் இனிமேல் உங்களைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. உங்கள் இருவருடைய கெட்ட செல்வாக்கை இப்போது அவள் புரிந்துள்ளாள். இந்தக் குட்டிப்பிசாசு என்ரை செல்லப்பெண்ணைத் திருடவைத்தாள் என்பதை நம்பக் கஸ்டமாயுள்ளது”
“Zoe வைக் கூப்பிடு. அவளோடு கதைக்கும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டுப் போவதாயில்லை”
எங்களை முறைத்துப்பார்த்த Susan பின்பு தனக்குப் பின்னால் பார்த்துவிட்டு கதவை அகலமாகத் திறந்தாள்.
“Zoe, அவர்களை இனிப் பார்க்கவிருப்பமில்லையென்று அவர்களுக்குச் சொல்”
அரைவாசி திறந்திருந்த கதவின் பின்னிருந்து Zoe வெளியே வந்தாள். அவளது கண்களிலே ஒரு எதிர்ப்புத் தெரிந்தது, உதட்டைக் கடித்தபடி சொன்னாள்,” அம்மா சொல்வது சரி. உன்னோடு இனி சிநேகிதமாயிருக்க எனக்கு விருப்பமில்லை, அருவி. நீ என்னைக் கெட்ட செயல்களைச் செய்ய வைக்கிறாய்”
அம்மா எனக்குப் பக்கத்திலே இறுக்கமாக நின்றா. Zoe அம்மாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். இறுதியாக அம்மா எனது கைகளை இறுகப் பற்றியவாறு மௌனமாக வீடு நோக்கிச் சென்றோம்.
அடுத்த நாள் காலையில் எனது கூந்தலைச் சீவியவண்னம் மெதுவாக அவ சொன்னா,” அருவி, ஞாபகத்தில் வைத்திரு. இந்த நாடு, கருணையுள்ளம் படைத்த இந்த நாட்டு மக்கள் எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாதபோது அடைக்கலம் தந்தார்கள். அவர்களின் விருந்தோம்பலை நாங்கள் தப்பாகப் பாவிக்கக்கூடாது”
சிறிது நிறுத்தி என்னுடைய முகத்தைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்துக்கொண்டு,” திருடுவது தப்பு என்று உனக்குத் தெரியும்”
“நானில்லையம்மா! அது Zoe தான்”
“அது பரவாயில்லை. அவளுடைய திட்டமாயிருந்தாலும், நீ அது நடைபெறுவதை அனுமதித்திருக்கிறாய்”
நான் அவமானத்தால் தலை குனிந்தேன். ஆனால் அம்மா எனது நாடியை உயர்த்தி, சொன்னாள்,” நீ ஒருபோதும் அவமானத்தால் தலைகுனிவதை நான் விரும்பவில்லை. நான் நீண்டகாலம் தலை குனிந்துள்ளேன், ஆனால் அது உனக்கு வேண்டாம்”
அவவின் குரல் தடுமாறியது, ஆனால் தன்னுடைய தொண்டையை தெளிவாக்கிக்கொண்டு தொடர்ந்தா,” இந்த அழகான நாட்டில் எது வேணுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதே. கஸ்டப்பட்டுப் படி. சட்டத்தை மீறாதே. உனக்கு உண்மையாக நடந்துகொள்- இதுதான் நான் உன்னிடம் எதிர்பார்ப்பது. இந்த சம்பவத்தைப்பற்றி நாங்கள் இனிமேல் பேசவேண்டாம். உன்னுடைய பாடத்தை நீ படித்துவிட்டாய் என்று எனக்குத் தெரியும். இப்படி இனிமேல் நடக்காது”
அம்மா சீப்பைக் கீழே வைத்துவிட்டு கண்களில் அன்பு தழும்ப என்னைப் பார்த்துக்கொண்டு, “ Zoe வைப் பொறுத்தவரையில் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் அவளிடமிருந்து விலகியிருப்பதுதான் நல்லது. அவ எப்போது தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாளோ அப்போது எங்களிடம் திரும்பவும் வரலாம்”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.