Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஒருபோதும் நான் என் தந்தையின் மகளில்லை - பாகம் 4

பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2026 (புதன்கிழமை)

எனது மகளாகிய பாமினி செல்லத்துரை எழுதிய Never My Father’s Daughter என்கின்ற ஆங்கில நாவலை தமிழாக்கம் செய்து நான்கு பாகங்களாக வெளியிடுகிறேன். வாசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

சபா.இராஜேந்திரன்

 

ஒருபோதும் நான் என்

         தந்தையின் மகளில்லை

பாகம் - 4

 

அத்தியாயம் 22 – சொர்க்கப் பறவை

Zoe

ஜூலை 2025

மெல்பேர்ண்

 

ம்மாவிற்கு ஆண்களின் மேலிருந்த ரசனை எப்போதும் கேள்விக்குறியாயிருந்த போதிலும், ஒருமுறையும் ஒருவருக்கும் துப்பாக்கியுடன் தொடர்பிருக்கவில்லை. ஆகவே ஆர்வத்துடன் அவ சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டேன்.

“நீ போன மறுநாள் – அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகாயிருக்கலாம். ஞாபகமில்லை Zoe. அவன் Frank மீது துப்பாக்கியை நீட்டியதும் நான் அலறினேன்; உடனே அவன்  என்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு சத்தம் போட்டால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்.”

“என்னம்மா சொல்கிறாய்?. அவன் ஏன் உங்களையும் Frank ஐயும் சுடவேண்டும்?”

கேட்கும்போதே அது எவ்வளவு மோட்டுத்தனமான கேள்வியென்று எனக்குத் தெரியும். Frank போதைப்பொருளுடன் புழங்கினான். நிச்சயமாக யாரையோ ஏமாற்றியிருக்கிறான்.

“எனக்குத் தெரியாது, Zoe. அவனுக்கு Frank  கொஞ்சம் பணம் கொடுத்ததும் அவன் போய்விட்டான்.”

“அது ஒரு களவோ, அம்மா?”

“இல்லை, அவன் Frank ஐ தேடிவந்தவன் என்று நினைக்கிறேன் – அன்றிரவே Frank  வீட்டைவிட்டுப் போய்விட்டார். இப்போது அந்த மனிதனுக்குத் தான் இருக்குமிடம் தெரிந்தபடியால் மிகுந்த ஆபத்தானது என்று சொன்னார். அவரைப் போகவேண்டாமென்று நான் கெஞ்சினேன். அந்த மனிதன் திரும்பவந்து என்னைத் தாக்கக்கூடுமென்று நான் பயப்படுவதாகக் கூறினேன்.”

அவவின் குரலிலிருந்த பயம் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அதையிட்டு எனக்கு எந்தவித உணர்ச்சியும் இருக்கவில்லை.

நான் பதில் சொல்லவில்லையென்பதால் அவ தொடர்ந்தா.

“நான் Frank ஐப் பார்த்துக் கெஞ்சினேன், “அவனிடம் துப்பாக்கி இருக்கிறது, என்னைப் பார்த்து நீட்டினான், Frank. அவன் திரும்ப வந்தால்?”. அதற்கு Frank சொன்னதெல்லாம், “கொல்ல விரும்புகிறவன் எல்லாம் சும்மா துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்கமாட்டான், Susan. ஆட்களை மிரட்டுவதற்காகத்தான் நீட்டுவான். உண்மையிலேயே அவனுக்கு எங்களைக் கொல்ல விருப்பமென்றால், சும்மா வெருட்டிக்கொண்டிருக்கமாட்டான். இப்போதைக்கு அவனுக்கு நான் பணம் கொடுத்துவிட்டேன் – அவன் திரும்பிவரமாட்டான்.” இப்படிச் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார், Zoe, போய்விட்டார்!”

“உங்களுக்குப் பயமாயிருந்தால் பொலீசைக் கூப்பிடுங்கள். Frank உங்களோடு இல்லாதது உங்களுக்கு நல்லது. அந்த மனிதன் திரும்பி வந்தால் இப்போது Frank இங்கு வசிப்பதில்லையென்று சொல்லுங்களேன்.”

சொல்லிவிட்டு போனை வைக்கலாமென்று நான் நினைத்தபோது அவ ஓலமிட்டா, “நீ எங்கேயிருக்கிறாய், “Zoe? .ஒரு விளக்கமுமில்லாமல் என்னைவிட்டு நீ போனது என்னால் நம்ப முடியாமல் உள்ளது.”

அப்போதாவது நான் போனைத் துண்டித்திருக்கவேண்டும். ஆனால், என்னுடைய வாழ்க்கையை நான் இப்போது புனரமைத்துள்ளேன் என்ற சந்தோஷமான விடயத்தைச் சத்தம் போட்டுச் சொல்ல என்னில் ஒரு பகுதி ஆசைப்பட்டது. “நான் இப்போது சீதாம்மாவுடன் வசிக்கிறேன். அவவோடு சேர்ந்து விரைவில் The Taste of Jaffna வில் வேலைசெய்வேன்.”

“சீதாம்மா!? அதுதான் உன்னுடைய சினேகிதி -  நீ ஒட்டிக்கொண்டிருந்த அந்த கறுத்தப்பெண். அது என்ன அந்த The Taste of Jaff….?”

“ஓம், என்னுடைய நெருங்கிய தோழி, அருவி. நான் இப்போது அவளுடைய தாயாரோடு வசிக்கிறேன், அம்மா. The Taste of Jaffna என்பது ஒரு உணவகம்.”  

அத்துடன் நான் போனைத் துண்டித்துவ்ட்டேன். அம்மாவிற்கு என்னால் உதவமுடியாதென்று எனக்குத் தெரியும். அவ தன்னுடைய கெட்ட பழக்கங்களுக்காகவே வாழ்கிறா. ஒரு காலத்தில் மதுவும் ஆண்களும், ஆனால் இப்போது, Frank இன் சகவாசத்தால் கொக்கைன் போதைப்பொருளும். திரும்பவும் அவவுடைய குழப்பம் நிறைந்த வாழ்க்கைக்குள் நான் போனால் என்னால் தாக்குப் பிடிக்கமுடியாது – முக்கியமாக எனது வாழ்க்கையை நான் புனரமைக்க முயலும் தருணத்தில்.

திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தா, ஆனால் தொடர்ந்தொலிக்கும் அந்த காதைக் கிழிக்கும் போன் சத்தத்தை நிறுத்துவது மிகவும் எளிதாக இருந்தது. 

மறுநாள் இரவு உணவின் பின்னர் சீதாம்மா மெதுவாக மௌனத்தைக் கலைத்தா, “Zoe, உன்னைத்தேடி உனது அம்மா இன்று உணவகத்திற்கு வந்திருந்தாள். அவள் மிகவும் …….. கலக்கமடைந்திருந்தாள்.”

நம்பமுடியாமல் சீதாம்மாவை நான் உற்றுப் பார்த்தேன். இப்படி நடக்குமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

“என்னத்தைச் சொல்கிறீர்கள்? நன்றாகக் குடித்திருந்தாளா அல்லது நல்ல போதையா – அல்லது இரண்டுமா?,” உணவகத்தில் அவ ஏற்படுத்திய அவலக்காட்சியை நினைத்து வருந்திய நான் கசப்புடன் கேட்டேன்.

“அவள் உன்னையிட்டு மிகவும் கவலையுடன் இருந்தாள், Zoe.”

கோபத்துடன் எனது தலையை ஆட்டினேன். “என்னை மன்னித்துவிடுங்கள் சீதாம்மா. நான் ஒருபோதும் அவவிற்கு……. நான் அவவிடம் பேசுகிறேன். திரும்பவும் உணவகத்திற்குப் போகக்கூடாதென்று அவவிற்குச் சொல்லிவிடுகிறேன்.”

“உன்னைப் பார்க்க விருப்பமென்றால் உணவகத்திற்கு வரவேண்டாம், வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளேன்.”

“நீங்கள் அவவிற்கு வீட்டு விலாசம் கொடுத்தீர்களா?” என்னுடைய குரலிலே பயத்தின் பீதி தெரிந்தது.

“ஓம், கொடுத்தேன். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளை பாதுகாப்பாக உள்ளாள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது.”

அந்த முரண்பாட்டைப் பார்த்து எனது கண்கள் சுருங்கின. நான் பாதுகாப்பாக இருக்கிறேனோ என்பதைப்பற்றி எனது அம்மா ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது.

 “Zoe, அவள் இங்கே வரும்போது கொஞ்சம் கருணையுடன் நடந்துகொள். அடிக்கடி அவளைப் பார்க்கவருவாயென்று சொல். ஆனால் நீ அவளோடில்லாமல் உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைப்பதற்கு உனக்கு நேரம் தேவையென்பதையும் சொல்.” 

அன்றிரவு வருவாளென்று எதிர்பார்த்தேன், அல்லது மறுநாள். ஆனால் அவ வரவில்லை; உணவகத்திற்கும் போகவில்லை.

சீதாம்மாவுடன் நான் வியாழக்கிழமை வேலைக்குப் போனபோது, உணவகத்திற்குள் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் நடுக்கத்துடன் பார்த்தேன் – அது அம்மாவாக இருக்கக்கூடாதென்று மனதிற்குள் பிரார்த்தித்தவாறு. ஒவ்வொரு முறையும் கதவு திறக்கும்போது வந்தவர் அம்மா இல்லையென்றவுடன் எனது மூச்சு நிதானமாக வந்தது.

நான் கூறிய விடயம் அவவிற்கு விளங்கியிருக்கவேணும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒருவேளை Frank ற்குப் பதிலாக வேறொரு ஆள் கிடைத்திருக்கும்; வழி தவறிப்போன மகள் அவவிற்குத் தேவையில்லாதிருக்கும். அல்லது சீதாம்மாவுடன் நான் தங்குவதைத் தனது தனிப்பட்ட அவதானமாகக்கருதி என்னோடு ஒருவிதத் தொடர்பும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்கலாம்.

துப்பறிவாளர் Williams என்னை ஊடுரிவிப் பார்க்கும் போதுதான் நான் எப்படியாகப் பிழையாகக் கணக்கிட்டிருக்கிறேன் என்றுணர்ந்தேன். என்னுடைய அம்மா என்னைப் பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளா. வந்துவிட்டு மிக அவசரமாக இங்கிருந்து போயுள்ளா – அந்த அவசரத்தில் அவவிற்கு மிகவும் பிடித்த  டென்னிஸ் காப்பை கீழே போட்டுவிட்டுப் போயுள்ளா.

துப்பறிவாளர் Williams முதன்முறை அந்த டென்னிஸ் காப்பைக் காட்டி யாருடையது என்று தெரியுமா என்று கேட்டபோதே நான் சொல்லியிருக்கவேண்டும். அது அம்மாவுடையது. முதல் பார்வையிலேயே எனக்குத் தெரியும்.    எனக்குத் தெரிந்த நாள் முதலாக இதை அணிந்துள்ளா. இந்த ஒரு ஆபரணம்தான் அவவிற்கு மிகவும் முக்கியமானது. அந்தக் காப்பின் பிடிமானம் மாற்றப்பட வேண்டும்போதுதான் கழட்டியுள்ளா.

“இதை உன் அப்பா எனக்குத் தந்தார்,” அவ ஏக்கத்துடன் சொல்வா. “அவர் எனக்குத்தந்த ஒரே பொருள் இதுதான்.”

“அது உண்மையில்லை, அம்மா. என்னை உனக்குத் தந்தார்!” சிறு பெண்ணாக இருந்த காலத்தில் மகிழ்ச்சியுடன் சொல்வேன். அவவும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்வா.

ஆனால் அந்தக் காப்பு இப்போது சீதாம்மாவின் வீட்டு வாசலிலே பிரகாசமாய் வளர்ந்திருக்கும் சொர்க்கப்பறவை என்ற பூ மரத்தடியில் அவ கொலை செய்யப்பட்ட நாளில் என்ன செய்கிறது?

சொர்க்கப்பறவை அம்மாவிற்குப் பிடித்த மரம் – உண்மையில், அந்த ஒரே மரம்தான் அவவின் தோட்டத்தில் உள்ளது.

“Zoe, நான் ஒரு paradise riflebird என்ற பறவையைப்  பார்த்ததுபற்றி உனக்குத்தெரியுமா?” கண்களில் உற்சாகம் ததும்ப ஒருமுறை சொன்னாள். “வெகு காலத்திற்கு முன்னர், அப்பா உயிரோடு இருந்தபோது நான் சின்னப் பெண்ணாக இருந்த காலத்தில். அப்போது நாங்கள் குவீன்ஸ்லண்டில் Lamington National Park இல் இருந்தபோது அப்பா எனக்குச் சுட்டிக்காட்டினார். என்னுடைய மகிழ்ச்சியைக் கண்டு, அவர் சொன்னார்,” ஒருநாள் நாங்கள் Papua New Guinea போவோம். அங்கே பலவிதமான பறவைகள் உள்ளன, முக்கியமாக birds of Paradise.””

ஒவ்வொருமுறையும் நாங்கள் நடந்துபோகும்போது Birds of Paradise  செடி கண்ணில் பட்டால் அம்மா அந்த இடத்தில் சிறிதுநேரம் நிற்பதன் காரணம் அவவின் தகப்பனாரின் ஞாபகம் வருவதால் இருக்கலாம். நான் சிறுமியாக இருந்த காலத்தில் அதுமாதிரி அடிக்கடி நடந்துள்ளோம்; ஆனால் இப்போது கிட்டத்தட்ட இல்லாததுமாதிரித்தான்.

“உனக்குத் தெரியுமா, Zoe,  இந்த ஒரேயொரு பூ தான் நான் எவ்வளவு நேரம் முகர்ந்தாலும் எனக்குத் தும்மல் வராது. மற்றப் பூக்கள் எதுவானாலும் ஒருமுறை முகர்ந்தால் உடனடியாக மூக்கைத் துடைப்பதற்கு டிசுவைத் தேடவேண்டும்…… எனது தகப்பனார் என்னைத் தேடுவதாக நினைத்துக்கொள்வேன்.” அந்த மஞ்சளும் கத்தரிப்பு நீலமும் கலந்த பூக்களைப் பார்த்துக்கொண்டு சொல்லும்போது அவவின் கண்கள் ஈரமாயிருந்தன.

நேற்று சீதாம்மாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது பின்கதவைப் பாவித்ததால் முன்வாசலில் இருந்த காப்பு என் கண்ணில் படவில்லை.

அந்தக்காப்பு அங்கே இருப்பதின் ஒரே காரணம் – சீதாம்மா கொலையுண்ட நாளில் நான் வேலையில் இருந்த நேரத்தில் அம்மா இங்கே வந்துள்ளா. முந்திய நாளில் நடந்ததாக இருக்கமுடியாது; ஏனெனில் அம்மா வருவாவென நாங்கள் எதிர்பார்த்திருந்தபடியால், அவ வந்திருந்ததை சீதாம்மா எனக்குச் சொல்லியிருப்பா.

என்னுடைய அம்மா ஒருவரையும் கொலைசெய்யமாட்டா என்று என் இதயம் சொல்லியது. ஆனால் எனது மனம் ஒரு கொடூரமான சாத்தியத்தை முணுமுணுத்தது.

 போதைப்பொருள் அதிகம் ஏறிய நிலையில் அவ இருந்திருந்தால்……. சீதாம்மா என்னை ஒளித்து வைத்திருக்கிறா என்ற நினைப்பினால் அவவைக் கத்தியால் குத்தியிருப்பாவா?

“Zoe, Zoe, நீ நலம்தானே? நேற்றிலிருந்து என்ன நடந்ததென்று உன்னால் சொல்லமுடியுமாவென்று கேட்டேன்.”

துப்பறிவாளர் Williams  பொறுமையிழந்து காணப்பட்டார். நான் பேசுவதற்கு வாயைத் திறந்தேன், ஆனால் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. அதற்குப்பதிலாக, அவவின் கையிலிருந்த சிப்-லொக் பையைக் காட்டினேன்.

என்னுடைய பார்வையைப் புரிந்துகொண்டு, அந்தக் காப்பை நீட்டிக் கேட்டார், “ இது உனக்குச் சொந்தமானதா, Zoe?” 

 

 

 

அத்தியாயம் 23 – ஒரு தாயின் வலி

அருவி

26 ஜூலை 2025

மெல்பேர்ண்

Zoe வில் ஏதோ பிழையிருக்கிறது. எதற்காக அவள் பதட்டப்படுகிறாள்? சிப்-லொக் பையையும் துப்பறிவாளரையும் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் அவள் ஏன் விழுங்குகிறாள்.

மெதுவாக அவளருகில் நடந்துபோய்க் கேட்டேன், “இது உன்னுடையது இல்லை, இல்லையா, Zoe? நீ இப்படிப்பட்ட நகைகளை விரும்பியவள் இல்லையே.”

Zoe  வருத்தத்துடன் சத்தம்போட்டு அழுதாள். “இது என்னுடையது இல்லை, அருவி…… இது அம்மாவுடைய காப்புப் போலுள்ளது!”

என்னை முந்திக்கொண்டு துப்பறிவாளர் Williams கேட்டார், “ உன்னுடைய அம்மா இங்கே எதற்காக வந்தார்?”

“என்னைத் தேடி வந்தா….அவ என்னைத் தேடி வந்தா……….சீதாம்மாவுடன் நான் வசிப்பதையிட்டுக் கோபமாயிருந்தா------ உணவகத்திலே சீதாம்மாவை மிரட்டினா.”

Zoe வால் பேசமுடியவில்லை. அவள் பேசிய சில வார்த்தைகளும் வேதனை, பயம், குழப்பம் சேர்ந்து கலங்கலாக  இருந்தது.

கஸ்டப்பட்டுத்தான் என்னாலும் துப்பறிவாளராலும் அவள் சொன்னதை விளங்கிக்கொள்ள முடிந்தது. முடிவாக அவள் சொன்னாள், “அருவி, என்னை மன்னித்துவிடு ---- உனக்கும் சீதாம்மாவிற்கும் நான் நிறையத் தொந்தரவைத் தந்துள்ளேன். இப்போது ---- இப்போது உனது அம்மாவை எனது அம்மா கொன்றிருந்தால்?”

இது கிட்டத்தட்ட நினைத்துப்பார்க்க முடியாதது – ஆனாலும் எனது  உள்மனது ஒருவித தயக்கமுமில்லாமல் ஒத்துக்கொண்டது.

ஆனால்  துப்பறிவாளர் Williams உடனடியாகத் திடமான குரலில் சொன்னார், “Zoe, உன்னுடைய அம்மா சீதாவின் வீட்டிற்கு வந்திருந்தாலும் நாங்கள் அவதான் கொன்றிருப்பாவென்று அனுமானிக்கமுடியாது. நாங்கள் அவவைக் கேள்விகேட்டு அவ என்ன சொல்கிறாவென்பதை அறியவேண்டும்.”

நான் திடீரென எழும்பி Zoe  வின் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னேன், “வாருங்கள் போய் அவவைக் கேட்போம்.”

“நான் அப்படி நினைக்கவில்லை------”

“தயவுசெய்து, துப்பறிவாளர் Williams  அவர்களே, என்னுடைய அம்மாதான் இறந்து கிடக்கிறா. என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவேணும்!”

துப்பறிவாளர் Williams என்னையும் Zoe வையும் நீண்ட நேரம் அளவிடுவதுமாதிரிப் பார்த்துவிட்டுத் தன்னுடைய கொன்ஸ்டபிலைப் பார்த்து, “Fraser, என்னுடன் வா.”

Brad உடனடியாக எழும்பி, “நான் கார் ஓட்டுகிறேன்”

எனக்குப் பின்னால் வந்து, “நானும் வருகிறேன் "  என்று ஜெயா பெரியம்மா சொன்னபோது  துப்பறிவாளர் Williams அவவை மறித்துவிட்டார்.

“நாங்கள் எல்லோரும் போகமுடியாது, அவ பயந்து போய்விடுவா.”

ஜெயா பெரியம்மாவிற்கு அறிய ஆவலிருந்தபோதிலும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சோபாவில் தொப்பென விழுந்தா. மகா பெரியம்மா அழப்போகிறா போல அவவின் கண்கள் ஈரமாயிருந்தன; சுபா பெரியம்மாதான் அந்த அமைதியைக் கலைத்தா.

“நாங்கள் பொலிஸ் தனது வேலையைச் செய்ய விடவேண்டும். நாங்கள் உடனே செய்யவேண்டியது என்னவென்றால் வேறு யாரிடமிருந்தோ கேள்விப்படமுன்னர், முத்துவிற்கும் சீதாவின் நண்பர்களுக்கும் என்ன நடந்ததென்று தெரிவிக்கவேண்டும்.”

தேவா பெரியப்பா சந்தர்ப்பத்திற்கு ஏற்றமாதிரி செயல்பட்ட தனது மனைவியின் திறமையை மெச்சியவாறே, “ சுபா சொல்வது சரி. நாள் முழுவதும் நாங்கள் இங்கே இருக்கமுடியாது. மகா, இன்றிரவு நாங்கள் எல்லோரும் சாப்பிடவேண்டும் – உன்னுடைய பிரத்தியேக சாப்பாடொன்றைச் செய்.”

மந்தமான சனிக்கிழமை-சாயந்தர போக்குவரத்தை லாகவமாக கையாண்டு தனது Tesla காரை ஓட்டிக்கொண்டு Brad Susan வீட்டிற்குப் போனபோது, Zoe பின்னிருக்கையில் ஒன்றும் பேசாமல் இருந்தாள். துப்பறிவாளர் Williams உம் கொன்ஸ்டபில் Fraser உம் தங்களுடைய  வெள்ளைநிற Toyota வில் எங்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.

எனக்குப் பரிச்சயமான அந்த வீட்டை மேலெழுந்தமாதிரிப் பார்த்தபோது எனக்குள் ஒரு அனுதாப அலை வீசியது. இந்தப் பாழடைந்த, குளிர் மிகுதியான, கொடூரமான வீடுதான் Zoe  வளர்ந்த வீடு. உடைந்துபோன நடைபாதைக் கற்களைச் சுற்றி காட்டுப்புல் சுருண்டு கிடந்தது, பூச்செடிகளைக் களைகள் ஆதிக்கம் செலுத்தின. தனியாக நின்ற Bird of Paradise செடியின் இலைகள் சுருங்கியும் பூக்கள் வாடிப்போயும் இருந்தன – மட்டுமட்டாக உயிருடன் இருந்ததுமாதிரித் தெரிந்தது.

தன்னால் விடுபடமுடியாமல் இருக்கும் இந்தக் குப்பைக்குழிக்குள் என்னை இழுத்துவந்த அவள் மேல் பரிதாபப்படுவதா அல்லது கோவிப்பதா என்ற தெளிவில்லாமல் Zoe வைப் பார்த்தேன்.

காரிலிருந்து அவள் வெளியே வந்தபோது அவள் கண்களிலே ஒருவித வலி தெரிந்தது. அவள்மீது கோபப்பட விரும்பினேன்; எனக்குள்ளே ஊடுரிவிச்செல்லும் தாங்கமுடியாத வலிக்குக் காரணமென்று  அவளையும் அவளின் தாயாரையும் குறைசொல்ல விரும்பினேன்.

ஆனால் அவள் என்னை நோக்கித் திரும்பியபோது, அவளின் பார்வையிலிருந்த  நடுக்கம் கலந்த சோகம் என்னுடைய நாக்கில் வந்த குற்றச்சாட்டுக்களை அடக்கிவிட்டது. அவளுடைய துக்கம் என்னுடையதைப் போலவிருந்தது. அதன் அடியிலே மிகவும் இருண்டதான ஒரு விடயம் இருந்தது – என்னை விட்டு என் தாயாரைப் பிரித்தது தனது தாயாராயிருக்கலாமென்ற பயம்.

அவளை நோக்கி நான் எனது கையை நீட்டினேன். அதை அவள் ஆர்வத்தோடு பிடித்தபோது ஒரு சோகமான புன்னகை என் முகத்தில் வந்தது. எப்படி அவளின் பிரிவு என்னை வாட்டியது; அவளுக்கு நான் அதிகமாகத் தேவைப்பட்ட நேரத்திலே நான் எப்படி அவளைக் கைவிட்டேன்.

திரும்பவும் அவளை நான் கைவிடமாட்டேன் என்று தீர்மானித்தேன். என்னதான் நடந்திருந்தாலும் இருவரும் ஒன்றாக அதை எதிர்கொள்வோம். இதுதான் அம்மாவின் விருப்பமாக இருக்கும்.

திரும்பத்திரும்ப Zoe கதவைத் தட்டியதின் பின்னர் வெளிறிய சுருங்கிய தோலும் அமைதியில்லாத கண்களையும் கொண்ட, குறிப்பிட்டு விசேடமாகச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாத சராசரி உயரம் கொண்ட ஒரு மனிதன் கதவைத் திறந்தான். Zoe வுடன் வந்திருந்த எங்கள் எல்லோரயும் கண்ட அவன் பதட்டத்துடன் தனது இறுக்கமான தாடையில் இருந்த சாம்பல் நிறத் தாடியைத் தடவினான்.

“Zoe, உனக்கு என்ன வேணும்? இது நல்ல நேரமில்லை.” சிகரெட்டிலும் அமைதியற்ற இரவுகளிலும் வாழும் மனிதனைப்போல அவனின் குரலில் கரடுமுரடான தன்மை தெரிந்தது.

அருவருப்புடன் அவனைப் பார்த்த Zoe  தனது கால்களால் கதவை அகலமாகத் திறந்து உள்ளே போனாள்.

“நில்! என்ன செய்கிறாய்?”

அவளைத் தடுப்பதற்கு முன்னே பாய்ந்தார், ஆனால் துப்பறிவாளர் Williams விரைவாகச் செயல்பட்டார்.

“தயவுசெய்து ஒரு பக்கம் ஒதுங்கி நில்லுங்கள். நான் துப்பறிவாளர் Williams, Australian Federal Police.” தன்னுடைய அடையாள அட்டையை நீட்டினார். “நீங்கள் விலகி நிற்கவேண்டும். சட்டப்படி விடுக்கும் வேண்டுகோளுக்கு அமைய  நீங்கள் நடக்காவிடில், உங்களைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை.”

அந்த மனிதன் சுவருடன் ஒட்டியபடி நின்றான், ஆனாலும் அவனுடைய வெற்றுக்கண்கள் உள்ளே நுழைந்த எங்களைப் பின்தொடர்ந்தது.

பல வருடங்களுக்கு முன்னர் அம்மாவும் நானும் ஒரு தட்டில் சாப்பிடுவதற்காக லசான் கொண்டுபோய் அவவை முதன் முறையாகப் பார்த்தபோது இருந்த இடத்திலேயே Susan இருந்தா. எழுந்து நிற்பதற்குக் கஸ்டப்பட்டா; அப்போதிருந்த அதே மாதிரி.

ஆனால் அவவின் கண்கள் வித்தியாசமாயிருந்தது – பதட்டத்துடனான பிரகாசமாயிருந்தது. அவ Zoe வின் அருகிலே போனபோது அவவின் அசைவுகளில் ஒரு விசித்திரமான உடையக்கூடிய சக்தி தென்பட்டது.

“Zoe, Zoe, நீ திரும்பி வந்து விட்டாய்! யாரிந்த ஆட்களெல்லாம்?”

Zoe Susan இன் இடது மணிக்கட்டைத் தனது இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள். “அம்மா, உங்களுடைய காப்பு எங்கே?”

காப்பு அங்கே இல்லாததைத் தெரிந்த Zoe கோபத்துடன் கேட்டாள், “ சீதாம்மாவை என்ன செய்தாய்?”

“அது நானில்லை, Zoe! இவன்தான் அது!”. நடுக்கத்துடன் Frank ஐ நோக்கிக் கை நீட்டினா.

எல்லாக் கண்களும் Frank ஐ நோக்கித் திரும்பின. ஓடுவதற்கு முயல்வதுபோலத் தள்ளாடினான். ஆனால் கொன்ஸ்டபில் Fraser  வாசல் கதவை மறித்து ஒரு தாழ்ந்த சீரான குரலில் சொன்னார், “ தயவுசெய்து உட்காருங்கள். எங்களிடம் சில கேள்விகள் உள்ளன.”

ஓட வழியில்லாமல் ஒரு மூலையில் பிடிபட்ட மனிதன் போல சோபாவின் ஓரத்தில் Frank  உட்கார்ந்தான். தன்னைப் பிடித்த Susan இன் கையை உதறிய அவனுடைய தாடை இறுக்கமாகவும் துப்பறிவாளர் Williams ஐப் பார்த்தபோது அவனது கண்களில் எதிர்ப்பும் தென்பட்டது.

“நான் வேணுமென்றே அதைச் செய்யவில்லை!”

நான் மூச்சுத் திணறினேன். அம்மாவைக் கொலைசெய்ததை இப்போது ஒத்துக்கொண்டானா?

துப்பறிவாளர் Williams இன் பார்வை கூர்மையாகியது. “வேணுமென்றே எதைச் செய்யவில்லை, Frank?”

“பணத்தையும் மோதிரத்தையும் வேணுமென்றே நான் எடுக்கவில்லை.” அவன் முணுமுணுத்தான்.

“உண்மையாக என்ன நடந்ததென்று சொல்,” அவ கேட்டா. “நீங்கள் போயிருந்த நேரத்திலிருந்து அங்கிருந்து புறப்பட்டவரை நடந்த எல்லா விபரங்களையும். ஏன் சீதா வீட்டிற்குப் போனீர்கள்?”

“ஏனென்றால் Susan என்னைக் கூப்பிட்டா,” தன்னைத் தற்காப்பாற்றிப் பேசினான். “அவ அழுதுகொண்டிருந்தா ---- அவவுடைய நன்றியில்லாத மகள் தன்னுடைய போன் அழைப்புகளுக்கு பதில் சொல்கிறாளில்லை என்று சொன்னா. தனித்திருப்பதற்குப் பயமாயிருப்பதாயும், அதைப் போக்குவதற்குத் தனக்குச் சிறிது போதைப்பொருள் தருமாறும் கேட்டா.”

துப்பறிவாளர் Williams இன் கண்கள் சுருங்கின, ஆனால் ஒன்றும் பேசவில்லை. Frank ஆதரவு தேடி Susan  ஐப் பார்த்தான்; அவவோ ஒரு மயங்கிய நிலையில் கவனமொன்றுமின்றி அவனைக் கடந்து அப்பால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தா.

“நான் போதைச் சரக்குடன் வந்தபோது,” அவன் தொடர்ந்தான், “ Susan இடம் பணமிருக்கவில்லை. Zoe  ஒரு உணவகத்தில் வேலை செய்கிறாளென்றும் அவள் தனக்குப் பணம் கடனாகத் தருவாளென்றும் சொன்னாள். அப்போதுதான் நாங்கள் போய் Zoe வை வீட்டிற்கு வருமாறு கேட்போமென்று நான் சொன்னேன். ஆனால்  Zoe அங்கிருக்கவில்லை – அந்த வயதான பெண்மணிதான் இருந்தா. உள்ளே வரும்படி எங்களை அழைத்தா. நாங்கள் மண்டபத்தில் இருந்த மேசையைத் தாண்டி நடக்கும்போது, மேசையின் ஒரு லாச்சி திறந்திருப்பதையும் அதனுள்ளே ஒரு பச்சைத் தாளையும் பார்த்தேன்.”

நான் தடுக்க முயன்றபோதும் என்னுள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.

என்னுடைய அசைவைக் கண்ட Frank என் பக்கம் திரும்பி, “Susan எனக்குத் தரவேண்டிய பணத்துடன் பார்க்கும்போது 100 டொலேர்ஸ் போதுமானதில்லை,” தன்னைத் தற்பாதுகாத்துக்கொண்டு அவன் சொன்னான். “உன்னுடைய அம்மா தனக்காக Zoe ஐ வேலை செய்ய வைப்பதால் நியாயப்படி அந்தப் பணம் எனக்குத்தான் சொந்தம்.”

“அடுத்ததாக என்ன நடந்தது, Frank?”  துப்பறிவாளர் Williams இன் குரல் அளவோடும் நிதானத்துடனும் இருந்தது.

“அந்தப் பெண்  Susan  க்கு தேனீர் பரிமாறிவிட்டு, தான் Zoe வீட்டிற்கு வந்ததும் போனில் அழைக்கும்படி சொல்வதாகச் சொன்னார். அவர்கள் அடுப்படியில் இருந்தபோது, நான் காரில் இருப்பதாக அவர்களுக்குச் சொன்னேன்.”

வாயை விழுங்கியவாறே சிறிது அசைந்தான். “வெளியே போகும்போது அந்த லாச்சியைத் திறந்தேன். ஒரு தாளை விட அதிகமாக அங்கே இருந்தது – எல்லாவற்றையும் எடுப்பது இலகுவானது என்று நினைத்தேன். மூன்று மினுமினுக்கும் மோதிரங்களைக் கண்டபோது…….” சிறிது நிற்பாட்டினான். “அவற்றையும் எடுத்தேன். அதன்பிறகு அவ உடனே கவனிக்கக் கூடாதென்பதற்காக லாச்சியை இறுக மூடினேன்.”

“உடனடியாக அங்கிருந்து போகத்தான் நினைத்தேன்,” தொடர்ந்து சொன்னான் “ ஆனால் Susan க்காக நான் காத்திருக்க வேண்டியிருந்தது. அவளை அவசரப்படுத்த ஹாரனை சத்தமாக அடித்தேன். அவள் வெளியே வந்தாள், ஆனால் அந்தப்பெண் அவவிற்கு விடைகொடுத்து வாசல் கதவைச் சாத்தியபின்னும்  Susan வெளிக்கதவோரம் நிண்டு மினைக்கெட்டாள்.”

“அந்த அழகான பூவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்,” ஏதோ ஞாபகம் வந்ததுமாதிரி Susan முணுமுணுத்தா. “அது உயிருள்ளதாயும் பெரிதாகவும் இருந்தபடியால் அதைத் தொட்டுப்பார்த்தேன் ----- அது பறந்து போய்விடுமோ என்று பார்க்க விரும்பினேன்.”

அப்போதுதான் அவவுடைய காப்பு நழுவி விழுந்திருக்கவேண்டும், என்று நான் நினைத்தேன்.

துப்பறிவாளர் Williams இன் முகத்தைப் பார்த்தேன், இவன் சொல்வதை அவ நம்புகிறாவா என்பதை அறிவதற்காக

“அப்போது என்ன நேரம்?” அவ கேட்டா.

“நாங்கள் வீட்டிற்கு வந்தபோது கிட்டத்தட்ட 11:45. ஆகவே ---- 11:30 ஆக இருக்கும்.”

“நீ என்ன சொல்கிறாய் என்றால் நீ புறப்பட்டபோது சீதா உயிருடன் இருந்திருக்கிறா,” அவ இறுக்கமாகக் கேட்டா.

ஒரு எதிர்ப்புணர்வுடனிருந்த Frank இன் முகம் உண்மை விளங்கியவுடன் பயத்தினால் மாறியது. “அவ இறந்து விட்டாவா? எப்போது? எப்படி? நாங்கள் விலகியபோது நன்றாகத்தான் இருந்தா. அவவிற்கு மாரடைப்பா அல்லது வேறு ஏதாவதா?”

என்ன பேசுகிறார்கள் என்பது விளங்குவதற்கே Susan ற்கு சிறிது நேரம் எடுத்தது?. விளங்கியபோது முன்னுக்குப் பாய்ந்து Zoe இன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டா. “Zoe, என்ன நடந்தது? உன்னுடைய சீதாம்மாவிற்கு என்ன நடந்தது?”

நான் Frank ஐயும் Zoe வையும் மாறிமாறிப் பார்த்தேன். அவர்களுடைய அதிர்ச்சி உண்மையானதாகத் தெரிந்தது. உண்மையிலேயே இவர்கள் குற்றமற்றவர்களா?

இறுதியில் துப்பறிவாளர் Williams கேட்டார், “உங்களுடைய கதைக்குச் சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா?”

நடப்பதைத் துல்லியமாக எழுதிக் கொண்டிருந்த கொன்ஸ்டபில் Fraser  ஐப் பார்த்துத் தலையாட்டினா.

Frank, Susan  இருவரிடமிருந்தும் ஒரு பதிலும் வராதபடியால் அவ தொடர்ந்தா, “ நீங்கள் இருவரும் நேற்று 2:30 இலிருந்து 5:30 வரை எங்கிருந்தீர்கள்?”   

“நாங்கள் ---- நாங்கள் வீட்டிற்கு வந்தோம்,” Frank தடுமாறினான். “ Susan ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது நான் – நான் மோதிரங்களை விற்பதற்காகப் போனேன். நான் Dandenong க்குப் போனேன் --- அங்குதான் தங்கத்திற்கு நல்ல விலை கிடைக்குமென்று கேள்விப்பட்டேன்.”

“கடையின் பெயர் என்ன?”

“எனக்கு ஞாபகமில்லை,” கழுத்தைத் தடவிக்கொண்டே முணுமுணுத்தான். “நகர்ப்புறத்தில் உள்ள சில கடைகளுக்குப் போய் யார் நல்ல விலை தருவார்கள் என்று தேடினேன்----- சற்றுப் பொறுங்கள்!” ஒரு கசங்கின பற்றுச்சீட்டை எடுத்தான். “பற்றுச்சீட்டு என்னிடம் உள்ளது.”

கொன்ஸ்டபில் Fraser  அதை வாங்கிப் பார்த்துவிட்டு, தலையாட்டியபடி  துப்பறிவாளர் Williams இடம் கொடுத்தார்.

“இதை நாங்கள் வைத்திருப்போம்,” அவ சொன்னா. “உங்களுடன் திரும்பவும் பேசவேண்டிவரும். நாங்கள் கூப்பிடும்போது வரத் தயாராயிருக்கவேண்டும். எங்களுடைய விசாரணைகள் முடியும்வரை ஊரைவிட்டு நீங்கள் இருவரும் போகமுடியாது.”

சிறிது நிறுத்தியபின், “அங்கு ஏதாவது அசாதரணமாக இருந்ததைக் கவனித்தீர்கள்?”

மிகவும் மென்மையாக Susan சொன்னா, “அவ மிகுந்த கருணை மனத்துடன் இருந்தா-----Zoe  வை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்களேயென்று நான் சத்தம் போட்டபோதும் அவ தனது குரலை உயர்த்தவேயில்லை. அவ சொன்னா, “தாய்மாரும் மகள்மாரும் ஒருவருக்கொருவர் கோபமாகவே இருக்கக்கூடாது. மற்றைய நபர் எந்த விதமான உணர்ச்சிகளுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.””

அரைவாசி அழுகையும் அரைவாசி மூச்சும் கலந்த ஒரு சத்தம் என்னிலிருந்து வந்து என்னை நாராகக் கிழித்தது. Susan என்னை நோக்கித் திரும்பினா  -- அவவின் ஒருமுகப்படுத்தப்படாத பார்வையை அவவின் கண்ணீர் மங்கலாக்கியது.

“என்னை மன்னித்துவிடு,” அவ முணுமுணுத்தா. “உன்னுடைய அம்மா மிகவும் விஷேசமானவ. நான் செய்திருக்கவேண்டும் --- ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது.”

தனது தலையைப் பலமாக ஆட்டிவிட்டு துப்பறிவாளர் Williams ஐப் பார்த்துச் சொன்னா, “Zoe  எத்தனை மணிக்கு வருவா எனக்கேட்டபோது, அவ சொன்னா , “அவ ஐந்து மணியளவில் வருவா, Susan.  ஆனால் நீ திரும்பி இங்கே வருவதற்கு இந்த நாள் சரியில்லை. என்னுடைய தனிப்பட்ட விடயம் கதைப்பதற்கு  ஒருவர் வருகிறார். Zoe  வேலையால் வந்தவுடன் உன்னை வந்து பார்க்குமாறு சொல்கிறேன்.””

மேலும் துருவிக் கேட்டபோதிலும் Susan  இடமிருந்து வேறொன்றும் கிடைக்கவில்லை.

“உங்களில் யாருக்காவது வேறு ஏதேனும் ஞாபகத்திற்கு வந்தால், என்னை அழைக்கவும்.” சொல்லியபடி துப்பறிவாளர் Williams தனது விபரங்களுடைய அட்டையை Susan இடம் கொடுத்தார்.

நாங்கள் வெளியே போகும்போது  Frank  ஆறுதலுடன் ஒரு பெருமூச்சு விட்டான். “நான் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவேன் – சத்தியமாய்ச் சொல்கிறேன். ஆனால் ----- தயவுசெய்து என்னை மறுபடியும் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடாதீர்கள்.”

என்பக்கம் திரும்பிய Zoe வின் குரல் உடைந்திருந்தது. “அருவி! நான் எப்படியும் சீதாம்மாவின் மோதிரங்களைத் திரும்ப எடுப்பேன். செய்வேனென்று சத்தியம் செய்கிறேன்.”

“அந்த மோதிரங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை, Zoe,” அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு மெதுவாகச் சொன்னேன். “எனக்குத் தெரியவேணும்……”

இதற்குமேல் ஒன்றும் பேசாமல் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாகக் கார்களை நோக்கி நடந்தோம்.

துப்பறிவாளர் Williams இன் முகத்திலே சிந்தனைகள் நிரம்பிய சுழிப்புகள் இருந்தன; ஆனாலும் Zoe  வைப் பார்த்து அவ சொன்ன வார்த்தைகளில் உறுதி இருந்தது.      

“Frank  இனுடைய கதையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் அந்தக் கடைக்காரரிடம் விசாரிப்போம். CCTV கமேராக்களைப் பார்ப்பதன் மூலம் Frank Dandenong இல் இருந்தாரா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தலாம். உண்மையென்று உறுதியானால் அவர்தான் கொலைகாரராக இருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு. உன்னுடைய தாயாரைப் பொறுத்தவரை, Zoe – இந்தப் பகுதியில் உள்ள CCTV கமேராக்களைப் பாவித்து அவ போய் வந்த இடங்களை அறிந்து கொள்வோம் ---- எதற்கும் தயாராயிருப்பதற்காக.”

அவ என்னைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளிலும் உறுதி இருந்தது. “அருவி, நாலகவிடமும் மோகனிடமும் கேட்பதற்கு உன்னிடன் நிரம்பக் கேள்விகள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் இன்றிரவு உனது வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளேன். நாங்கள் ஏற்கனவே அவர்கள் இருவரையும் விசாரித்துவிட்டோம், ஆனாலும் இருவரும் உன்னைப் பார்க்க விருப்பப்படுகிறார்கள். உனது அம்மாவிற்கு நெருக்கமானவர்கள் என்பதால் உன்னை நேரில் பார்த்து  தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகிறார்கள்.

கொன்ஸ்டபில் Fraser அவவைப் பார்த்து ஏதோ பார்வையால் பகிர்ந்து கொண்டார். துப்பறிவாளர் Williams அவரைப் பார்த்துச் சொன்னார், “இது ஒரு வழக்கத்திற்கு மாறான கொலைச்சம்பவம், Fraser. நாங்கள் வழக்கமான பாதையை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றினால், விசாரணை தாமதப்பட்டுவிடும்.”

அவ சொன்னதில் அதிகமானவை எனக்குக் கேட்கவில்லை. ஒரு பெயர் மற்ற எல்லா சத்தங்களையும் அடக்கிவிட்டது. ஏதோ ஒரு எச்சரிக்கைப் பறை மாதிரி அந்தப் பெயர் எனது மண்டையோட்டை இடித்துக்கொண்டிருந்தது: நாலக.     

 

 

அத்தியாயம் 24 – நான் உங்கள் மகளில்லை

அருவி  

26 ஜுலை 2025

மெல்பேர்ண்

 

Zoe அந்தக் காப்பைப்பற்றிய உண்மையைச் சொன்னபிறகு Susan தான் கொலைக்குக் காரணமென்று நினைத்தபடியால் நாலகவை மறந்திருந்தேன். ஆனால் இப்போது, அவருடைய பெயரைக் கேட்டதுமே என் இரத்தம் கொதித்தது. எனக்குள் ஏற்பட்ட பதட்டத்தை Brad புரிந்திருக்கவேணும்; என்னை  அமைதியாகச் சாந்தப்படுத்துவதற்காக எனது தோளில் கைபோட்டார்.

“அருவி, அவர் உன்னுடைய அம்மாவைக் கொன்றிருப்பாரென்பதற்கு ஒருவித அடையாளமுமில்லை,” மிகவும் மென்மையாகச் சொன்னார். “எப்படியும் நீ அவரைச் சந்தித்தே ஆகவேணும். ஏன் இன்று சந்திக்கக்கூடாது?”

Zoe  எனது பக்கம் திரும்பிச் சொன்ன வார்த்தைகளும் சிறிது சாந்தமாயிருந்தது.

“அருவி, இது உனக்குக் கேட்பதற்குக் கஸ்டமாயிருக்கும், ஆனால் --- நாலக அம்மாவின் நலனை உண்மையாகவே விரும்பினார். நான் அவரை இரண்டு முறைகள்தான் சந்தித்துள்ளேன்—ஆனால் அப்போது அவர்தான் உனது---- தந்தையென்று ---- தெரியாது. அவர் சீதாம்மாவைப் பார்த்த விதம்….. அவருடைய கண்களில் அந்தளவு கண்ணியம் இருந்தது. அவருடன் கதைப்பதில் தனக்குச் சந்தோஷமென்று சீதாம்மா சொன்னா. மனிதர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமென்பதில் அவ நம்பிக்கை கொண்டிருந்தா என்பது உனக்குத் தெரியும். உன்னாலை ----- அவருக்கு ஒரு சந்தர்ப்பம்  கொடுக்கமுடியுமா?”

உண்மைதான், அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டியது நான் அம்மாவிற்குச் செய்யவேண்டிய கடமை. இதுதான் நாற்பத்தி எட்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் நான் அவவை விட்டு ஓடியபோது அவ என்னைக் கெஞ்சிக் கேட்டது.

அம்மா, இதை உங்களுக்காகச் செய்கிறேன், அவருக்காக இல்லை, எனக்கு நானே சொல்லிக்கொண்டு அவர்களை நோக்கித் தலையாட்டினேன்.

மகா பெரியம்மா, சிவா பெரியப்பா, ஆனந்த் ஆகியோர் அன்றிரவு முதலில் வந்தனர். தேவைக்கு அதிகமான அளவில் சாப்பாடு கொண்டுவந்தார்கள். Zoe  வும் Brad உம் மேசையை ஒழுங்குபடுத்திவிட்டு கேத்தலில் தண்ணீரைக் கொதிக்கவைத்தனர்.

சுபா பெரியம்மாவும் தேவா பெரியப்பாவும் குரு, அஸ்வின் ஆகியோருடன் வந்தனர்.

“நான் முத்துவிற்குச் சொன்னேன்,” சுபா பெரியம்மா சோகத்துடன் சொன்னா. “ அவள் உடைந்துபோனாள். உடனடியாக வருவதாகச் சொல்கிறாள்.”

சில நாட்களுக்கு முன்னர்தான் முத்துச்சித்தியுடன் நான் கழித்த இன்பகரமான நாட்கள் ஒரு தொலைதூரக்கனவு போலிருந்தது.

“நான் குணா அண்ணாவிற்கும் சொன்னேன்,” சுபா பெரியம்மா சொல்லும்போது அவவின் குரல் உடைந்துபோய்விட்டது. “சீதாவிற்கு யாராவது கெடுதல் செய்வார்களென்று அவரால் நம்பமுடியவில்லை. அவவின் சக வேலையாட்களுக்கு தான் தெரியப்படுத்துவதாகச் சொன்னார்.”

அப்போதுதான் ஜெயா பெரியம்மா சோர்வுடனும் சிவந்த கண்களுடனும் உள்ளே நுழைந்தா. கசங்கிய உடையுடனும் வாரப்படாத தலைமுடியுடனும் காணப்பட்ட அவவிடம் வழக்கமாகத் தென்படும் கம்பீரம் இருக்கவில்லை.

“ஓ, ஜெயா,” மகா பெரியம்மா அழுதுகொண்டே ஓடிப்போய், “நீ தனியாக இருந்திருக்கிறாய். எங்களுடன் உன்னைக் கூட்டிச் சென்றிருக்கவேண்டும்!”

ஜெயா பெரியம்மா பலமாக விம்மி விம்மி அழுதுகொண்டு முடங்கிப் போனா. அவவை நாங்கள் சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தபோது நாலகவுடனும் மோகனுடனும் துப்பறிவாளர் Williams உள்ளே வந்தார். நாலகவின் கண்களைப் பார்க்க நான் மறுத்தேன், ஆனாலும் அவருடைய வருத்தம் என்னை நோக்கி இருப்பதையும் சொல்லமுடியாமல் கனமான ஆயிரம் இரங்கல்கள் இருப்பதையும் என்னால் உணரமுடிந்தது. மோகனுக்கு அப்படியான ஒரு தடையும் இருக்கவில்லை; பாய்ந்துவந்து என்னை இறுக அணைத்துக்கொண்டார்.

“அருவி, உன்னுடைய இழப்பிற்கு ----- எங்களுடைய இழப்பிற்கு நான் மனதார வருந்துகிறேன்,” மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். “சீதா – என்னுடைய அழகான மச்சாள். அவ போய்விட்டாவென என்னால் நம்பமுடியாமலுள்ளது.”

நான் அவரைக் கேட்க விரும்பினேன் – அம்மா கொல்லப்பட்ட நாளிலே மெல்பேர்ணில் அம்மாவின் வீட்டில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஆனால் நாலகவைக் கண்ட அந்தத் தருணத்தில் என்னுடைய கோபமெல்லாம் அவர் மேலேயே இருந்தபடியால் மற்றவர்களின் முக்கியத்துவம் மங்கலாகவே தெரிந்தது.  

துப்பறிவாளர் Williams என்னைப் பார்த்துவிட்டு மேசையில் இருந்த மற்றவர்களையும் பார்த்து, தன்னை மன்னிக்குமாறு கேட்டார்.

“என்னை மன்னியுங்கள் ---- இதுவரை சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள். நாங்கள் உரையாடுவதற்கு நிரம்ப விடயங்கள் உண்டு.”

ஒரு சிறு தாமதத்திற்குப் பின்னர் எங்களுடைய அழைப்பை ஏற்று அவ மேசையில் எங்களுடன் இருந்தா. மோகன் ஏற்கனவே ஒரு நாற்காலியில் இருந்து, தனக்கு உரிமையுள்ள இடமென்றமுறையில் தனக்காக ஒரு கோப்பையையும் எடுத்தார்.

நாலகவைப் பொறுத்தவரையில் தான் நின்ற இடத்திலேயே நின்று , ஒரு மூலையில் அரைவாசி மறைந்துநின்று, தரையைப் பார்த்துக்கொண்டு, தன்னை முற்றாக மறைப்பதற்கு முயலுவது மாதிரித் தனது தோள்களைச் சுருக்கிக்கொண்டு நின்றார். 

 என்னுடைய பெரியம்மாக்கள் ஒருவரையொருவர் கூர்மையாக, சத்தமில்லாமல் வெறுப்பைக் காட்டியபடி பார்த்துக்கொண்டனர் – ஆனால் தங்கள் நாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தங்கள் சகோதரி மேல் வைத்திருந்த அன்பு,  துப்பறிவாளர் Williams மேல் இருந்த மதிப்பு ஆகியவை அவர்களைப் பேசவிடாமல் தடுத்தது. ஆனால் அவர்களின் கண்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது: அவர்களால் கட்டுப்படுத்தமுடியாத கனல் விட்டெரியும் கோபம்.

Brad அடுப்படியில் இருந்து வெளியே வந்தபோது நாலக ஒரு மூலையில் சங்கடத்துடன் நிற்பதைப்பார்த்து அவரை நோக்கி ஒரு நட்பார்ந்தவிதமாகத் தலையாட்டினார். ஆனால் அவர் பேசுவதற்கு முன்னர் சிவா பெரியப்பாவின் அமைதியான, எதிர்பார்க்காத குரல் அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைத்தது.

“ஹலோ! நான் சீதாவின் அக்கா கணவன், சிவா. நீங்கள் குடும்பத்தின் மற்றவர்களை Villas iல் சந்தித்தபோது நான் இருக்கவில்லை,” அவர் சொன்னார் ஒரு சோகமான புன்னகையுடன். “நாலக, எங்களுடன் சாப்பிடுங்கள்.” 

என்னுடைய வாழ்நாளிலே இந்தமாதிரியாகக் கண்ணீருடன் பாழாய்ப்போன சாப்பாட்டைச் சாப்பிட்டது கிடையாது – ஏனென்றால் அம்மா இப்போது இங்கில்லை.

என்னுடைய அழகான அம்மா, குடும்பத்தை ஒன்றாகச் சேர்ப்பதில் இன்பம் கண்ட என் அம்மா, இனி ஒருபோதும் எங்களுடன் இருந்து சாப்பிடப் போவதில்லை.

இறுதியாக, துப்பறிவாளர் Williams நாலகவினதும் மோகனதும் கதைகளைக் கேட்க நாங்கள் தயாராவெனக் கேட்டபோது, சாப்பிடுவது மாதிரி நடிப்பதை நிறுத்தலாமென்ற திருப்தியில் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டோம்.

“அருவி,” மென்மையாக அவ சொன்னா, “உன்னை உன் குடும்பத்துடன் பார்க்கும்போது எனக்கு என் குடும்பம் ஞாபகத்திற்கு வருகிறது. எங்களுடைய கலாச்சாரத்திலும், உறவுகள்தான் எல்லாமே. நீ அதிர்ஸ்டக்காரி.”

“ஆனால் எனக்குத்தான் தந்தை இல்லையே!” நான் சீறினேன்.

நான் யாரை நோக்கி இந்த விஷத்தை வீசினேன் எனபது அறையிலிருந்த அனைவருக்கும், முக்கியமாக நாலகவிற்கும் ஒருவிதச் சந்தேகமுமில்லாமல் விளங்கியிருக்கும்.

அவர் என்னை நோக்கி மெதுவாகத் திரும்பினார். அவருடைய கண்கள் மந்தமாயிருந்தது, உயிரில்லாதிருந்தது – இனிமேலும் உயிர்வாழ விரும்பாத ஒருவர் மிகவும் அதிகளவு வலியைத் தன்னுள்ளே தாங்கிக்கொண்டிருந்தார்.

“இதற்கு மன்னிப்பே கிடையாது, அருவி,” சொல்லிய அவர் குரல் தழுதழுத்தது. “உனக்கு முன்னால் இருப்பதற்கு எனக்குத் தகுதி கிடையாது. சீதாவிற்கு எதிரான என்னுடைய கொடூரம்……” அவர் தடுமாறினார். அதைச் சமாளித்திக்கொண்டு, “செத்தது நானாகத்தான் இருக்கவேண்டும் – அப்பாவியான, ஒன்றுமறியாத சீதா இல்லை. என்னுடைய உயிரைக் கொடுத்து அவவின் உயிரைக் கொண்டுவர முடியுமானால்!”

அவருடைய நாடகத்தின் உள்ளே என்ன இருக்கிறதென்று என்னால் கண்டுபிடிக்க முடியாதென்று நினைத்தாரா?

“என்னுடைய அம்மா கொலை செய்யப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?”

அவர் தனது தலையை உயர்த்தினார், “என்னுடைய வீட்டில், எனது குழந்தை ------”

“இனிமேல் என்னை ஒரு காலமும் அப்படிக் கூப்பிடக்கூடாது,” நான் வெடித்தேன். “நான் உங்கள் குழந்தையில்லை – அப்படி இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப் போவதில்லை!”

அவருடைய உதடுகள் துடித்தன, “என்னை மன்னித்துவிடு.”

துப்பறிவாளர் Williams என்னை அனுதாபத்துடன் பார்த்துவிட்டு விசாரணையை தன் கையில் எடுத்துக்கொண்டார்.

“நீங்களும் சீதாவும் அடிக்கடி சந்திப்பதாக நான் அறிகிறேன். நேற்று நீங்கள் சந்திப்பதற்குத் திட்டம் போட்டிருந்தீர்களா?, திரு அபேய்கோன் ---- உங்களை நான் நாலக என்று கூப்பிடலாமா?”

அவர் தலையசைத்துவிட்டு மெதுவாகச் சொன்னார். “எனக்கு விருப்பமாயிருந்தது. ஆனால் வியாழன் இரவு கோபமாக அருவி போனபின்பு, அவ எங்களுடைய நட்பை ஏற்றுக்கொள்ளும்வரை தன்னால் என்னைப் பார்க்கமுடியாதென்று கூறிவிட்டா. எல்லாவற்றையும் பற்றி தான் விளங்கப்படுத்தவேண்டும் என்று சொன்னா – யுத்தத்தைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, பல வருடங்களுக்கு முன்னர் நடந்த கோரமான நிகழ்வுகள்பற்றி.”

அவர் சற்றுத் தயங்கினார். தொடர்வதற்கு முன்னர், சத்தமில்லாமல் தான் மன்னிப்புக் கேட்பதை நான் புரிந்துள்ளேனா என்று என் முகத்தை ஆராய்ந்தார்.

“உண்மைகளைப் புரிந்தபின்னர் அருவி அமைதி அடைவாளென்று சீதா சொன்னார். பொறுமையாகக் காத்திருக்குமாறு மன்றாடினா. எல்லாம் நல்லபடியாக நடந்தால் நாங்கள் விரைவிலே சந்திக்கலாம், எங்களுக்குள் ஒருவித இரகசியமும் இல்லாமல் வேளிப்படையாகக் கதைக்கலாம் என்று சொன்னா. நான் முழுநாளும் காத்திருந்தேன்--- ஆனால் அவ வரவில்லை. அதற்குப்பதிலாக நீங்கள்தான் அந்தச் செய்தியுடன் வந்தீர்கள்----”

அவருடைய குரல் உடைந்தது, உடம்பைக் கிழித்துக்கொண்டு ஒரு நடுக்கம் வந்தது. அதைத் தொடர்ந்து ஒருவிதத் தடுப்புமின்றி, நடுங்குகின்ற கைகளால் தடுக்கப்பார்த்தும் அதையும் மீறி பச்சையாக அழுகை வெளிவந்தது.

“என்னை மன்னியுங்கள். அழுவதற்கே நான் தகுதியில்லாதவன் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போதுதான் அவவைக் கண்டுபிடித்தேன் – என்னுடைய அழகான சீதா, கருணையுள்ளம் கொண்ட மன்னிக்கும் சுபாவமுள்ள சீதா. எனக்குத் தெரியும், நான் தகுதியானவன் இல்லை; ஆனால் எங்கள் நட்பு மிக விசேடமானது. உயிரோடிருப்பவர்களில் நான்தான் மிகுந்த அதிர்ஸ்டசாலி என்று நினைத்தேன்…… இப்போது அவவை நிரந்தரமாக தொலைத்துவிட்டேன்.”

அவர்மேல் பரிதாபப்பட எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் அவருடைய உடம்பைச் சிதைக்கும் அந்த இயற்கையான துயரத்தை ஒதுக்கிவைக்க முடியாது.

பலவிதமான எண்ணங்கள் என் மனதிலே சுழன்றாடின.

உண்மையிலேயே அவர் மாறியிருந்தால்?

அம்மாவிடம் மன்னிப்புக் கேட்பதற்கு மாத்திரமே விரும்பியிருந்தால்?

அம்மாவைக் கொலைசெய்வதனால் என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

அவவை முற்றாக அழிப்பதற்கு ஏன் கஸ்டப்பட்டு அவவின் இடத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்?

ஒருவேளை, இவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் அம்மாவிடம் மன்னிப்புக்கேட்க வந்திருக்கலாம்.

 ஒரு வினாடி நேரம் நான் அதைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன் --- எனக்குள்ளே எட்டிப்பார்த்த இரக்கம் துப்பறிவாளர் Williams இன் கண்களிலும் பிரதிபலித்தது. அது உண்மையா என்று நான் உறுதிப்படுத்தமுன்னரே அது மறைந்துவிட்டது. அவ தன்னை உதாசரித்திக்கொண்டு, தன்னுடைய வேலையிலே உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்கிறமாதிரி குரலிலே இறுக்கமாயிருந்தா.

“நன்றி, நாலக,“ இறுதியில் சொன்னா. “நீங்கள் வசிக்கும் Apartment Complex  இலுள்ள CCTV படங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீங்கள் வேறு ஏதேனும் எங்களுக்குச் சொல்லவிரும்பினால், இதுதான் சரியான நேரம்.”

ஒன்றும் சொல்லாமல் நாலக தலையை ஆட்டினார். CCTV இருக்கிறதோ அல்லது இல்லையோ அவருடைய கதை ஒன்றுதான்.

துப்பறிவாளர் Williams சிறிதுநேரம் யோசனையில் இருந்துவிட்டு மோகன் பக்கம் திரும்பினார்,

“மோகன்,” அவ ஆரம்பித்தா, “நாங்கள் ஏற்கனவே பேசியுள்ளோம் என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் குடும்பம் உங்களைச் சில கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள். தயவுசெய்து விளங்கப்படுத்துங்கள் – ஏன் இரண்டு நாட்களுக்காக மெல்பேர்ணுக்கு பறந்து வந்துள்ளீர்கள், நேற்று சீதாவின் வீட்டிற்கு எதற்காகப் போனீர்கள்?”

அவருடைய அந்தத் துடிப்பான வசீகரம் அப்படியே இருந்தது, ஆனால் என்னையும் எனது பெரியம்மாக்களையும் பார்த்தபோது அவரின் கண்கள் சுருங்கின.

“நான் இங்கே வந்திருப்பதை உங்களுக்குச் சொல்ல விரும்பினேன், “ மனமார்ந்த ஆர்வத்தோடு அவர்கள் பக்கம் திரும்பிச் சொன்னார், “மே மாதம் உங்களைச் சந்தித்தபோது நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இம்முறை ஒரு குறுகிய பயணம்தான் – ஒரு வணிகப்பயணம்.”

“உங்களுக்கு மெல்பேர்ணில் வணிகத்தொடர்புகள் இருப்பது எனக்குத் தெரியாது,” தேவா பெரியப்பா மரியாதையுடன் சொன்னபோதும் அவரின் தொனியிலே ஒரு சந்தேகம் இருந்தது. “உங்களுடைய தொழில் கூட்டாளிகள் எல்லோரும் சிட்னியில் இருப்பதாக நான் நினைத்தேன்,”

“உண்மைதான், என்னுடைய தற்போதைய தொழில் சிட்னியில்தான்,” மொகன் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்.

“ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் நான் மெல்பேர்ண் வந்தபோது இந்த இடத்தில் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. என்னுடைய அழகான மச்சாள்கள் இந்த ஊரிலே இருப்பதால், இங்குள்ள வணிகச் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய விரும்பினேன் – இதன்மூலம் அடிக்கடி இங்கே வரலாமென்று.”

“என்ன மாதிரியான வணிகம்?” எங்கள் எல்லோர் மனதிலும் ஊசலாடிக் கொண்டிருந்த கேள்வியை தேவா பெரியப்பா அழுத்திக் கேட்டார்.

“நான் ஒரு தென்னந்தோட்ட எஸ்டேற் வைத்துள்ளேன்,” மோகன் விளங்கப்படுத்தினார். “தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் கள்ளு உள்ளூரில் மிகவும் பிரபல்யம். அதை இங்கே மெல்பேர்ணில் சந்தைப்படுத்தலாமாவென்று பார்க்கிறேன்.”

துப்பறிவாளர் Williams ஆமோதித்தார்.

“திரு மகாலிங்கம் வியாழக்கிழமையன்று அதிகமான நேரம் நோபில் பார்க்கில் உள்ள ஒரு வைன் கடைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார் என்பதை எங்களால் உறுதிப்படுத்தமுடியும்.”

“அப்படியென்றால் இங்கு வந்ததை ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை?” ஜெயா பெரியம்மாவின் குரல் கூர்மையாக இருந்தது; அவவுடைய குற்றச்சாட்டு அவ்வளவாக மூடி மறைக்கப்படவில்லை. “உங்களைப் பார்க்க ரொம்பவும் விரும்பியிருப்போம். உங்களைச் சந்திப்பதாக சீதா ஒருக்காலும் சொல்லவில்லை.”

அவவின் குரலின் தோரணையினால் மோகன் சிறிதளவு சங்கடப்பட்டாலும் உடனே சுதாகரித்துக்கொண்டார்.

“எனக்கு நேரமிருக்குமோவென நிச்சயமாகத் தெரியாது,” மோகன் மென்மையாகச் சொன்னார். “வியாழக்கிழமைச் சந்திப்பு திருப்திகரமாகப் போயிருந்தால் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்திருக்கும், உங்களைப் பார்க்க நேரம் இருந்திருக்காது. அந்த ஒப்பந்தம் சரிவருமென திடமாக நம்பினேன்----- அப்படியென்றால் அடிக்கடி இங்கு வரவேண்டியதாயிருக்கும், உங்களோடும் அதிக நேரம் செலவழித்திருக்கலாம். ஆனால்------ அப்படி இல்லாமல் போயிற்று.”

அவர் வருத்தத்துடன் சிரித்தார்.

“இறக்குமதி மற்றும் மதுபான உரிமம் எடுப்பதற்கு அதிக காலம் எடுக்குமாம். அத்தோடு இங்கேயுள்ள சுகாதார மற்றும்  பாதுகாப்பு விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவை. முயற்சி செய்வதில் அவ்வளவு பிரயோசனமில்லை.”

“ஆனால் நிச்சயமாக வருவதற்கு முதலே உனக்குத் தெரியும்தானே?” தேவா பெரியப்பாவின் குரல் நம்பமுடியாதிருந்தது.    

சரியாக ஆராயாமல் எவராவது கடல் கடந்து பறந்து வந்திருப்பார்களா என்பது அவரைக் குழப்பியது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. மோகனின் உற்சாகமும் திடீரென முடிவெடுக்கும் இயல்பும் எப்பொழுதுமே பொது அறிவுடன் மோதும். தனது விருப்பத்திற்கு ஏற்றமுறையில் அவர் நடப்பது இதுதான் முதன்முறையல்ல – நிச்சயமாகக் கடைசி முறையும் இல்லை.    

“என்னுடைய அதிர்ஸ்டத்தைச் சோதிக்க விரும்பினேன்,” அவர் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார். மூச்சை நன்றாக இழுத்து சிறிது தாமதித்தார். “ஆனால் இந்த பிரபஞ்சம் என்னை இங்கே மெல்பேர்ணுக்குக் கொண்டு வந்ததில் ஏதோ அர்த்தம் இருக்க வேண்டுமெனப் புரிந்துகொண்டேன். ஒருவேளை சீதா வீட்டை விற்பதுபற்றிய தனது முடிவை மாற்றியிருக்கக்கூடும். நான் ஏற்கனவே இங்கேயிருப்பதால் அவவைப் போய்ப் பார்ப்பதால் ஒரு கேடுமில்லை என நினைத்தேன்.”

“நீங்கள் வருவது அவவிற்குத் தெரியுமா?”

“இல்லை. அவ எங்கே வசித்தா என்பது எனக்குத் தெரியும், ஆகவே ஒரு டாக்சியில் போனேன். என்னைக் கண்டதும் ஆச்சரியப்பட்டு அங்கே என்ன செய்கிறேன்று கேட்டா. அன்றிரவு பயணப்படமுன்பு அவவைப் பார்க்க விரும்பினேன் என்று நான் கூறியதற்குத் தனது தலையை ஆட்டிக்கொண்டு வழக்கமாக இந்த நேரத்தில் தான் வேலையில் இருப்பதாயும், அப்படியிருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்றும் கேட்டா.

நான் அந்தமாதிரி யோசித்துப் பார்க்கவில்லை, ஆனாலும் சிரித்துக்கொண்டே சொன்னேன் ,”ஆனால் இப்போது நீங்கள் வேலையிலில்லை, சரிதானே? வாசல்கதவோடு என்னை நிற்கவைக்கப் போறீங்களா, மச்சாள்?”

“மன்னிக்கவும், மோகன். என்னுடைய மனதிலே இன்றைக்கு நிரம்ப விடயங்கள் உள்ளன. நீங்கள் ஏன் போய் மகாவைப் பார்க்கக்கூடாது? உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷப்படுவா – சுபாவும் ஜெயாவும் கூட அப்படித்தான்.””

என்னுடைய பெரியம்மாக்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்களுக்குத் தெரிந்தவரையில் இது சீதாவின் குணமில்லை. எனது அம்மா ஒருவரையும் வாசலில் வைத்து திருப்பி அனுப்பமாட்டா.

“இது மிகவும் அவசரமானதென்று சொன்னேன் – அவ மாத்திரம்தான் எனக்கு உதவமுடியும். தயங்கியவாறே அவ என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போகும்போது சொன்னா, ”மோகன். வீட்டைப்பற்றிக் கதைப்பதற்கு வரவில்லை என்று நினைக்கிறேன். நான் அதை விற்கப்போவதில்லை என்று ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியுள்ளேன்.” 

“தயவுசெய்து, சீதா,” நான் கெஞ்சினேன். “என்னுடைய எல்லா விதமான முயற்சிகளும் தோற்றுப்போயின. இதுதான் எனது கடைசிச் சந்தர்ப்பம் – அங்கேதான் பாட்டா தனது செல்வத்தைத் தேடினார்; எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னாலும் அப்படிச் செய்யமுடியும். என்னுடைய நண்பன் Heng சொல்கிறான் அங்கே ஒரு உல்லாச விடுதி கட்ட தான் உதவுவதாக – அது கடற்கரைக்கு அருகாமையிலுள்ளது. அத்துடன் இப்போது யாழ்ப்பாணம் பிரசித்தி பெற்றுக்கொண்டு வருகிறது ------””

அவர் சிறிது நிற்பாட்டினார், எங்கள் எல்லோரையும் ஒவ்வொருவராகப் பார்த்தபின்னர் தொடர்ந்தார்.

“ஆனால் அவ என்னை முடிக்கவிடவில்லை. அவ தன்னுடைய கைகளை உயர்த்திச் சொன்னா, “மோகன், இப்போது நீங்கள் இங்கிருந்து போகவேண்டும். வீட்டைப்பற்றிக் கதைப்பதற்கு இப்போது எனக்கு நேரமில்லை.””

துப்பறிவாளர் Williams இடைமறித்தார்.

“எவருடைய பெயரையும் குறிப்பிட்டாவா  - ஒருவேளை, நாலக?”

வாயைத் திறக்காமலே மோகன் இறுக்கமாகத் தலையாட்டினார்.

“அப்போதுதான் நீங்கள் அவவுடன் விவாதத்தில் ஈடுபட்டீர்களா, மோகன்?”

“இல்லை, அப்படியெல்லாம் இல்லை,” உடனடியாக அவர் சொன்னார். “அந்த வீடு எனது பாட்டனாரால் கட்டப்பட்டது. அவவிற்கு உள்ள உரிமை எனக்கும் இருக்கிறது. சீதா நியாயமற்றவளாக இருந்தா, அவவிற்குப் புரிய வைப்பதற்கு முயற்சிசெய்தேன். நல்லதொரு வணிகச் சந்தர்ப்பம் இருக்கிறது; அவ விளங்கிக்கொள்ள வேணுமென்று விரும்பினேன்.”

“அவவை எந்தத் தருணத்திலாவது பயமுறுத்தினீர்களா?”

மோகனின் கண்களில் கோபம் கொந்தளித்தது, ஆனால் அவர் பேசமுன்னர் துப்பறிவாளர் Williams தொடர்ந்து அழுத்தினார்.

“பிற்பகல் 2:30 மணிபோல அயலவர்கள் ஒரு சத்தமான விவாதத்தைக் கேட்டுள்ளனர். உங்களுடைய சாயலைப்போல் உள்ள ஒரு மனிதன் கதவை அடித்துச் சாத்திவிட்டு வேகமாக வெளியேறியதை அவர்கள் பார்த்துள்ளார்கள். உங்களுக்கு வந்த கடும் சீற்றத்தினால் சீதாவைக் கொன்றுவிட்டு வேகமாக வெளியேறினீர்களா?”

அவருடைய நெற்றி வேர்வைத்துளிகளால் நிரம்பியது.

“நான் அவளைக் கொல்லவில்லை! ஒருவேளை நான் சொல்வதைக் கேட்க அவ மறுத்ததால் எனது குரலை உயர்த்தி இருக்கக்கூடும். ஒரு வீட்டுக்காக – அதிலும் அவ்வளவு பெறுமதியில்லாத வீட்டுக்காக நான் ஏன் எனது மச்சாளைக் கொல்லவேண்டும்?”

“ஏனென்றால் உங்களுடைய பாட்டனாரின் உயிலின்படி, அவருடைய மகளாகிய உங்கள் மாமி, கயலுக்குத்தான் அந்த வீடு சேரும். ஆனால் அவ தன்னுடைய மகள்களுக்கு எழுதிக் கொடுக்காவிடில் அவருடைய மகனின் மகனாகிய உங்களுக்கு உரித்தாகும்.”

துப்பறிவாளர் Williams ஒரு பேப்பர் தாளை உயர்த்திக் காட்டினார்.

“இது உங்கள் பாட்டனாருடைய உயிலின் பிரதி.”

 

 

 

 

 

 

 

 

அத்தியாயம் 25 ---- ஒரு சகோதரியின்

                நெஞ்சை உடைக்கும் துயரம்

அருவி

26 ஜூலை 2025

மெல்பேர்ண்

 

“என்ன?” என்னை மாதிரியே எனது பெரியம்மாக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

“ஏன் பாட்டா அப்படிச் செய்யவேண்டும்? அம்மாவிற்காகத்தான் அந்த வீட்டைக் கட்டினாரென்று நினைத்தேன்.” மகா பெரியம்மா மாறி மாறி ஜெயா, சுபா பெரியம்மாக்களைப் பார்த்தா.

“உனக்குப் புரியவில்லையா, அக்கா? இந்த வழியில்தான் எங்களுடைய அப்பாவின் கைகளில் இந்த வீடு விழாமல் இருக்கும்,” ஜெயா பெரியம்மா கசப்புடன் சொன்னா.

“இது எங்கே கிடைத்தது?” மோகன் அதிகாரத் தொனியில் துப்பறிவாளர் Williams ஐக் கேட்டார்.

“நேற்றிரவு நாங்கள் Marriot ஹோட்டலுக்கு வந்தபோது, நீங்கள் வரவேற்பு மேசையில் கணக்கை முடித்துக் கொண்டிருந்தீர்கள். உங்கள் கையில் நிரம்ப தாள்களை வைத்திருந்தீர்கள். எங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அந்தத் தாள்களைக் கீழே போட்டுவிட்டீர்கள். அதிகமானவற்றை நீங்கள் எடுத்துவிட்டீர்கள்., ஆனால் நான் உங்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது கொன்ஸ்டபில் Fraser இதை நிலத்தில் கிடக்கக் கண்டார்.”

மீண்டும் தன்னுடைய சுவாப நிலைக்குத் திரும்ப மோகனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

“ஓம், இது பாட்டாவின் உயிலின் பிரதிதான், ஆனால் இது ஒன்றுக்கும் சம்பந்தப்படாதது. கயல் மாமி ஒரு உயிலும் எழுதி சீதாவிற்கு அந்த வீடு சேரும் என்றிருப்பதால் பாட்டாவின் உயிலிலுள்ள அந்தப் பிரிவு இனிமேல் செல்லுபடியாகாது.”

“ஓம், ஆனால் சீதா ஒரு உயிலும் எழுதியிருக்கமாட்டாளென்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும்,”  துப்பறிவாளர் Williams சொன்னார். “அப்படியென்றால் உங்கள் பாட்டாவின் உயில்தான் செயல் படுத்தப்படும் – உங்களுக்கு வீடு வந்து சேரும்.”

“ஆனால் அது அபத்தம்,” சிவா பெரியப்பா சத்தம் போட்டுச் சொன்னார். “அந்த வீட்டின் பெறுமதி ஒரு லட்சம் டொலறுக்கும் வராது! அப்படியான ஒரு சின்னத் தொகைக்கு ஒரு பெரும் பணக்காரரான மோகன் ஏன் கொல்லவேண்டும்?”

“ஏனென்றால் நீங்கள் நினைப்பதுமாதிரி அவர் பணக்காரரில்லை, நீங்கள் பணக்காரரா, மோகன்?”  துப்பறிவாளர் Williams நேரடியாகக் கேட்டது எங்களை அதிரவைத்தது.

அவ தொடர்ந்தா, “இவர் கணக்கு வைத்துள்ள Maybank, RHB Bank இலிருந்து இவருடைய கணக்கு விபரங்களுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய ஆரம்ப விசாரணைகளின்படி இவருடைய எல்லா வியாபாரங்களும் கஸ்டப்படுகின்றன.”

“ஒரு அர்த்தமும் இல்லாமல் இருக்கின்றது! அம்மாவிடமிருந்து வீடு வாங்குவதற்கு நூற்று ஐம்பதாயிரம் டொலேர்ஸ் வீட்டிற்குத் தருவதாக அம்மாவிற்குச் சொன்னார். அவரிடம் பணம் இல்லாவிடில் எதற்காக வீட்டின் பெறுமதியை விட அதிகமாகத் தருவதற்கு முன்வந்தார்?” எனக்குக் குழப்பமாயிருந்தது.

“நான் முதலிலேயே சொல்லியிருந்தேன்,” மோகன் சொல்லும்போது அவர் குரல் நடுங்கியது. “எங்களுடைய பாட்டாவின் ஞாபகார்த்தமாக அந்த வீட்டை வாங்க விரும்பினேன். என்னிடம் கடைசியாக உள்ள பணத்தைப் பாவித்து அதை வாங்க நினைத்தேன். பாட்டா என்னைப்பற்றிப் பெருமையாக நினைக்க வேண்டுமென்பதற்காக ஏதாவது செய்ய வேணுமென்று ஆசைப்பட்டேன். என்னைப்பற்றிப் பெரிய நினைப்பு வைத்திருந்தார் ….”

நம்பமுடியாமல் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். எப்படி அவரை மிகவும் தப்பாக மதிப்பிட்டிருக்கிறோம்? மலேசியாவில் செழிப்பான நிறுவனங்களின் உச்சத்தில் இருக்கும் ஒரு சாதுர்யமான தொழிலதிபர் என்று இதுவரை நினைத்திருந்தோம்.

அவருடைய வசீகரமும் துடிப்பான ஆளுமையும் அவருடைய பொய்த்தன்மையை மறைத்திருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை.

“ஒரு வீட்டிற்காகவா நீங்கள் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள்?,” அதற்கு மேலும் எனக்கு வந்த கோபத்தையும் துயரத்தையும் என்னால் அடக்கமுடியவில்லை.

“இல்லை, அருவி ---- தயவுசெய்து என்னை நம்பு --- நான் செய்யவில்லை என்று சத்தியமாய்ச் சொல்கிறேன்! அவ என்னைப் போகச் சொன்னவுடன் நான் சென்றுவிட்டேன். நான் கோபமாயிருந்தேன், உண்மைதான், ஆனால் ஒருவழியில் எனக்கு ஆறுதலாகவும் இருந்தது --- அப்படியான கிராமப்புற, பின்தங்கிய இடத்தில் முதலீடு செய்யத் தேவையில்லையென்று ஆறுதலாயும் இருந்தது. என்னிடம் மிச்சமிருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்யலாமென்று ஏற்கனவே யோசித்துள்ளேன்.”

“நீங்கதான் அம்மாவை உயிருடன் பார்த்த கடைசி ஆள்,” நான் அழுதேன்.

“அந்த சாயந்தரம் நான் கிளம்பியபோது அவ உயிருடன் இருந்தா, அருவி. தயவுசெய்து என்னை நம்பு.”

“எப்படி நான், மோகன்? நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்பமுடியும் --- நீங்கள்தான் அவவுடன் கடைசியாக இருந்தவர்,” அதிர்ச்சியினாலும் திகிலினாலும் விறைத்துப் போயிருந்த நான் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்.

“இல்லை, அவரில்லை, அருவி! நான் அவளுடன் இருந்தேன்! மோகன் சென்றபிறகு நான் அவளுடன் இருந்தேன்!” ஜெயா பெரியம்மா திடீரென அழுதா. தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு விம்மிவிம்மி அழுதா.

நீண்ட நேரம் ஒருவரும் பேசவில்லை. ஜெயா பெரியம்மாவின் மென்மையான ஒழுங்கற்ற சோகமான மூச்சுக்கள்தான் அங்கே கேட்ட சத்தம்.

“நீங்கள் அங்கே இருந்தீர்கள் என்று சொன்னதற்கு அர்த்தம் என்ன?” துப்பறிவாளர் Williams இன்  குரல் அமைதியாகவும் உறுதியாகவும் இருந்தது.

“நான் சீதாவின்மேல் கோபமாயிருந்தேன்….. ஏனென்றால் அன்று காலை அவள் சொன்ன விடயத்தால். நான் ----”

“நீங்கள் சொல்வதென்னவென்றால், சீதா நாலகவுடன் சிநேகிதமாயிருந்ததினால் உங்களுக்குக் கோபம் வந்ததா?”

ஜெயா பெரியம்மா தலையசைத்தா, கண்ணீர் இன்னும் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது.

“நான் கோபமாயிருந்தேன்---- அவள் என்னுடன் போனில் பேசுவதற்கு விரும்பாதபடியால் நேரில் பார்த்து அவளுக்குப் புத்தி சொல்ல விரும்பினேன்!”

“அப்போது என்ன நேரம்?”

“கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணி. மோகன் அங்கிருந்தார் என்பது முதலில் எனக்குத் தெரியாது, ஆனால் அப்புறம் தெரிந்தது.”

“எப்படித் தெரிந்தது?” நம்பமுடியாமல் அவவை முறைத்துப் பார்த்தேன்.

“ஏனென்றால் சீதாதான் சொன்னாள். பின்கதவால் நான் உள்ளே நுழைந்தபோது, அவள் எரிச்சல்பட்டுச் சொன்னாள், “ஓ! ஜெயா -  நீயுமா?”

“நீ என்ன சொல்கிறாய்?” நான் சொல்வதை அவள் கேட்கும்வரை அங்கிருந்து போவதில்லை என்ற தீர்மானத்துடன் நான் கேட்டேன்.

ஆவள் சொன்னாள், “ நான் களைத்துப் போய்ருக்கிறேன், ஜெயா. எதிர்பாராத அதிகம் பேர் இன்று வந்து விட்டார்கள். உன்னோடு பேச இப்போது நேரமில்லை --- நீ போகவேண்டும்”

“ஏனென்றால் நீ நாலகவை எதிர்பார்ப்பதாலா?” நான் சத்தம் போட்டேன்.

அவள் என்னைச் சோகமுடன் பார்த்துக்கொண்டு சொன்னாள், “ஓ, ஜெயா, உன்னுடைய வெறுப்பை நீ ஒதுக்கித் தள்ளவேண்டும். ஏதோ சில சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக மோசமான குற்றங்களைச் செய்தார்கள் என்பதற்காக எல்லாச் சிங்களவர்களும் கெட்டவர்கள் என்ற அர்த்தம் இல்லை.”

நான் வெறுப்புடன் சிரித்தேன், “சீதா, உனக்கு எதிராக நாலக செய்த மோசமான குற்றத்தை மறந்துவிட்டாயா?”

அதே சோகமான கண்களுடன் என்னைப் பார்த்துத் தலையாட்டினாள். “ஜெயா, தயவுசெய்து-------இப்போதைக்குப் போ. விரைவில் எல்லாவற்றையும் நான் விளக்குவேன், அப்போது யாரை நீ வெறுக்கவேண்டுமென்று நீயே தீர்மானித்துக்கொள்.””

ஜெயா பெரியம்மாவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் எனக்குள்ளே ஏதோ ஒரு விரிசல், பூகம்பம் ஏற்பட்டது. நான் தடுக்குமுன்பேயே அந்த வார்த்தைகள் வெளியே வந்துவிட்டன.

“பெரியம்மா, நீங்கள் அம்மாவைக் கொன்றீர்களா? நாலகவின் மேலுள்ள அந்த வெறுப்பு உங்கள் சொந்த சகோதரியையே கொல்லத் தூண்டியதா?”

அந்த அறைக்குள் திகைப்புக்குள்ளான அமைதி நிலவியது – தாங்கமுடியாதளவு நேரம் அந்த அமைதி நீடித்தது. Zoe வின் கண்கள் பதட்டத்துடன் என்னை நோக்கியது; Brad நடுங்கும் எனது கையை இறுகப் பிடித்துக்கொண்டார்.

“காவியா சித்தி கொல்லப்பட்டபோது LTTE தலைவர் பிரபாகரன் அம்மாச்சிக்கு ஒரு செய்தி அனுப்பியதாக முத்துச்சித்தி சொன்னா. ஜெயாவை விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி பரிந்துரைத்திருந்தார்; ஏனென்றால் ஜெயா ஒரு நாளைக்குக் கட்டுப்பாட்டை மீறி ஏதாவது செய்யப்போய் அப்பாவிகள் யாருக்காவது  அல்லது தனக்கே தீங்கு விளைவிப்பாள் .”

ஒரு கிழமைக்கு முன்னர் முத்துச்சித்தி இதைச் சொன்னபோது நான் அதை ஒரு சிரிப்புடன் ஒதுக்கிவிட்டேன்.  அது ஒரு மிகைப்படுத்தல்  என்று சொன்னேன். ஜெயா பெரியம்மா ஒருவருக்கும் தீங்கு செய்யமாட்டா.

ஆனால் ஒருவேளை அவர் சொன்னது சரியானதோ! ஒருவேளை நாலக மேல் அவவிற்கு இருந்த வெறுப்பு தனது சகோதரி மேலிருந்த பாசத்தைவிட மேலானதோ!

மகா பெரியம்மா வேதனையில் நடுங்கினா. அவ என்னை நோக்கி வரவில்லை. அறைக்குக் குறுக்கே நடந்து ஜெயா பெரியம்மாவைத் தனது கைகளால் அணைத்துக்கொண்டா. தனது சகோதரியின் அணைப்பில் சரிந்துபோய் மகா பெரியம்மாவின் தோள்களில் முகத்தைப் புதைத்து இடைவிடாமல் அழுதா.

“அருவி, உன்னைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்!” சுபா பெரியம்மா அழுதா. “ஜெயா யாரையுமே கொல்லக் கூடியவள் இல்லை – அதிலும் தனது சொந்தச் சகோதரியை.”

சிவா பெரியப்பாவின் முகம் திகிலால் வளைந்துவிட்டது. “அருவி, நீ எப்படி அப்படியாக நினைக்கலாம்? உன்னுடைய அம்மாவும் சகோதரிகளும் ஒருவருக்கொருவர் எவ்வளவு பாசத்துடன் இருந்தார்கள் என்பது உனக்குத் தெரியாது!”

துப்பறிவாளர் Williams அறையை நன்றாக நோட்டம் விட்டார், அவவின் பார்வை ஒவ்வொரு முகமாகப் பார்த்துக்கொண்டு வந்தது. ஜெயா பெரியம்மாவின் அழுகை குறைந்ததும் மென்மையாகக் கேட்டா, “ஜெயா, அதன்பிறகு என்ன நடந்தது? சீதா போகச்சொன்னவுடன் போனீர்களா?”

“நான் போயிருக்கவேண்டும், ஆனால் நான் போகவில்லை ----,” ஜெயா பெரியம்மாவின் குரல் உடைந்துபோய்விட்டது. “பலவிதமான பெயர்களையும் சொல்லி அவளைத் திட்டினேன். இறந்து போன எங்கள் சகோதரியைப்பற்றியோ அல்லது எங்களில் எவரைப்பற்றியுமோ அவளுக்கு அக்கறை இல்லையென்று சொன்னேன் --- தன்னைப்பற்றித்தான் அவளுக்கு முக்கியம். அத்தோடு அவளை எனது சகோதரி என்று சொல்லவே வெட்கப்பட்டேன் என்று சொன்னேன்!”

“அப்போதுதான் அடுப்படிக்குள் போய் அந்தக் கத்தியைப் பார்த்தீர்களா?” துப்பறிவாளர் Williams மிகவும் பக்குவமாகக் கேட்டார்.

“என்ன? இல்லை. நான் அங்கிருந்து கிளம்பினேன். திரும்பிப் பார்க்காமலே சென்றேன், சீதா என்னைக் கூப்பிட்டது எனக்குக் கேட்டபோதிலும்!

அவள்மீது அவ்வளவு கோபம் இருந்தது….. இப்போது அவள் இறந்துவிட்டாள். அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு இனிமேல் சந்தர்ப்பம் இல்லை.”

“அங்கிருந்து புறப்பட்டபோது என்ன நேரம் என்று ஞாபகம் இருக்கிறதா?”

“3:30 க்கு முன்னாடி, ஏனென்றால் வழியிலுள்ள ஆரம்பப் பாடசாலையைத் தாண்டிச் சென்றேன், பாடசாலை இன்னும் முடியவில்லை. முட்டாசி விற்கும் மாதர்கள் மாணவர்கள் வீதியைக் கடப்பதற்கான கொடிகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

நான்---- நான் இரண்டு சகோதரிகளை இழந்துவிட்டேன்---- இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் ---- என்னால் ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை!”

ஜெயா பெரியம்மாவின் வேதனை சுவரிலே பட்டுத் தெறித்து நான் அவவின் மேல் சாட்டிய கொடூரமான, பொறுப்பற்ற குற்றச்சாட்டைத் துளைத்தது.

மெதுவாக எனது தலையைச் சுற்றியிருந்த கண்மூடித்தனமான பனி விலகத் தொடங்கியது. ஒரேயொரு சிந்தனை மாத்திரம் வந்து என்னுடைய வயிற்றை அவமானத்தினால் சுருட்டியது: ஜெயா பெரியம்மா குற்றவாளியென்றால் நானும்தான். கடைசியாக நான் அம்மாவைப் பார்த்தபோது, நானும் கோபத்துடன் அவவை விட்டு -வெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக்கொண்டு  விலகினேன்.

நான் எழும்பி மெதுவாக ஜெயா பெரியம்மாவை நோக்கி நடந்து அவவின் பக்கத்திலே தரையில் விழுந்தேன்.

“என்னை மன்னித்துவிடுங்கள், பெரியம்மா. எனக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. நீங்கள் அம்மாவிற்குக் கெடுதல் செய்யமாட்டீர்களென்று எனக்குத் தெரியும். நான் அவ்வளவு ----- கோபத்தில், ஆதரவின்றி இருந்தேன். நான் நேரடியாகச் சிந்திக்கவில்லை.”

கிட்டத்தட்ட குழந்தைகளின் சிரிப்புப்போல அவவின் முகத்தில் ஜொலித்தது ---- அவநம்பிக்கையும் ஆனந்தமும் ஒருசேரச் சங்கமித்தன.

“அருவி, அருவி --- இந்தக் கருணைக்கு நான் தகுதியானவளில்லை, என்னுடைய பாவப்பட்ட, பாவப்பட்ட சீதாவிற்கு நான் கொடூரமாக இருந்ததற்கு. அவள் எப்படி உணர்ந்திருப்பாள்?”

“பெரியம்மா, உங்களுக்கு உங்களைப்பற்றித் தெரிந்ததைவிட அம்மாவிற்கு உங்களை நல்லாகவே தெரியும். ஒருமுறை எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது ----- உங்கள் இருவருக்கும் பெரிய வாக்குவாதம். இங்குள்ள LTTE ஆதரவாளர்கள் யுத்தத்திற்குத் தயார் செய்வதற்காக நன்கொடை கேட்டு வந்தபோது அம்மா மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம். நான் மிகவும் பயந்தேன் – அதற்குப்பிறகு நீங்கள் இருவரும் கதைக்கமாட்டீர்களென்று நினைத்தேன்.”

ஜெயா பெரியம்மாவின் கண்களிலே பழைய நினைவு வந்து அவவின் உதட்டிலே ஒரு துடிப்புத் தெரிந்தது.

“எனக்கு அப்போது பன்னிரெண்டு வயதுதான். நீங்கள் கோபித்துக்கொண்டு வெளியே போனபோது நான் அழுதேன் – ஏனெனில் நீங்கள் அவ்வளவு கோபப்பட்டு அதுவரையில் நான் பார்க்கவில்லை. ஆனால் அம்மா எனக்கு என்ன சொன்னாவென்று உங்களுக்குத் தெரியுமா?”

ஜெயா பெரியம்மா மாத்திரமில்லை, அறையிலிருந்த அனைவரும் நான் என்ன சொல்லப்போகிறேனென்று எதிர்பார்த்திருந்தார்கள்.

“அம்மா சொன்னா, “அருவி, ஜெயாவின் குரைப்பு அவளின் கடித்தலை விட மோசமானது. எங்கள் குடும்பத்திலேயே மிகவும் உற்சாகமானவள் அவள்தான் – இலகுவாகக் கோபப்படுவாள், ஆனால் வேகமாக அமைதியடைவாள். நாளைக்குக் கண்டிப்பாக வருவாள். மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டாள் – அது அவளுடைய பாணியில்லை. ஆனால் என்னிடம் அதிக அன்பு காட்டுவாள், நீ இருந்து பார். சிறு வயதிலிருந்தே எங்கள் எல்லோரிடமும் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள் ….. ஆனால் சிலநேரம் அவளுடைய கோபம் அவளை ஆட்டுவிக்கும், அதன்பிறகு அதற்குப் பரிகாரம் தேடக் கடுமையாக முயற்சிப்பாள்.””

நான் ஜெயா பெரியம்மாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தேன், “என்ன நடந்தது என்று தெரியுமா, பெரியம்மா? அம்மா சொன்னது உண்மைதான், மறுநாள் வந்தீர்கள், எங்களைப் பலவந்தமாக ஒரு ஆடம்பர இரவு உணவிற்கு அழைத்துச் சென்றீர்கள்.

திரும்பி வரும்போது காரில் அம்மா கண் சிமிட்டியபடி மெதுவாகக் கேட்டா, “நான் உனக்கு என்ன சொன்னேன்?”. நாங்கள் சிரித்தது உங்களுக்குக் கேட்டது என்று நான் சத்தியம் செய்வேன், ஆனால் நீங்கள் திடீரெனக் காரோட்டுவதில் அதிக கவனம் செலுத்தினீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, பெரியம்மா?”

கண்ணீருக்கூடாகச் சிரித்துக்கொண்டே ஜெயா பெரியம்மா தலையாட்டினா. மகா, சுபா பெரியம்மாக்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் ஒருவரையொருவர் பார்த்தனர்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோமென்று தெரியாது – ஒவ்வொருவரும் தமது சிந்தனைகளில் மூழ்கியிருந்தனர். துப்பறிவாளர் Williams  தான் எங்களை மெதுவாக இந்தத் தருணத்திற்கு இழுத்துவந்தார்.

“நேரமாகிவிட்டது. நான் புறப்படுகிறேன், அருவி. மகா, உங்களுடைய அருமையான  உணவிற்கு நன்றி. இந்த விசாரணையில் ஏதாவது முன்னேற்றம் இருந்தால் உங்களுடன் தொடர்பு கொள்வேன். உங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கக்கூடும்--- தயவுசெய்து ஒருவரும் இந்த நகரை விட்டு வெளியே போகவேணாம்.”

மோகனும் நாலகவும் இந்த வேண்டுகோள் தங்களை நோக்கித்தான் என்பதைப் புரிந்துகொண்டு தலையாட்டினார்கள்.

“கோலாலம்பூரில் எனக்கு அவசரமான தொழில்ரீதியான அலுவல் இருக்கிறது,” மோகன் சொன்னார். “நான் எப்போது வரமுடியும் என்று எனது சக வணிகர்களுக்குச் சொல்லலாம்?”     

துப்பறிவாளர் Williams மோகனை அளவிடுவதுமாதிரிப் பார்த்தார். “ இதை விரைவில் முடிப்பதற்கு எங்களால் முடிந்தளவு முயற்சிப்போம். ஆனால் நாங்கள் தடயவியல் நிபுணர்கள் தங்கள் விசாரணைகளை முடிக்கும்வரையும் பிரேதபரிசோதனை அறிக்கை வரும்வரையில் காத்துக்கொண்டிருக்கவேண்டும். முடிந்தவுடன் உங்கள் எல்லோருக்கும் அறிவிப்பேன். இதற்கிடையில், நீங்கள் இதுவரை சொல்லாதது ஏதும் நினைவுக்கு வந்தால் உடனடியாக என்னை அழைக்கவும்.”

இறுதிமுறையாக அறையைச்சுற்றி நோட்டம் விட்டார் – அவவின் பார்வை கூர்மையாகவும், கனிவாகவும் இருந்தது. அவவின் பார்வை நாலகவை அடைந்தபோது, அவர் எழும்பிநின்று மெதுவாகச் சொன்னார், “இன்றிரவு உங்கள் எல்லோருடைய விருத்தோம்பலுக்கு நன்றி. உங்களுடைய கருணைக்கு நான் தகுதியானவனில்லை ----- நான் கிளம்புகிறேன்.”

அவர் என்னைப் பார்ப்பதை என்னால் உணரமுடிந்தது, ஆனால் அவரைப் பார்ப்பதை நான் தவிர்த்தபோது அவர் சொன்னார், “அருவி, உன்னுடைய அம்மா மிகவும் விசேஷமானவ -----எத்தனையோ வருடங்களுக்குப் பின்னர் நான் அவவைச் சந்த்தித்தேன் ---என்மீது கருணை காட்டினா. எல்லாவற்றிற்கும் நான் ஏதாவது பரிகாரம் செய்யமுடியுமா என்று ஆசைப்படுகிறேன்.”

நான் அதற்கு ஒரு பதிலும் கூறாதிருந்தபோது, அவர் திரும்பி அறையைவிட்டு வெளியேறினார் – சரிந்திருந்த அவரின் தோள்கள் அவருடைய துயரத்தை வெளிக்காட்டியது.

மறுநாள் காலை எனது படுக்கை அறையை யாரோ மெதுவாகத் தட்டுவதைக் கேட்டு விழித்தேன். Brad ற்கும் கேட்டிருக்கவேணும்: இருவரும் எழும்பி இருந்தோம். யன்னல் திரையினூடாக வந்த சூரிய ஒளிக்கதிர்கள் ஒரு கணநேரம் எங்கள் கண்களைக் குருடாக்கிற்று.

கதவு மெதுவாகத் திறந்தது, Zoe  தயக்கத்துடன் எட்டிப்பார்த்தா. “ மன்னிக்கவும், அருவி. உன்னைப் பார்க்க ஒரு பெண் வந்துள்ளா. நீ தூங்குவதாக அவவிற்குச் சொன்னேன், ஆனால் அவ கட்டாயம் பார்க்கவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறா.”

Brad படுக்கையைவிட்டுப் பாய்ந்தெழும்பினார். “கடவுளே! பத்து மணியாகிவிட்டது.”

“அது யார், Zoe?” நான் கேட்டபோது  தெரியாதென்று Zoe தலையாட்டியதும், நான் ஒரு பெருமூச்சுடன், “இதோ ஒரு நொடியில் வருகிறேன்.”

எனது அறையை அலங்கரித்துக் கொண்டிருந்த பளபளப்பான தோல் சோபாவின் ஓரத்தில் விறைப்பாக இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் பலமுறை கண்ணைச் சிமிட்டினேன்.

வீட்டிற்குத் தளவாடங்கள் வாங்கியபோது, இந்த சோபாதான் என்னுடைய விலையுயர்ந்த பொருள். என்னுடைய புதுவீடு என்ற உற்சாகத்தில் எல்லா அறைகளையும் அழகான, விலைமதிப்புள்ள தளவாடங்களால் நிரப்பத்தான் விரும்பினேன். ஆனால் என்னுடைய பொருளாதார நிலை ஒரேயொரு விலையுயர்ந்த பொருளை வாங்க அனுமதித்தது.

அங்கிருந்த கண்ணியமான பெண் மிகுந்த நேர்த்தியுள்ள சேலையை அணிந்திருந்தா – முதல் பார்வையில் சாதாரண சேலைபோலத் தெரிந்தாலும் வடிவமைக்கப்பட்ட ஆடம்பரத்தைக் கவனிக்காமல் இருக்கமுடியாது. எல்லாவற்றையும் கவனமாக நோட்டமிடும் அந்தப் பெண்ணை வீட்டின் ஆகச்சிறந்த அறையில் இருத்தி வைத்ததற்காக Zoe  விற்கு நன்றி கூறினேன்.

“மாமி ----” நான் தடுமாறினேன்.

அர்ஜுனுடைய அம்மாதான் நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஆள்.

 

 

அத்தியாயம் 26 – கடவுள்களின் இல்லத்தில்

                    கொடுமை

அருவி

26 ஜூலை 2025

மெல்பேர்ண்

 

“அருவி,” இருந்த இடத்திலிருந்து எழும்பி என்னை நோக்கி நடந்து வந்துகொண்டே மென்மையாகச் சொன்னா.

அவ என்னைக் கட்டி அணைத்திருக்ககூடும் – அவ விரும்பினா என்று நினைக்கிறேன் – ஆனால் நான் உறைந்துபோனேன், அவ நெருங்கும்போது என்னுடைய எல்லாத் தசைநார்களும் இறுகின. நான் அவவின் மகனின் காதலியாக இருந்தபோது, என் பக்கம் திரும்பிப் பார்ப்பதே அரிது, ஒருவிதமான பாசமும் கிடையாது. அவவின் ஒப்புதலுக்காக அப்போது ஏங்கினேன், துளிகூடக் கிடைக்கவில்லை. அப்படியானால் இப்போது என்ன?, எல்லாவற்றிற்கும் பின்னர் எதிர்பாராத மென்மை எப்படி வந்தது?

“நீ என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவாய் என்று எனக்குத் தெரியும், அருவி ----- உன்னுடைய அம்மாவைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.” ஒரு நடுக்கத்துடன் புன்னகைத்தா. பின்னர் எனக்குப் பக்கத்தில் வந்து நின்ற Brad  ஐப் பார்த்தா.

“இவர் உன்னுடைய கூட்டாளியா, அருவி?” அவ கேட்டா.

நான் சிரித்தேன், ஒரு அமைதியான பெருமிதம் என்னுள் எழும்பியது. அவவுடைய மகனைப்போல இவர் ஒரு அறுவைச்சிகிச்சை மருத்துவர் இல்லை , இவ வெற்றி என்று நினைப்பதற்கு ஏற்றவர் இல்லை. அதைப்பற்றி எனக்குக் கவலை கிடையாது. இவர் கனிவானவர், உறுதியானவர், பாசாங்குக்காரரில்லை. அத்துடன் என்னைப்பார்த்து, நான் எப்படியோ அதை ஏற்றுக்கொண்டு என்மீது அன்பானவர். அவவின் மகன் இவருடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடியவர் இல்லை.

ஓமென்று நான் தலையசைத்ததும் அவவின் புன்னகை மேலும் மென்மையானது. Brad பக்கம் திரும்பி அன்பாகவும், நட்பாகவும் சிறிது மன்னிப்புக்கேட்கும் தன்மையுடன் சொல்லியபோது அவவுடைய தொனியும் புன்னகையை ஒத்திருந்தது.  

“ஹலோ, உங்களைப் படுக்கையிலிருந்து இழுத்து வந்ததற்காக என்னை மன்னிக்கவும்.”

அவவை எச்சரிக்கையுடன் பார்த்தேன். ஒரு கொலையுண்ட மனுசியின் தொடர்புள்ளதால் ஏற்படும் அவமானத்திலிருந்து தனது மகன் மட்டுமட்டாகத் தப்பிவிட்டாரென்று தம்பட்டம் அடிக்கவந்த மனுசியாகத் தெரியவில்லை. அப்படியானால் ஏன் வந்துள்ளா?

Brad ஐயும் என்னையும் மாறிமறிப் பார்த்த அவ பதட்டத்துடன் எச்சிலை விழுங்கினா. Brad  எனது கைகளை உற்சாகப்படுத்தும்விதமாக அழுத்தியவாறே எமது விருந்தினரை நோக்கி மரியாதையுடன் தலையை அசைத்து, “நான் குளித்துவிட்டு வருகிறேன். நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள்.” சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

“அருவி, நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் ---- உனக்கும் அர்ஜுனுக்கும் இடையில் நடந்த சம்பவத்திற்காக. நான் உங்கள் இருவருக்கும் இடையில் தலையிட்டது தப்பு – உங்கள் நட்பைப் பிரித்தது தப்பு. ஒருவேளை அவன் உன்னை மணந்திருந்தால்----”

“என்ன சொல்கிறீர்கள், மாமி? அர்ஜுன் ஓகேயா? நீங்கள் ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணை அவர் மணந்ததாக அறிந்தேன்.”

என் குரலில் இருந்த குழப்பத்தை என்னால் அடக்கமுடியவில்லை. அர்ஜுனுடன் இருந்த உறவு முறிந்தபோது கோபமாயிருந்தபோதிலும் அவன் துயரத்தை அனுபவிக்கவேணுமென்று நான் நினைக்கவேயில்லை. நான் Brad இல் எனது ஆத்மத்துணையைத் தேடிவிட்டேன், அதுபோல அவனுடைய பாதையில் ஒன்றாகப் பயணிக்கும் ஒரு துணையை அவன் தேடுவதையிட்டு எனக்கு எந்த மனச்சஞ்சலமும் இல்லை.

அவவின் உதடுகள் கொஞ்சம் வளைந்தன, ஆனால் கண்களில் வெறுமை தெரிந்தது. “ஓ, போதுமானவரை சந்தோஷமாய்த்தான் இருக்கிறான் ------ குறைந்தபட்சம் அவன் அப்படித்தான் நினைக்கிறான். ஆனால் உன்னோடிருந்தபோது அவன் அனுபவித்த வாழ்க்கையின் இன்பம்------ இப்போது அவனிடமிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது.”

அவ முன்னோக்கிவந்து எனது கைகளப் பிடித்துக்கொண்டு, “நான் இங்கே வந்தது அர்ஜுனைப்பற்றிக் கதைப்பதற்காக இல்லை. உன்னுடைய அம்மா என்னைப் பார்க்க வந்தா என்பது உனக்குத் தெரியுமா?”

இப்போது எனது முழுக்கவனமும் அவவின் பக்கம் திரும்பியது.

“என்ன? ஏன்? எப்போது?” எனது கால்கள் தள்ளாடுவதற்கு முன்பேயே நான் சோபாவில் உட்கார்ந்தேன், அவவும் என் பக்கத்தில் இருந்தா.

“இது சில வருடங்களுக்கு முன்னர் – நீயும் அர்ஜுனும் ஒன்றாகத் திரிந்த நாட்களிலே. கரம் டவுண்ஸ் கோயிலிலே காலைப் பூசைக்கான மந்திரத்தை ஐயர் ஓதிக்கொண்டிருக்கும்போது சிவனுடைய பீடத்திற்கு எதிரில் உனது அம்மா நிற்பதைப் பார்த்தேன். தெரிந்த முகம் போல இருந்தாலும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

பூசைகள் முடிந்தபிற்பாடு நான் புறப்படும் வேளையில் அவ என்னிடம் நெருங்கி வந்தா. நான் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வருவதாக நீ சொல்லியிருந்ததால், அங்கு என்னுடன் பேசுவதற்கு ஏற்ற இடம் என்று நினைத்ததாகக் கூறினா.”

சிறிது நிறுத்தி என்னைப்பார்த்து நடுக்கத்துடன் சிரித்தா. “நான் அவவுடன் கறாராக இருந்தேன். என்னை மன்னித்துவிடு, அருவி. நான் சொன்னேன், “இதிலே நீங்களும் நானும் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இந்தப் பைத்தியத்தனமான தொடர்போடு அர்ஜுன் போக விரும்பினால், என்னால் அதைக் கையாளமுடியும்.””

ஒருவேளை என்னிடமிருந்து ஏதேனும் எதிர்வினையை எதிர்பார்த்தாவோ தெரியவில்லை, சிறிதுநேரம் நிறுத்தி என்னைப்பார்த்து மனிப்புக் கேட்கும் தோரணையில் சிரித்தா. அவவைத் தொடரும்படி நான் சைகை செய்தேன். நான் இனிமேலும் அர்ஜுனைப்பற்றி கவலைப்படவில்லை, அவரின் தாயாரின் அங்கீகாரம் பற்றியும் கவலைப்படவில்லை – அம்மா அவவைச் சந்தித்ததைப்பற்றியே கேள்விப்பட விரும்பினேன்.

அர்ஜுனின் குடும்பத்தில் என்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்பதற்கே அம்மா போயிருப்பா என்று நினைத்தேன். இந்தப் பெருமிதம் கொண்ட பெண்மணி முன்னால் எனது அம்மா இரந்து கேட்பதுமாதிரிக் கற்பனை செய்தபோது எனக்குச் சட்டெனக் கோபம் ஏறியது – ஆனால் அம்மா என்மேல் கொண்ட அன்புக்கு என்னுள் இருந்த நன்றிக்கடன் கோபத்தை அணைத்துவிட்டது, அவவுடைய சொந்தப் பெருமையை விட அவவின் அன்பு கொழுந்துவிட்டு எரிந்தது.

“உன்னுடைய அம்மா சொன்னா, “எங்கடை குடும்பத்துடன் நீங்கள் உறவு வைப்பதை ஒத்துக்கொள்ளாததையிட்டு உங்களைக் குற்றம் சொல்லமாட்டேன். நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன், இந்த சம்பந்தம் சரிவந்தால் பின்புலத்தில் இருப்பதில் நான் சந்தோஷமடைவேன். அர்ஜுனைப் போன்ற ஒருவரைக் கணவனாக அடைவதற்கும், உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கும் எவ்வளவு அதிர்ஸ்டம் செய்திருக்கவேணுமென்று அருவிக்குச் சொல்லி விளங்கப்படுத்துவேன். என்னுடன் கொஞ்சநேரம்தான் செலவழிக்கலாமென்பது அவளுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்.””

இந்தமுறை நான் கோபத்தை அடக்கவில்லை. எனது தோலின் கீழே சூட்டுடனும் நிலைகுலையாமலும் கோபம் வளர்ந்தது. இந்த உணர்ச்சியற்ற பெண்ணின் முன்னால் ஏன் அம்மா மண்டியிடவேண்டும்? அர்ஜுனின் அம்மாவை நான் உறுத்துப் பார்த்தபோது என் கண்கள் எரிந்தன, என்னுடைய கோபக்கனலின் பாரத்தினால் அவ சற்றுத் தடுமாறினா. 

“நீ கோபமாக இருப்பது எனக்குப் புரிகிறது, அருவி, நான் உன்னைக் குறை சொல்லவில்லை. இது நான் வளர்ந்த விதம் ----- என்னுடைய வாழ்நாள் முழுவதும் அப்படி வாழ்ந்துவிட்டேன் – சமூகம் எப்படி என்னை எடைபோடுமென்று நினைத்தேனேயொழிய எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நல்லதென்று பார்க்கவில்லை.”

அவ பேசும்போது தான் சொல்வதைக் கேட்குமாறு அவவின் கண்கள் கெஞ்சின. அவவுடன் கோவிப்பதில் அர்த்தமேயில்லை, எனக்குள் சொல்லிக்கொண்டேன். அத்துடன், எனக்கு இவ்வளவு சொல்கிறாவென்றால் அதற்கொரு காரணம் இருக்கவேண்டும். எங்களுடைய துக்கத்தில் மகிழ்ச்சியடைவதற்காக வந்திருக்கமாட்டா.

அவவைத் தொடருமாறு தலையை ஆட்டினேன். அவவுடைய குரல் நிலை தடுமாறாமல் இருந்தபோதும் அந்தத் தொனியில் மன்னிப்புக் கேட்கும் தன்மையும் இருந்தது.

“உங்களுடன் குறைந்த நேரம் செலவிடுவதால் அவளின் தகப்பன் யாரென்பதை மாற்றிவிடாது – ஒரு கொடூரமான மிருகம் ---- அந்த மிருகத்தின் பாவப்பட்ட இரத்தம் எனது பேரப்பிள்ளைகளுக்குள்ளும் ஓடுமென்பதை என்னால் ஜீரணிக்கமுடியாது.”

ஓம், நான் வெளிப்படையாகக் கேட்டேன், அருவி, ஆனால் உனது அம்மா பதட்டப்படவில்லை. அவ தெளிவான கண்களுடன் என்னைப் பார்த்துக் கேட்டா, “அருவி ஒரு கொடூரமான இராணுவத்தினனின் மகளில்லை, ஆனால் ஒரு நல்ல குடும்பத்துத் தமிழ் மனிதனின் மகள் என்று சொன்னால்?””

“என்ன?  அவ ஏன் அப்படிச்  சொன்னா?” என்னை அறியாமலே வார்த்தைகள் வாயிலிருந்து தெறித்தன.

“எனக்குத் தெரியவில்லை, அருவி…அவ சொன்னதின் அர்த்தம் என்னவென்றூ கேட்டேன், அதற்குமேல் சொல்ல அவ தயங்கினா. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அவ ஒரு ஒற்றைத் தாய் – ஒரு விரும்பத்தகாத உறவினால் தாயானவள் என்று சொல்லி அங்கிருந்து நடந்தேன். என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்தால் இப்படி அவதூறான முறையில் பிறந்த பெண்ணை உங்கள் ஒரே மகனுக்கு ஏற்றுக்கொள்வீர்களா?

அவ முகம் முற்றிலும் நிரம்பியிருந்த சோகத்துடன் தலையாட்டினா, நான் அங்கிருந்து வெளியேறினேன் – எனது பக்க நியாயத்தைச் சொல்லிவிட்டேனென்ற மடைத்தனமான வெற்றியுடன். என்னை மன்னித்துவிடு, அருவி.”

அவ தன்னுடைய கைகளால் எனது கண்களை ஒற்றிக்கொண்டா.

“நாங்கள் ஒரு கோயிலில் இருந்தோம், அப்படியிருந்தும் நான் இருதயம் இல்லாதவள் மாதிரி நடந்தேன். அதுதான் கடவுள் என்னைத் தண்டிக்கிறார் ---- அர்ஜுனுக்கும் மனைவிக்கும் குழந்தை பிறக்காதென்று உனக்குத் தெரியுமா?”

எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை!  சத்தம்போட்டு அலற விரும்பினேன்.   நான் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மனிதனின் மகளென்று அம்மா கூறியதின் அர்த்தம் என்ன? அர்ஜுனின் அம்மாவின் மனதை மாற்றுவதற்காக அவவே இட்டுக்கட்டினதா? அல்லது அவவைக் கற்பழித்தவன் ஒரு தமிழன் என்று நம்பினாளா?

“நேற்றிரவு உன்னுடைய சுபா பெரியம்மாவின் சிநேகிதி மூலம்  உனது அம்மாவிற்கு நேர்ந்ததை அறிந்ததும், உன்னைப் பார்க்க விரும்பினேன். அன்றைய தினம் கோயிலில் பார்த்ததிலிருந்து உனது அம்மாவைப்பற்றிப் பலநாட்கள் சிந்தித்துள்ளேன்…..அவ உயிருடன் இருந்தபோது அவவிடம் மன்னிப்புக் கேட்பதற்கு நான் முயற்சித்திருக்கவேணும், ஆனால் இப்போது மிகவும் பிந்திப் போய்விட்டது.”

என்னை அறியாமலே அவவின் கைகளை மெதுவாகத் தட்டினேன், எனது மனம் மணித்தியாலத்திற்கு ஆயிரம் மைல் வேகத்திற்கு மேலாகச் சுற்றியது.

ஏன் அம்மா அப்படியொன்றைச் சொல்லவேண்டும்?

அம்மா ஒரு காலமும் எனது தந்தையைப்பற்றி அதிகம் சொல்லவில்லை, ஆனால் அதே நேரத்தில் எனது பெரியம்மாக்களும் சமூகமும் அவரைப்பற்றி கிசுகிசுத்ததையும் மறுக்கவில்லை. என்னை விரும்பாத ஒரு குடும்பத்தை என்னை ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்காகச் இயலாக்கடைசியில்  செய்த முயற்சியா?

“அந்த ஒரேமுறைதான் அம்மா உங்களைப் பார்க்கவந்தாவா, மாமி?”

“ஓம், அதற்குப்பிறகு கொஞ்ச நாட்களிலேயே நீயும் அர்ஜுனும் பிரிந்துவிட்டீர்கள்…”

நான் இயந்திரத்தனமாகத் தலையாட்டிக்கொண்டே, Brad  உம் Zoe வும் அருகில் இருக்கிறார்களாவென்று பார்த்தேன். என்னுடைய பெரியம்மாக்களில் யாராவது ஒருவருடன் நான் உடனடியாகப் பேசவேண்டும் ---- அல்லது அம்மாவை நன்கு தெரிந்த யாரோடாவது. அர்ஜுனுடைய அம்மாவிற்கு நான் இந்தச் சம்பாஷணையை முடிக்க விரும்புகிறேன் என்பது புரிந்திருக்கவேண்டும். அவ தடுமாற்றமுடன் சோபாவிலிருந்து எழும்பி என்னை இறுகத் தழுவினா. நானும் அவவுடைய நல்ல எண்ணத்தைப் பிரதிபலிக்குமாறு அவவை இறுகக் கட்டிப்பிடித்துவிட்டு அவவை கதவிற்கு அழைத்துச் சென்றேன்.

அவவை அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்தியதும் Brad, Zoe இருவரும் மெதுவாக எனக்கு முன்னால் வந்தார்கள். அக்கறை நிரம்பிய அவர்களின் கண்களைப் பார்த்து, படபடப்புடன் கேட்டேன், “அம்மா என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னா?”

“அருவி, அம்மா ஒரு அர்த்ததிலும் சொல்லியிருக்கமாட்டா. அர்ஜுனின் அம்மாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காகச் சொல்லியிருப்பா,” Zoe  உறுதியாகச் சொன்னாள்.

Brad  ஆழ்ந்த சிந்தனையுடன் சொன்னார், “ உன்னுடைய பெரியம்மாக்கள் இப்போது வந்துவிடுவார்கள். அவர்களைக் கேட்கலாம். நிச்சயமாக, ஒரு தமிழன்தான் உன்னுடைய தகப்பனென்றால், அதைப்பற்றி யாராவது இதற்கு முன்னர் சொல்லியிருப்பார்கள்.”

என்னை இறுக்கக் கட்டிப் பிடித்தார். “அருவி, இன்றைய தினம் உன்னைப் பார்க்க அதிகமா ஆட்கள் வரவிருப்பதால், அதற்கு நீ தயாராயிருக்கவேண்டும். கன பேர் உனக்குத் தங்கள் அனுதாபத்தைத் தெரியப்படுத்த விரும்புவார்கள் – உன்னுடைய பெரியம்மாக்கள் அவர்களைத் தடுக்க முயன்றாலும், எல்லோரையும் மறிக்க முடியாதென்று எச்சரித்துள்ளார்கள்.”

எத்தனை பேர்கள் அன்று வந்தார்களென்று எண்ணுவதில் நான் தோற்றுவிட்டேன். ஒவ்வொருவரும் அம்மாவைப்பற்றிய கதை ஒன்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டனர். ஒவ்வொரு கதையும் விலை மதிக்கமுடியாதவை. – அந்த ஞாபகம் அவரை உயிருடன் வைத்திருந்தது, அந்தக் கணத்திலாவது.

அவர்களுடைய கதைகளைவிட தமக்கேற்பட்ட துயரத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்த விரும்பினார்கள். அவவை விரைவிலே இழக்க வேண்டியதால் ஏற்பட்ட துயரம், அவ இறந்த முறை பற்றிய அதிர்ச்சி.

அம்மாவைப்பற்றிக் கேள்விப்பட்ட ஒவ்வொரு கதையையும் நான் விரும்பினேன் – ஒவ்வொன்றும் அவவைத் திரும்ப உயிருடன் கோண்டு வருவதற்கான நூலிழை. ஆனாலும், என்னுடைய பிறப்பின் இரகசியத்தை அறிவதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். எவ்வளவுதான் முயன்றாலும், அர்ஜுனுடைய அம்மா சொன்னதைப்பற்றியே எனது மனம் சுற்றிக் கொண்டிருந்தது.

“முட்டாளாயிராதே, அருவி,  என்னை நானே கடிந்துகொண்டேன். ஒரு அந்நிய மனுசியின் வார்த்தைகள் உன்னை நிலைகுலையச் செய்துவிடாதே. அவ பிழையாக விளங்கியிருக்கவேணும்! அல்லது ஒருவேளை அம்மாதான் உண்மையைச் சிறிது மென்மையாக்கி, நான் சமூகத்திலே தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதற்காக அதற்கு வேறு வடிவம் கொடுத்திருப்பாவோ!

 

 

அத்தியாயம் 27 – உண்மையைத் தேடிய

                    மகள்

அருவி     

27 ஜூலை 2025

மெல்பேர்ண்

மதியத்திற்குக் கொஞ்சம் பிந்திய நேரம் வசந்தி மாமியும் உமாவும் ஏதோ எரிச்சலுடன் தலையாட்டிக்கொண்டு வந்தார்கள்.

“இங்கேயுள்ள ஊடகங்களை நம்பமுடியவில்லை. அவர்கள் எங்களிடம் எவ்வளவு கேள்விகள் கேட்டார்கள்? அவர்களைத் திட்டவேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னர் உன்னைப் பார்க்கவிரும்பினேன்,அருவி!” உமா என்னை நோக்கி வந்தபோது கைகளைக் காற்றிலே ஆட்டினாள்.

என்னால் சிரிப்பதைத்தவிர வேறொந்றும் செய்ய முடியவில்லை – பாடசாலை நாட்களிலிருந்து அவள் கிஞ்சித்தேனும் மாறவில்லை. 7ம் வகுப்புப் படிக்கும்போது, அவ என்னைப் பொறுப்பெடுத்துக் கொண்டிருந்த நாள் முதல் தன்னுடைய மனம் திறந்த சத்தமான குரலாலும், ஒருபோதும் ஆடாமல் நிற்காத கைகளாலும், விசித்திரமான முகபாவனையாலும் – எல்லாவற்றையும் விட மேலான அவவுடைய எல்லையில்லா சக்தியாலும் என்னை மயக்கிவிட்டாள். நன்றியுடன் அவளைப் பார்த்தேன் – என்னுடைய மனநிலையை மேம்படுத்த அவள்தான் சரியான ஆள்.

சுபா பெரியம்மாவும் என்னைமாதிரி உணர்ந்திருக்கவேண்டும். வசந்தி மாமியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அன்புடன் சொன்னா, “வசந்தி, நீயும் உமாவும் இங்கே வந்ததையிட்டி எனக்கு நிரம்ப சந்தோஷம்!”

நாங்கள் வெள்ளெனவே வரத்தான் நினைத்தோம், ஆனால் …” வசந்தி மாமி தனது சகோதரனைத் தேடி அறையை நோட்டம் விட்டா. “ எங்கே தேவா?”

“அவர் வீட்டிலேயுள்ளார், பையன்களுடன்,” சுபா பெரியம்மா விளங்கப்படுத்தினார். “இன்று தனக்குச் சுகமில்லாததால் தான் வீட்டிலிருக்கப்போவதாக சிவா சொன்னதாக மகா சொன்னா; அத்துடன் ஆனந்திற்கும் ஒரு முக்கிய கூட்டம் இருக்கிறதாம். ஆனபடியால், தேவாவையும் பெடியன்களையும் அடுத்த கிழமை வேலைமிகுந்த மரணச்சடங்கு இருப்பதால் இப்போதே அவர்கள் தாங்கள் செய்யவேண்டிய வேலைகளை முடிக்கச் சொன்னேன்.”

மரணச்சடங்கு! நான் அதைப்பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை. அம்மாவிற்கு இறுதியாக விடை கொடுக்க நான் இன்னும் தயாரில்லை – இப்போதுவரை இல்லை. இறுதி விடைகொடுத்தலைப்பற்றிச் சிந்திப்பதற்கு முன்னாடி, சில விடைகள் எனக்கு வேண்டியிருந்தது.

யார் அவவைக் கொன்றது? எதற்காக?

திடீரென கதவு திறந்து ஒரு பரிச்சியமான குரல் எனது யோசனையைக் கலைத்தது.

“வெளியில் நிற்பது நிருபர்களா?” என்று கேட்டவாறு மோகன் அறைக்குள் மெதுவாக நுழைந்தார்.

“ஓம், அவர்கள்தான். சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிப்பார்த்தேன், ஆனால் அவர்கள் விட்டுப் போவதாயில்லை. அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் போய்விடுவார்கள் என்று நினைத்தேன்,” Brad  வருத்தத்துடன் சொன்னார்.

“அதெல்லாம் ஓகே. அது என்னைத் தொந்தரவு செய்யாது,” மோகன் சொன்னபோது குரலில் ஒரு பதட்டமும் இல்லை. “மலேசியாவில் என்னை சில முறைகள் நேர்காணல் செய்துள்ளார்கள். கடந்தவருடம் கூட என்னைப்பற்றி ஒரு கட்டுரை The Star  என்ற பத்திரிகையில் வந்திருந்தது. இது எங்கள் குடும்பத்திலே சாதாரணமாக நடக்கும் விடயமென்று நினைக்கிறேன். தன்னைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை சும்மா யாழ்ப்பாணப் பத்திரிகையில் இல்லை, மாறாக கொழும்புப் பத்திரிகையில் தனது வணிக வெற்றியைப்பற்றி வந்ததென்று பாட்டா சொல்லியிருக்கிறார்.”

ஜெயா பெரியம்மா ஆச்சரியத்துடன் பார்த்தார். “பாட்டாவைப்பற்றி ஒரு கட்டுரை வந்ததென்று எனக்குத் தெரியாது. சுபா,மகா உங்களுக்குத் தெரியுமா?”. இல்லையென்று இருவரும் தலையசைத்தார்கள்.

“அது நீண்ட காலத்திகு முன்னர் நடந்தது, என்னுடைய அப்பா பாடசாலை மாணவனாக இருந்தபோது – நாங்கள் எல்லோரும் பிறப்பதற்குப் பல வருடங்கள் முன்னதாக.”

“எப்ப நடந்ததென்றாலும், அந்தக்கட்டுரையை வாசித்தால் நல்லாயிருக்கும் – எங்களுடைய குடும்ப வரலாறை அறிந்துகொள்ளலாம்,” என்று மெதுவாகச் சொன்னேன். பெரியம்மாக்கள் ஒத்துக்கொண்டனர்.

“சீதாவிற்கு குடும்ப வரலாறை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம்,” வசந்தா மாமி எப்போதோ நடந்ததை நினைத்தபடி சொன்னா.

“அவளும் நானும் ஒன்றாக அம்மன் கோயிலுக்குப் போவது வழக்கம் – அந்தக்காலம், சுபா நீ மெல்பேர்ண் க்குப் போய்விட்டாய். மகா, நீ வன்னியில் இருந்தாய். ஜெயா, நீயும் காவியாவும் புலிகளுடன் பயிற்சி செய்வதில் ஆர்வமாயிருந்தீர்களேயொழியக் கோவிலுக்கு வருவதில் நாட்டமிருக்கவில்லை. முத்து பள்ளிக்கூடப் படிப்பு வேலையில் மும்முரமாக இருந்ததால், சீதாவும் நானுமே போனோம்.”

“ஓ! இது எப்போது, வசந்தி?. நான் 1985 மார்ச்சில் வல்வேட்டித்துறையை விட்டுக் கிளம்பினேன், நீ நவம்பர் மாதம் கிளம்பினாய். அந்த ஆறு மாதத்திற்குள் நடந்ததைச் சொல்கிறாயா?” சுபா பெரியம்மா ஆச்சரியத்துடன் கேட்டா.

“ஓம், அந்த ஆறு மாதத்திற்குள், எங்களைச்சுற்றி சண்டை நடந்து கொண்டிருந்தபோதும் நாங்கள் ஒவ்வொரு வாரமும் கோயிலுக்குப் போவோம். அந்தக் காலை நாட்கள் இப்போதும் தெளிவாக ஞாபகத்தில் உள்ளது – ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளின் புகைக்குள் ஊடாக வந்த மெல்லிய கோயில் மணிச்சத்தம், முதல் பூசைகள் மூலம் காற்றைச் சூடாக்கும் அர்ச்சகர். அந்தச் சூழ்நிலையில் நாங்கள் இருவரும் எமது குடும்பக் கதைகளைப் பரிமாறிக்கொள்வோம் --- உங்கள் குடும்பக்கதைகள் எங்கள் கதைகளைவிடச் சுவாரியமானதாயிருக்கும்.

இதிலே ஆச்சரியமென்னவென்றால் எங்கள் மாதவிடாய்ச் சுழற்சிகள் ஒன்றாக வரும் – நாங்கள் எங்கள் மாதவிடாய்களை..”

அங்கே ஆண்கள் இருப்பதையும், அதிலும் தனக்குப் பரிச்சயமில்லாதவர் இருப்பதையும் உணர்ந்த மாமி திடீரென நிற்பாட்டினார்.

மோகனைச் சங்கடத்துடன் பார்த்து நாகரீகம் கருதி தனது வசனத்தைக் குறையில் நிறுத்தினார்.

ஆனால் என்னுடைய ஆர்வம் தூண்டப்பட்டுவிட்டது. அம்மாவைப்பற்றிய செய்திகளை அறிய ஆவலாயிருந்தேன், அதிலும் அவவின் வாழ்க்கை நான் பிறக்குமுன்னர் எப்படி இருந்ததென்று.

“அம்மாவின் மாதவிடாய் பற்றி என்ன விசேடம், வசந்தி மாமி? தயவுசெய்து சொல்லுங்கள். இங்கே நாங்கள் எல்லோரும் குடும்பம்தான் – மோகன் கூட.”

மோகன் சங்கடத்துடன் சிரித்தார். நான் நாகரீகம் பற்றியோ கண்ணியம் பற்றியோ கவலைப்படுவதைத் தாண்டிவிட்டேன்.

தொடர்வதற்கு முன்னர் வசந்தி மாமி ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டா. “எனக்குத் தெரிந்து சீதா ஒருத்திதான் இருபத்தி ஆறு நாள் சுழற்சியைக் கொண்டிருந்தாள். இருவருக்கும் தவறாமல் நேரத்திற்கு வந்துவிடும். ஒருவர் மற்றவரைக் கேட்காமலே, தனக்கு வந்திருந்தால் மற்றவருக்கும் வந்திருக்குமென நிச்சயமாகத் தெரியும். இது எங்களுடைய  கோயில் போகும் வழக்கத்தை இலகுவாக்கிற்று; ஒருவர் கோயிலுக்குப் போகமுடியாதென்றால் மற்றவரும் போகேலாதென்று தெரியும்.

கடைசியாக நீ கர்ப்பமாகும்வரை அப்படித்தான் நடந்தது, அருவி.”

“என்ன நடந்ததென்று சொல்லுங்கள், வசந்தி மாமி,” நான் அமைதியாகக் கேட்டேன்.

“எங்கள் இருவருக்கும் ஒன்றாக  மாதவிடாய் ஒக்டோபர் 4ம் திகதி வந்தது. ஒக்டோபர் 30ம் திகதி எனக்கு வரவேண்டியமாதிரி அடுத்தமுறை வந்தது. ஆனால் 31 ம் திகதி, செவ்வாய்க்கிழமை என்று நினைக்கிறேன் சீதா வீட்டிற்கு வந்து கோயிலுக்குப் போகலாமாவென்று கேட்டாள். எனக்கு மாதவிடாய் வந்துள்ளதால் என்னால் வரமுடியாதென்று சொன்னேன்.”

“ஆனால், உங்கள் இருவருக்கும் ஒன்றாகத்தான் வருமென்று சொன்னீர்களே, வசந்தி மாமி!”

“அப்படித்தான் நானும் நினைத்தேன், அருவி. நான் அவளைக்கேட்டேன், “எப்படி உனக்கின்னும் வரவில்லை? இப்போது உனக்கும்வந்திருக்கவேணுமே?”. அப்போதுதான் அந்த நினைப்பு வந்ததுமாதிரி என்னைப் பார்த்தாள்.

“இல்லை, வசந்தி, எனக்கின்னும் வரவில்லை. இன்று --- அவள் மனக்கணக்குப் போடுவது தெரிந்தது. “இன்று உனக்கு இரண்டாவது நாளா?”

நான் ஓமென்று தலையசைத்தேன். அவள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவள் திரும்பிப் போகும்போது நான் அவளைக் கூப்பிட்டேன, ஆனால் அவள் அங்கிருந்து நடந்தாள் – உண்மையில் ஓடினாள் என்பதே சரியான வார்த்தை. அவ்வளவு அவள் பதட்டமாய் இருந்து நான் ஒருபோதும் பார்க்கவில்லை.”

வசந்தி மாமி சிறிது நிற்பாட்டினா, அவவின் பார்வை என்மேல் பதிந்தது. மேலும் அறிவதற்கு நான் ஆசைப்படுகிறேன் என்பதைப் புரிந்துகொண்ட அவ ஒரு பெருமூச்சு எடுத்துக்கொண்டு தொடர்ந்தா.

“வல்வெட்டித்துறையிலே அதற்குப்பிறகு ஒரேயொரு முறைதான் சந்தித்தேன். அம்மாவும் நானும் மெல்பேர்ண் போவதற்காக ஊரை விட்டுப் புறப்பட முன் சொல்லிப் போவதற்காகப் போயிருந்தோம். அன்றைய தினம் நவம்பர் 2ம் திகதியென்பது எனக்கு நல்ல ஞாபகம். அடுத்த நாள் கொழும்புக்கான அபாயகரமான பயணத்தை மேற்கொண்டோம்.

சீதாவைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். மிகவும் உடல்நலக்குறைவாக இருந்தாள், கண்கள் சிவந்திருந்தன – அவள் அழுதிருக்கிறது போலத் தெரிந்தது. சுபா, உன்னுடைய அம்மாவும் வருத்தத்தில் இருந்தது மாதித் தெரிந்தது, ஆனால், யாழ்ப்பாணம் முழுவதும் சண்டையினால் பாதிக்கப்பட்டிருந்ததால், அது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமாகத் தெரியவில்லை. அவர்களை விட்டுப்போக அம்மாவிற்கும் எனக்கும் விருப்பமில்லை. சுபாவும் தேவாவும் அவர்களை விரைவில் மெல்பேர்ணுக்கு எடுக்க அதிக நாட்களாகாதென்று அவர்களுக்கு உறுதியளித்தோம்.”

வசந்தி மாமி பெருமூச்சு விட்டுக்கொண்டே என்னை ஒரு யோசனையுடன் உற்றுப்பார்த்தா. “நாங்கள் அவர்களையும் எங்களுடன் எடுத்துச் சென்றிருந்தால், நிலைமை ரொம்பவும் வித்தியாசமாயிருந்திருக்கும் --- அதற்கு ஒரு கிழமையின் பின்னர்தான் அந்த இராணுவத்தினன் வீட்டுக்குள் நுழைந்து…”

உமாவால் அதற்கு மேலும் தனக்குள்ளே வந்த சிந்தனையை அடக்கமுடியவில்லை. அவள் சட்டென்று சொன்னாள், “ஒருவேளை அவ கர்ப்பமாயிருந்திருக்கலாம் என்று சொல்ல நினைத்தேன்! அதுதான் மாதவிடாய் பிந்தியது. அவ உடல்நலக்குறைவாக இருந்ததின் காரணத்தையும் விளக்குகிறது. ஆனால், அப்படியும் இருக்கமுடியாது ------ அதற்குப் பிறகுதானே அவ கற்பழிக்கப்பட்டா!”

உமா வேறொருவரின் பதிலுக்காகவும் காத்திருக்கவில்லை; தனக்கான விளக்கத்தை வைத்திருந்தாள். “பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சிகள் மாறக்கூடியவை.”

“அம்மாவுடையது இல்லை,” நான் மெதுவாக முணுமுணுத்தேன். “அம்மாவுடையது இல்லை – எனக்குத் தெரிந்த நாள் முதலாக அம்மாவுடைய சுழற்சி கடிகாரம்போல, ஒவ்வொரு இருபத்தி ஆறு நாட்களுக்கு ஒருமுறை.”

நான் பெரியம்மாக்களின் முகத்தை ஆராய்ந்து பார்த்தேன்; என் மனதை இடிபோல உறுத்திக்கொண்டிருக்கும் பயங்கரமான உண்மையை அறியாமல் ஏதோ நினைவாக இருந்தனர். Zoe, Emily  இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தபோது, அவர்களுடைய முகபாவம் அவர்களுக்கும் புரிந்தது என்பதை உணர்த்தியது ----- என்னைப் போலவே அவர்களும் பயத்தினால் உறைந்தனர்.

“அதனுடைய அர்த்தம் ------ இல்லை, அப்படி இருக்கமுடியாது!” விரிந்த கண்களுடன் Zoe  கூச்சலிட்டாள்.

இப்போது எல்லாம் நன்றாக விளங்கியது. அர்ஜுனுடைய அம்மாவிற்கு நான் ஒரு சுத்தமான தமிழனின் வாரிசு என்று அம்மா சொன்னது பொய்யல்ல.

ஒரு சமயத்தில் அம்மா எனக்குச் சொன்னதன் அர்த்தம் இதுதானோ? “ஒரு நாள் எனது குடும்பத்தை அவமானப்படுத்த நான் செய்த காரியத்தை உனக்குச் சொல்வேன்.”

எனது முகத்தை மூடிக்கொண்டு, விம்மினேன்.

வசந்தி மாமிதான் முதலாவதாகப் பேசினா, அவவின் குரல் நடுங்கியது. “என்னை மன்னித்திடு, அருவி. அந்தப் பயங்கரமான நாட்களைப்பற்றி நான் பேச்செடுத்திருக்கக்கூடாது. சீதா மெல்பேர்ணுக்கு வந்தபோது, அன்றைய தினம் எதற்காக கோயிலுக்குப் போவதில் தீவிரமாயிருந்தாய் என்று கேட்க நினைத்தேன். அதற்கிடையில் எவ்வளவோ விடயங்கள் நடந்துவிட்டன, அத்துடன் அந்த இருண்ட நாட்களைப்பற்றி சீதா பேசவிரும்பவில்லை என்றும் எனக்குத் தெரிந்தது. இன்று ஏன் இதைப்பற்றிக் கதைத்தேன் என்று எனக்கு விளங்கவில்லை.”

உமா முதலில் தனது தாயாரை எரிச்சலுடன் பார்த்தாள், பின்னர் என்னைப் பார்த்துவிட்டுத் தனது பார்வையைத் தனது தாயிடமிருந்து பெரியம்மாக்களை நோக்கித் திருப்பினாள்.

நான் சத்தம் போடாமல் தலையசைத்தேன். நாங்கள் சத்தம் போட்டுச் சொல்லாவிடில், வசந்தி மாமிக்கோ அல்லது பெரியம்மாக்களுக்கோ அம்மாவுடைய பிந்திப்போன மாதவிடாய் பற்றிய முழு முக்கியத்துவமும் தெரியவராது.

ஏதோ ஒன்று எனக்குள்ளே நொருங்கியது – அமைதியான, ஆனால் தாங்கமுடியாத உடைப்பு – ஆனால் நான் மெதுவாக முணுமுணுத்தபோது என்னுடைய குரல் வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் இருந்தது, “நான் கற்பழிப்பால் வந்த குழந்தையில்லை – நாலகவினால் தாக்கப்பட்டபோது அம்மா ஏற்கனவே கர்ப்பமாயிருந்தா!”     

                

 

அத்தியாயம் 28   --- நான் யார்?

அருவி  

27 ஜூலை 2025

மெல்பேர்ண்

 

“உனக்கென்ன பைத்தியமா, அருவி?”

“என்ன முட்டாள்த்தனம்!”

“அது நடக்கக்கூடிய விடயமேயில்லை! எங்களுடைய அப்பா எவ்வளவு கடுமையானவர் என்று உனக்குத் தெரியுமா? ஒரு பையனும் எங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதற்கே அனுமதியில்லை. பையன்களுடன் கதைப்பதற்கு எங்களை விடமாட்டார். நாங்கள் பையன்களுடன் தெருவிலே பேசிக்கொண்டு நின்றோமென்பதைக் கேள்விப்பட்ட தருணங்களில்தான் அப்பா எங்களுடன் கோபித்திருக்கிறார். அவள் கற்பழிக்கபடமுன்னர் கர்ப்பமாயிருக்கக் கூடுமென்பது நிச்சயமாக நடந்திருக்காது, அருவி!” ஜெயா பெரியம்மா பேசும்போது அவவின் கண்கள் கோபத்தால் எரிந்தன.

“சீதா பையன்களுடன் உல்லாசமாகத் திரியும் குணம் கொண்டவளில்லை,” மகா பெரியம்மாவும் உடனடியாகச் சேர்ந்து சொன்னா, தனது சகோதரியைத் தற்காக்கும் நோக்கத்தோடு. “அவளுடைய குறிக்கோள் எல்லாம் படிப்பின்மீதேதான். இந்த  யுத்தம் மற்ற எல்லோரையும்விட அவளைத்தான் அதிகம் பாதித்தது. மற்றைய எல்லோருக்கும் பல்கலைக்கழகம் போகவேணுமென்ற ஆசையே கிடையாது, ஆனால் சீதாவிற்கு மேற்படிப்புப் படிக்கவேண்டுமென்பது அவளின் கனவு. அவளுடைய A/L சோதனையை இந்தச் சண்டை குழப்பி விட்டதென அவளுக்குச் சரியான கோபம். பையன்களுடன் உறவாடி தனது எதிர்காலத்தை வீணாக்கியிருக்கமாட்டாள்.”

Brad  என்னை நோக்கி மெதுவாக நடந்துவந்து, என்னைத் தனது கைகளால் அணைத்துக்கொண்டார்.

அவருடைய அரவணப்பினால் என்னுள் ஏற்பட்ட கதகதப்பினால் உற்சாகமடைந்த நான் என்னை வாட்டும் எண்ணங்களில் இருந்து விடுபட்டு, அமைதியாக எனது பெரியம்மாக்களுக்குச் சொன்னேன், “அந்தத் துயரமான நவம்பர் மாத நாளில் அம்மா ஏற்கனவே கர்ப்பமாக இருந்தா என்பதாகவே அறிகுறிகள் காட்டுகின்றன.”   

அவர்களுடைய ஆட்சேபங்களைச் சத்தமின்றிச் செய்வதற்காக எனது கைகளை உயர்த்திக்கொண்டு, “நான் சொல்வதைக் கேளுங்கள், பெரியம்மா – தயவுசெய்து.”

இப்போது அனைவரது கவனமும் என்னை நோக்கி இருந்தது. அவர்களுடைய விரி்ந்த, பயத்துடன் இருந்த கண்களைப் பார்த்துக்கொண்டு, என்னைத் திடமாக்கிக்கொண்டு  எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்தக்கூடிய கதையைச் சொன்னேன் – சொல்லும்போதே எனக்குத் தெரிந்தவற்றை ஒன்றாகக் கோர்த்தேன்.

“1995 இல் – நவம்பர் 8ம் திகதிதான் நால ……. அந்தச் சம்பவம் நடைபெற்றது, சரியா?”

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியாமல் ஒரு எச்சரிக்கையுடன் தலையாட்டினார்கள்.

“நவம்பர் 2 ம் திகதி, நீங்கள் மெல்பேர்ணுக்குப் போகமுதல் அம்மாவிடமும் அம்மாச்சியிடமும்  விடைபெறுவதற்காகப் போனபோது அம்மா அழுதிருந்தது மாதிரியும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததென்றும் சொன்னீர்கள், இல்லையா, வசந்தி மாமி?”

நினைவுகளுக்கும் அவை ஏற்படுத்தும் திகிலுக்கும் இடையில் பிடிபட்டபடி, அவ தலையை ஆட்டினா.

“அம்மாச்சியும் கலக்கத்துடன் காணப்பட்டா?”

“ஓம்..”

“அதற்கு முதலோ அல்லது பின்புமோ ஒருபோதும் தனது சுழற்சியைத் தவறவிடாத அம்மா, ஒக்டோபர் 30ம் திகதி மாத்திரம் தவறவிட்டது விசித்திரமாக இல்லையா? மாதவிடாய் தவறுவதற்கான மிகத் தெளிவான காரணம் கர்ப்பம்தான். அந்தச் சம்பவம் நடக்க முன்னர் அம்மா தன்னோடும் காவியா சித்தியோடும் இருந்தபோது அம்மா உடல்நலக்குறைவாய்  இருந்ததாக முத்துச்சித்தி சொன்னா. அம்மா சத்திக்குணமாயும் வெளிறிய முகத்துடனும் மனச்சோர்வுடன் ஏதோ இழந்ததுபோல இருந்திருக்கிறா. அந்த நேரம் அவ கர்ப்பமாய் இருந்திருந்தால் எல்லாவற்றையும் விளங்கப்படுத்துகிறது!

சில நேரங்களில் அம்மா தான் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டேனெனச் சொல்வதற்கெல்லாம் இதுதான் காரணம்! எனது தந்தையைப்பற்றி என்னிடம் ஒருபோதும் கதைக்காததற்குக் காரணம் நடந்த பயங்கரமான சம்பவத்தைப்பற்றி திரும்பவும் நினைக்க விரும்பாததுதான் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் எனது பிறப்பைப் பற்றிய உண்மையை என்னிடம் ஒத்துக்கொள்ளும் தைரியம் அவவிற்கு இருக்கவில்லை.

அப்படி இல்லாவிடில் ஏன் அர்ஜுனின் அம்மாவிற்கு நான் ஒரு சுத்த தமிழ் குடும்பத்துப்பெண்ணென்று சொல்லவேண்டும்? சும்மா சாதாரணமாக அம்மா பொய் சொல்லக்கூடியவ இல்லை – அதிலும் முக்கியமாக எனது தகப்பன் போன்ற  முக்கியமான விடயத்திற்கு.”   

இந்த முறை எனது பெரியம்மாக்கள் என்னைத் தடுப்பதற்கு அவசரப்படவில்லை. பீதி நிரம்பிய கண்களுடன் வார்த்தைகள் ஏதுமின்றி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வசந்தி மாமிதான் முதலாவதாகப் பேசினா. ஏதோ ஒரு சிந்தனை ஒருவித எச்சரிக்கையும் இல்லாமல் வந்தமாதிரி, மூச்சை உள்ளே இழுத்தா.

“அருவி, நீ பிறந்த மறுநாள் ரவியும் நானும் உன்னை வந்து ஆஸ்பத்திரியில் பார்த்தபோது, 37 வாரங்களில் பிறந்த நீ எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளாய்  என்று தாதிமார் குறிப்பிட்டார்கள். உன்னைத் தூக்கிப்பார்த்த ரவியும் இதைத்தான் சொன்னார், “இவ அழுவதைக்கேளுங்கள் – நேரத்திற்கு முன்னர் பிறந்தவபோலவே தெரியவில்லை. இவளுடைய நுரையீரல்கள் முழுமையாக வளர்ந்துள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்னர் பிறந்தபோதிலும் எவ்வளவு பலமுள்ளவளாக இருக்கிறாள். சீதா தனது முதல் மூன்று மாதங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலும் எஞ்சிய மாதங்களை அகதி முகாமிலும் செலவழித்தா என்பதை ஒருவரும் நம்பமாட்டார்கள்.””

ஒரு கணம், எனது பெரியம்மாக்களைப் பார்த்தபோது – அதிர்ச்சிக்குள்ளானதால், ஏற்பட்ட அவநம்பிக்கையால் கோணலாகிப்போன அவர்களின் முகம் – கிட்டத்தட்ட என்னைப் பேசாமடந்தையாக்கி விட்டது. ஆனால் நான் அதிக தூரம் வந்துவிட்டபடியால் இனிமேல் திரும்பமுடியாது. என்னுடைய வார்த்தைகளில் எவ்வளவு கடுமை இருந்தாலும், இவ்வளவு காலமும் புதைபட்டிருந்த உண்மைகள் வெளியே வருவதற்கு இதுதான் ஒரே வழி.

“அம்மாச்சிக்கும், பாட்டாவிற்கும் இது தெரியுமென்று நினைக்கிறீர்களா? முத்துச்சித்தி சொன்னதிலிருந்து அவவிற்கோ காவியாச்சித்திக்கோ இதுபற்றி ஒன்றும் தெரிந்திருக்காதென்று தெளிவாகத் தெரிகிறது. உங்களுடைய முகபாவங்களைப் பார்த்தால், இது நடந்திருக்கக்கூடும் என்பதையே நம்பவில்லை. இது எல்லாவற்றையும் பார்த்தால், அம்மா இந்த இரகசியத்தைத் தனது பெற்றோர்களிடமிருந்தும் மறைத்துள்ளா என்ற அர்த்தமா?”

ஜெயா பெரியம்மாவின் புருவத்திற்கிடையில் இருந்த சுருக்கம் சிறிது ஆழமாகிப் பின்னர் மென்மையானது – ஒரு சிந்தனைக் கீற்றல் வெளியே வந்து அவவைக் காயப்படுத்தியது போலத்தெரிந்தது.

“அது ஒரு புதன்கிழமை,” மெதுவாக ஆரம்பித்தா, “சரியாக அந்தக் கற்பழிப்புக்கு ஒரு வாரம் கழித்து. அப்பா, முத்து, காவியா, என்னை எல்லோரையும் அம்மா கூப்பிட்டு சீதா கர்ப்பமாயிருப்பதைச் சொன்னா. “நீங்கள் எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? இவ்வளவு விரைவில் எப்படிச் சொல்லமுடியும்?” நான் இறுக்கமாகக் கேட்டேன்.”

ஜெயா பெரியம்மா ஒரு ஆழ்ந்த மூச்சுடன் சிறிது தாமத்தித்தா.

“சீதா அசைவின்றி நின்றாள் – மூச்சு விடவே கஸ்டப்பட்டாள். உணர்வாலும், மனதாலும், உடம்பாலும் அவள் பட்ட வலி அவளின் வெறுமையான கண்கள் ஊடாக என்னைக் கத்தியால் குத்தியது போலிருந்தது. நான் அழுகையோடு சத்தம் போட்டேன், “அந்தப் பாவி! நான் இராணுவமுகாமிற்குப் போய் நீதி கேட்கப்போகிறேன்!”

அம்மா எழும்பிவந்து எனது முகத்தில் அறைந்தா. “உனக்குப் பைத்தியமா, ஜெயா? அவங்கள் உனக்கு என்ன செய்வார்கள் என்று கடவுளுக்குத்தான் தெரியும். இந்த மண்ணிலே தமிழர்களுக்கு நீதி கிடைக்காது. உண்மையிலேயே உனக்கு உதவ விருப்பமிருந்தால், உனக்குப் புலிகளுடன் இருக்கும் செல்வாக்கை வைத்து சீதாவை இந்த நாட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடு. இவள் மெல்பேர்ணுக்குப் போகவேண்டும் – அங்கே சுபா இவளைக் கவனித்துக்கொள்வா. ஆனால் ஞாபகம் வைத்துக்கொள் – இவள் கர்ப்பமென்று ஒருவருக்கும் தெரியாது. நாங்கள் முதலில் முக்கியமாகச் செய்யவேண்டியதென்னவென்றால், இதைக் கலைத்துவிடுவதுதான்.””

என்னுடைய பக்கம் திரும்பிய ஜெயா பெரியம்மாவின் கண்கள் வேதனையால் நிறைந்திருந்தது.

“என்னை மன்னித்துவிடு, அருவி. இப்போது நீ இல்லாத ஒரு உலகத்தையே எங்களால் நினைத்தும் பார்க்கேலாது. ஆனால் அப்போது, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தோம் – அந்த இரவு நடந்த பயங்கரமான சம்பவத்தை முற்றாக நினைவிலிருந்து அகற்றத் தவித்தோம் - சீதாவைக் காப்பாற்றவேண்டும் என்று தவித்தோம்.

நான்தான் உள்ளதற்குள் மிகவும் மோசமான ஆள். கர்ப்பத்தைக் கலைப்பது ஆபத்தான நிலையை அடைந்ததும் தத்துக் கொடுக்கலாமென்று நான் அபிப்பிராயம் சொன்னேன். ஆனால் அப்போது …. அம்மாவில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. ஒருநாள் அவ சொன்னா, “இந்தக் குழந்தை மிகவும் பெறுமதி வாய்ந்தது.”

எனக்குப் பயங்கரக் கோபம் வந்தது. சத்தம் போட்டேன், “ஒரு சிங்கள அரக்கனின் பாவப்பட்டுப் பிறந்த குழந்தை எப்படி பெறுமதி வாய்ந்ததாய் இருக்கமுடியும்?”

அம்மாவுடைய ஒரே வார்த்தைகள்: “ஜெயா, எனது பார்வையிலே இந்தக் குழந்தையில் ஒரு  சொட்டுச் சிங்கள இரத்தமும் இல்லை. இது சுத்தமாகத் தமிழ் – எங்கள் குடும்பத்தின் முதல் பேரப்பிள்ளை, எங்கள் நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கம்.””

ஜெயா பெரியம்மா தன்னை நிலப்படுத்த ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்தா.

“அவவிற்குப் புத்தி பேதலித்துவிட்டதென்று நினைத்தேன் – முக்கியமாக ஊரார் மத்தியில் ஒரு காமவெறி பிடித்த இராணுவத்தினலால் சீதா  கற்பழிக்கப்பட்டுக் கர்ப்பமாயுள்ளாளென்று கண்ணீர்விட்டுக் கதறியிருந்தா. ஏன் அப்படிச் செய்தீர்களென்று அம்மாவைக் கேட்டேன்.

அவ சொன்னா, “கர்ப்பமானதை மறைக்கமுடியாது. அவள் கலியாணம் முடிக்கவில்லையென்று எல்லோருக்கும் தெரியும் – வேறை என்ன விதமாக வளர்ந்து வரும் வயிற்றை நாங்கள் விளங்கப்படுத்தமுடியும்?”

அம்மாவில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவவும் அப்பாவும் சீதா கற்பழிக்கப்பட்ட மறுநாள் வன்னியிலிருந்து வந்து காவியா, முத்து மற்றும் சீதா ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பதைக்கண்டவுடன் அவவின் கோபம் என்மேல் பாய்ந்தது. “நீ எங்கே இருந்தாய், ஜெயா? உன்னுடைய தங்கையைக் காப்பாற்ற நீ ஏன் இங்கிருக்கவில்லை? உன்னுடைய சொந்த வீட்டிலேயே இப்படியான அசிங்கம் நடப்பதைத் தடுக்கமுடியாவிடில் உன்னுடைய வீரசாகசத்தால் என்ன பிரயோசனம்?”

அந்த வார்த்தைகளின் கனத்தினால் நான் புழுப்போல நெளிந்தேன். அன்று மாலை ஊர் மக்களை எப்படியாக வன்னிக்கு பத்திரமாகக் கொண்டு  செல்லலாமென்று தீர்மானிக்கும் புலிகளின் கூட்டத்தில் இருந்துவிட்டு, ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தபோது வீட்டிற்குத் திரும்பிவந்தேன். இரவு வெளியே தங்கியிருக்க யோசித்தபோதிலும், தங்கைமார் தனித்திருக்கிறார்கள் என்பதால் எனது உயிரைப் பணயம் வைத்து தெருக்களூடாக வீட்டிற்கு வந்தேன். என்னுடைய தங்கையை என்னால் காப்பாற்றுவதற்கு நான் பிந்திவிட்டேன் என்பது புரிந்தபோது  நான் எப்படி உடைந்துபோனேன் என்பதை உன்னால் கற்பனைசெய்து பார்க்கமுடியுமா?

தொடர்ந்துவந்த நாட்களில் நான் ஆற்றாக்கொடுமைக்கும் கோபத்திற்கும் மத்தியில் ஊசலாடினேன். அம்மா என்னை ஏசியபோது என்னால் முடிந்ததெல்லாம் தலையைக் குனிந்து நிற்பதுதான். ஆனால்  - ஒரு வாரத்திற்கு முன்னாடி இந்தச் சம்பவம் இறப்பதைவிட மோசமானதென்று சொன்னவ  - இப்போது எங்கள் அன்பான சீதாவிற்கு ஏற்பட்ட துயரத்தை முழு உலகிற்கும் சத்தம் போட்டுச் சொல்கிறா.”

ஜெயா பெரியம்மாவின் தோள்கள் சரிந்தன. நடுங்குகின்ற கைகளினால் முகத்தைத் துடைத்தா. அறைக்குள் இருந்த காற்று தடிப்பானது போலவிருந்தது, கடந்தகால நினைவுப் பேய்கள் எங்களை அழுத்தின.

சுபா பெரியம்மாவின் பார்வை என்மேல் நிலைகுத்தியது. ஒரு திடீர் நடுக்கம் அவவின் உடம்பிலே தெரிந்தது.

மிகவும் மென்மையாகப் பேசினா. “மெல்பேர்ணுக்கு சீதா வருவதற்கு முன்னர், அவள் எதிர்கொண்ட கஸ்டங்களை மனதில் கொண்டு அவளை நல்லவிதமாகக் கவனிக்கும்படி எனது நண்பர்களுக்குச் சொல்லும்படி சொன்னா. ஆட்கள் சும்மா கண்டதையும் கதைப்பார்களென்றும், அது விவேகமானதாவென்றும் கேட்டேன். ஆனால் அதுதான் சீதாவிற்கு இலகுவானதென்றா. இல்லாத புருசனைப்பற்றியோ அல்லது குழந்தையின் தகப்பன் பற்றியோ ஒருவரும் கேட்கமாட்டார்கள். கர்ப்பழிப்பின் மூலமாகத்தான் குழந்தை உருவாகியிருக்கிறதென்று அனுமானிப்பார்கள்.”

ஈரமான கண்களுடன் சுபா பெரியம்மா என்னைப் பார்த்தா. “அவவுடைய வார்த்தைகளின் தெரிவுபற்றி நான் ஆச்சரியப்பட்டேன். ஆட்கள் ஏன் அனுமானிக்கவேண்டும்? அது உண்மையில்லையா?   

அந்த நேரத்தில், ஒரு விரக்தியடைந்த பெண் நல்லது நடக்கவேண்டுமென்ற நம்பிக்கையில் சொல்லிய குழப்பமான  வார்த்தைகளென்று அதை ஒதுக்கிவிட்டேன். ஆனால் …… ஆனால் முறையற்ற கர்ப்பத்தினால் வரும் அவமானத்தை மறைப்பதற்காக வேண்டுமென்றே அந்த பாலியல் கொடுமையை பரப்பியிருந்தால்?”

மகா பெரியம்மா மட்டும் சந்தேகத்துடன் இருந்தா. “ஏன்னால் நம்பமுடியாமல் இருக்கிறது,” தலையை ஆட்டியபடியே சொன்னா. “எப்படி ---- சீதாவிற்கு யார் இப்படிச் செய்திருக்கமுடியும்? அது எப்படி இதை நான் கவனிக்காமல் இருந்திருப்பேன்?”

“நீங்கள் அங்கே இல்லை, அக்கா. நீங்கள் அப்போது சிவாவுடன் வன்னியில் இருந்தது ஞாபகம் இருக்கிறதா? அந்த சிப்பாயைக் கொன்ற மறுநாள் சிவா வல்வெட்டித்துறையை விட்டுப் போனபோது, உங்களுக்குச் சுகமில்லாதபடியால் அவருடன் நீங்கள் போகவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் உங்களுக்குச் சுகம் வந்தவுடன், நான் உங்களுடன் கூட வந்து, நீங்கள் சிவாவுடன் இணைந்தீர்கள்.”

ஜெயா பெரியம்மா நிறுத்தி நிறுத்திச் சொல்லிக்கொண்டே மகா பெரியம்மாவைக் கரிசனையுடன் பார்த்தா.

“அது உண்மைதான்,” மகா பெரியம்மா மெதுவாகச் சொன்னா. “அன்றைய தினம் சிவா தப்பியோடும்போது நான் கர்ப்பமாயிருந்தேன், காலையில் வாந்தி எடுக்கும் தொந்தரவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அவரைத் தாமதிப்பதில் அர்த்தம் இல்லையென்றும், சிறிது சுகம் வரும்வரை பொறுத்திருந்து பியாணம் செய்யலாமென்றும் அம்மா சொன்னா. ஆனபடியால்தான் கொஞ்ச நாட்களின் பின்னர் நீ அந்த ஆபத்தான பயணத்தைச் செய்யவேண்டிவந்தது, ஜெயா.”

நான் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தேன். ஆனந்த் என்னைவிட இளமையானவன். உண்மையில் பெரியம்மாக்களுடைய எல்லாப் பிள்ளைகளும் என்னைவிட வயது குறைந்தவர்கள். நான் உருவாகுவதற்கு முன்னாடியே மகா பெரியம்மா கர்ப்பமாயிருந்தது எப்படிச்  சாத்தியமாகும்?

என்னுடைய முகத்திலிருந்த அதிர்ச்சியை அவதானித்த மகா பெரியம்மா சொன்னா, “அந்தக் கர்ப்பத்தைப்பற்றி நான் அதிகம் கதைப்பது கிடையாது, அருவி, ஏனென்றால் அந்தக் குழந்தையை நான் இழந்துவிட்டேன்.”

ஒரு சிறிய விம்மல் வந்தபோதும் உதட்டை இறுக்க மூடிக்கொண்டு தொடர்ந்தா. “சிவாவும் நானும் வன்னியில் ஒரு சிறிய கொட்டிலைக் கட்டினோம். நிலைமைகள் மிகக் கடுமையாக இருந்தன, ஆனால் ஒரு குழந்தையைப் பெறப்போகிறோம் என்ற எதிர்பார்பில் ஏற்பட்ட உற்சாகத்தினால் அந்தக் கஸ்டங்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் சில வாரங்களுக்குப் பின்னர், ஒரு இரவு கழிவறைக்குப் போவதற்காக நான் முழித்தபோது கடுமையான  வயிற்றுவலி ஏற்பட்டது. இரத்தப்போக்கு நிற்கவில்லை. இரத்தப்போக்கை நிறுத்தவும் என்னைச் சாந்தப்படுத்தவும் சிவா கடுமையாக முயற்சித்தார். ஆனால் பலனில்லை – என்னுடைய குழந்தை இறந்துவிட்டது. நானும் இறந்து விடுவேனென்று – வலியினால் இல்லை, துயரத்தினால் – நினைத்தேன்!”

மகா பெரியம்மாவின் கண்களில் பழைய நினைவுகள் ஊசலாடின, அவவின் சாந்தமான முகத்தில் பழைய துயரம் எதிரொலித்தது.

தனது கதையைத் தொடர்ந்தா, “காலையில் அம்மாவை வரச்சொல்லிச் செய்தி அனுப்பலாமென்று சிவா சொன்னார். ஆனால் அம்மாவும் அப்பாவும் அதிகாலையில் வந்தார்கள். உங்கள் எல்லோரையும் தனியாக இந்த ஆபத்தான காலகட்டத்தில் விட்டுவிட்டு அவர்கள் வந்தது எங்களால் நம்பமுடியவில்லை. ஏனென்று நான் கேட்டபோது, என்னைப் பார்க்கவேண்டுமென்று ஒரு தீவிரமான உந்துதல் ஏற்பட்டதாக அம்மா சொன்னா. அவ வந்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்த நான், நன்றியுணர்வுடன் அவவின் மடியில் சாய்ந்தேன். என்னைமாதிரி அவவும் உடைந்து போயிருந்தாலும், என்னை இறுக அணைத்தவாறே, நான் திரும்பவும் உண்டாவேனென்று காதில் முணுமுணுத்தா. மறுநாள் அதிகாலையிலேயே, மற்றப் பிள்ளைகளை அதிக நாட்கள் தனித்து விடக்கூடாதென்று சொல்லி ஊருக்குப் புறப்பட்டனர்.”

நாலக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தபோது, அம்மாச்சியும் பாட்டாவும் அங்கில்லாததற்கு இதுதான் காரணம்,  நான் நினைத்தேன். அதுதான் அம்மா, முத்து, காவியா சித்திகள் தனியே இருந்திருக்கிறார்கள். வயதான பெற்றோர்கள் இருந்திருந்தால் நாலக திரும்பிப் போயிருப்பானோ?

நான் தலையை உதறினேன். நடந்தது முடிந்துவிட்டது – வேறு விதமாக நடந்திருக்கலாமென்று கற்பனை செய்வதில் அர்த்தமில்லை. என்னையறியாமலே எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது, உள்ளுணர்வினால் உந்தப்பட்டு எனது கைகளால் நடுங்கும் உடலைத் தழுவிக்கொண்டேன். களைப்பு என் உடல் பூராகப் பரவியது. என்னை வந்து காப்பாற்றுமாறு எனது கண்கள் Brad ஐ அங்குமிங்கும் தேடின. சொல்லி வைத்தாற்போல அவர் என் பக்கத்தில் வந்தார். 

“உனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை, அருவி. உண்மையில் எல்லோருக்கும் அது தேவை.” அவர் அறையைச் சுற்றிப்பார்த்துவிட்டு எனது தோளை அழுத்தினார்.

Brad வார்த்தைகளைக் கேட்டவுடன், உமா  சட்டென எழும்பினாள். “போய் நித்திரை கொள், அருவி. அம்மாவும் நானும் இப்போது வீட்டிற்குப் போகவேண்டும். நாங்கள் நாளைக்குத் திரும்பவும் வருவோம், ஆனால் நீ தனிமையில் இருக்க விரும்பினால் வரமாட்டோம்.”

இல்லை, தனிமையில் இருக்க எனக்கு விருப்பமில்லை! கிட்டத்தட்ட சத்தம் போட்டுவிட்டேன், அதற்குப்பதிலாக அவளுடைய கையை இறுகப் பற்றினேன். “தயவுசெய்து நாளைக்கும் வா, உமா. தான் காலையில் வந்து விசாரணையின் அன்றைய நிலமையைச் சொல்வதாக துப்பறிவாளர் Williams சொல்லியிருந்தார். நீங்கள் எல்லோரும் இங்கிருந்தால் நல்லது.”

என்னுடைய பெரியம்மாக்கள் உறைந்துபோயிருந்தார்கள், ஈரமாயிருந்த கண்களுடன், எதையோ யோசித்துக்கொண்டு தங்களைச் சுற்றி சுக்குநூறாகும் யதார்த்தத்தை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாய்க்குள்ளே பலகேள்விகளிருந்தபோதும், ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. எனது இதயம் அவர்களுக்காகத் துடித்தது – அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத பயங்கரமான உண்மை அவர்கள் கண் முன்னால் வெளிப்படுகிறது, அதனுடைய தாக்கம் அவர்கள் முகத்தில் பதிந்திருந்தது.

Zoe இன்னமும் தனது போனைத் தனது கையில் வைத்துக்கொண்டு என்னருகில் அமர்ந்தாள்.

“அருவி, நாலக நாளைக்கு வருவதில் உனக்கு ஆட்சேபனை இருக்கிறதா?” என்னுடைய முகபாவம் எப்படி இருக்கிறதென்று பார்த்தவாறே தயக்கத்துடன் கேட்டா. “எங்களுடன் இருக்க அனுமதிக்குமாறு கெஞ்சிக்கேட்டுச் செய்தி அனுப்பியுள்ளார். சீதாம்மாவிற்கு என்ன நடந்ததென்று தெரியாமலும், பேசுவதற்கு ஒருவரும் இல்லாமலும் தனக்கு பைத்தியம் பிடித்து விடுமென்று சொல்கிறார்.”

நான் அவளை உறுத்துப் பார்த்தேன். நாலகவைப்பற்றி கிட்டத்தட்ட முற்றாக மறந்துவிட்டேன்.

அவர் என்னுடைய தகப்பன் இல்லைத்தானே!

தான் நேர்மையாக இருக்கவேண்டுமென்று அவருக்குச் சொன்னதின் காரணம் இதுவாகத்தான் இருக்குமோ? – அவர்கள் இருவருக்குமிடையில் ஒருவித இரகசியமும் இருக்கக்கூடாது. அவரை இலகுவாக மன்னி்ப்பதற்கு இதுதான் காரணமோ?

அவவுக்கு  எதிராகச்  செய்த  அவருடைய கொடூரமான  குற்றத்தினால் முறைகெட்டு உண்டாகிய கர்ப்பத்தால் வரும் பெருத்த அவமானத்திலிருந்து தப்பமுடிந்தது – அவவின் குடும்பமானத்தின் அடித்தளத்தையே அந்தக் கர்ப்பம் உடைத்திருக்கும்.

சத்தமின்றுத் தலையாட்டினேன். கடந்த சில வாரங்களாக நாலக மேல் அம்மா கொண்டிருந்த நட்பை யோசித்து, அவரைச் சிறிது மரியாதையுடன் நடத்துவது நான் அம்மாவிற்குச் செய்யும் கடமையாகும்.

“நானும் நாளை காலை வந்துவிடுகிறேன். எனக்கு வேறு வேலை இல்லாமல் இல்லை – சீதாவுடைய கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்று பொலிஸ் உணருவதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ என்று யோசிக்கிறேன். கோலாலம்பூருக்குத்தான் நான் திரும்பிப் போகவேணுமென்று கட்டாயம் இல்லை. நியூ யோர்க்கிற்கு போவதிலும் எனக்கு மகிழ்ச்சியே. என்னுடைய நெருங்கிய நண்பன் அங்கே இருக்கிறான். என்னை வரச்சொல்லித் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறான். துப்பறிவாளர் Williams ஐ நாளை பார்க்கும்போது, அவர் என்னை இதற்கு மேலும் தடுத்து வைத்திருக்க முடியாதென்று சொல்லப்போகிறேன், ஏனெனில், ஜெயா! நான் அங்கிருந்து கிளம்பிய பின்னர் நீ சீதாவை உயிருடன் பார்த்திருக்கிறாய்."

போவதற்கு முன்னர் மோகன் எங்களைப் பார்த்த பார்வை அவரின் எரிச்சலை வெளிப்படுத்தியது.

அன்றிரவு, எனது உடம்பு வலித்தபோதிலும், மனது வெறுமையாக இருந்தபோதிலும் எனக்கு உறக்கம் வர மறுத்தது. மணித்தியாலக் கணக்காக விழித்திருந்தேன், நான் யாரிடமிருந்து உருவானேன் என்ற கேள்வியிலிருந்து தப்பமுடியவில்லை. ஒரு DNA சோதனைதான் இலகுவான வழியென்றபோதிலும், சோதனை செய்ய ஒரு தகப்பன் இல்லாதபோது அந்தச் சோதனையால் ஒரு பலனும் இல்லையென்பது  ஒரு கசப்பான உண்மை.

மறுநாள் காலை பல்லுத் தீட்டும்போது, கண்ணாடியருகே எனது முகத்தைக் கொண்டுபோய் எனது தோலுக்கடியில் புதைந்து கிடக்கும் உண்மையைத் தேடி நோட்டம் விட்டேன். ஆச்சரியமாயிருந்த போதிலும், பல காலம் நான் சுமந்து வந்திருந்த சிங்களப் பாரம்பரியத்தை விட்டுவிட நான் இன்னும் தயாராயிருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்னரே எனது இருப்பை அந்தக் கதை விபரித்துள்ளது – இப்போது, நான் யார் என்பதைத் திரும்பவும் கண்டு பிடிக்கவேண்டும்.

“அருவி! அருவி!” வரவேற்பறையிலிருந்து வந்த Brad  இன் குரல் எனது எண்ணோட்டத்தைக் கலைத்தது.

நான் பதில் சொல்லாதபடியால், குளியலறைக்குள் எட்டிப்பார்த்து மெதுவாகச்சொன்னார், “ நாலக இங்கே வந்துள்ளார். Zoe அவருடன் நிற்கின்றாள் – அவர் உனது உண்மையான தகப்பன் இல்லையென்று நாங்கள் நினைப்பதை அவருக்குச் சொல்லலாமாவென்று கேட்கிறாள். அவரும் சீதாவும் நண்பர்களாக பழகியிருப்பதால் அவ தன்னுடைய முந்திய காதல் உறவுகளைப்பற்றி அவரோடு கதைத்திருக்கலாமென்று Zoe அபிப்பிராயப்படுகிறாள்.”

எனக்குள் சீறிப்பாய்ந்த பயங்கர அலைகளைக் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். நிச்சயமாக, அம்மாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி அறிவதற்கு அவவைக் கற்பழித்த ஒருவனின் வார்த்தையில் தங்கியிருக்கப் போவதில்லை. அந்த நினைப்பே மிகவும் அருவருப்பாய் இருந்தபோதிலும், Zoe வின் வாதத்திலிருந்த உண்மையை விலக்கி விடமுடியாது, ஆகவே எனது சம்மதத்தை Brad  ஐ நோக்கி மெதுவாகத் தலையசைத்ததன் மூலம் தெரிவித்தேன்.

சிறிது நேரத்தின் பின்னர் வரவேற்பறைக்குள் நான் நுழைந்தபோது, நாலக என்னைப் பார்த்தபோது இருந்த வெறுமை, வார்த்தைகளை விடத் தெளிவாகச் சொல்லியது. அவருடைய  கண்கள் என்னுடைய கண்களைச் சந்தித்தபோது, அவருடைய ஒவ்வொரு அணுவிலிருந்தும் துயரமும் ஏதோ ஒன்றை இழந்து விட்டதுமான உணர்வும் வெளிப்பட்டன. விலைமதிப்பற்ற ஏதோ ஒன்று தன்னிடம் இருந்து நிரந்தரமாக விலகிச் செல்வதைத் தடுப்பதற்கான இறுதி நம்பிக்கையால் கண்கள் நிரம்பியிருந்தன.

நானும் ஒன்றும் பேசவில்லை. இவர் எனது தந்தையில்லை என்பதில் ஏற்பட்ட அதிர்ச்சி முதன்முதலில் இவர்தான் எனது தாயைக் கெடுத்தவன் என்று அறிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சிபோல  பிரமாண்டமாயிருந்தது.

பின்புலத்தில், எனது பெரியம்மாக்களும் குடும்பங்களும் வந்த சத்தம் கேட்டபோதிலும், ஆயிரம் சிந்தனைகள் எனது மனதிற்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்க நான் உறைந்து போயிருந்தேன். தனக்கேயுரிய பொறுமையின்மையுடன் மோகன் வேகமாக உள்ளே வந்தபோதும், நாலகவும் அசையவில்லை.

“இது உங்களுக்கு ஒரு அதிர்ச்சியாயிருக்கலாம், நாலக. சீதா தனது கர்ப்பத்தையிட்டு உங்களிடம் எப்போதாவது பேசினாவா?” என்று சிவா பெரியப்பா கேட்டபோதுதான் அவர் இறுதியாக என்னைப் பார்ப்பதை விடுத்து பெரியப்பாவை நோக்கித் திரும்பினார். அப்போதும் அவர் பேசவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் இல்லையென்கின்ற அவரது தலையசைப்பு.

ஆரம்பத்தில் மெதுவாக அவரிடமிருந்து வெளிப்பட்ட விம்மல் கட்டுக்கடங்காத அழுகையாக மாறி, அவருடைய ஆன்மாவின்  ஆழத்திலிருந்து வருவதுமாதிரி அப்பட்டமான வேதனை வெளிவந்தது.

“இதெல்லாம் என்னுடைய பிழை!    

நான் மாத்திரம் இப்போது சீதாவின் வாழ்க்கைக்குள் வந்திராவிடில், உண்மையைச் சொல்லவேண்டி அவள் ஒருபோதும் நினைத்திருக்கமாட்டா. அந்த அரக்கனை அவள் சந்திக்க வந்திராது!

எனக்கு உண்மை தெரியத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை நான் தான் அருவியின் அப்பா!”

துப்பறிவாளர் Williams நேரடியாக அவரைக் கேள்வி கேட்டிருக்காவிடில், அவர் தனது இதயத்தை உருக்கும் அழுகையைத் தொடர்ந்திருப்பார்.

“அவவைக் கர்ப்பமாக்கினவன்தான் அவவைக் கொன்றிருப்பான் என்று சொல்கிறீர்களா?”     

 

 

அத்தியாயம் 29 – இறுதியில் உண்மை

                   வெளிப்பட்டது

அருவி

28 ஜூலை 2025

மெல்பேர்ண்

துப்பறிவாளர் Williams க்காக Zoe  கதவைத் திறந்ததை நாங்கள் ஒருவரும் கவனித்திருக்கவில்லை. அவவின் உரத்த குரல் எங்களைத் திடுக்கிட வைத்தபோதிலும் அவ கேட்ட கேள்வி அதைவிடத் திடுக்கிடவைத்தது. நேற்றிரவு நாங்கள் கண்டுபிடித்த விடயத்தை Zoe  அவருக்குச் சொல்லியிருக்கவேண்டும், நான் நினைத்தேன்.

துப்பறிவாளர் Williams வரமுன்னரே மன உளைச்சலில் இருந்த நாலக பதில் சொல்வதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

“ஓம்,ஓம்,”  அவர் சத்தம் போட்டார். “அவ அவனை நேருக்குநேர் எதிர்கொண்டு, அருவியிடமிருந்தும் என்னிடமிருந்தும் அந்த உண்மையை இனிமேலும் மறைக்கப் போவதில்லை என்று சொல்லியிருக்கவேண்டும் – அதை மறிப்பதற்காக அவன் கொலை செய்திருக்கவேண்டும்!”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்,” மோகன் மெதுவாகச் சொன்னார். “நாலக, உன்னுடன் தான் சிநேகிதமாய் வந்துள்ளதாக சீதா சொன்னாள், யாருக்குத் தெரிந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லையென்றும் சொன்னாள்.” மோகன் இதைச் சொல்லும்போது ஏதோ குழப்பத்தில் இருப்பதுமாதிரித் தெரிந்தது – தானும் ஒரு புதிரின் அங்கமாக இருக்கிறேனென்பதைப் புரியாமல், அந்தப் புதிரை விடுவிப்பதற்கு முயலுவது போலிருந்தது.

துப்பறிவாளர் Williams அவரை ஆழ்ந்து நோட்டம் விட்டார். பின்னர் அறையைச்சுற்றி ஊடுரிவிப் பார்த்தார். “நீங்கள் எல்லோரும் இங்கிருப்பது எனக்கு மகிழ்ச்சி. எங்களுடைய விசாரணையில் இதுவரை நாங்கள் கண்டறிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.”

தனக்கு இருப்பதற்காக ஒரு நாற்காலியைத் தந்துதவிய Brad  ஐப் பார்த்து நன்றியுடன் சிரித்தார்.

அவ இருந்தவுடன், அவவின் கவனத்தை ஈர்ப்பதற்காக மோகன் கேட்டார். “நல்லது, விரைவாகச் சொல்லுங்கள், துப்பறிவாளரே. அந்தக் கொடூரமான கொலைக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்று இப்போது தெரிகிறதுதானே, தயவுசெய்து என்மேலுள்ள பிரயாணத்தடையை நீக்கிவிடுங்கள் – நான் நியூ யோர்க்கிற்கு உடனடியாகப் போகவேண்டும்!”

“கடைசியாக நாங்கள் கதைத்தபோது, நீங்கள் கோலாலம்பூருக்கு போவதற்கு அவசரப்பட்டீர்கள், மோகன். உங்களுக்கு அங்கே அவசர வணிகவேலை இருப்பதாகச் சொன்ணதாக நினைத்தேன்.”

“சொன்னேன்தான், ஆனால் அப்போது என்னை நீங்கள் போகவிடாததால் அந்த வணிக ஒப்பந்தத்தை இழந்துவிட்டேன். நியூ யோர்க் ஒப்பந்தத்தையும் நான் இழப்பதற்கு நீங்கள் காரணமாயிருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்,” மோகனுடைய  குரலில் ஆக்ரோஷம் தெரிந்தது.

“என்னவென்று பார்ப்போம்.” துப்பறிவாளர் Williams அவரை நோக்கிச் சிறிதாகத் தலையசைத்துவிட்டு எங்களை நோக்கித் திரும்பினார்.

“சீதாவின் வயிற்றிலிருந்த கத்திதான் அவவின் இறப்புக்குக் காரணம் என்பதை உறுதிப் படுத்தியுள்ளோம். கண்டுபிடிக்கக் கூடியதான ரேகை ஒன்றும் இல்லை – சீதாவின் ரேகையும் இல்லை. குற்றவாளி ஓடுவதற்கு முன்னர் நன்றாகத் துடைத்திருக்கிறார்.” 

“ஆனால் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லையே, துப்பறிவாளரே?” ஆனந்த் படக்கெனக் கேட்டான். “எத்தனையோ குற்றவியல் நாடகங்கள் சுற்றவர நடந்து கொண்டிருக்கும்போது, கைரேகைகள் காட்டிக்கொடுத்து விடுமெனக் குற்றவாளிகளுக்குத் தெரியும்.”

துப்பறிவாளர் Williams தலையசைத்துவிட்டுத் தொடர்ந்தார். “நாங்கள் CCTV கமேராக்களை நன்றாக அலசிப் பார்த்துவிட்டோம். நாலக தனது இருப்பிடத்தில் முழு சாயந்தரமும், மாலையும் இருந்திருக்கிறார் என்பது உறூதிப்படுத்தப்பட்டுள்ளது.

Zoe, உன்னுடைய அம்மாவின் தெருவில் உள்ள காட்சிகளின்படி சீதாவின் வீட்டிலிருந்து மதியம் திரும்பியபின் அவ தனது வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.”

Zoe  வருத்தத்துடன் புன்னகைத்தாள். “பல வருடங்களாகப் பலவிதமான ஆண்கள் அம்மாவின் வீட்டிற்குள் செல்வதும் வெளியேறுவதுமாக இருந்ததைப் பார்த்துப் பயந்த அயலவர்கள் பூட்டிய பாதுகாப்புக்கான கமெராக்கள் இப்போது அம்மாவுக்குச் சாதகமாக வந்துள்ளதென நினைக்கிறேன்      

துப்பறிவாளர் Williams இன் உதடுகளில் ஒரு சிறு அசைவு தென்பட்டது, அவ தொடர்ந்தா. “Frank கொலை நடந்த நேரத்திற்கும் அப்பால் Dandenong இல் இருந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளோம். ஆகவே நாலக, Susan, Frank ஆகியோர்  சந்தேகநபர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள். எங்களுக்குத் தெரிந்தவரை இது ஒரு காரணமில்லாமல் நடந்த கொலையோ அல்லது களவெடுக்கப்போய் நடந்த கொலையோ இல்லை.”

”ஆனால் அம்மாவை யார் கொல்ல விரும்பியருப்பார்கள்?” நான் படபடத்தேன்.

என்னுடைய வார்த்தைகள் வாயை விட்டு வெளியே வந்த நேரத்திலே, நான் முணுமுணுத்தேன். “அந்த மனிதன் …. எனக்கு உயிர் கொடுத்த அந்த மனிதன்.”

அவவைப் பேசவிடாமல் தடுப்பதற்காகக் கொன்றானா? – அவ தனது பெயரை வெளியில் சொல்லாமல் கடந்த காலத்தை மறைப்பதற்கா? இரும்புச்சட்டிக்குள் இருந்து நேரடியாக நெருப்பில் விழுந்தது போலுணர்ந்தேன் – நான் ஒரு கற்பழிப்பாளனின் மகளில்லை, மாறாக ஒரு கொலைகாரனின் மகள்!

“அது எப்படிச் சாத்தியமாகும்? சீதா கதைக்க விரும்பிய அந்த மனிதன் – அவன் மெல்பேர்ணில் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. அவ அவனுடன் தொ்ர்பு கொள்வதற்கு ஒரே வழி தொலைபேசிதான்.” ஜெயா பெரியம்மா துப்பறிவாளர் Williams ஐப் பார்த்துச் சொன்னபோது அவவின் குரல் தழும்பியது. “நீங்கள் அவவின் போன் பட்டியலை ஆராய்ந்திருப்பீர்கள்தானே?”

துப்பறிவாளர் Williams ஓமென்று தலையாட்டவும் ஜெயா பெரியம்மா தொடர்ந்தா.

“வல்வெட்டித்துறையில் சீதாவிற்கு ஒரு ஆண் சகவாசம் இருந்திருக்கமென்பது கிட்டத்தட்ட நடக்கமுடியாத விடயம்  - அதிலும் எங்களுக்குத் தெரியாமல். சீதா தனிமையில் அதிகம் வெளியே போவதில்லை – பள்ளிக்கூடத்திற்கும் அல்லது அம்மா சொல்கின்ற சின்ன வேலைக்கும் மாத்திரம் போவாள். எங்களில் ஒருவரும் அதிகம் வெளியே போவதில்லை: போக அனுமதிக்கப்படவில்லை. ஒரு பையனும் எங்கடை எல்லையைத் தாண்டி வந்ததில்லை – சுபாவுடன் நட்பாக இருந்த காலத்தில் நீ கூட அனுமதிக்கப்படவில்லை, தேவா!”

தேவா பெரியப்பாவும் சுபா பெரியம்மாவும் ஒரு கண நேரம் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் ஓமென்று தலையசைத்தனர். பாடசாலைக்குப் போய்வரும் நேரங்களில் திருட்டுப்பார்வை பார்ப்பதைத்தவிர வசந்தி மாமி மூலம் பரிமாறப்பட்ட கடிதம் மூலமே அவர்களின் காதல் வளர்ந்தது.

அந்த அறையை கனமான எச்சரிக்கை கலந்த மௌனம் சூழ்ந்துகொண்டது – கடந்தகாலத்தைப்பற்றி நாங்கள் நினைவு கூர்ந்ததினால், இதுவரைகாலமும் புதைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்று, அமைதியில்லாமல் வெளியே வரத் துடித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்று கிளறப்பட்டது. அதற்கு எங்களால் ஒரு பெயரும் சொல்லமுடியாதபோதிலும் அதன் பிரசன்னத்தை எல்லோரும் உணர்ந்தோம்: எட்டமுடியாத தூரத்திலே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அந்த உண்மை பேசப்படுவதற்குத் தயாராக இருந்தது.

துப்பறிவாளர் Williams இன் குரல் காற்றைக் கிழித்துக்கொண்டு கூர்மையாகவும், சிநேகமற்றமுறையிலும், காரியத்தோடும் வெளிப்பட்டது.

“ஆனால் உங்களுடைய எல்லையை ஒரு பையன் தாண்டியிருக்கிறான் – அவனை உங்கள் பெற்றோர் அனுமதித்தது மாத்திரமன்றி சில வாரங்களாக அடைக்கலம் கொடுத்துள்ளனர்.”

ஒரு கணம் என்னால் அவ சொன்னதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ என்னத்தைப்பற்றிக் கதைக்கிறா?

பின்னர் அவவுடைய பார்வையைக் கவனித்தேன் – நிதானமாக, கண்வெட்டாமல் – சிவா பெரியப்பாவின் மேல் பதிந்திருந்தது.

இல்லை. இல்லை! இவ அந்த அர்த்தத்தை நினைக்கவில்லை -----

துப்பறிவாளர் Williams சிவா பெரியப்பாவை எனது தந்தை என்று குற்றம் சாட்டுகிறார்!

காற்றுத் தடிப்பானது. என்னால் விழுங்கமுடியவில்லை. என்னுடைய நெஞ்சு எரிந்தது: எனது விரல்கள் உள்ளங்கையைத் தேய்த்தபடி இருந்தன , நகங்களால் உள்ளங்கையில் காயம் வரும்வரை. சத்தம் போட்டுக் கத்த நினைத்தேன், அதை மறுக்க நினைத்தேன்; ஆனால் அவநம்பிக்கை, திகில், துக்கம் எல்லாமே ஒன்றாகக் கலந்து ஒரு உடைந்த மூச்சு வெளிப்பட்டது.

எனது கண்கள் மகா பெரியம்மாவையும் ஆனந்தையும் நோக்கித்  திரும்பின. மகா பெரியம்மா சத்தம் போட்டு அழும்போது அவவின் முழங்கால்கள் தளர்ந்தன. ஒரு கணம் உறைந்துபோய் நின்ற ஆனந்த், உள்ளுணர்வு தூண்டப்பட்டவனாய் பெரியம்மா விழுவதற்கு முதல் தாங்கிப்பிடித்தான்.

ஆனந்துடைய மூச்சு நுரையீரலுக்குள் செல்லக் கஸ்டப்படுவதுபோல சிறிது சிறிதாயும் சீரற்ற வெடிப்புக்களாகவும் வந்தது. அவனுடைய முகத்திலிருந்த நிறம் முற்றாக வெளுத்துவிட்டது. அவனுடைய கண்கள் விரிந்தும், வெட்டாமலும் அவனது தந்தையின் முகத்தை அச்சத்தோடு பார்த்தன – அவனுடைய மௌனம் அவன் சாட்டும் குற்றத்தை விடப் பெரிதாக ஒலித்தது.

இவை அனைத்திற்கும் நடுவில் துப்பறிவாளர் Williams தடுமாறவில்லை. அவவின் பார்வை -நட்பில்லாமல், விட்டுக்கொடுக்காமல் – சிவா பெரியப்பாவில் நிலைத்துநின்று தான் முன்னுக்கு வைத்த குற்றச்சாட்டை மறுக்கும்படி சவால் விட்டது.

நாங்கள் எங்கள் மூச்சை அடக்கிக்கொண்டு காத்திருந்தோம். இந்த அபத்தமான குற்றச்சாட்டை எதிர்ப்பாரென்றும், துப்பறிவாளரின் திறமையற்ற செயற்பாட்டைக் கண்டிப்பாரென்றும், அம்மாவைப்பற்றித் தான் ஒருபோதும்  காம எண்ணம் கொண்டவரில்லையென்று சொல்வாரென்றும் காத்திருந்தோம் – ஆனால் அதற்குப்பதிலாக,  அசைவின்றி நின்றார்: மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை, ஒரு சிறு அசைவுமில்லை.

“ஓம்,” இறுதியாகக் கரகரத்த குரலில் சொன்னார். “அது நான்தான். சீதாவைக் கர்ப்பமாக்கியது நான்தான். அன்று மாலையில் அவசரமாகப் பேசுவதற்கு அவள் விரும்பியது என்னுடன்தான்.”

 

அத்தியாயம் 30  -  முடிவில்லா இரவு

அருவி

28 ஜூலை 2025

மெல்பேர்ண்

“ஆனபடியால்தான் சீதா உங்களை வீட்டுத் தொலைபேசியில் கூப்பிட்டார், இல்லையா, சிவா?” துப்பறிவாளர் Williams இன் குரல் மெதுவாக இருந்தபோதிலும் கனம் நிறைந்திருந்தது – தனக்கு அதற்கான விடை ஏற்கனவே தெரியும் என்கின்ற நிதானமான உறுதி தெரிந்தது.

“3:15 மணிக்கு நீங்கள் வேலையால் வீட்டிற்கு வந்தபோது அந்த அழைப்பு வந்தது. சீதா உங்களுடன் பேச விரும்பினா.”

அவ சிவா பெரியப்பாவிற்குக் கிட்ட நெருங்கி, பார்வையில் ஒரு அசைவுமின்றி, “அடுத்த பக்கத்திலே ஒருவித சத்தமும் வரவில்லை என்று கூறினீர்கள். அது ஒரு பொய். நீங்கள் அவவுடன் கதைத்தீர்கள் – அல்லது அவ உங்களுடன் பேசினா, உங்களைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னா. சீதாவின்  இறப்பு பற்றி போன் வந்தபோது நீங்கள் வீட்டிலில்லை. ஏனென்றால் Zoe வீட்டிற்கு வந்து அவ இறந்திருப்பதைப் பார்ப்பதற்குச் சற்றுமுன்னால் நீங்கள் சீதாவுடன் இருந்துள்ளீர்கள்.”

சிவா பெரியப்பா ஒரு நீண்ட நடுங்குகின்ற மூச்சை இழுத்தார். “நீங்கள் சொல்வது சரி,” இறுதியாக அவர் சொன்னபோது அவரது குரல் கரகரப்பாகவும், கண்கள் கனத்த வருத்தத்துடனும் காணப்பட்டது. “அந்த அழைப்பு எனக்கானது. சீதா நான்கு வார்த்தைகளே பேசினாள் – “நாங்கள் பேசவேண்டும்.””

அவருடைய குரல் தடுமாறியது. “நான் நேரே அவளிடம் சென்றேன். இதற்கு முன்னர் அவ ஒருபோதும் என்னைக் கூப்பிடவில்லை – என்னைப் பார்ப்பதற்குக் கேட்கவுமில்லை. நான் அங்கு அதிக நேரம் இருக்கவில்லை,” வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன, “ஆனால் நாங்கள் பேசியபிறகு எனக்கு …… எனக்கு என்ன செய்யவேணுமென்று தெரிந்தது. சுற்றிவரக் காரை ஓட்டினேன், எனது மனதைத் தெளிவாக்கி, மகாவிடம் சொல்லப்போகும் வார்த்தைகளை எனக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.”

அவர்  சிறிது நிறுத்தினார், அவருடைய மூச்சு நிதானத்திற்கு வந்தது. “நான் இறுதியாக வீட்டை அடைந்தபோது, மகா பதட்டமாயிருந்தாள். Zoe கூப்பிட்டிருந்தா – அந்தச் செய்தியுடன்.”

அவருடைய குரல் உடைந்திருந்தது. “நான் அதை எப்படிச் சமாளித்தேனென்று எனக்குத்தெரியவில்லை – என்னுடைய கைகள் அந்தளவு மோசமாக நடுங்கிக் கொண்டிருந்தது -  ஆனால் மகாவுடன் நேரே சீதா வீட்டிற்குச் சென்றேன்.”

துப்பறிவாளர் Williams  இன் குற்றச்சாட்டும் சிவா பெரியப்பாவின் வார்த்தைகளும் எல்லோர் மனதிலும் பதிந்து, அந்த அறைக்குள்ளே மிகத்தடித்த, ஆனாலும் உயிருள்ளதாகிய ஆழ்ந்த மௌனம் நிலவியது.

ஒருவராலும் நகரமுடியாமலும் மூச்சுவிடாமலும் இருக்கும் ஒரு கெட்டகனவுபோலத் தெரிந்தது. என்னைச் சுற்றியிருந்த எல்லோருடைய முகங்களும் அவநம்பிக்கையால் திகைத்துப் போயிருந்த என்னுடைய முகட்தைப் பிரதிபலிப்பதுபோல இருந்தது. முகமெல்லாம் வேதனை பரவியிருக்க சிவா பெரியப்பா மகா பெரியம்மாவும் ஆனந்தும் இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.

“மகா,” உடைந்த குரலிலே அவர் முணுமுணுத்தார், “நான் உனக்குத் தப்புப் பண்ணிவிட்டேன். உனக்கு எல்லாம் சொல்லத்தான் விரும்பினேன், ஆனால் சீதாவும் நானும் இதைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டோமென்று உனது அம்மாவிற்குச் சத்தியம் செய்து கொடுத்துள்ளோம். உண்மை வெளியே தெரிந்தால் குடும்பமே அழிந்துபோய்விடும் என்று சொன்னா.”

மகா பெரியம்மா உறைந்துபோய் நின்றா, ஒரு தடுமாற்றத்துடன் அவவின் முகம் வெறுமையாய் இருந்தது, ஒரு மோசமான கனவிலிருந்து விழித்தவள் போலிருந்தா. ஆனந்த் வாயடைத்துப்போய் தனது தந்தையை வெறித்துப் பார்த்தான். ஆனால் சிவா பெரியப்பாவின் பார்வை – ஒருவிதக் கட்டுப்பாடுமில்லாமல் – என்னை நோக்கி மன்னிப்பைக் கோரும் ஒரு மௌனமான வேண்டுகோளை விடுத்தது.

பேசுவதற்கு நான் வாயைத் திறந்தேன், ஆனால் ஒரு சத்தமும் வரவில்லை. இப்போது நான் கேட்டிருந்த விடயத்தின் எடை எனது மார்பை நசுக்கியது, வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கவிடாமல் மிகுந்த கனமாயிருந்தது. எனது சிந்தனைகள் – அவநம்பிக்கையாலும், துக்கத்தினாலும், என்ன நடக்கிறது  என்று புரிவதற்கான ஆவலினாலும் - சிதறியிருந்தன. என்மீது அவர்கள் வைத்திருந்த நேசம் ஒரு கணத்திலே மாறி விட்டதோவென்று அறிவதற்காக பெரியம்மாக்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. ஆனால் குடும்ப உறவுகளைப்பற்றிக் கவலைப்படுவதற்கான தருணம் இதுவில்லை.

இது எப்படி நடந்தது?

நம்பமுடியாமலும், அருவருப்பானதுமாக இருந்தபோதிலும், அம்மாவும் சிவா பெரியப்பாவும் இத்தனை வருடங்களாக எங்கள் கண்முன்னே தகாத உறவு வைத்திருந்தார்களா?

Brad மென்மையாக எனது கைகளை அழுத்தியபோது, அவரை நன்றியுடன் பார்த்தேன், வேகமாகத் துடித்துக் கொண்டிருந்த எனது இருதயத்தை நிதானப்படுத்தும் முகமாக ஆழ்ந்த மூச்சு விட்டபடி.

துப்பறிவாளர் Williams மகா பெரியம்மாவிலிருந்து என் வரை பார்த்து, அதிர்ச்சிச் செய்தியின் முதல் தாக்கம் கடந்து விட்டதை உறுதி செய்துகொண்டு, சிவா பெரியப்பாவைப் பார்த்தார்.

“நீங்கள் தொடர்ந்து சொல்வதற்கு முன்னர், சிவா – நீங்கள் ஏதும் சொல்லவோ அல்லது செய்யவோ தேவையில்லை. ஆனால் நீங்கள் ஏதும் சொன்னால் அல்லது செய்தால் அவை நீதிமன்றத்தில் சாட்சிகளாகப் பாவிக்கப்படலாம். உங்களுக்கு விளங்குகிறதா?”

சிவா பெரியப்பா ஒரு மெல்லிய செறுமலுடன், மெதுவாக அளவிட்டதுமாதிரி மூச்சிழுத்தார். தனது தலையைப் பின்னுக்கு இழுத்துத் தனது தோள்களை நேராக்கினார்.ஒரு கணம் குற்ற உணர்வும் பயமும் அவரது முகத்தில் தோன்றியது, ஆனால் விரைவிலேயே ஆறுதல் மாதிரியொன்று அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டது – தண்ணீருக்கடியில் வெகுநேரம் மூச்சுப் பிடித்திருந்து வெளியே வந்து சுவாசிக்கும்போது வருவதுமாதிரியான ஆறுதல்.

“என்னதான் நடக்குமென்றாலும், இனிமேலும் நான் மௌனமாக இருக்கமுடியாது,” அவர் சொன்னார். அவரது குரல் தாழ்வாகவும் வருத்தம் நிறைந்ததாகவும் இருந்தது – தன்னுடைய தவறுக்குக் காரணம் காட்டும் முயற்சி எடுக்கவில்லை.

“என்னுடைய வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் அதுதான். பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்கு உள்ளேயே ஒரு மனிதனைக் கொன்றேன், அதுவரை சகோதரியாய் கொண்டாடிய ஒரு பெண்ணைச் சூறையாடினேன்.

அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் எனது மனதிலே ஆழப் பதிந்துள்ளது. அன்று ஒக்டோபர் 20ம் திகதி 1995. ராணுவம் யாழ்ப்பாணத்திற்குள்ளே வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். புலிகளின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், மாமாவும் மாமியும் வீட்டைவிட்டு ஓட மறுத்தார்கள். ஆனபடியால் ஊர் மையத்தில் என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக என்னை அனுப்பினார்கள். அங்கேதான் …. என்னால் சசிக்கு எதிராக செயல்பட முடியாமல் நான் அந்த பிரிகேடியரைக் கொன்றேன், மகா.”

துப்பறிவாளர் கண்கள் விரிந்தன; இப்போது வெளிப்பட்ட ஒரு புதிய குற்றச்செயலைப்பற்றிக் கேள்வி கேட்பதற்கு நினைத்த அவர் பெரியப்பா பேசுவதற்குத் தடைபோடவில்லை. தனது உதட்டை அழுத்திக்கொண்டு பெரியப்பா தொடர்வதற்காகக் காத்திருந்தார்.

“சந்தைப்பகுதியிலிருந்து எப்படி வீட்டிற்கு வந்தேனென்றே தெரியாது. நான் வந்து சேர்ந்த நிலைமையைப் பார்த்து உனது பெற்றோர்கள் இடிந்து போய்விட்டார்கள்.

அதிச்சியில் உளறியபடியே நடந்ததைச் சொன்னேன்.

“தாமதிப்பதற்கு இப்போது நேரமில்லை -  நீங்கள் இங்கிருந்து போகவேண்டும், சிவா! இராணுவம் உங்களைத் தேடி வருவதற்கு அதிக நேரம் எடுக்காது. அவர்கள் வேகமாக முன்னேறுகிறார்கள். இந்த மூளையில்லாக் கொலையைச் செய்த புலிகள் முட்டாள்கள். இராணுவம் உடனடியாக எதிர் நடவடிக்கை எடுப்பார்களென்று அவர்களுக்குத் தெரியும். உன்னைப் பிடித்தால் என்ன செய்வார்களென்று கற்பனை செய்து பார் – ஊருக்குள்ளே அவர்களுக்கு உளவு பார்க்க ஏராளம் கண்கள் உண்டு. போ, சிவா, போ!”

உனது அம்மா என்னைப் போகச் சொன்னபோது, அவ மிகுந்த பதட்டத்துடன் இருந்தா.

“அவர் எங்கே போவார், கயல்? இப்போது இருட்டுப்படத் தொடங்கிவிட்டது, தெருக்கள் அவருக்கு ஏற்ற இடமில்லை. ஊரை விட்டுப்போகும் எந்தத் தெருக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதென்று தெரியாது,” உன்னுடைய அப்பா இடைமறித்தார்.

மாமி தனது இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு மெதுவாக அழுதா. ஜெயாதான் என்ன செய்யலாமென்று ஒரு வழியைச் சொன்னா,” சிவா பெரியப்பா சொல்லிவிட்டு ஜெயா பெரியம்மாவைக் கெஞ்சும் கண்களுடன் பார்த்தார்.

ஆனால் ஜெயா பெரியம்மா அசையவில்லை. அவவுடைய பார்வையில் தெளிவாக அவவின் வெறுப்புத் தெரிந்தது. அவவின் கோபத்தைப் பெரிதாக எடுக்காமல் சிவா பெரியப்பா ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துத் தொடர்ந்தார்.

“மாமிக்கு அவவின் தாயார் கொடுத்த பழைய கோழிப்பண்னையை அடிக்கடி புலிகள் மறைந்திருக்கப் பாவிப்பதாகவும்  அன்றிரவை நான் அங்கே கழிக்கலாமென்றும் ஜெயா சொன்னா.

“மிகவும் நல்ல திட்டம்,” மாமி சொன்னா. “சிவா, சயிக்கிலை எடுத்துக்கொண்டு போங்கள். நீங்கள் அங்கே பத்திரமாயிருப்பீர்கள். கெதியாக – இருட்டுப்பட்டால் தெருவில் போகும் எவரையும் சுடுவார்கள்.”

“ஆனால்… அது எங்கேயென்று எனக்குத் தெரியாது,” நான் திக்கினேன்.

உன்னுடைய அப்பா சொன்னார், “நான் அவருடன் போகிறேன், கயல். அவருக்கு வழி காட்டுகிறேன்.”

“சுத்த மடைத்தனம்! நீங்கள் போகக்கூடாது ----- நீங்கள் மெதுவாக ஓடுவீர்கள். அத்துடன் ஒரு ஆண் சயிக்கில்தான் உள்ளது. மற்றது  பெண் சயிக்கில் – உங்களுக்கும் சிவாவிற்கும் சிறிதென்றபடியால் உங்களால் வேகமாகப் போகமுடியாது.”

மாமியின் பார்வை அறையிலிருந்த ஒவ்வொருவரையும் வரிசையாகப் பார்த்தா.

“நான் போகிறேன்,” மகா திடமான குரலில் சொன்னாள்.

ஆனால் மாமி மறுத்துவிட்டா. “மகா, நீ இருக்கும் நிலைமையில் அதிகதூரம் போகமுடியாது! சீதா, இந்தவீட்டிலே நீதான் சிறந்த சயிக்கில் ஓட்டக்காரி – இவருக்கு வழி காட்டு.”

நான் ஏதும் பேசமுதலே சீதா செயலில் இறங்கிவிட்டாள். சயிக்கிலில் ஏறிப் பாய்ந்து, தெருவில் வேகமாக ஓடித் தன்னைப் பின்தொடருமாறு சொன்னா. யுத்தத்தினால் உருக்குலைந்து போயிருந்த பாதைகள் வழியே வேகமாகச் சென்ற சீதாவைப் பின்தொடர நான் கஸ்டப்பட்டேன். இருந்திருந்துவிட்டு, அவள் பின்னாலே பார்த்து, அவளது குரலில் அவசரம் தொனிக்க – “சீக்கிரம், சிவா! அந்தப் பள்ளத்தைக் கவனித்துக்கொள்!”

அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு தடுமாற்றம் வந்தபோதும் பேசுவதை நிறுத்தவில்லை.                   

“என்னுடைய இருதயம் வேகமாக அடித்தது, என்னால் சரியாக மூச்சு விடவும் முடியவில்லை. ஆனால், மகா! உன்னுடைய நினைப்பும் நீ சுமந்துகொண்டிருந்த பேபியின் நினைப்பும், தொடர்ந்து செல்ல எனக்குத் தைரியம் கொடுத்தது – வெறிச்சோடியிருந்த தெருக்களிலே பதின்ம வயதைத் தாண்டியிராத பையன்களின் உடல்கள் சிதறிக்கிடப்பதையும், தங்கள் பிள்ளைகளை உயிருடன் அல்லது இறந்தபின் பார்த்தீர்களா என்று தேடித்திரிந்த பெற்றோர்களைப் பார்த்தபோதும் நிற்காமல் தொடர்ந்து போனோம். அப்போதுதான் யுத்தத்தின் கோரத்தை உணர்ந்தேன்.

நான் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது வயது குறைவாக இருந்தது. மற்றைய அமைதியில்லாத இளைஞர்களுடன் சேர்ந்து ஆயுதம் தூக்கியது ஒரு சாகசம் போலத் தெரிந்தது. ஆனால் இப்போது….. பயங்கரவாதிகள் என்று தாங்கள் நினைப்பவர்களைக் கொல்வதற்கு எந்த எல்லைக்கும் இராணுவத்தினர் செல்வார்கள் என்பதைப் பார்த்தபோது, ஒன்றும் செய்ய முடியாதவனாயிருந்தேன். மிகுந்த பயத்திலி்ருந்தேன், மகா!”

மகா பெரியம்மாவிலிருந்து மற்ற அனைவரையும் பார்த்துக்கொண்டு வந்தவருடைய முகம் அப்பட்டமான பயத்தால் கோணலாகியது. ஆனால் ஒருவருடைய அனுதாபமும் அவருக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் அவரை ஒரு திகிலுடனும் பொறுமையின்றியும் பார்த்துக் கொண்டிருந்தோம் – அடுத்ததாக என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாயிருந்தோம்

“நாங்கள் அந்த கைவிடப்பட்ட கோழிப்பண்ணையை அடைந்தபோது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. நான் அந்த இடத்திற்கு முன்னாடி போயிருந்ததில்லை. அந்த  நிலப்பகுதியின் சீரான அமைப்பைக் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை – ஒரு கச்சிதமான சதுர நிலம், உடைந்த கம்பங்களாலும் முறுக்கப்பட்ட கம்பிகளாலும் சுற்றவர இருந்த பற்றைகளில் இருந்து பிரிக்கப்பட்டிருந்தது.

சயிக்கில்களை நிற்பாட்டியபோது அந்தப் பண்ணையை வியப்புடன் பார்த்தேன். ஒருகாலத்தில் இங்கு நிரம்பக் கோழிகள் இருந்திருக்கவேண்டும்,  நான் யோசித்தேன். தங்களுடைய  முன்னோருடைய நிலத்திற்கு  உரித்துக் கேட்பதுமாதிரி இரண்டு மெலிந்த கோழிகள் துள்ளியபடி எங்களை நோக்கி வந்து எங்களைப் புதினமாகப் பார்த்துவிட்டு திரும்பவும் நிலத்தைக் கொத்திக்கொண்டு மங்கிப்போய்க் கொண்டிருக்கும் வெளிச்சத்தில் மறைந்தன.

சீதா மாத்திரம் என்னுடன் வந்திராவிடில், நிச்சயமாகப் புதர்களின் நடுவேயிருந்த  இந்தக் கோழிப்பண்ணயை என்னால் கண்டு பிடித்திருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். நன்றியுடன் நான் அவளைப் பார்த்தபோது, அவளின் பார்வை அந்த மணல்தரையில் பதிந்திருந்த தெளிவான காலடிகளில் இருந்தது.

“சமீபத்தி்ல் புலிகள் இங்கு வந்திருக்கவேண்டும்,” நம்பிக்கை குரலில் ஒலிக்கக் கூறினாள். “ஒருவேளை இன்னமும் உள்ளே ஒளிந்திருக்கலாம்.”

இல்லையென்று நான் தலையாட்டினேன். அந்த  அமைதி பயமூட்டுவது மாத்திரமில்லாமல் எதையோ சொல்லிற்று. எங்கள் இருவரைத் தவிர வேறொருவரும் அங்கில்லை. சீதா முன்னுக்குச் சென்று ஆடிக்கொண்டிருந்த  கதவைத் தள்ளித் திறந்தாள் – மாலைக்காற்றில் அது  சலசலத்தது.

“ஹலோ?” உள்ளே போகும்போது சீதா அழைத்தாள், ஆனால் ஒரு பதிலுமில்லை.”

சிவா பெரியப்பா தான் இவ்வளவு காலமும் பூட்டி வைத்திருந்த நினைவுகளுடன் போராடி, எச்சியை உள்ளுக்குள் விழுங்கினார். தான் இப்போது நிறுத்தமுடியாதென்பதை உணர்ந்திருந்தார்.

“நான் சீதாவைப் பின்தொடர்ந்தேன். ஒரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய்கள், தலையணைகள், ஒரு சுடுதண்ணிப் போத்தல், இரண்டு வெறும் கப்புகள் இருந்தன.

“அவர்கள் போய்விட்டார்கள் போல்,” சீதா மெதுவாகச் சொன்னா. “சிவா, நான் இப்போது போகவேண்டும் .. ஆனால் இன்றிரவு நீ இங்கே பாதுகாப்பாய் இருக்கலாம். வன்னிக்குப் போனவுடன் எங்களுக்கு செய்தி அனுப்பவும்.”

 

நான் வாய்பேசாது தலையாட்டிவிட்டு அவளை சயிக்கில் உள்ள இடத்திற்குக் கூட்டிச்சென்றேன். அவள் சயிக்கிலில் ஏறுவதற்கு முன்னர், எங்கள் காதுகளைத் துளைத்துக்கொண்டு துப்பாக்கிச் சத்தம் பெரிதாக ஒலித்தது.

சீதா பயத்தால் என் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “அது மிக அண்மையில் போலத்தெரிகிறது!” வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவர முன்பேயே அடுத்தடுத்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

“சீதா, சீக்கிரம்! நாங்கள் உள்ளே போகவேண்டும். தெருவிற்கு நீ இப்போது போகமுடியாது. மிகவும் ஆபத்தானது. இராணுவம் முன்னேறுவது போலத்தெரிகிறது – அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக முற்றாக நம்பினாலொழிய ஊரின் ஒதுக்குப்புறமான இந்த இடத்திற்கு வந்திருக்கமாட்டார்கள்.”

சீதாவின் முகம் வெளிறிப் போய்விட்டது, கண்கள் பயத்தினால் விரிந்துவிட்டன. “அவர்கள் இங்கே வந்தால் என்ன செய்வது?”

நான் அதைப்பற்றிச் சிந்தித்திருக்கவில்லை. ஆனால் ஒடுவதற்கு ஒரு இடமும் இல்லை. எங்களுக்கு இருந்த ஒரேவழி கோழிக்கூட்டுக்குள் இரவு தங்கியிருந்து, நல்லதை எதிர்பார்த்திருப்பதுதான் என்று அவளைச் சம்மதிக்கவைத்தேன். நாங்கள் உள்ளே போய் பாயில் இருந்தோம். சீதா மிகக்கடுமையாக நடுங்கினாள், எனக்கு இயல்பாக ஏற்பட்ட கரிசனையினால் எனது கைகளால் அவளைச் சுற்றிப் பிடித்தேன்.

அவள் இப்படியான ஆபத்திற்கு வருவதற்கு நான்தான்  காரணம் – எனக்கு வேண்டியதெல்லாம் அவளின் பாதுகாப்பு.”

சிவா பெரியப்பாவின் மேலுதட்டில் சின்னஞ்சிறு வியர்வைத்துளிகள் தோன்றின. தனது புறங்கையால் முகத்தைத் துடைத்தவாறே தன்னைக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்தார்.

“அப்போது சூரியன் முற்றாக மறைந்துவிட்டான். கோழிக்கூண்டிற்குள் கடுமையான இருட்டு. ஒவ்வொரு முறையும் துப்பாக்கிச் சத்தம் கேட்கும்போதோ அல்லது பற்றைக்குள் ஏதும் சத்தம் கேட்டாலோ நாங்கள் ஒருவரையொருவர் இறுக அணைத்துக்கொண்டோம். அந்த முடிவில்லாத இரவை உயிருடன் கடப்போமாவென்று எங்களுக்குத் தெரியாது. அங்கே ஒளிந்திருப்பதை இராணுவம் பார்த்தால் கேள்விகள் கேட்கமாட்டார்கள் – பார்த்தவுடனேயே சுட்டுவிடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

சீதாவின் சீரற்ற மூச்சு எனது தோலில் படுவதை உணர்ந்தேன். படபடவென்று அடிக்கும் அவளின் இதயத்தையும் உணர்ந்தேன். எல்லாவற்றையும்விட, நடுங்குகின்ற அவளின் கைகள் எனது கைகளைப் பற்றியதை உணர்ந்தேன். எங்கள் இருவரையும் சாந்தப்படுத்துமென்ற எண்ணத்துடன் அவளின் கைகளை நான் மெதுவாகத் தடவினேன் …அடுத்தது…….அடுத்தது……நாங்கள்..”

சிவா பெரியப்பா மகா பெரியம்மாவின் கைகளைப் பிடித்தவாறே என்ன செய்வதென்றறியாமல் அவவின் கண்களில் எதையோ தேடினார்.

“மகா, நீ என்னை மன்னிக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும் – நானே என்னை மன்னிக்கமாட்டேன். அன்றைய தினம் நான் கொல்லப்பட்டிருக்கவேண்டும – அப்படி நடந்திருந்தால் எத்தனையோ வருடங்களாய் நான் அனுபவித்துவரும் சித்திரவதையைவிட மேலானதாகும். எத்தனயோ முறைகள் உண்மையை உனக்குச் சொல்வதற்கு முயன்றேன். சீதாகூட  விரும்பினாள். ஆனால் உன்னுடைய அம்மா இதைப்பற்றி ஒருபோதும் கதைக்கக் கூடாதென்று சத்தியம் வாங்கியிருந்தா. 

மாமிக்குத் தெரியவந்தபோது, உடனடியாக மாமாவுடன் வன்னிக்கு வந்து என்னைப் பொறுப்பெடுக்குமாறு வலியுறுத்தினா. அன்றுதான் உனது கர்ப்பம் கலைந்து நீ மிகுந்த வருத்தத்தில் இருந்ததால் உன்னை மேலும் வருத்துவதற்கு மாமிக்கு விருப்பமில்லை. இன்னும் ஒருமுறை நான் உனக்குத் துரோகம் செய்தால், அதற்கான விலையைக் கொடுக்கவேண்டி வரும் என்று எச்சரித்தா.

அதன்பிறகு, சீதாவின் கர்ப்பம் வெளியில் தெரியவந்தபோது, குடும்பத்தின் மானத்தைக் காப்பதற்கான ஒரே வழி குழந்தையை கற்பழிப்பால் வந்த குழந்தை என்று சொல்வதுதான் எண்று மாமி சொன்னா. மாமாவிற்குக்கூட அவ சொல்லவில்லை – அது அவரை முற்றாக அழித்துவிடும் என்று அவவிற்குத் தெரியும். சீதாவையும் என்னையும் இதுபற்றி ஒருபோதும் கதைக்கக் கூடாதென்று சத்தியம் வாங்கினா.”

சிவா பெரியப்பா நாலக பக்கம் திரும்பி நடுங்கிய குரலுடன், “என்னை மன்னித்திடு, நாலக. உண்மையான குற்றவாளி நானிருக்க சீதாவின் கர்ப்பத்திற்கு நீ காரணமென்ற பழியை நீ சுமந்திருக்கிறாய்.”

நாலகவின் முகத்தில் ஏற்பட்ட அருவருப்பு அவரின் முகத்தைக் கோணலாக்கியது.

“நான் ஒரு புனிதமானவன் இல்லை. நான் செய்த காரியத்தால் அருவிக்குத் தகப்பனாய் வந்திருக்கலாம் – அந்தப் பழியுடன் காலம் பூராக வாழ்ந்திருப்பேன். ஆனால் நீ ….. எதற்காகச் சீதாவைக் கொலை செய்தாய்? ஒரு கேள்வியும் கேட்காமல் அந்தப் பழியை நான் சுமந்திருப்பேன்.  நீ என்னிடம் வந்திருக்கலாம்.  என்னோடு பேசியிருக்கலாம். அதற்குப்பதிலாக, அவளை என்றென்றைக்கும் அமைதியாக்கிவிட்டாய்.”

சிவா பெரியப்பா அடி வாங்கியவரைப்போலப் பின்வாங்கினார்.

என்ன? என்ன? நான்  சீதாவைக் கொல்லவில்லை!”

 

 

அத்தியாயம் 31 --- இறுதிச் சாட்சி பேசுகிறார்

அருவி

28 ஜூலை 2025

மெல்பெர்ண்

 

கூர்மையானதும் தன்னிச்சையுமான நம்பமுடியாத அதிர்ச்சி எங்கள் மத்தியில் அலை அலையாக வந்தபோது அறையிலே ஒரு கூட்டுப் பெருமூச்சு வெளிப்பட்டது. ஒரு உண்மை – நாங்கள் ஒருவரும் எதிர்பார்க்காத உண்மை –பதனிடப்படாமலும் மன்னிக்கமுடியாததுமாக இப்போது எங்கள் முன் நிற்கிறது. ஒருமுறை பேசிவிட்டால் அதைத் திரும்பப் பெறமுடியாதென்ற நிஜத்தை எல்லோரும் அறிவோம் – சிவா பெரியப்பாவை முன்பு பார்த்தமாதிரி ஒருபோதும் பார்க்கமாட்டோம்.

ஒருவரும் பேசவில்லை, ஆனால் எங்கள் எல்லோரையும் பிணைக்கும் ஒரே சிந்தனை – கனமாகவும், இரக்கமற்றதாயும் – காற்றிலே தொங்கிக் கொண்டிருந்தது : சிவா பொய் சொல்கிறார் – தன்னுடைய இரகசியத்தை மறைக்க இவர்தான் அவவைக் கொன்றிருக்கிறார்.

துப்பறிவாளர் Williams உம் மற்றவர்கள் மாதிரியே ஆடிப்போனார், ஆனாலும் அவ பேசியபோது வார்த்தைகள் கச்சிதமாயிருந்தது. “நீங்கள்தான் சீதாவை உயிருடன் பார்த்த கடைசி ஆள் – அத்துடன் உங்கள் ஒருவருக்குத்தான் அவவைக் கொல்லவேண்டுமென்ற உள்நோக்கம் இருந்தது.”

“என்ன உள்நோக்கம்?” பதனிடப்படாத வேதனையுடன் கேட்ட சிவா பெரியப்பாவின் குரல் உடைந்திருந்தது.

“உண்மை வெளியே வரவேண்டுமென விரும்பினேன் – வெளியே வருவது எனக்குத் தேவைப்பட்டது. பொய்கள், இரகசியங்கள் எல்லாம் போதுமானதாகிவிட்டன. மகா, சீதா, அருவி, ஆனந்த் எல்லோரையும் பாதுகாக்கவேண்டி மௌனமாக இருந்தேன் – ஆனால் என்னுடைய குற்ற உணர்வு என்னை முழுமையாக விழுங்கிக் கொடிருந்தது.

அன்றைய தினம், தான் உண்மையைப் பேசுவதற்குத் தயார் என்று சீதா சொன்னாள். நாலகவின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினாள் – அவருடைய மீட்புக்கான தேடலும், தனது குற்றத்தை அவளிடம் ஒத்துக்கொள்ளத் தயாரான தைரியமும் தன்னுடைய இறந்தகாலத்தைச் சந்திக்கும் தைரியத்தைத் தனக்குத் தந்திருப்பதாகக் கூறினாள். உண்மையில் என்ன நடந்ததென்று அருவிக்குச் சொல்ல, மகாவிற்குச் சொல்ல, உங்கள் எல்லோருக்கும் சொல்வதற்கும் மன்னிப்புக் கேட்பதற்குமான தருணம் வந்துவிட்டதென்று சொன்னாள்.

 

அருவிக்கு எது சிறந்ததென்று இப்போதாவது  செய்ய முடியுதேயென்று ஆறுதலாயிருந்தது.”

 

இதற்குமேலும் என்னால் கோபத்தையோ கண்ணீரையோ  அடக்கமுடியவில்லை, “என்ன தைரியம் இருந்தால் எனக்கு எது நல்லதென்று நீங்கள் பேசமுடியும்?”

மீண்டும் ஒருமுறை சிவாவின் கண்கள் வலியினால் நிரம்பியிருந்தது, ஆனால் திடமான குரலுடன் என்னைப் பார்த்துத் தொடர்ந்தார்.

“மகாவும் நானும் முதன்முறையாக மெல்பேர்ணுக்கு வந்தபோது - அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சீதாவை முதன்முறையாகப் பார்த்தேன். முதன்முறையாக உன்னைப் பார்த்ததும் அப்போதுதான், அருவி. உனக்கு அப்போது நான்கு வயது – நான் பார்த்த குழந்தைகளிலே மிகவும் அழகான சின்னப்பெண். உன்னை எனது கைகளிலே தூக்குவதற்கு மிகவும் விரும்பினேன், ஆனால் தங்கள் இருவரிடமிருந்தும் என்னை விலகியிருக்குமாறு சீதா என்னை எச்சரித்தாள். தனது தாய்க்காகவும், மகாவிற்காகவும் அந்த உண்மை வெளியே வர விடாமல் இருப்பதாய் கூறினாள்.

மன்னிப்புக்கேட்டு நான் மன்றாடியபோது, நாங்கள் இருவருமே குற்றவாளியென்றும் வாழ்நாள் பூராக அந்தச் சுமையுடனேயே நாங்கள் வாழவேண்டுமென்றும் கூறினாள். இருவரும்  விலகியே இருப்போம்  என்று தீர்மானித்தோம்; அந்தக் காரணத்தினால்தான் உன்னுடைய குடும்ப நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்துகொள்வதில்லை, மகா. உங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் உடைத்துவிட்டேன் என்று எனக்குத் தெரியுது: உங்களுடைய அன்புக்கும் மரியாதைக்கும் நான் உரியவனில்லை.

அதற்குப்பிறகு நான் சீதாவைத் தனிமையில் பார்த்தது நீயும் அர்ஜுனும் நண்பர்களாக இருந்தபோது, அருவி. உன்னுடைய பிறப்பு பற்றி அவருடைய அம்மாவிற்கு வெறுப்பு என்பது எனக்குத் தெரியும். நான் சீதாவிடம் சென்று நீ விரும்பிய வாழ்க்கை உனக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக, உலகத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டுமென்று சீதாவை ஒத்துக்கொள்ள வைத்தேன். அருவி, நீ வெறுப்பாலும் பழிவாங்கலாலும் பிறந்த குழந்தையில்லை, மாறாக நம்பிக்கையாலும் உயிர்வாழவேண்டிய தேவையினாலும் பிறந்த குழந்தை – இருண்ட காலத்திலும் வாழ்க்கை தொடரும் என்பதை நிரூபிப்பதற்கான குழந்தை.

சீதா அர்ஜுனின் தாயாரோடு பேசினா என்பது தெரியும், ஆனால் அதனால் ஒரு பயனுமிருக்கவில்லை.”

சிவா வேகமாகப் பேசினார் – மிகவும் வேகமாக – பேசத் தொடங்கியபின் உண்மை அவரையும் மீறிக் கிழித்துக்கொண்டு வருவதுமாதிரி.

“கடந்த வெள்ளிக்கிழமை சீதா என்னைக் கூப்பிட்டபோது, மிகவும் முக்கியமானதாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். நாலகவின் சுயவருத்தம் தன்னையும் தனது இறந்தகாலத்தைச் சந்திப்பதற்குத் தூண்டியதாயும், உண்மை வெளியே வந்தால்தான் தனக்கு நிம்மதி என்றும் கூறினாள். எனக்கும் நல்ல ஆறுதலாயிருந்தது. எனது குற்றத்தின் நிழலில் நான் அதிக காலம் வாழ்ந்துள்ளேன்; இதுவரை ஓடி ஒளித்த குற்றத்திலிருந்து விடுபடப்போகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சீதாவை விட்டு விலகிய அன்று வீட்டிற்கு வருவதற்கு முன்னர் எனது மனத்தைச் சாந்தப்படுத்துவதற்காக கொஞ்ச நேரம் தெருவிலே காரோட்டிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்தபோது, மகா, சீதா இறந்துவிட்டதாக நீ சொன்னாய். அந்தச் செய்தி என்னை நிலைகுலையச்  செய்துவிட்டது. என்னுடைய ஆத்மா பிய்த்தெறியப்பட்டதாக உணர்ந்தேன் – அப்போதிலிருந்து ஏற்பட்ட மனக்குழப்பம் தாங்கமுடியாதுள்ளது. நான் இரண்டாகப் பிளவுபடுவதாக உணர்கிறேன் – என்னுடைய மௌனம் பற்றிய அவமானத்திற்கும் இப்போது உண்மையைச்  சொல்வதால் சீதாவின் நினைவிற்கு ஏற்படும் களங்கத்திற்கும் இடையில் நான் பிடிபட்டுள்ளேன்.

உண்மை தெரிந்த ஆட்களில் நான் மட்டும் உயிருடன் இருக்கிறேன்; மௌனமாக இருக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒரு கோழை போல உணருகிறேன். உன்னுடைய அம்மாவின் விருப்பத்திற்கு மாறாகச் செய்வதோ அல்லது சீதா பற்றிய உனது நினைவுகளுக்கு ஒரு கரும்புள்ளி ஏற்படுத்துவதோ  என்று எனக்குத் தெரியவில்லை….. என்னை மன்னித்துவிடு, மகா.”

அவர் பேசி முடித்ததும் அவரின் சுவாசம் சீரற்றதாயிருந்தது, மகா பெரியம்மாவையும் என்னையும் பார்த்த அவரின் கண்களில் பெரும் வருத்தம் தெரிந்தது. அறை கொஞ்சம் சரிந்தது. நான் நிலை தடுமாறுவதற்கு முன்னர் Brad இன் கையைப் பிடித்தேன், அவரது இதமான உறுதியான பிடி என்னைத் திடமாக்கியது. Zoe வும் உமாவும் எனக்கு அருகாமையில் வந்து சுற்றிவரச் சுவர் இருப்பது போல என்னைப் பாதுகாத்தனர். 

அவர்களது பிரசன்னத்தால் திடமாகிய நான் துப்பறிவாளர் Williams பக்கம் திரும்பினேன். என்னை நோக்கிப் புரிதலற்ற விதமாகத் தலையாட்டிய அவ சிவாவை நோக்கித் தனது இரும்புப் பார்வையைச் செலுத்தினா. அவ பேசியபோது, அவவின் குரலில் அதிகாரம் இருந்தது.

“சிவா, நீங்கள் சீதா வீட்டிற்குப் போனபோது என்ன நேரம்?”

“சாயந்தரம் 400 மணியளவில் அங்கே போனேன். அதிக நேரம் இருக்கவில்லை ….. 4:30 க்கு முதல் அங்கிருந்து விலகியிருப்பேன்.”

சிவா துப்பறிவாளர் Williams இன் கண்களை ஒருவித ஒளிவுமறைவுமின்றிப் பார்த்தபோது, அவவின் புருவத்திலிருந்த சுருக்கம்  சற்று ஆழமானது. அவ தடுமாற்றத்திலிருந்தது எனக்கு ஆச்சரியமாயிருக்கவில்லை. சிவா சொல்வது உண்மையென்றால், வேறு யாரோ 4:30 க்கும் 5:00 க்குமிடையில் வந்திருக்கவேண்டும். ஆனால் யார்? அன்றைய தினம் நிரம்பப் பேர்கள் அம்மாவைப் பார்க்க வந்துள்ளார்கள் – ஆனால் அவவைக் கொல்லும் அளவிற்கு வன்மம் கொண்டது யார்?

“நீங்கள் வீட்டை விட்டு விலகும்போது ஏதாவது வித்தியாசமானதை அவதானித்தீர்களா?” துப்பறிவாளர் அழுத்திக் கேட்டார்.

சிவாவுடைய முகபாவங்கள் கவனமாகச் சிந்திப்பதில் மாற்றங்கள் அடைந்து, விரக்தி அவருடைய முகத்திலே ஆழமான கோடுகளை உண்டாக்கியது – திடீரென ஒரு கணத்தில் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது, ஏதோ நினைவுக்கு வந்ததுமாதிரி  கண்கள் பிரகாசித்தன.

“நான் எனது வண்டியை தெருவின் மறுகோடியில் நிறுத்தியிருந்தேன் – என்னுடைய வண்டியை யாராவது அடையாளம் கண்டுபிடிப்பதை சீதா விரும்பியிருக்க மாட்டாள். நான் அங்கிருந்து கிளம்பியபோது, எனது மனமெல்லாம் எப்படி மகாவிற்கு இந்தச் செய்தியைச் சொல்லப்போகிறேன் என்பதுதான்: சீதாவின் வீட்டிற்குப் பக்கத்தில் நிறுத்தியிருந்த வண்டியை நான் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.

அயலவருக்குச் சொந்தமானதென்று நினைத்தேன் – நான் நினைக்கிறேன் அது ஒரு பச்சை நிற Kia. நான் அந்தக் காரைக் கவனிக்கவேண்டி வந்ததின் காரணம் என்னவென்றால் நான் வீட்டு வாசலுக்கு வந்தபோது காரில் இருந்த பயணி திடீரெனக் குனிந்ததுதான். ஒரு கணம் கழித்து யன்னல் மூடும் சத்தம் கேட்டது.”

“என்ன?” துப்பறிவாளர் Williams இன் குரல் அவசரத்தைக் காட்டியபடி உயர்ந்தது. “ஆது யாரென்று கவனித்தீர்களா? அந்தக் காரோட்டுநர்?”

“இல்லை, நான் கவனத்தைச் செலுத்தவில்லை. இருவரும் ஆண்கள் என்று நினைக்கிறேன். பயணியை என்னால் சரிவரப் பார்க்க முடியவில்லை – வேகமாகக் குனிந்துவிட்டார். எனது பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்.

காரோட்டுநர்….. சரியாகப் பார்க்கவில்லை. ஒரு சீனன் போலிருந்தார் – நான் பிழையாக இருக்கலாம்.”

எதிர்பார்ப்பினால் துப்பறிவாளர் Williams க்கு மூச்சிழைத்தது. “அவர் ஒரு சீனன் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?”

 நடந்த விடயத்தை ஞாபகத்திற்குக் கோண்டுவர முயற்சித்ததில் சிவாவின் புருவங்கள் சுருங்கின.

“நான் என்னுடைய சிந்தனையில் முழுகியிருந்தேன், என்னைச்சுத்தி நடப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அந்தக் காரைத் தாண்டி எனது காரை நோக்கி நடந்தேன்….. அப்போது ஓட்டுநரின் கண்கள் என்னைப் பார்ப்பதை அவதானித்தேன்.

அவருடைய மயிர் கருப்பு நிறம், சிறிது மயிர் குறைவாக இருந்தபோதிலும் நன்றாக வாரி  விடப்பட்டிருந்தது. தனக்குப் பக்கத்தில் இருந்த பயணி திடீரெனக் குனிந்ததும் இவருக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். அப்போதுதான் எங்கள் கண்கள் சந்தித்தன – ஒரே வினாடிதான், கருப்பு கண்ணாடி மூடியது.

யன்னல் கண்ணாடி மூடும்போது அவர் என்னமோ சொன்னார் – அவருடைய கண்களில் தென்பட்ட ஒளியுடன் அவரது குரலும், குளிர்மையானதும் நிதானமானதும், எப்படி ஒத்துப் போனதென்று நான் நினைத்தது  ஞாபகத்திற்கு வருகிறது.”

“அவர் என்ன சொன்னார்?” துப்பறிவாளர் Williams கான்ஸ்டபில் Fraser குறிப்புகள் எடுக்கிறாராவென்று பார்த்துவிட்டு சிவா பக்கம் திரும்பினார்.

“என்னால் சொல்லமுடியவில்லை. அவருடைய உச்சரிப்பு வித்தியாசமாயிருந்தது, யன்னலும் விரைவாகச் சாத்தப்பட்டதனால் வார்த்தைகள் சரியாக விளங்கவில்லை. அது ஆங்கிலம் இல்லாமலும் இருக்கலாம்.”

“அதாவது, அந்த உச்சரிப்பை உங்களால் அடையாளம் காணமுடியவில்லை?”

சிவா தனது கண்களை மூடி, அவற்றை இறுக்கமாக்கி வைத்திருந்து திடிரென ஒரு உந்துதலுடன் கண்களைத் திறந்தார். “நான் அந்த உச்சரிப்பை இதற்கு முன் கேட்டிருக்கிறேன்!”

அவருடைய கண்கள் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டுவந்து மோகனுடைய கண்களோடு பொருந்தி நின்றது.

“மோகன், நீங்கள் அப்படித்தான் பேசுவீர்கள்!”

அந்த நின்றுபோன கணத்தில், நாங்கள் எல்லோரும் திரும்பி தனது நடுங்குகின்ற கையினால், ஒரு விரலை மோகனை நோக்கி நீட்டியதைப் பார்த்தோம்.  

 

 

 

அத்தியாயம் 32 – ஒரு உள்நோக்கம்

                   இருந்திருந்தால்?

அருவி

28 ஜூலை 2025

மெல்பேர்ண்          

 

சிவா தனது கையை உயர்த்தி நடுங்குகின்ற விரலால் மோகனின் உச்சந்தலைமீது நீட்டியவாறு, “அது நீதான்! உன்னுடைய தலையைத்தான் நான் பார்த்தேன் – தலையின் உச்சியை! நான் உன்னைப் பார்க்கக் கூடாதென்றுதான் நீ தலையைக் குனிந்தாய்!”

அந்த அறையைச் சுற்றி ஒரு நடுக்கம் பரவியது – நாங்கள் ஏற்கனவே வாழ்ந்து விட்டதாக நினைத்த கணத்தின் விசித்திரமான எதிரொலி. திகைத்துப்போன பார்வையை எமக்குள் பகிர்ந்துகொண்டோம் - ஒரு காரணத்தை, ஒரு மறுத்தலை, ஒரு அர்த்தம் தரக்கூடிய ஏதாவது ஒன்றை மற்றவரது முகத்தில் தேடினோம்.

மோகன் – மீண்டும்?

முன்பு ஒருமுறை அவர்தான் பிரதான சந்தேக நபராயிருந்தார். ஆனால் ஜெயா பெரியம்மாவும் சிவாவும் அவருடைய அந்தச் சந்தேகத்தைப் போக்கியிருந்தார்கள்.

துப்பறிவாளர் Williams தான் முதலில் சமநிலைக்கு வந்தார்.

“இன்று நீங்கள் இங்கே வந்தபோது, மோகன்,” மெதுவாகவும் வேணுமென்றே ஏதோ ஒரு புதிரை விடுவிப்பது போலவும் –”சீதாவும் நாலகவும் நண்பர்களாக வந்துள்ளார்களென்று சீதா சொன்னதாகச் சொன்னீர்கள்.”

அவவின் கண்கள் சுருங்கி, சற்று தாமதித்தா.

“ஆனால் சனிக்கிழமை நீங்கள் சொன்னதற்கு மாறாக இருக்கிறது – அதாவது சீதா நாலகவைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையென்று. இதனுடைய அர்த்தம் என்னவென்றால், ஒன்றில் நீங்கள் பொய் சொல்லவேண்டும் அல்லது ஜெயாவும் சிவாவும் போனபின் திரும்பவும் நீங்கள் போயிருக்கவேண்டும். நாலகவைப்பற்றி நீங்கள் பொய் சொல்வதற்குக் காரணம் இல்லை – ஆகவே எனது யூகம் என்னவென்றால்… நீங்கள் திரும்பவும் போயிருக்கிறீர்கள்.”

அவ மோகனை நெருங்கியபோது அவவின் குரல் தடித்திருந்தது

“முழுக் கதையையும் நீங்கள் சொல்லவில்லை, இல்லையா, மோகன்?”

துப்பறிவாளர் Williams இன் குரல், கிட்டத்தட்ட ஏதோ சம்பாஷணை செய்வதுபோல, நிதானமாக இருந்தபோதிலும் அவவின் பார்வை தடுமாறவில்லை.

“நீங்கள் சொன்னது உண்மைதான் --- ஆனால் முழு உண்மை இல்லை. சில மணித்தியாலங்களின் பின்னர் இரண்டாம் முறை போனதை மறைத்து விட்டீர்கள். எப்படித் திட்டம் போட்டுச் செய்திருக்கிறீர்கள், மோகன் – திரும்பிப்போய், ஒரு பெண்ணை மூலைக்குத் தள்ளி, அவளைக் கொலை செய்துள்ளீர்கள்.”

ஒருமித்தமுகமாக ஒரு பெருமூச்சு அறையை நிரப்பியது. மோகனைத் திரும்பி முறைத்துப் பார்த்தோம். அவர் உறைந்துபோய் நின்றார் – அவருடைய கண்கள் மாத்திரம் துப்பறிவாளர் Williams ஐயும் கதவையும் மாறிமாறிப் பார்த்தது, தப்பி ஓடமுடியுமா என்பதுமாதிரி. அவருடைய முகம் வெளுத்துவிட்டது, தோள்கள் சுருங்கிவிட்டன – ஆனால் எல்லோரது கண்களும் தன்னை நோக்கிப் பார்ப்பதைக்கண்டு ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது; கண்களிலே ஒரு எதிர்ப்புத் தெரிந்தது, உடம்பு நேரானது.

“இதை முன்பேயே நாங்கள் பேசித் தீர்த்துவிட்டோம்,” அவர் சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையோடும் குரல் உயர்ந்தது. “சீதாவைக் கொல்வதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லை. உண்மைதான், எனக்கு அந்த வீடு வேண்டியிருந்தது – அதை நான் மறுக்கவில்லை – ஆனால் அதனுடைய பெறுமதியைவிட அதிகம் தருவதாகச் சொன்னேன்! நான் வசிக்கவே நினைக்காத ஒரு வீட்டிற்காக நான் ஏன் எனது மச்சாளைக் கொல்லவேண்டும்?”

“அதாவது கடந்த வெள்ளிக்கிழமை 4:30 மணியளவில் சீதாவின் வீட்டருகே உங்களைப் பார்த்ததாக சிவா சொல்வதை நீங்கள் மறுக்கவில்லை?” துப்பறிவாளர் Williams இன் குரலில் நட்புத்தன்மை இல்லாமல் இறுக்கமாக இருந்தது.

மோகனுடைய கண்கள் அறையைச் சுற்றிப் பார்த்தன; தனக்கு நட்புரீதியாக யாராவது இருக்கிறார்களாவென்று. அவரது பார்வை சிவாவை சென்றடைந்தபோது ஒரு கணம் தாமதித்தது  ----- ஒரு மௌனமான வேண்டுகோள், கிட்டத்தட்ட ஒரு கட்டளை. நாங்கள் ஒருவரும் ஒரே படகிலே, சிவா. நான் உன்னுடைய இரகசியத்தைக் காப்பாறினேன்; அன்றைய தினம் நீ அங்கிருந்ததை நான் ஒருவருக்கும் சொல்லவில்லை; இப்போது என் பக்கம் நில்.

ஆனால் சிவாவின் பார்வை கேள்விகள் கேட்டபடி, கண்டித்தபடி, கண்வெட்டாமல் நிலையாக நின்றது.

மோகனுடைய தோள்கள் சுருங்கின. “நான் அங்கிருந்தேன், அதற்கென்ன?” இறுதியாக அவன் திணறினான். “அது ஒன்றையும் நிரூபிக்கவில்லை!”

“நீ என்ன சொல்கிறாய், மோகன்?” நான் கத்திக்கொண்டே அவரை நோக்கி முன்னேறினேன். “நீ ஏன் அம்மா வீட்டிற்குத் திரும்பவும் போனாய்?”

Brad மாத்திரம் என்னைப் பிடித்திருக்காவிடில் எனது வலுவிழந்த கைகளால் அவனை அடித்திருப்பேன்.

“அருவி, நீ கோபமாயிருப்பது எனக்குத் தெரிகிறது…… ஆனால் தயவுசெய்து என்னைப் புரிந்துகொள். நான்  கோலாலம்பூருக்குப் போகமுதல் கடைசித் தடவையாய் சீதாவுடன் பேச விரும்பினேன். நான் திரும்ப எப்போது வருவேனோ தெரியாது – அவளுடைய மனத்தை மாற்றமுடியும் என்று நினைத்தேன்.” 

“உங்களுடன் இருந்த மனிதன் யார்? அவரும் உங்களுடன் வீட்டிற்குள் வந்தாரா?” துப்பறிவாளர் Williams விடாப்பிடியாக, ஆனால் நிதானத்துடன் கேட்டார். அவ எனக்கு நம்பிக்கையூட்டும்வண்னம் பார்த்தா – எவ்வளவு காலம் எடுத்தாலும் மோகனிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுவேனென்ற மௌனமான உறுதிமொழியைத் தந்தபடி.

“இல்லை, நான் தனியாகத்தான் சென்றேன்,” மோகன் முணுமுணுத்தான். “Heng, கோலாலம்பூர் நண்பன். அவர் காரிலேயே இருந்தார். நாங்கள் ஒரே விமானத்தில் வந்தோம்; அவர் விமானநிலையத்தில் ஒரு கார் வாடகைக்கு எடுத்திருந்தார். எங்களுடைய விமானத்திற்கு இன்னும் சிறிது நேரம் இருப்பதால், சீதாவைப் பார்த்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு இன்னுமொருமுறை முயலலாமென்று அவர் சொன்னார்.”

“என்ன?” சுபா, ஜெயா பெரியம்மாக்கள் ஒன்றாகக் குரல் எழுப்பினர். “உங்களுக்கு வீடு கிடைப்பதில் அவருக்கு என்ன அக்கறை?”

மோகன் அவர்களுடைய கண்களைப் பார்க்கவில்லை.

“என்னுடைய பாட்டன் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்குத் தெரியும்--- அத்துடன் யாழ்ப்பாணம் கடற்கரையோடு ஒரு விடுதியானது தவறவிடமுடியாத நல்லதொரு வணிக சந்தர்ப்பம்,” அவர் முணுமுணுத்தார்.

“இப்பொது Heng எங்கே?” விசாரணையின் போக்கு மாறிவிடாமல் இருக்கும்படி துப்பறிவாளர் Williams அழுத்திக் கேட்டார்.

“அவர் அன்றிரவே கோலாலம்பூருக்குப் பறந்த்விட்டார். நீங்கள் என்னை மறித்திராவிடில் நானும் போயிருப்பேன். சொல்லுங்கள் – இங்கே மெல்பேர்ணில் இன்னும் எவ்வளவு காலம் மறித்து வைத்திருக்கப் போகிறீர்கள்? ஒரு ஆதாரமுமில்லாமல் என்னை மறித்து வைத்திருக்கமுடியாது.”

“சீதாவைக் கடைசியாக உயிருடன் நீங்கள்தான் பார்த்துள்ளீர்கள், மோகன். என்ன நடந்ததென்று சொல்லுங்கள்.”

மோகன் விரக்தியுடன் பெருமூச்சு விட்டார். “ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்கிறேன். இதற்கு முன் முன்கதவால் போயிருந்தபோதிலும் இம்முறை பின் கதவால் போனேன். என்னைக் கண்டவுடன் அடுப்படியிலிருந்து வந்த சீதா என்னைப் பேசவிடவில்லை.

தனது கையை உயர்த்தியபடி சொன்னா, “மோகன், இல்லை என்று சொன்னால் அதை ஒரு மறுமொழி என்று எடுக்கமாட்டாயா? நான் அந்த வீட்டை விற்கப் போவதில்லை. இப்போது உடனடியாகப் போய்விடு. நான் அவசரமாக அருவியுடன் பேசவேண்டும் … உனக்கும் சொல்லிவிடுகிறேனே --- நான் அவளுடைய சிங்கள நோயாளியுடன் சிநேகிதமாகியுள்ளேன். அவளுக்கு உடனடியாக இந்தச் செய்தியைச் சொல்லவேண்டும்.”

மோகன் திரும்பத் தொடங்குவதற்கு முன்னர் தனது நெற்றிப்பொட்டை இறுகத் தேய்த்தார்.

“எங்களுடன் வில்லாசில் சாப்பிடுவதற்கு வந்த மனிதனா என்று கேட்டேன். பொறுமையில்லாமல் அவள் தலையாட்டினாள். நான் சொன்னேன், “அவரைப் பார்த்தால் ஒரு கண்ணியவான் போலத் தெரிகிறது.” நான் தொடர்ந்து பேச விருப்பப்பட்டபோதிலும், அவள் என்னைக் கிட்டத்தட்டத் தள்ளிவிடுமாறு இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன்.”

முகத்தை உயர்த்தி அவன் துப்பறிவாளர் Williams  ஐப் பார்த்தபோது, அவனுடைய முகபாவம் தற்பாதுகாப்பதுமாதிரியும் ஆக்ரோஷமாகவும் இருந்தது.

நான் துப்பறிவாளர் Williams ஐ நம்பமுடியாமல் பார்த்தேன். “நீங்கள் இவர் சொல்வதை நம்புகிறீர்களா? துப்பறிவாளரே! இவன்தான் அவவைக் கொன்றவன். இவனாகத்தான் இருக்கும். இவன் 4:30 க்குப் பார்த்திருக்கிறான். 5:00 மணிக்கு Zoe வந்தபோது ஏற்கனவே அம்மா இரத்தம் வெளியேறி இறந்திருக்கிறா. வேறு யார் செய்திருக்கக்கூடும்?”

துப்பறிவாளர் Williams மெதுவாக என்பக்கம் திரும்பி மெதுவான குரலில், கிட்டத்தட்ட மன்னிப்புக்கேட்பதுமாதிரி, “எங்களால் ஒன்றும் செய்யமுடியாது, அருவி. ஒரு உள்நோக்கமும் இல்லை, ஒரு ஆதாரமும் இல்லை. இரண்டில் ஒன்றாவது இல்லாமல் இவரைத் தடுத்துவைக்க சட்டத்தில் இடமில்லை.”

“ஆனால் ஒரு உள்நோக்கம் இருந்தால்?” சுபா பெரியம்மாவின் குரல் நடுக்கத்துடனும் ஒருவித உற்சாகத்துடனும் இடை மறித்தது. 

எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. என்ன உள்நோக்கம்? சுபா பெரியம்மா என்ன அர்த்தத்தில் சொல்கிறா?

“நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள்! நான் பிழையாயிருக்கலாம் …. ஆனால் இது சரியாகப் பொருந்துகிறது. இதுவரை நாங்கள் ஏன் இதுபற்றிச் சிந்திக்கவில்லை?”

“உனக்கென்ன பைத்தியமா, சுபா?. நீ என்னத்தைப்பற்றிக் கதைக்கிறாய்?” ஜெயா பெரியம்மா அதிகாரத்துடன் கேட்டா.

மோகன் திடீரென்று சங்கடப்படுவதுபோலத் தெரிந்தது. மற்றவர்கள் சுபா பெரியம்மாவை திகைப்புடன் உற்றுப் பார்த்தோம். அவ எங்களைப் பார்க்கவில்லை – உமாவைப் பார்த்தபடி இருந்தா.

“உமா, எங்கடை பாட்டாவைப்பற்றி வந்த கட்டுரை உன்னிடம் இருக்கா?”

இது எங்கே இழுத்துப் போகிறதென்று தெரியாமல், உமா மெதுவாகத் தலையாட்டினா.

“நேற்று, பாட்டாவைப்பற்றி செய்தித்தாள் ஒன்றில் வந்த கட்டுரையைப்பற்றி மோகன் குறிப்பிட்டார்,” சுபா பெரியம்மா விளங்கப்படுத்தினார்: அவ சொல்லும்போது தனது உற்சாகத்தை அவவால் மறைக்கமுடியவில்லை.

“அந்த நேரத்திலே, நான் அதைப்பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் இன்று காலை, இணையத்தில் தேடி அதை உமா கண்டுபிடித்துவிட்டாளென்று வசந்தி மாமி சொன்னா. அதைப்பற்றிச் சொல்,உமா.”

“அம்மாவும் நானும் அந்தக் கட்டுரையைப்பற்றி அறிய ஆவலாயிருந்தோம். இந்தக் குடும்பத்தைப்பற்றி தனக்கு வெகுகாலம் தெரியுமென்றும், ஆனால் பாட்டாவைப்பற்றி வந்த எந்தக் கட்டுரையையும் தெரியாதென்று அம்மா சொன்னா. நேற்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. ஆகவே இணையத்தில் தேடிப்பார்த்தேன். அதிக நேரம் எடுத்தது, ஆனால் இறுதியில் கண்டுபிடித்தேன்- 1962 இல் Daily News பத்திரிகையில்.”

உமா எப்படித் தொடர்வது என்று தெரியாமல் சற்று தாமதித்தாள்.

“சொல்லு, உமா,” சுபா பெரியம்மா ஊக்கப்படுத்தினா. “அதில் என்ன இருந்ததென்று சொல், உமா.”

உமா அவவைத் தடுமாற்றத்துடன் பார்த்தபடி தொடர்ந்தா.

“கட்டுரையில் மகாலிங்கம் மாமா எப்படிப் பணக்காரராய் வந்தாரென்று எழுதியிருந்தது – உண்மையைச் சொல்லப்போனால், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பொருட்களைக் கள்ளமாகக் கடத்துவதன் மூலமாகவே பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார்.

வருமானவரியிலிருந்து தப்புவதற்காக, தனது வீட்டிலுள்ள சுவர் ஒன்றில் தங்கப்பாளமாக மறைத்து வைத்துள்ளார். ஆனால் யாரோ உளவு கொடுத்ததால், அதிகாரிகள் சோதனைக்கு வந்து சுவரை உடைத்து, கிட்டத்தட்ட பத்து கில்லோகிறாம் தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதிர்ஸ்டவசத்தால் அவர் சிறைக்குப் போகவில்லையென்று கட்டுரை சொல்லிற்று. சரியான ஆட்களுக்கு சரியானபடி இலஞ்சம் கொடுத்து சிறிய அபராதத்துடன் தப்பிவிட்டாரென கட்டுரை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தது.”

உமாவின் குரல் மெதுவாக ஓய்ந்தது – ஒரு புதிரின் சிறு துண்டு சரியான இடத்தில் போய் பொருந்தியதைப் பார்த்ததுமாதிரி அறை திகைப்பில் ஆழ்ந்தது.

சுபா பெரியம்மா மூச்சை அவசரமாக இழுத்தபடி முன்னுக்கு வந்தா.

“இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? அம்மாவின் வீட்டிலிருக்கும் சுவர் --- மண்டபத்தின் நடுவில் இருக்கும் அந்த அதிசயமான சுவர்! ஞாபகமிருக்கிறதா? அது தேவையில்லாத சுவர் என்று நினைத்தோம்.

சிறு பெண்களாக இருந்தபோது, ஒவ்வொரு பக்கமும் மூன்று பேராக இருந்து படிப்பதற்கு, அம்மாவிற்கு ஆறு பெண்கள் பிறப்பார்களென்று பாட்டாவிற்குச் சாத்திரம் தெரியுமென்று தமாசாக நாங்கள் பேசுவதுண்டு. ஆனால், உண்மையில்----”

கண்கள் விரிந்தபடி ஆழமாக மூச்செடுத்து, “உண்மையில் அறையைப் பிரிப்பதற்காக அந்தச் சுவர் கட்டப்படவில்லை, மாறாக எதையோ ஒளித்து வைப்பதற்காகக் கட்டப்பட்டதா?”

அவவின் பார்வை ஏதோ எதிர்பார்ப்போடு அறையைச் சுற்றிச் சுழன்றது. அவவின் உற்சாகத்தைப் பார்த்து நாங்கள் கட்டுண்டுபோய் இருக்கையில், அவ தொடர்ந்தா.

“இன்னும் விளங்கவில்லையா? எப்போதெல்லாம் பாட்டா வரும்போதும், அவர் ஏன் மற்ற ஆண்கள் மாதிரி வராந்தாவில் இருப்பதில்லை? தனது சாய்மனைக்கதிரையை எப்போதும் அந்தச் சுவருக்குப் பக்கத்தில் அரக்கிவிட்டுச் சுவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார். ஞாபகமிருக்கா?”

மகா, ஜெயா பெரியம்மாக்கள் ஞாபகம் வந்ததுமாதிரி தமக்குள்ளே மென்மையான பார்வையைப் பகிர்ந்தார்கள்.

“பாட்டா திரும்பவும் செய்துள்ளார்,” வெற்றி மிடுக்குடன் சுபா பெரியம்மா சொன்னா.

“சுவருக்குள் தங்கப் பாளங்களை மறைத்து வைத்துள்ளார்.”

 

 

 

அத்தியாயம் 33 – என்னுடைய அம்மாவின் மகள்

அருவி

28 ஜூலை 2025

மெல்பேர்ண்

 

சுபா பெரியம்மா தொடர்ந்தபோது நாங்கள் சிலையாக நின்றோம்.

“அவர் சுவரில் தங்கத்தை மறைத்து வைத்துள்ளார் – திரும்பவும்! உங்களுக்குப் பார்க்கத் தெரியலையா? அந்த வீட்டை 1965 ல் அம்மாவிற்காகக் கட்டினார் – அந்தக் கட்டுரை வந்து மூன்று வருடங்களின் பின்னர் – எல்லாம் பொருந்துகிறது! ஒரு புத்திசாலித்தனமான மறைப்பு!

ஒருவருக்கும் ஞாபகம் இருக்காதென்று நினைத்திருக்கவேண்டும், அல்லது ஞாபகம் இருந்தாலும், இரண்டாம் முறையும் தனது செல்வத்தைச் சுவருக்குள் அடைத்து வைக்கக்கூடியளவு  முட்டாளாயிருப்பாரென்று ஒருவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர் முட்டாளில்லை …….பெரிய மேதை.

அந்தச் சுவர் இன்னும் இருக்கிறது, இவ்வளவு வருடங்கள் கழிந்தும். நான் என்னுடைய கடைசி டொலறையும் அங்கே தங்கம் இருக்கிறதெனப் பந்தயம் கட்டுவேன்!”

தன்னுடைய அனல் பறக்கும் பார்வையை மோகன் பக்கம் திருப்பினா, “நான் சொல்வது சரிதானே, மோகன்? உனக்கு வீட்டின்மேல் ஆசையில்லை. சுவருக்குள் இருக்கும் தங்கத்தின் மீதுதான் ஆசை! இந்தமுறை எவ்வளவு தங்கத்தை பாட்டா ஒளித்துவைத்துள்ளார்?”

மோகன் உறுமினான், வார்த்தைகளில் ஏளனம் கொட்ட. “இதைப் புரிந்துகொள்ள உனக்கு இவ்வளவு நேரம் எடுத்ததா?”

“அதுதான் தங்கத்தின்மீது நீ அதிக மோகம் கொண்டிருந்தாய், மோகன்,” நம்பமுடியாமல் நடுங்கிக்கொண்டே ஜெயா பெரியம்மா கேட்டா. அவனை முதன்முறையாகப் பார்ப்பதுமாதிரி முறைத்துப் பார்த்தா. “அதுதான் பாட்டாவின் செல்வத்தைப்பற்றி அடிக்கடி கேட்டாய் – அவரிடமிருந்து எவ்வளவு தங்கம் எங்களுக்குக் கிடைத்ததென்று. அந்தளவு கேள்விகள் …. அந்த ஆர்வம்! அது குடும்பத்தைப்பற்றி இல்லை, அப்படித்தானே?”

“எல்லாவற்றையும் நான்தான் எடுக்கவேண்டுமென்று பாட்டா விரும்பினார்!” மோகனுடைய பதில் உடனே வந்தது, குரல் கூர்மையாகவும் விரக்தியுடனும் இருந்தது. “அங்கே ஐந்து தங்கப் பாளங்கள் இருந்ததாகச் சொன்னார் – கிட்டத்தட்ட பன்னிரெண்டு கில்லோகிறாம். இன்றைய பெறுமதி எவ்வளவென்று உங்களுக்குத் தெரியுமா? ஐந்து மில்லியன் டொலேர்ஸ்!”

இப்போது உண்மை வெளிவந்துவிட்டபடியால் மோகன் தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கவில்லை. அவரிடமிருந்து வார்த்தைகள்  ச்ரமாரியாக வந்தன.

“பல வருடங்களுக்கு முன்னாடி அங்கே வந்தபோது, சுவரை உடைத்து தங்கத்தை மலேசியாவிற்குக் கொண்டுவர நினைத்தார். ஆனால் மனதை மாற்றிக்கொண்டார். அங்கே அது பாதுகாப்பாக உள்ளதாகச் சொன்னார். ஒருநாள் என்னை வல்வெட்டித்துறைக்குக் கூட்டிக்கொண்டுபோய் இருவருமாகச் சேர்ந்து சுவரை இடிப்போமென்று சொன்னார். அந்தப் பாளங்களை எனக்கு நேரில் கொடுத்து என் முகத்தில் வரும் சந்தோஷத்தைப் பார்க்க விரும்பினார்.”

அவனுடைய குரல் இறுகியது. “பாட்டாவிற்கு விருப்பம் இல்லாதது என்னவென்றால்,” அவன் சீறினான், ”உங்கடை அம்மா ஒரு பங்கு கேட்பதுதான். அவவிற்கு போதுமானளவு ஏற்கனவே கொடுத்துள்ளதாகச் சொன்னார். தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக கள்ளமாகக் கல்யாணம் செய்துகொண்ட அவவிற்கு அந்த வீடு கிடைத்ததே பெரிய அதிர்ஸ்டம் என்று சொன்னார்.”

மோகனுடைய கண்கள் எங்களைச் சுற்றிப் பார்த்தபோது உள்ளேயிருந்த வெறுப்பு தெளிவாகத் தெரிந்தது. “எப்போதும் அவர் சொல்வார், உள்ள பேரப்பிள்ளைகளில் நான்தான் அவரை நன்றாகப் புரிந்தவன் என்றும், அந்தத் தங்கப் பாளங்கள் ஒருநாள் எனக்குச் சொந்தமாகும். எனக்கு வயது வந்தபோது, இலங்கையில் உள்நாட்டுப்போர் மோசமாகி, பயணம் செய்வது ஆபத்தானதாகிவிட்டது.”

அவர் முகத்திலே ஒரு கீற்று – குற்ற உணர்வாயிருக்கலாம் – வந்தது, ஆனால் எவ்வளவோ நாட்கள் அடைத்து வைத்திருந்த கதையை நிற்பாட்டமுடியாமல் தொடர்ந்தார்.

“பாட்டா இறந்த நாள்தான் எனக்கு மிகவும் மோசமான நாள்,” பழைய நினைவின் பாரத்திலே அவருடைய குரல் உடைந்துபோனது.

“ஒரு நிபந்தனையுமில்லாமல் என்னை நேசித்த ஒருவரை இழந்தது மாத்திரமில்லாமல், என்னுடைய கனவுகள் எல்லாம் எரிந்து சாம்பலாகின. வல்வெட்டித்துறையிலுள்ள வீடு உங்கடை அம்மாவிற்குப் போனது, கோலாலம்பூரிலுள்ள இரண்டு வீடுகள் சித்தப்பாவின் பிள்ளகளுக்குப் போயின, மிச்சமிருந்த நகைகள் எனது சகோதரிக்கு. எனக்கு? உயிலில் என் பெயர் குறிப்பிட்டிருக்கவேயில்லை. உங்களால் நம்பமுடிகிறதா? என்னைப்பற்றியோ சுவரைப்பற்றியோ தங்கத்தைப்பற்றியோ ஒரு வார்த்தையில்லை. எழுத்தில் போட அவருக்குத் தைரியம் இல்லை.”

வெறுப்பினால் அவர் கண்கள் சிவந்தன. “சீதா மாத்திரம் அந்த வீட்டை எனக்கு விற்க ஒத்துக்கொண்டிருந்தால், இது ஒன்றும் நடந்திருக்காது. என்னுடைய அதிர்ஸ்டத்தை முத்துவிடமும் முயற்சித்துப் பார்த்தேன். சுவரை நான் நோட்டம் விடப்போனபோது, வீட்டைத் திருத்துவதற்குக் கேட்டுப்பார்த்தேன் – அந்த வழியில் ஒருவருக்கும் தெரியாமல் சுவரை உடைத்துத் தங்கத்தை எடுத்திருப்பேன். ஆனால் ஒரு செங்கல்லையும் தொட முத்து விடவில்லை.

எனக்குத் தெரிந்ததை உலோகத்தைக் கண்டறியும் கருவியும் உறுதிசெய்தது; சுவரிலே தங்கம் ஒளிந்துகிடக்கிறது. வீடு முழுவதையும் விலைக்கு வாங்குவதன் மூலமாகவாவது, அதை வெளியே கொண்டுவரத் தீர்மானித்தேன்.

வீடு எனக்குச் சொந்தமானபின் ஒருவரும் அதற்கு உரிமை கோரமுடியாது. பாட்டா விரும்பியதுமாதிரி அது எனக்கே சொந்தமாகும். அந்தத் தங்கத்தை அடையக்கூடிய தகுதி தன் பேரப்பிள்ளைகளில் எனக்கொருவனுக்குத்தான் இருப்பதாகப் பாட்டா எப்போதும் சொல்வார்.”

“திரு இராமநாதன், இதற்கு மேலும் நீங்கள் இப்போதைக்குப் பேசவேண்டியதில்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுன்னர் நீங்கள் உங்கள் வக்கீலுடன் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது,” துப்பறிவாளர் Williams இடைமறித்தார்.

“அதனால் என்ன பயன்?” மோகனுடைய தோள்கள் சரிந்துவிட்டன, குரலில் வெறுமை தெரிந்தது. “உங்களிடமிருந்து நான் தப்பிப் போனாலும் Heng உம் அவனுடைய ஆட்களும் என்னைச் சுதந்திரமாக நடக்க விடமாட்டார்கள்.”

தோல்வியின் பாரத்தால் தொங்கிப்போன கண்களுடன் மோகன் தொடர்ந்தார்.

“கடந்த வருடம், நான் எடுத்த எல்லா வணிக முயற்சிகளுமே துரதிஸ்டத்தில் முடிந்தன – நான் தொட்ட எல்லாமே தூளாகின. அந்த நேரத்தில்தான் Heng என் முன்னால் வந்தான். அவனைச் சரியாகத் தெரியாது. நான் ஆபிஸ் வைத்திருந்த கட்டிடத்திலேயே அவனும் வைத்திருந்தான். நான் எல்லாவற்றையும் இழந்தபின்னர், இதே மாதிரியாகப் படு மோசமாகப்போன ஒரு நண்பரைத் தனக்குத் தெரியுமென்றும், கசினோவிற்குப் போய் ஒரு வாரத்திலேயே இழந்ததெல்லாவற்றையும் அவர் மீண்டெடுத்தார் என்றும் சொன்னான். அதே மாதிரிச் செய்வதற்கு தான் எனக்கு உதவுவதாகச் சொன்னான்.

அவன் எனக்குக் கடன் தந்து உதவினான். ஆரம்பத்தில் அது வேலை செய்தது – அடுத்து இரண்டு மடங்கு உயர்த்தி சூதாடினேன். என்னுடைய அதிர்ஸ்டம் திரும்பிவிட்டதென நினைத்தேன். ஆனால், அது நீடிக்கவில்லை. வெகு விரைவில், எல்லாவற்றையும் இழந்தேன் – மில்லியன் கணக்கான மலேசியன் டொலேர்ஸ் சில நாட்களில் இழந்தேன். அப்போதுதான் Heng தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டினான். தன்னுடைய ஆட்களை அனுப்பி என்னை மிரட்டினான் – தனக்குத் தரவேண்டியதை ஞாபகப்படுத்தி.

வேறு வழியின்றி, அந்தத் தங்கத்தைப்பற்றி அவனுக்குச் சொன்னேன் – நியாயப்படி அது எனக்குச் சொந்தமானதுதான். அதை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் எனக்குத் தருவதாகச் சொன்னான். யாழ்ப்பாணத்திற்குத் தான் நேரடியாகப் போய் அந்த சுவரை உடைப்பதற்கு விரும்பினான். ஆனால், சட்டப்படி செய்வதற்காக முதலில் அந்த வீட்டை எடுக்கவேண்டும் என்று சொல்லி அவனை சம்மதிக்கவைத்தேன்.

மெல்பேர்ணுக்கு வந்து முதலில் வீட்டை எடுக்கவேண்டுமென்று சொன்னபோது தானும் கூட வருவதாகச்சொன்னான்- ஒரே விமானம், ஒரே ஹொட்டல். அவன் என்னை நம்பத் தயாரில்லை.”

மோகன் சற்று நிறுத்தினான், ஆனால் எங்கள் ஒருவரையும் பார்க்கவில்லை. அவனுடைய தோற்றம் – கூனியும், உடைந்தும் இருந்த தோற்றம் அவனுடைய வார்த்தைகளை விட அதிகம் பேசிற்று. அவனுடைய பேராசையும் பொறுப்பற்ற தன்மையும் அவனுடைய அழிவுக்குக் காரணமாயிற்று – அது அவனுக்கும் தெரிந்தது.

“நான் சீதாவை முதன்முறை பார்த்தபோது அவள் கவனமெல்லாம் எங்கேயோ இருந்தது, கடுமையாகப் பேசினாள். அவள் தெளிவான முடிவெடுத்திருந்தாள். நான் ஹொட்டேலுக்குப்போய் இதிலே பிரயோசனம் இல்லையென்று Heng  க்குச் சொல்லி வேறு விதமாக, மெதுவாக அவனுடைய பணத்தைத் திருப்பித் தருவதாகச் சொன்னேன். அவன் படீரென வெடித்தான், நான் சரியானபடி முயலவில்லையென்று குற்றம் சாட்டினான். திருப்பிப் போய்க் கேட்போமென்றும், அவள் மாட்டேனென்றால், அவள் மறுக்கமுடியாதபடியான காரணத்தைத் தான் காட்டுவதாயும் சொன்னான் – அவன் என்னத்தைச் சொன்னான் என்பது எனக்கு விளங்கியது. அவன் அவளுக்குக் கிட்டே போவதை நான் விரும்பவில்லை. ஆகவே, அவனைக் காரில் இருக்கும்படியும் நான் அவளைக் கையாள்கிறேன் என்றும் சொன்னேன்.

இந்த முறை, சீதா நேரடியாகச் சொன்னாள். என்னைப் போகுமாறு சொன்னாள். நாலக பற்றிச் சொன்னாள். என்னுடன் கழிப்பதற்கும், தான் இல்லையென்ற பிறகும் அதை எதிர்க்கும் என்னிடம் பேசுவதற்கும் தனக்கு நேரமில்லையென்றும் சொன்னாள். என்னைப் பேசுவதற்கே அனுமதிக்கவில்லை. போகச்சொல்லிக் கையைக் காட்டிவிட்டு திரும்பவும் அடுப்படிக்குள் புகுந்தாள்.

நான் அத்தோடு கைவிட முடியாதெண்று எனக்குத் தெரியும். அவளைப் பின்தொடர்ந்தேன். அப்ப்போதுதான் நடுமேசையிலுள்ள கத்தி/கரண்டி வைக்கும்  லாச்சி திறந்திருப்பதைப் பார்த்தேன். கரண்டிகளுக்கும் முட்கரண்டிகளுக்கும் மத்தியில் வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்த கத்தியைப் பார்த்தேன். அதை எடுத்தேன்…..பிறகு….பிறகு என்ன நடக்கிறதென்று புரிவதற்கு முதலே அவளை நோக்கிக் கத்தியை நீட்டினேன்.”

அவனுடைய கதை எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதென்று தெரிந்தும், திகைப்புடனும் திகிலுடனும் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம் – நாங்கள் பயந்து கொண்டிருந்த அத்தத் தருணம் எப்ப வருமென்று.

“எனக்கு …… எனக்கு அடுத்து என்ன நடந்ததெனத் தெரியாது! எனது கையைப் பார்த்து அந்தக் கத்திக்கு என்ன ஆனதென்றும், ஏன் சீதா தரையில் வீழ்ந்திருக்கிறாவென்றும் அதிசயப்பட்டது ஞாபகமுள்ளது. நிச்சயமாக அவளைக் கத்தியால் குத்தியது நானில்லை! நான் சொல்வதைக் கேட்கவேண்டுமென்று சும்மா அவளை வெருட்டத்தான் நினைத்தேன். நான் சத்தியம் செய்கிறேன். அவளைக் குத்தவேண்டுமென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை – அவளைக் கொல்ல நான் ஒருபோதும் நினைக்கவில்லை.”

எங்களில் ஒருவரும் பேசவோ நகரவோ இல்லை, மோகன் கூறிய மனதை உலுக்குகின்ற வாக்குமூலத்தை எப்படி உள்வாங்குவதென்று ஒவ்வொருவரும் திண்டாடிக் கொண்டிருந்தோம்.

“அவள் தரையிலே விழுந்தாள் – அவளுடைய உடல் தடக் என்ற அருவருப்பான சத்தத்துடன் கீழே விழுந்தபோது எனது வயிற்றைக் குமட்டியது. அங்கிருந்த இரத்தம் – மிக அதிக அளவிலான இரத்தம். சூடானதும் கருமையுமான இரத்தம் அவள் உடம்பிலிருந்து வெளியேறி, என்ன நடக்கிறதென்று நான் உணரமுன்னரே அடுப்படித் தரை பூராகவும் பரவிவிட்டது.  உயிரோடு இருப்பதற்குப் போராடுவதுமாதிரி அவளின் உடம்பு துடித்துக்கொண்டிருந்தது – அதன்பிறகு ….. அங்கே அமைதி, ஒரு பயங்கரமான அமைதி.

அங்கிருந்து ஓடவேண்டுமென எனக்குத் தெரிந்தது – நான் பறந்தேன் – பின்வாசல் வழியே. ஆனால் காரை அடையமுதலே, ஒரு பயங்கரமான புரிதல் வந்தது – கத்தியிலே என் கைவிரல் ரேகை பதிந்துள்ளது! திரும்ப வீட்டிற்குள்ளே ஓடி கத்தியை ஒரு ரிசூ பேப்பரினால் துடைத்தேன், நன்றாக – நான் செய்த விடயத்தை முற்றிலும் அழிப்பதற்காக.

அவளுடைய கண்கள் – கத்தி உள்ளே போனபோது பயத்துடன் விரிந்திருந்த கண்கள் இப்போது மந்தமாகவும் வெறுமையாகவும் கிடந்தன. சில கணங்களுக்கு முன்னர்தான் அவளுடைய இமைகள் படபடப்பதைப் பார்த்தேன் – உயிருடன் இருந்தாள், சத்தம்பொட்டுக்கோண்டு காற்றிலே கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள்! இப்போது அசையாமல் இருந்தாள் – திரும்பி வரமுடியாத பயங்கரமான அமைதியில்.

இரத்தத்தில் தோய்ந்தபடியும், உளறிக்கொண்டும் காருக்குப் பாய்ந்து வந்த என்னைக்கண்ட Heng சத்தம் போட்டான், “என்னடா செய்தாய், முட்டாளே? அவளைக் காயப்படுத்தினீயா?”

“கேள்வி கேட்காமல் காரை ஓட்டு!” நான் கத்தினேன். “அவள் இறந்துவிட்டாள் – இறந்துவிட்டாள்!”

ஆச்சரியப்படுவதுமாதிரி, ஹொட்டேலுக்குத் திரும்பிப் போகும்போது Heng ஒன்றுமே பேசவில்லை. என்னை வாசலில் இறக்கிவிட்டு, தனது சாமான்களை எடுப்பதற்கே உள்ளே வரவில்லை.

“நான் விமான நிலையத்திற்குப் போகிறேன்,” என்று கூறிவிட்டு காரைக் கோபத்துடன் ஓட்டிச் சென்றான்.

எனக்குப் பயமாயிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை; எனது அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தேன். எனது முதலாவது உள்ளுணர்வு உண்மையை ஒப்புக்கொள்வதுதான் – சீதாவைக் காயப்படுத்த வேணுமென்ற எண்ணம் இருக்கவில்லை என்று உங்களுக்குச் சொல்வதுதான். ஆனால் நீங்கள் என்னை மன்னிக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் …. நான் சிறைக்குத்தான் போகவேண்டிவரும்.

நான் மிகவும் பயந்ததென்னவென்றால், Heng என்னுடைய சின்னஞ்சிறு பெண்ணைத் துன்புறுத்தக் கூடுமென்பதுதான். கோலாலம்பூருக்கு உடனடியாகத் திரும்பவேணுமென்று எனக்குத் தெரியும், ஆனால் என்னுடைய வேகம் பத்தவில்லை, சரிதானே? நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்!”

அவருடைய வேதனையான ஒப்புத வாக்குமூலத்தின் இறுதி வார்த்தைகளின் முடிவில், அவருடைய இரங்கும் கண்கள் துப்பறிவாளர் Williams மீது பதிந்தன.   

அம்மாவின் இறப்புக்குக் காரணமான அந்தப் பேராசை, அந்தக் கொடூரம் எனது நுரையீரலிலிருந்த காற்றை உறிஞ்சிக்கொண்டது. எனது பெரியம்மாக்கள் எனக்குப் பக்கத்தில் விறைத்தபடி இருந்துகொண்டு, கண்கள் விரிந்தபடி உதடுகள் நடுங்கியபடி, நாங்கள் அனைவரும் விழித்திருந்துகொண்டே ஒரு கெட்ட கனவில் ஒன்றாகச் சிக்கிக்கொண்டிருந்து, இது உண்மையில் உண்மையில்லை

என்று நம்புவதற்கு ஆசைப்பட்டோம்.

தனது மூச்சை நிதானப்படுத்துவதற்குப் போராடிக் கொண்டேயிருந்த ஜெயா பெரியம்மாவின் முஷ்டிகள் திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தன.

“நாங்கள் உனக்கு அந்தச் சுவரையும், தங்கத்தையும், அந்த வீட்டையும் – ஏன் எல்லாவற்றையுமே – தந்திருப்போம், நீ மாத்திரம் எங்களுடன் நேர்மையாக நடந்திருந்தால், மோகன்! எங்களுடைய சீதாவை நீ ஏன் கொல்லவேண்டும்?”

அவனிடம் பதிலில்லை. தனது தலையை அவமானத்தால் குனிந்துகொண்டு தரையைத் தனது காலால் தேய்த்தபடி இருந்தான்.

“நான் அவளக் கொல்ல ஒருபோதும் நினைத்ததில்லை,” அவன் முமுணுத்தான். “அவளைப் பயமுறுத்தவே நினைத்தேன்.”

துப்பறிவாளர் Williams என்னையும் பெரியம்மாக்களையும் பார்த்தார், இந்த அர்த்தமற்ற செயல்பாடுகளை நினைத்து முகத்தைச் சுருக்கினார். எங்களுடைய முகத்திலேயிருந்த பதனிடப்படாத, மறைக்கப்படாத விசனத்தைப் பார்த்த அவ தனது நிதானத்தை ஒரு கணம் இழந்துவிட்டா.

அப்புறம், உணர்வுகளை விடத் தனது கடமைதான் முக்கியமென்பது ஞாபகத்திற்கு வந்ததும், ஓரளவே தெரியக் கூடியதாகத் தனது தலையை ஆட்டி, தன்னை நிமிர்த்துக்கொண்டு மோகனைப் பார்த்தபோது அவவின் கண்களில் கடுமை தெரிந்தது.

 

 

“மோகன் இராமநாதன், சீதா முருகதாசின் கொலைக்காக நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். உங்கள் வக்கீலுடன் கலந்தாலோசிக்கும்வரை நீங்கள் ஒன்றும் பேசாமல் அமைதியுடன் இருப்பதற்கு உங்களுக்கு உரிமையுள்ளது.”

கொன்ஸ்டபில் Fraser அவவின் வார்த்தைகளைக் கேட்டதும், அவவை ஏதோ கேட்பதுமாதிரிப் பார்த்துக்கொண்டே முன்னுக்கு வந்தார்.

“கை விலங்கிற்கு அவசியமில்லை,” அவ சொன்னா. “அவர் ஒத்துழைப்பார் என்று நான் நம்புகிறேன்.”

மங்கிய கண்களுடன் மோகன் பார்த்தான் – ஒரு காலத்தில் அவனுடைய அடையாளமாயிருந்த மிடுக்கு, எதிர்ப்பு, மிகுந்த உற்சாகம் ஆகியவை இப்போது தோல்வியாலும் சரணடைதலாலும் இடம் மாற்றப்பட்டுள்ளன.

அவன் என்னைக் கடந்து போனபோது என்னுடைய உடம்பிலிருந்த ஒவ்வொரு நாரும் அவனை அறையவேண்டுமென்று துடித்தன. கோபம் எனக்குள் பொங்கியெழுந்தது – கூர்மையாகவும், கண்மூடித்தனமாயும். ஆனால் எனது உடம்பு அசைய மறுத்துவிட்டது. எனது கைகள் கல்லால் செதுக்கப்பட்டதுபோல – பாரத்துடனும், உணர்ச்சியற்றும் இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன.

மோகனையும் கொன்ஸ்டபில் Fraser ஐயும் பின்தொடர்ந்த துப்பறிவாளர் Williams மென்மையாக எனது தோள்மீது கை வைத்துச் சென்றா.

அவனை அழைத்துச் சென்றபோது எனது முழங்கால்கள் வலுவிழந்தன. நான் Brad  ஐப் பிடித்தேன். அவர் தன்னுடைய கைகளால் பிடித்து என்னை அணைத்துக் கொண்டார்.

அவருடைய அணைப்பு இருந்தபோதிலும், எனது மனம் வெடித்துச் சிதறிப்போயிருந்தது ----- அவநம்பிக்கையும் துக்கமும் கலந்த கூர்மையான துண்டுகள் என்னைக் குத்தின. அம்மாவைக் கொன்றவன் யாரென்று தெரிந்தபோது வந்த நிம்மதி உடனேயே மறைந்துவிட்டது – அதைவிடக் கூர்மையான தாங்கமுடியாத உண்மை இப்போது வருத்தியது --- அம்மா என்னைவிட்டு நிரந்தரமாகப் போய்விட்டா.

எனது கண்கள் மகா பெரியம்மாவை நோக்கித் திரும்பின. அவ ஒரு நடுக்கமான புன்னகையுடன் என்னைப் பார்த்தா; மறைக்கமுடியாதபடி அவவின் கண்கள் ஆழ்ந்த வலியால் நிரம்பியிருந்தது. அவவின் சகோதரியாலும் கணவனாலும் மிகவும் ஆழமாகக் காயப்படுத்தப் பட்டுள்ளாள். அம்மா சார்பாக அவவிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தேன். ஆனால் நான் பேசமுன்னாடியே, எனது கைகளைப் பிடித்துக்கொண்டு முணுமுணுத்தா, “சீதாவும் …. சிவாவும்… நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை ---- ஆனால் இந்த யுத்தம்…..”

அவவுடைய குரல் சிதறியது. ஆனாலும் அதைத் தொடர்ந்து வந்த அவவின் மென்மையான புன்னகையில் அவவுடைய அந்த மனவுறுதியைக் கண்டேன் -   வாழ்நாள் பூராக குடும்பத்தின் மேல் வைத்திருந்த பாசத்தின் பலத்தைக் காணமுடிந்தது. அந்தக் கணத்திலே, அவவிற்கு உகந்த நேரத்திலே அந்த மன்னிப்புக் கிடைக்குமென்பதைப்  புரிந்துகொண்டேன். என்னுடைய பார்வையின் பாரம் இல்லாமல் அவ நிம்மதியாக மூச்சுவிட இடம் கொடுக்க வேண்டுமென்பதற்காக என்னுடைய பார்வையைத் திருப்பினேன்.

அடுத்ததாக எனது பார்வை ஆனந்த் பக்கம் திரும்பியது. அவன் உடைந்து பொயிருந்தான் – அவனைக் குறைசொல்லமுடியாது. நாங்கள் இனிமேலும் சும்மா சகோதரிகளின் பிள்ளைகள் மாத்திரம் இல்லை: எங்கள் நரம்புகளில் ஒரே தகப்பனின் இரத்தம் ஓடியது. ஒருவேளை இந்தக் காரணத்தினால்தானோ என்னமோ,  நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதே அவனுடைய நெருங்கிய உறவினர் என்பதைவிட சகோதரி என்றே உணர்ந்தேன். நாங்கள் விடுவிப்பதற்கு இன்னும் எவ்வளவோ விடயங்கள் இருந்தன. ஆனாலும், எங்களுடைய உறவு உடைபட்டுப் போகாதென்று நம்பினேன். சொல்லப்போனால், முதலிருந்ததைவிட வலுவாக்குமென்று நினைக்கிறேன்.

என்னிடமிருந்த பதட்டம் ஓரளவு குறைந்துகொண்டு போக, Brad  என்னைச்சுற்றிப் பிடித்திருந்த கைகளை ஓரளவு தளர்த்தினார். நன்றியுணர்வோடு அவரை உற்றுப் பார்க்கிறேன். அவர்தான் என்னுடைய நங்கூரம், நான் தடுமாறியபோது என்னைத் தாங்கிப் பிடித்தவர், எனக்குத் தைரியம் வேண்டிய நேரத்திலே அதைத் தந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இருண்ட புயலுக்கூடாக அவருடைய அன்புதான் என்னைக் கரை சேர்த்தது.

எனது உச்சந் தலையில் ஒரு மென்மையான முத்தத்தைத் தந்துவிட்டு என்னை சிவாவும், நாலகவும் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அவர்களை அலட்சியம் செய்தேன் – அவர்களின் இருப்பை மதிக்கவேயில்லை. ஆனால் Brad  செய்தது சரியானதுதான். அவர்களைச் சந்திக்காமல் நான் எனது வடுக்களைக் குணப்படுத்த முடியாது.

முதலில் நாலக பக்கம் திரும்பினேன். நினைவுகள் திரும்பின – அவருடைய வெறி, அவருடைய கொடூரம், அதைத் தொடர்ந்து வந்த எதிர்பாராத மென்மையான  சுயவருத்தம். அவர் செய்ததை என்னால் ஒருபோதும் மன்னிக்கமுடியாது, ஆனால் அவர் எப்படியான மனிதனாக வந்துள்ளார் என்பதை – செய்த தவறுக்கு வருந்தி அதற்கான பிராயசித்தத்தை தேடுவதை -  நான் புரிந்துகொள்ளவேண்டும். அவரது வலியை நான் உணர்ந்துள்ளேன் என்பது மாதிரி நான் தலையைச் சிறிது குனிந்தவுடன் அவருடைய கண்களிலே ஒரு மாற்றம் – நம்பிக்கையின் ஒரு கீற்றல் – ஒரு சிறிய களைப்படைந்திருந்த புன்னகை அவருடைய வேதனையான முகத்தைச் சிறிது மென்மையாக்கியது.

சிவா பக்கம் நான் திரும்பியபோது, ஒரு விசித்திரமான தடுமாற்றம் என் மனதில் நிறைந்தது. எப்படியாக இவர் என் தந்தையாக இருக்கலாம்?  என்னுடைய வாழ்க்கையில் துண்டுதுண்டாக ஒட்டிக் கோண்டிருந்தவர் எனது நரம்புக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சொந்தக்காரர் என்று எப்படிச் சொல்லமுடியும். அவருடைய கண்கள் சுமந்து நின்ற சோகம் என்னைச் சந்திக்க முடியாதபடி ஆழமாக இருந்தது – இன்னும் இல்லை. ஆனால் அவர் காத்திருப்பார்; எனக்கு அதில் நம்பிக்கை இருந்தது.

அவரும் அம்மாவும் நீண்ட காலம் சுமந்து வந்த அந்த இரகசியத்தை – குற்றம் கலந்த அந்த மௌனத்தை, பல வருட வேதனையை – நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுடைய துரோகத்தை, உண்மைக்குப் பதிலாக ஏன் மௌனத்தைத் தெரிவு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கசப்பான நினைவுகளுக்கான நேரம் இதுவல்ல. அம்மா போய்விட்டா – கொஞ்சம் கெதியாகவே போய்விட்டா, தானாகவே அந்த உண்மையை எனக்குச் சொல்வதற்கு முன்னாடியே. அவ எப்படித் துன்பப் பட்டிருக்கவேண்டும்!

என்னுடைய வலி அடங்குவதற்காக நீண்ட மூச்செடுத்தேன். அந்த மோசமான இரவுக்குப் பிறகு, இந்த உலகிற்கு என்னைக் கொண்டு வந்ததற்கான பரிகாரத்தில் ஒவ்வொரு நாளும் செலவழித்துள்ளா – என்மீது அதிகப்படியான அன்பு செலுத்தி, தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுத்து, தன்னந்தனியாக வளர்த்துள்ளா. அந்தக் கணத்திலே அவவின் தைரியத்தைக் கண்டு பிரமித்தேன்  --- எனக்குள் ஒரு அமைதியான உறுதி ஏற்பட்டது.

அம்மாவிற்கும் எனக்கும் ஒருவருக்கொருவர் இருந்தது போதுமானதாக இருந்தது.

அம்மா உயிருடன் இருந்தபோது, எனக்கு ஒரு தந்தை தேவைப்படவில்லை. இப்போதும்  எனக்குத் தேவையில்லை.

நான் என்னுடைய அம்மாவின் மகளாக – அவவின் வாரிசாக இருந்தேன். அது சிவாவாக இருக்கட்டும், அல்லது நாலகவாயிருக்கட்டும் ஒரு தந்தையின் மகளாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை.

நான் உங்களைப் புரிந்துகொண்டேன் என்று அம்மாவிற்குச் சொல்லத் துடிக்கிறேன் – ஏன் என்னுடைய பிறப்பைப் பற்றிய உண்மையை மறைத்தா, ஏன் கசப்பிற்குப் பதிலாக மன்னிப்பைத் தேர்ந்தெடுத்தா என்பதை. சிவாவை மாத்திரமல்ல, நாலகவை மாத்திரமல்ல, தன்னையுமே மன்னிக்கும் அவவின் குணம்தான் அவவின் பலம் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் இப்போது எனக்கு சொல்லுவதற்கு வாய்ப்புக் கிடைக்காது. அதேபோல தன்னை வாட்டிவதைத்த துரோகத்தைப்பற்றியோ அல்லது நீண்ட காலம் தனிமையில் காப்பாற்றிவந்த இரகசியத்தைப் பற்றியோ அவவாலும் குரல் கொடுக்கமுடியாது.

அந்த நேரத்தில் மென்மையாகவும் முழுமையாகவும் என்னைத் தாக்கியது: நான் அவவின் குரலை இனிமேல் கேட்கமுடியாது, அவவின் தழுவலில் உள்ள சுகத்தை அனுபவிக்கமுடியாது. அவவின் கண்களிலுள்ள ஒளியைக் காணமுடியாது.

எனது உடம்பு நடுங்கியது, ஏதாவதொன்றைப் பிடிப்பதற்காக அறையைச் சுற்றிப்பார்த்தேன்; எனக்குள்ளே உருவாகும் புயலை அடக்குவதற்கு யாரேனும் வரமாட்டார்களாவெனறு தேடினேன்.

அப்போது, ஒருவித எச்சரிக்கையும் இல்லாமல் எனது கன்னத்திலே மெல்லியதாக ஒரு தூரிகை தடவிக்கொண்டு சென்றது. ஒரு வண்ணாத்திப்பூச்சி அதனுடைய இறக்கைகள் பன்னிறப்பொலிவுடன் மின்னியபடி மெதுவாகத் தாண்டிக்கொண்டு, காற்றிலே மிதந்தபடி சட்டமிட்டிருந்த அம்மாவின் புகைப்படத்தில் அமர்ந்தது. அந்தப் படத்திலே அம்மாவின் கண்கள் அன்பால் பிரகாசித்தது. அவவின் சாந்தமான, மென்மையான, அசைக்கமுடியாத அன்பைக்கொண்ட புன்னகை என்னுடைய துடிக்கும் இதயத்திற்குச் சுகமான அரவணைப்பைத் தந்தது. வருத்தமும் கோபமும் வடியும்வரை நன்றாக மூச்சை விட்டபோது, வலி குறைந்து எரியும் நெருப்புக்குப் பதிலாக  சீரான துடிப்பாக மாறியது.

என்னுடைய கண்களிலிருந்து கடுமை மறைந்து களைத்துப்போன மென்மை வந்தது. அறையைச்சுற்றி நான் பார்த்தபோது ஒரு ஏக்கப்புன்னகை வந்தது. அம்மாவை மிகவும் நேசித்த பரிச்சயமான முகங்கள், அம்மாவும் அவர்களை அதே தீவிரத்துடன் நேசித்த முகங்கள். அவர்களுடைய கண்கள் என்னுடைய கண்களைச் சந்தித்தன – உறுதியாகவும், மென்மையாகவும் , ஒருபோதும் மாறாத பாசத்தையும் கொண்டிருந்தன.

மெதுவாக, எனக்குள்ளே அமைதி இறங்கிக்கொண்டிருந்தது – என்னுடைய மனதையும், உடம்பையும் இறுதியாக எனது ஆத்மாவையும் தொட்ட அமைதி.

    

 

 

 

 

 

 

 

 

முடிவுரை  -  உலகங்களுக்கிடையேயுள்ள

                      பாலம்

அருவி

தை 2026

வல்வெட்டித்துறை

  

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” நாதஸ்வரத்தின் ஓசையையும் மீறி ஐயர் சத்தமிட்டபோது Brad  பயபக்தியுடன் எனது கழுத்திலே தாலியைக் கட்டினார்.

எனக்குப் பின்னாலே அவருடைய தாய், என்னுடைய பெரியம்மாக்கள், Zoe, Emily மற்றும் உமா நின்று அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியுடன் ஒளிவிட, Brad எங்கள் இருவரையும் வாழ்நாள் பூராக இணைக்கும் புனிதமான மூன்று முடிச்சுக்களையும் போட்டார். தனது தங்க இருக்கையிலிருந்து முத்துமாரி அம்மன் ஆசி வழங்குவதுமாதிரிப் புன்னகைதாள். அவளின் ஆசி மெல்பேர்ணில் இருந்து வந்த அன்புக்குரியவர்களினதும்  வல்வை வாசிகளினதும் ஆசிகளோடு கலந்தது.

நாங்கள் வல்வையில் மணமுடிக்கவேண்டுமென்பது Brad இன் யோசனை – ஒருவிதத் தயக்கமுமில்லாமல் எனது பெரியம்மாக்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். என்னை ஆச்சரியப்படுத்திய விடயமென்னவென்றால், Brad உடைய பெற்றோரினதும், குடும்பத்தினரினதும், நண்பர்களினதும் விருப்பம்தான் –  சமுத்திரங்களைத் தாண்டிச் சென்று எங்களுடன் கொண்டாடுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்திற்காகத் துள்ளினார்கள்.

நாலகவையும் அழைக்கவேண்டுமென்பதும் Brad இன் யோசனை.

Brad  தனது உறுதியான விரல்களால் எனது கழுத்தில் தாலியைக் கட்டியபோது, நான் புன்னகைத்தேன்.  மண்டபத்தின் மறுபக்கத்தில் அமர்ந்திருந்த நாலகவைப் பார்த்தேன். அவருடைய பார்வை அமைதியாகவும், திருப்தியடைந்தவரைப் போலவும் இருந்தது. முதன்முறையாக நான் அவரைக் கணக்கெடுக்கும் நோக்கமில்லாமல் பார்த்தேன்.

கொழும்பிலிருந்து வந்த அன்றே சுந்தரி மாமி வீட்டிற்குப் போய் மன்னிப்புக் கேட்டார் – அம்மா மேல் அவருடைய மிருகத்தனமான தாக்குதலுக்கு மாத்திரமில்லை, கடந்தமுறை வந்தபோது அவர்களை ஏமாற்றியதுக்கும் சேர்த்து. ஆரம்பத்தில் அவவும் முத்து சித்தியும் எச்சரிக்கையாய் இருந்தபோதிலும், அவருடைய பணிவும் உண்மையிலேயே அவரிடம் இருந்த வருத்தமும், அவர்கள் நெஞ்சுக்குள்ளே பூட்டி வைத்திருந்த கோபத்தை மெல்ல மெல்லக் குறைத்தது.

தாலி எனது கழுத்திலே சூடானதாகவும், உயிரோட்டமானதாயும் அமர்ந்திருக்க Brad  இன் பெற்றோருக்கு முன்னால் அவர்களது ஆசீர்வாதத்திற்காக முழங்காலில் இருந்தோம். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யத் தங்கள் மகன் கஸ்டப் படுவதைப் பார்த்த அவரின் பெற்றோர்கள் மென்மையாகச் சிரித்தபடி எங்களைத் தூக்கிக் கட்டியணைத்து ஒரே சிரிப்பும் கோலாகலமும்தான்.

பல மாதங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக என்னைச் சுற்றியுள்ள காற்று பாரமில்லாததுமாதிரி இருந்தது – அம்மா தனது ஆசியை அந்த நாளில் அள்ளித் தெளித்ததுபோல.   

Brad  இனுடைய தள்ளாடிய முழங்காலைப்பற்றி இன்னமும் சிரித்தபடி, மகா பெரியம்மாவையும் சிவாவையும் பார்த்துத் திரும்பினேன். மூப்புரிமையின்  பொருட்டு நாங்கள் அவர்கள் இருவரிடமும் அடுத்து ஆசி பெறவேண்டும். மகா பெரியம்மாவை நான் முன்னுக்கு அழைத்தபோது அவவின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. சிவா சிறிது தயங்குவதைக் கண்டேன், ஆனால் பெரியம்மா அவருடைய கையை இழுத்துத் தன் பக்கம் நிறுத்தினார்.

அவவுடைய கண்ணியமான மன்னிப்பினால் குடும்பத்தில் மற்றவர்களும் – முன்பு இருந்ததுபோல் இல்லாவிடிலும் அவரை அன்புடன் நடத்தினார்கள்.

சிவாவைப் பொறுத்தவரையில் - ஆச்சரியப்படும் விதமாக – பாரம் குறைந்தவர் மாதிரித் தெரிந்தார். உண்மை வெளியே தெரிந்ததும் அவர் குற்ற உணர்விலிருந்து விடுபட்டார். இப்போது குடும்ப நிகழ்வுகளைப் புறக்கணிப்பதில்லை. ஒரு காலத்தில் முருகதாஸ் குடும்பத்தை வசீகரித்த அந்தச் சிரிப்பு திரும்பவும் தெரியத் தொடங்கியது. அவரும் பெரியம்மாவும் மஞ்சள் அரிசியால் வளம்பெற வாழ்த்தியபோது, அந்தச் சிரிப்புத் தெரிந்தது; என்னையும் மீறி அதற்குப் பதில் சொல்வதுமாதிரி ஒரு மெல்லிய புன்னகை என் முகத்திலும் தோன்றியது.

என்னதான் இருந்தாலும், திருமணக் கொண்டாட்டங்களால் வீடு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அம்மா இல்லாதது மனக்குறையாவே இருந்தது – எந்தக் கொண்டாட்டமும் அந்த நிழலை முற்றாக நீக்கிவிடமுடியாது.

நாங்கள் எங்கள் மனதிற்குள் சிந்தித்துக் கொண்டிருந்த விடயத்தை முத்துச்சித்திதான் வெளியில் கொண்டுவந்தா. நாங்கள் புறப்படுவதற்கு முன்னர் அந்த இருண்ட தங்க பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

அவ சொன்னது சரிதான் – அந்த சுவர் இடிக்கப்படவேண்டும்.

மறுநாள் காலை மர்மம் நிறைந்த அந்தப் பெரிய மண்டபத்தில் கூடித் தனக்குள்ளே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு இரகசியத்தைத் வைத்திருந்த சுவரைப் பார்த்தபடி இருந்தோம் – அந்தச் சுவர் எங்களுடைய பாட்டாவின் துல்லியமான வேலைத்திறனுக்கும் புத்தாக்கத்திற்குமான ஒரு நினைவுச் சின்னம். தீபன் சித்தப்பாவின் கட்டளைக்கு அமைய வேலையாட்கள் அலவாங்குகளையும் சுத்தியல்களையும் கொண்டு வேலையைத் தொடங்கினார்கள்.

மிகுந்த கவனத்துடன் அவர்கள் நெம்பியும் அடித்தும் வேலை செய்தபோது, ஒவ்வொரு அடியும் மண்டபத்தில் எதிரொலித்தது – அறுபது வருடங்களாகக் கல்லால் கட்டப்பட்ட கல்லறைக்குள் ஒளிந்திருந்த தங்கப் பாளங்கள் மெதுவாக வெளிவந்தன. அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தபோதிலும், அந்தப் பாளங்கள் பார்வைக்கு வந்தபோது எல்லோரிடமிருந்து ஒரு கூட்டுப் பெருமூச்சு வந்தது. யன்னலூடாக வந்த சூரிய ஒளியிலே அந்த ஐந்து தங்கப்பாளங்களும் மின்னின – அந்த அப்பாவியான உலோகம்தான் மோகனுடைய பேராசைக்கும் அம்மாவுடைய இறப்புக்கும் காரணமாக இருந்தது. 

நினைத்துப்பார்த்தால், மோகன்தான் இந்த சுவர், தங்கம் ஆகியவற்றின் இரகசியத்தை வெளியில் விட்டவன்.

கவனக்குறைவால் அவன் பாட்டாவின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டதால்தான் இந்த உண்மை வெளியே வந்துள்ளது. அவன் தனக்குள்ளேயே வைத்திருந்தால், உமா அதைத் தேடிக் கண்டு பிடித்திருக்கமாட்டாள், பாட்டா இவ்வளவு வருடங்களாக மறைத்து வைத்துள்ளதை சுபா பெரியம்மா ஊகித்திருக்கமாட்டா, அப்படியென்றால் அம்மாவின் இறப்பின் உண்மைக் காரணத்தை ஒருபோதும் அறிந்திருக்கமாட்டோம்.

அந்தத் தருணத்திலே, நான் அம்மாவைப்பற்றி யோசித்தேன் – இதனால் அம்மாவிற்கு எத்தகைய இழப்பு, இதனுடைய பெறுமதி எவ்வளவு அற்பமானது. ஒரு காலத்தில் அதிகாரம், பாரம்பரியம், செல்வம் ஆகியவற்றைப் பிரதிநிதித்த அந்தப் பளபளப்பு அம்மாவின் இரத்தம், சிரிப்பு, அவவின் விலை மதிக்கமுடியாத உயிர் ஆகியவற்றின் முன்னால் களையிழந்து போய் நின்றது. இந்தத் தங்கம் எங்களிடமிருந்து போதியளவு எடுத்துவிட்டது, இனிமேலும் எடுக்க விடமாட்டோம்.

ஒரு விதத் தயக்கமுமில்லாமல், இலங்கை அரசாங்கத்திடம் இந்தப் பாளங்களை ஒப்படைப்பதென்றும், அவர்கள் தங்களுக்குரியதை எடுத்துக்கொண்டு ஏதாவது பணத்தைக் குடும்பத்திற்குத் தந்தால், அதை இலங்கையிலும் மெல்பேர்ணிலும் உள்ள தன்னார்வுத் தொண்டு நிறுவனுங்களுக்குக் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அம்மா தனது கருணையைப் பொழிந்த அந்த இரண்டு இடங்களுக்குக் கொடுப்பதே அவவின் கருணையை உயிரோட்டமாய் வைத்திருப்பதற்கான உண்மையான வழி.

தங்கத்தைப்பற்றி நாங்கள் அறிந்த நாளிலிருந்து முதன்முறையாக இப்போதுதான் மனம் கொஞ்சம் இளகியது – முழு நிம்மதியால் அல்ல, ஒரு தற்காலிக அமைதியால். அந்த அமைதிக்கூடாக Susan இன் குரல் மென்மையாக வந்தது.

“மோகனுக்கு ஒரு சின்னப் பெண் இருந்தா, இல்லையா? அவனுடைய பாவத்தினால் அந்தக் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்று நம்புகிறேன்,” மிக மெதுவாகச் சொன்னா.

“இந்தப் பணத்திலே கொஞ்சம் அவளுக்குப் போகவேண்டும், அருவி. அந்த வட்டிக்காரன் எப்படியும் அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துவிடுவேனெனச் சொன்னதாக மோகன் சொல்லவில்லையா? மோகனுடைய பெயரிலே ஒன்றும் இல்லையென்றால், அவனுடைய மாஜி மனைவியைப் பயமுறுத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?”

ஆச்சரியத்துடன் அவவைத் திரும்பிப் பார்த்தோம். அவவின் பச்சை நிறக்கண்களிலே அக்கறை தெரிந்தது, அவவின் புருவங்களுக்குக் கீழே ஆழ்ந்த சுருக்கங்கள் தெரிந்தன.

அம்மாவின் இறப்பு Susan இல் ஏற்படுத்திய மாற்றத்தை எங்கள் ஒருவராலும் நம்பமுடியாமல் இருக்கிறது. Zoe வில் தொங்கிக்கொண்டிருக்கவோ அல்லது அவளைத் தன்னுடன் வசிக்குமாறு கெஞ்சிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக, அவளைத் தொடர்ந்தும் குணா மாமாவின் கடையில் வேலை செய்யுமாறும் குழந்தை வளர்புக் கல்விக்கான  மூன்றாம் தர சான்றிதழ் பெற முயற்சிக்குமாறும் ஊக்கப்படுத்தினா.

Zoe தனது தாயாரை அவவின் வாழ்க்கைமுறையை மாற்றி அமைக்குமாறு கெஞ்சியபோது – மது, போதைப்பொருள் மற்றும் அழிவுகரமான உறவுகளை விட்டுவிடுமாறு கெஞ்சியபோது, Susan  அக்கறையாகக் கேட்டா. Frank ஐ தனது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றினா, தான் சுத்தமாக இருப்பதற்கு உதவும்படி Zoe வைக் கேட்டா. Zoe வங்கியில் கடனெடுத்து ஒழுங்கு செய்த மறுவாழ்வுத் திட்டத்திற்கு மது அருந்தாமல் பூரண ஒத்துழைப்பு வழங்கினா.

தனது தாயை முற்றாக மாற்றவேண்டுமென்ற Zoe வின் உறுதியையும், தனது கெட்ட பழக்கங்களை ஒழிக்க வேண்டுமென்ற Susan இன் உண்மையான தீர்மானத்தாலும் கவரப்பட்ட குணா மாமா அம்மா பார்த்துவந்த விருந்தோம்பல் பொறுப்பை Susan இடம் விட்டார். ஆர்வத்துடன் அதை ஏற்றுக்கொண்ட அவ விரைவிலேயே அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக்கொண்டா. வாடிக்கையாளர்களை உற்சாகத்துடனும் அன்புடனும் வரவேற்று, அவர்களைத் தமிழில் வாழ்த்த முயற்சித்து மகிழ்வித்தா.  

அவவையும்  Zoe  வையும் பார்த்தபோது மகிழ்ச்சியால் எனது இதயம் பொங்கியது; அவர்களில் அம்மா வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.

Susan இன் வார்த்தைகளைக் கேட்டதும் மகா பெரியம்மாவின் முகம் மலர்ந்தது. “Susan, நீ சரியாகச் சொன்னாய். மோகனுடைய சின்னப்பெண்ணை நாங்கள் எப்படி மறந்தோம்?” 

இப்போது மோகன் கொலைக்குற்றவாளி என்று கண்டு பிடிக்கப்பட்டு, தண்டனைக்காகக் காத்திருக்கிறான். பல வருடங்கள் சிறையில் கழிப்பாரென்பதில் சந்தேகமில்லை.

Heng ஐ மடக்குவது கஸ்டமாயிருந்தது. பல மணித்தியால விசாரணையின் பின்னர் ஆஸ்திரேலியப் பொலிஸ் அவனை விடுவித்தது; அவன் வீட்டு எல்லையைத் தாண்டவில்லையென்றும் மோகனுக்கு உதவுவதற்காக ஒரு விரலைக்கூட உயர்த்தவில்லையென்றும் அவனது வக்கீல்கள் வாதிட்டனர். வலுவான நிரூபணங்கள் இல்லாமல் சட்டத்தின் கைகள் கட்டுப்பட்டிருந்தன.

அவனுடைய சுதந்திரம் அவனை  ஆபத்துக்குரியவனாக ஆக்கிவிட்டது. அவனுக்குத் தன்னுடைய பணம் வேணுமென்றால், மோகனுடைய மாஜி மனைவியும் அந்த சின்னப்பெண்ணும் அடுத்த இலகுவான இலக்காக இருக்கலாம்.

ஒரு கசப்பான உண்மை என்னை உலுக்கியது: அந்தப் பாவப்பட்ட குழந்தையின் பாதுகாப்பு பற்றி நான் இதுவரை சிந்திக்கவில்லை. குற்ற உணர்வு என்னைத் துளைத்தது, என்னுடைய மனம் கண்டபடி சுழன்றது, நாங்கள் இதுவரை கவனிக்காமல் விட்டதற்கான பரிகாரத்தைத் தேடினேன்.

சுபா பெரியம்மாவின் குரலிலிருந்த நடுக்கத்தின் மூலம், அவவும் என்னைப்போலச் பாதிக்கப்பட்டுள்ளா என்பது புரிந்தது.

“மோகன் ஒரு குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அந்தக் குழந்தை – துளசி, அதுதானே பெயர்? அவள் எங்களுடைய இரத்தமும் சதையும். அவளின் தகப்பனின் பேராசையால் அவள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று சீதாதான் முதல் ஆளாகக் கூறியிருப்பாள். இந்தத் தங்கம் எங்களுக்கு எவ்வளவு சொந்தமோ அந்தளவு சொந்தம் அவளுக்கும்.”

“சுபா சொல்வது சரி, தர்மச்செயல் வீட்டிலிருந்து தொடங்காவிடில் அதனால் என்ன பயன்?”

இதைச் சொல்லிய ஜெயா பெரியம்மாவின் பார்வை எனது வயிற்றைப் பார்த்தபோது  மென்மையானது. “அருவி, அந்தச் சின்னப்பெண் எங்களில் ஒருத்தி. சீதாவும் உனது தக-------- சிவாவும் இரகசியத்தை மறைத்துச் செய்த குற்றத்திற்கு உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை குற்றவாளி இல்லையோ அதேமாதிரி துளசியிலும் குற்றமில்லை.”

அவவின் வார்த்தைகள் எனது முகத்திலே ஒரு சிரிப்பைக் கொண்டுவந்து, என்னையறியாமலே எனது வயிற்றைத் தடவினேன்.

Seetha Bethany Wheeler இந்த உலகில் காலெடுத்து வைப்பதற்கு இன்னும் அதிக நாட்களில்லை.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்த கணத்திலேயே, நான் உருவான இடத்திலேயே நாங்கள் மணமுடிக்கவேண்டுமென்று Brad உறுதியாக நின்றார். முதலிலே நான் தயங்கினாலும்,  ஆரம்பச் சோதனைகள் வயிற்றிலிருப்பது பெண் என்று தெரிந்ததும், எனக்குள்ளே ஏதோ ஒன்று நெருடியது. அம்மாவின் அன்பும் வழிகாட்டலும் வேறொரு விதத்தில் வந்திருக்கிறதென  உணர்ந்தேன். அவ கனவுகண்ட அந்த வாழ்க்கையைத் தடுத்த அந்த மண்ணிற்கே திரும்பிப்போவதுதான் சரியென்றுணர்ந்தேன் – அவவுடைய  மன உறுதியையும், Brad உடன் இணைந்து நான் எனது எதிர்காலத்தை உருவாக்குவதற்குத் துணையாக இருந்த அவவின் பலத்தையும் கௌரவிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகத் தெரிந்தது. 

எனக்குள் வளர்ந்து கொண்டிருந்த அந்த அற்புதம் எனது இதயத்தை எல்லையில்லா ஆனந்தத்தில் நிரப்பியது. இரண்டு பாட்டிகளின் பெயர்களைத் தன்னுள்ளே கொண்ட Seetha Bethany Wheeler இரண்டு குடும்பத்தின் பாரம்பரியத்தின் இதயத்துடிப்பை முன்னுக்கு எடுத்துச்சென்று எங்களை உருவாக்கிய இரண்டு உலகங்களையும் இணைக்கும் பாலமாக இருப்பாள்.

அவளும் துளசியும் பிரகாசமுடைய நாளைய உலகின் தூதுவர்கள் – இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் புனிதமான சங்கிலியின் வாழும் பிணைப்புகள்.

என்னைச் சுற்றியிருந்தவர்களின் மகிழ்ச்சியான முகங்களில் இருந்து வெளிப்பட்ட அன்பிலும் அக்கறையிலும்  நான் திளைத்தபோது ஒரு ஆழமான, அமைதியான மகிழ்ச்சி எனக்குள் வந்தது. நான் அதிகமாக நேசித்தவர்களின் அர்ப்பணிப்பால் உந்தப்பட்டு நான் ஒரு சபதம் எடுத்தேன் -  Seetha Bethany க்கு, துளசிக்கு, குடும்பத்தில் வரப்போகும் எல்லாக் குழந்தைகளுக்கும்  அன்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி நிரம்பிய குழந்தைப்பருவத்தைக் கொடுப்பதில் நான் என் வாழ்நாளைச் செலவழிப்பேன். Brad உடனும் பெரியம்மாக்களுடனும் சேர்ந்து அவர்களை வானத்தில் பறக்கவிடுவேன் – முன்னால் போனவர்கள் காட்டிய வழியிலேயுள்ள வீரத்தையும் விவேகத்தையும் கொண்டு அவர்களின் சிறகுகளுக்கு வலுவூட்டியபடி.

திறந்த வராந்தா வழியே காலைச் சூரியனின் கதிர்கள் வந்தபோது, அம்மா, அம்மாச்சி, பாட்டா மற்றும் காவியா சித்தி என்னைச் சுற்றி இருப்பதாக உணர்ந்தேன் – அவர்களுடைய சிரிப்புகள் தென்றல் காற்றிலே கலந்தது, மாமர இலைகளின் சலசலப்பிலே அவர்களின் ஆசீர்வாதங்கள் பின்னப்பட்டிருந்தன, மல்லிகைப்பூவின் இனிய மணத்திலே அவர்களின் அன்பு நீடித்திருந்தது.

அந்தத் தருணத்திலே, பொன்னிற ஓளிக்கதிரின் கீழே, அன்பு என்பது ஒருபோதும் காணாமல் போவதில்லை, மாறாக உருமாற்றமே அடைகிறதென்பதைப் புரிந்துகொண்டேன் – அது மீண்டும் மலரும் – மென்மையாக, பிரகாசமாக, அழிவற்றதாய்.

 

நன்றி:

இதுவரை பொறுமையாக நாவலை வாசித்த அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை எனக்கு எனது மின்னஞ்சலுக்கோ அல்லது whatsapp இலக்கத்திற்கோ அனுப்பவும்.

Email: asrajendran@hotmail.com

Whatsapp no: +94710183421

மீண்டும் நன்றி


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2026 (வியாழக்கிழமை)
ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழ்கின்ற தேனிசை செல்லப்பா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2026 (வியாழக்கிழமை)
நேற்று இடம்பெற்ற சப்பறத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2026 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் சக்திவேல் கல்யாணசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2026 (புதன்கிழமை)
தேனிசை செல்லப்பா காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2026 (செவ்வாய்க்கிழமை)
"ஒரு போதும் நான் தந்தையின் மகள் இல்லை" நூல் வெளியீடு இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2026 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - சோதிலிங்கம் வள்ளிக்கோடி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2026 (திங்கட்கிழமை)
1.1 பில்லியன் ரூபா பெருமத்தியான போதைப் பொருட்களுடன் 22 இலங்கை பெளத்த துறவிகள் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
பாயும் புலிகள் மின் அலங்காரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2026 (சனிக்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி பத்மினி சுதந்திரசோதி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2026 (வெள்ளிக்கிழமை)
ஒருபோதும் என் தந்தையின் மகள் அல்ல - நூல் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2026 (வியாழக்கிழமை)
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - அன்னராணி நாராயணசாமி (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2026 (புதன்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் மஞ்சுளா பாலசுப்பிரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2026 (புதன்கிழமை)
சிதம்பரக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்க 2025ஆம் ஆண்டு கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2026 (செவ்வாய்க்கிழமை)
வடமராட்சியில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவு வணக்க நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2026 (திங்கட்கிழமை)
எங்களுக்குள் முரண்பட்டு ஆவது ஏதும் உண்டோ!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2026 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2026 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - அன்னராணி நாராயணசாமி (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2026 (சனிக்கிழமை)
வித்தியாசமான முறையில் தூக்குக் காவடி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2026 (சனிக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் - திரு. துரைராஜரட்ணம் நவநீதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
நாளை வல்வை அம்மன் மகோற்சவம், நேற்று காத்தலிங்க ஊர்வலம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2026 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - பிரசாந்த் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2026 (வியாழக்கிழமை)
வல்வை சிவன் ஆலய பராபவ வருட விசேஷ தினங்கள் 2026-2027
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2026 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jul - 2026>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
67891011
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai