கொழும்பு நகரை அலங்கரிக்கும் வகையிலும் இலங்கையை ஒரு பாரிய தொலைத்தொடர்பு நாகரிகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் தெற்காசியாவில் நவீன வசதிகளுடன்கூடிய உயரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயினால் நேற்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
தொலைத்தொடர்புத் துறையின் ஒரு திருப்பு முனையாக அமையும் இந்தக் கோபுரம் தெற்காசியாவின் அதி உயரமான கோபுரம் (Tallest tower in South Asia) என்னும் பெருமையைப் பெறுகின்றது.
தாமரைக் கோபுரத்தின் அடித்தள பரப்பு 45 மீற்றர்களாகும் என்பதுடன், உயரம் 356 மீற்றர்களாகும்.
கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் அன்டனா வடக்கே 60 கிலோமீற்றரும் தெற்கே 60 கிலோமீற்றரும் கிழக்கே 50 கி.மீ, மேற்கே 15 கி.மீற்றரும் செயலெல்லையை கொண்டதாகும். இதில் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 50 எப்.எம் அலைவரிசைகளும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப திட்டமிடல் 2008ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தின் தலைமை ஆலோசனை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. பொறியியல் துறை கொங்கிரீட் தொழிநுட்பம், உயர்ந்த கட்டிட நிர்மாணத்துறை மின் பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், அரச தனியார்துறை பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுவரும் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், மாணவர்கள் களப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
தாமரைக் கோபுரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தாமரைக் கோபுரத்திற்கான இணையத்தளமும் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம் பற்றிய மேலதிக விபரங்கள்
356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள். (பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது)
90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம் - 10 ஏக்கர் விஸ்தாரண நிலம்
1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி
50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி
தற்போது கொங்கிறீட் சுவர்களின் குழல் வடிவத்திலே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக்கட்டிடத்தின் 215 உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே சென்கின்றன.
இத்தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதியொன்று நிர்மாணிப்பு. மேல் பகுதியில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்த்தாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைப்பு.
பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படு்ம் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாமரைத் கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
கட்டிட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 டொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகளுக்கு 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தாமரை கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்படவுள்ளது.
பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இத்தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைப்பு.
இந்த கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது.
இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்படவுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.
நிலத்துக்குக் கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படுகின்றது. அது 270 மீட்டர் வரை அதாவது 85 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில் வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக்கப்படும்.
சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்படவுள்ளன.
இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும். அத்துடன், இக்கோபுரமானது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து கோபுரங்கள் வரிசையில் 18 ஆம் இடத்தில் உள்ளது.
முக்கியமாக கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாகவும் கொழும்பின் பல பகுதிகளிலும் இருந்து பார்க்கக் கூடியவண்ணம் இந்த தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: September 18, 2019 at 01:50
மிகசிறந்த பதிவு அதன் விபரங்களை நாங்களும் அறியகூடியமாதிரி இருந்தது மிக்க நன்றி .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.