தமிழகத் திருக்கோயில் வரிசை - கொடுமாடச் செங்குன்றூர் திருச்செங்கோடு - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2016 (வியாழக்கிழமை)
ஆணொரு பாதியும் பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் வடிவங் கொண்டு ஆண்டவன் அருளும் இடம் “ திருச்செங்கோடு ” பாகம்பிரியாளாக உமைப்பிராட்டியும், மாதொரு பாகனாக அப்பனும் காட்சி தரும் இடம் இது. “ உயர்ந்த மாடங்கள் கொண்ட செந்நிறமான ஊர் ” எனப் பொருள்பட “ கொடுமாடச் செங்குன்றூா் ” எனும் பெயரே இதன் ஆதிப்பெயராகும்.
திருஞானசம்பந்தா் பாடிய செங்குன்றூா்ப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலதும் 3ஆவது வரியின் இறுதியில் “ கொடுமாடச் செங்குன்றூா் ” எனக் குறிப்பிடுவதை இதற்கு ஆதரமாகக் கொள்ளலாம். அருணகிரிநாதா் காலத்துக்குச் சற்று முன்பாக இவ்விடம் “ திருச்செங்கோடு ” என வழங்கப்படுவதை திருப்புகழ் – கந்தரலங்காரம் கந்தரநுபூதி ஆகியவற்றிலுள்ள சொற்பிரயோகங்களிலிருந்து அறிய முடிகிறது.
இது ஒரு கொங்கு நாட்டுத் தலம்.கொங்கு நாடு பல்வேறு காலகட்டங்களில் சேர – சோழ – பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது.கடல் மட்டத்திலிருந்து 1900 அடி உயரத்திலுள்ளது இச்செந்நிற மலை. கீழே ஊர்மனையிலிருந்து பார்த்தால் மலை. செந்நிறமாகத் தெரிந்ததால் இது “ திருச்செங்கோடு ” ஆயிற்று. அத்துடன் மலை நாகம் போன்றதொரு அமைப்பினை ஒத்திருப்பதால் நாகசலம், நாககிரி என்றும் பெயர்கள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் – ஈரோட்டிலிருந்து 18 கீ.மீ தூரத்திலும், நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ தூரத்திலும் திருச்செங்கோடு உள்ளது. சேலம், ஈரோடு நாமக்கல் முதலான ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதியுண்டு.
இறைவன்:அா்த்தநாரீஸ்வரா்
இறைவி:பாகம்பிரியாள்
முருகன்:செங்கோட்டு வேலன்
தலமரம்:இலுப்பை
கீழே ஊருக்குள் பரிமளவல்லி உடனுறையும் கைலாசநாதர் திருக்கோயில் ஒன்றுண்டு. கைலாச நாதருக்கு “ நிலத்தம்பிரான் ” என்றும், மலை மீதுள்ள அா்த்த நாரீஸ்வரருக்கு “ மலைத்தம்பிரான் ” என்றும், திருநாமங்கள் உண்டு. இந்த மலைத்தம்பிரான் ” கோயிலில் உள்ள அா்த்த நாரீஸ்வரா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மூன்று பிரதான மூா்த்தங்களுக்கும் தனித் தனிச் சந்நிதிகளும், உற்சவ மூா்த்தங்களும் உள்ளன. அா்த்தநாரீஸ்வரா் - செங்கோட்டு வேலவா், இருவரதும் மூலத் திருவுருவங்கள் வெண்ணிறப் பாஷாணத்தாலானதாகக் கோயிற் குறிப்புக் கூறுகிறது.
மலை அடிவாரத்திலிருந்து கோயில் செல்ல இரு பாதைகள் உண்டு.மொத்தம் 1200 படிகள் கொண்ட கற்பாதை ஒன்று.மற்றது – வாகனப் போக்குவரத்துள்ள ஒடுங்கிய – தார் வீதியுடனான மலைப்பாதை ஒன்று. மலைப்பாதையில் தேவஸ்தானப் பேருந்துகள் இரண்டு கீழே அடிவாரத்துக்கும் மேலே கோயிலுக்கும் இடையே மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கிறது. வேறு பேருந்துகள் எதுவும் மேலே செல்ல அனுமதி இல்லை.
தனியார் கார், வான் முதலியனவும், மோட்டார் சைக்கிளும் மேலே செல்ல அனுமதிக்கிறார்கள். படியேறிச் செல்ல நிரம்பிய விருப்பம் இருந்த போதும் அடியேனின் உடல்நிலை இடம் தராததால் வாகனப் பாதையிலேயே நாமும் பயணிக்கும்படியாயிற்று. முக்கி – முணுகி மேலேறிச் செல்லும் வாகனத்தில் இருந்தபடி நமது இடது கைப்பக்கமாகக் கீழே பார்த்தால் பயம் பற்றிக்கொள்கிறது. இருதய நோயாளிகள் கீழே எட்டிப் பார்க்காமல் மூச்சைப் பிடித்தபடி இருப்பதே நல்லது.
வாகனப் பாதையால் நம்மைச் சுமந்தபடி வந்த வாகனம் மூன்று நிலைகள் கொண்ட மேற்குப் பார்த்தபடியுள்ள கோபுர வாசலை அண்மித்ததும் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. மேற்குக் கோபுரம் கோயிலின் பிரதான வாசலாக இல்லாத காரணத்தினால், விறுவிறுவென நடந்து 1200 படிகள் கொண்ட கற்பாதையின் முடிவில் அமைந்துள்ள ஐந்து நிலைகள் கொண்ட வடக்குக் கோபுரத்துக்கு வருகிறோம். மாலைப் பூசையினைக் காண விரும்பிப் படியேறி வரும் சில பக்தர்களைக் காண்கிறோம்.
நெற்றி நிறைந்த திருநூறு பூசி வேட்டி சால்வையுடன் (தமிழ்நாட்டுக் கோயில்களில்) ஒரு நடுத்தர வயதுக்காரா் மிக்க ஆயாசமாகப் படியேறி வருகிறார் வருகிறார். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது பயனுள்ள பல தகவல்களையும் தந்தார். ஐந்து நிலை கொண்ட வடக்குக் கோபுரம் நிறைந்த சுதைச் சிற்பங்களோடு அழகாக ஜொலிக்கிறது.இப்போது மீண்டும் மேற்குக் கோபுர வாசலினூடாக உள் நுழைந்து நமது திருக்கோயிற் சுற்றை ஆரம்பிக்கிறோம்.
இருபது படிகள் கீழிறங்கி வந்துதான் சந்நிதிகளுக்கும் கிரகாரங்களுக்கும் செல்ல வேண்டும்.இந்த இடத்தில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட வேண்டும்.மற்றைக் கோயில்களைப் போன்றதான சமதளப் பிரகார அமைப்பு இங்கில்லை. மலையுச்சியின் ஒரு பகுதியினை உடைத்துக் கல்லெடுத்துச் சமன் செய்து சிறிய பரப்பளவில் பிரகாரத்தையும் சந்நிதிகளையும் ஆக்கியுள்ளனா். அதனால் சில இடங்களில் இறங்கியும், ஏறியும், ஒடுங்கிய சந்துக்களுடனும், சரிவான நடைபாதையுடனும் சுற்றுப்பிரகார அமைப்புக் காணப்படுகிறது. இருபது படிகளிலும் கீழிறங்கி வர பரந்த மண்டபம் வருகிறது.
நேராக இருப்பது செங்கோட்டு வேலவா் சந்நிதி.கிழக்குப் பார்த்தபடியான செங்கோட்டு வேலவா் ஒரு பீடத்தின் மேலாக, நின்ற திருவுருவில் அருள் பாலிக்கிறார். வலது கை வேலைத் தாங்கியபடி இடது கை ஒரு சேவலை அணைத்து இடுப்பில் வைத்தபடி சா்வ அலங்காரத்துடன் கூடிய வேலவன் தலையில் ஜடா முடியுடன் – நெற்றியில் நிறைந்த சந்தனப் பொட்டு – வாய் கொள்ளாப் புன்சிரிப்புடன் தரிசனம் தருகிறார் வெள்ளைப் பாஷாணத்தினாலான செங்கோட்டு முருகன். “ செங்கோடன் அழகினை அள்ளிப்பருக நாலாயிரம் கண்கள் வேண்டுமே! இரு கண்களுடன் என்னைப் படைத்த பிரம்மனுக்கு இத்தனை ஓர வஞ்சனையா?” என அங்கலாய்க்கிறார் அருணகிரிநாதா்.
“மலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவா்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை
சேலார் வயற்பொழிற் செங்கோடானைச் சென்று கண்டு தொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே!
-கந்தரலங்காரம் 90 ஆவது பாடல்-
அருகிலேயே உள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகப் பெருமானே உற்சவ மூா்த்தமாவார். மண்டபத்தில் மேற்கு நோக்கிய சந்நிதியில் மூலவா் அா்த்தநாரீஸ்வரா் நின்ற திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். மாதொரு பாகனின் முன்புறம் வாயில் அமைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக மேற்குச் சுவரில் ஒன்பது துவாரங்களுடன் கூடிய கற்பலகணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துவாரங்களினூடாகவே இறைவனின் தரிசனம் பெறலாம். நமது அதிஷ்டம்!பூசகா் உட்செல்லும் பக்கவாட்டு வாசலினூடாக நம்மை உள்ளே அழைத்து பஞ்சதீபம் காட்டுகிறார். தீப ஒளியில் அா்த்தநாரீஸ்வரரின் அற்புத அமைப்பு தெளிவாகத் தெரிகிறது.
வலது செவியில் மகர குண்டலம் அசைய, இடதுபுறம் இரத்தினக் கற்கள் பதித்ததோடு மின்னுகிறது.புலித்தோடை வலது பாகத்தையும், சிவப்பு நிற ஜரிகைக் சேலை இடது புறத்தையும் மூடி நிற்கிறது. ஒரு பக்க மார்பில் முப்புரி நூல் தவள்கிறது.இடது புற சேலைக்கு மேலாக அம்பிகையின் ஒற்றை மார்பகம் புடைத்துக் காணப்படுகிறது. பாதங்களை மூடியுள்ள வஸ்திரங்களைக் சற்றே விலக்கித் தீப ஒளியில் பாதங்களைக் காட்டுகிறார் பூசகா்.
வலது காலில் வீரக் கழலும் இடது காலில் சிலம்பும் விளக்கொளியில் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு, கழுத்துக்கு மேலே அருவமும் உருவமும் கலந்த அருவுருவமாகவும், கழுத்துக்குக்கீழே பாதி அம்பிகையினதும் பாதி அப்பனுடையதுமான அலங்காரமுமாயுள்ள அா்த்தநாரீஸ்வரரின் தோற்றப் பொலிவுகண்டு மெய்மறந்து தியானிக்கிறோம்.
அா்த்தநாரீஸ்வரரின் உற்சவத் திருமேனியும் மிக அற்புதமானது. எவ்வித அலங்காரமுமில்லாத இந்தப் பஞ்ச உலோகத் திருமேனியை மிகக் கிட்டிய தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. ஒரு பாதிப்பிறைச் சந்திரனைத் தாங்கிய ஜடாபாரம் – மறுபாதி அம்பிகைக்குரிய ஜடை அமைப்பு. இரு கண்களிலும் கூட வித்தியாசம் தெளிவாகக் தெரிகிறது. வலது பாகத்தில் தண்டாயுதம் ஏந்திய கை – இடது நிறைந்த கை (நிறைந்த வளையல்களுடன்) பெண் பாகத்து இடுப்பில் ஊன்றியபடி மார்பின் பெண்பாகத்தில் பருத்த கொங்கை.திருவடிகள் ஒன்றில் சிலம்பு – மற்றயதில் கழல்.
நல்ல குண இயல்புள்ள கணவன் கிடைக்க வேண்டும் - கிடைத்த கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் எனப் பெண்கள் கொள்ளும் விரதங்களுள் தலையாயது கேதாரகௌரி விரதம். இந்த விரதத்தினை முதன்முதலில் ஆரம்பித்தவரே அம்பிகைதான். பிருங்கி முனிவா் சரிதமும், அம்பிகை காங்சி மாவடியின் கீழ் கடுந்தவம் புரிந்து இறைவனிடம் இடப்பாகம் பெற்று பாகம்பிரியாளாக – அர்த்தநாரீஸ்வர மூர்த்தமாக அமர்ந்து கொண்டதும் அனைவரும் அறிந்த கதை. இடப் பெறுமதி கருதி அதனை யான் இங்கு விரிக்கவில்லை.
கேதாரகௌரி அம்பாளுக்குத் தனிச் சந்நிதியும், உற்சவ மூா்த்தமும் இங்குண்டு. செங்கோட்டு வேலவா் சந்நிதி, மூலவரான அா்த்த நாரீஸ்வரா் சந்நிதி இரண்டுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தின் தூண்களிலும்மேல் விதானத்திலும் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகளின் அமைப்பையும் அழகையும் ரசித்தபடியே இருக்கலாம். தூண்களில் உள்ள, அா்ச்சுனன் தவம் – வேடன் – குருவிக்காரி போன்ற சிற்பங்கள் அழகே உருவானவை. மேல் விதானத்து மையத்தில் ஒரு சிறிய சதுரக்கல். நான்கு மூலைகளிலும் தொங்கும் சங்கிலிகள்.
மேலிருந்து புடைத்திருக்கும் தாமரைப்பூ. அதன் இதழ்களில் அமர்ந்திருந்து மகரந்தத்தை ருசிக்கும் எட்டுக் கிளிகள். கிளிகளுக்குக் காவலாக நான்கு பாம்புகள். இத்தனையும் என்ன?வா்ணச் சித்திரமா?இல்லை… வண்ண வண்ண ஓவியமா?இல்லவேயில்லை… பின் வேறென்ன? தலைகீழான கற்சிற்பங்கள்….. நம்ப முடிகிறதா? சங்கிலி, தாமரைப்பூ, கிளிகள், பாம்புகள் இத்தனையும் அந்த சிறிய சதுரக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள விதம்! ஆஹா! எப்படி வர்ணிப்பேன்?? வார்த்தைகள் வரவில்லையே!
மண்டபத்தின் பக்கமாக அருள்மிகு நாகேஸ்வரா் (சிவலிங்கத் திருமேனியாக) தனிச் சந்நிதியில் அமர்ந்துள்ளார். சுற்றுப் பிரகாரத்தில் வரிசையாக அறுபத்துமூவா், நிருதி விநாயகா், குன்றீசா் ராமநாத சுவாமி, பஞ்சலிங்கங்கள், காலபைரவா் எனத் தனிச் சந்நிதிகளில் உள்ளனா். மேற்குக் கோபுர வாசலருகே (நாம் உள்ளே வந்த வாகனப் பாதை ) நாச்சாரம்மன், ஜேஷ்டாதேவி, செல்வவிநாகா், மல்லிகார்ச்சுனா, கிழக்குப் பார்த்த சகஸ்ரலிங்கம் தனிச் சந்நிதிகளில் உள்ளனா். சற்றுத்தள்ளி ஸ்தலத்தின் விருட்சமான பெரிய இலுப்பை மரம் அருகில் காசி விசாலட்சி; தெற்குப் பார்த்தபடியான நடராஜா் சந்நிதி. சனி பகவானுக்கும் தனிச் சந்நிதி உண்டு.
திருஞானசம்பந்தா் மலைமீதமர்ந்துள்ள மங்கை பங்கனை முதற்தடவை தரிசிக்க வந்தபோது பாடியருளிய திருப்பதிகம் “ வெந்த வெண்ணீறமணிந்து… ” எனும் பதிகமாகும் பின்னா், சுற்றுச் சூழவுள்ள கோயில்களைக் தரிசித்து மீண்டும் வந்து திருச்செங்கோட்டினில் சில காலந் தங்கினார். பருவ மாற்றத்தின் காரணமாக அவ்வூா் மக்களிடையே பரவிய குளிர்சுரம், சம்பந்தருடன் கூடவே யாத்திரை செய்து வந்த அடியார் கூட்டத்தினரையும் பற்றிக்கொண்டது. சம்பந்தப் பெருமான் “ அவ்வினைக் கிவ்வினை …. ” எனும் திருநீலகண்டப் பதிகம் பாடி வணங்கி மக்களையும் சிவனடியார்களையும் பீடித்த குளிர் சுரத்தை நீக்கியருளிய அற்புதம் இங்கேதான் நிகழ்ந்தது.
கோயிலின் கிழக்குத் திசையில் இன்னமும் 350 அடி உயரத்தில் உள்ள குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரா் கோயில் தெரிகிறது.கற்பாதை வழியாக ஒரு சிலா் ஏறி இறங்குவதையும் பார்க்க முடிகிறது. அங்கிருந்தபடியே பாண்டீஸ்வரா் கோயில் உள்ள திசை நோக்கி கரம் கூப்பி வணங்குகிறோம். செங்கோட்டு வேலவா், அா்த்தநாரீஸ்வரா், ஆதிகேசவப் பெருமாள் மூவரையும் மீண்டும் மனதிற்கொண்டு விடைபெற்றுக் கீறிறங்குகிறோம்.வாகனத்தில் மேலேறிய பயணத்தை விட இறங்கும் பயணம் இன்னும் சிரமமாகவிருந்தபோதும் ஒருவாறு சமாளித்து மலையடிவாரத்தை அடைகிறோம்.கற்பாதை படியருகே உள்ள ஆறுமகசாமி சந்நிதானத்தையும் வணங்கிக்கொண்டு நமது அடுத்த திருக்கோயிற் பயணத்தைத் தொடருகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.