மனப்பட மனிதர்கள் : செத்த வீட்டிற்கு மணி அடிக்கும் சிவகெங்கை (பாகம் 13) - செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
"மாமா.. நீங்கள் ஒரு வேங்கைதானே.. அதாவது சி.வேங்கை.. சரியா..?" ஒட்டில் இருந்த சில இளைஞர்கள் இவரிடம் வினவினார்கள்.
" அம்.. உக்.. அ.. இக்.. டபால்..." கைகள்.. கால்களை உயர்த்தி அடிமானங்கள் போட்டு, கடைசியில் எதிரியின் தாடையில் ஒரு குத்து போட்டு, சரித்து டபால் என்று தொடையில் அடித்து வெற்றி வாகையை காட்டிவிட்டு சிரிப்பார்.
"பேரா.. நான் சண்டையிலை ஒரு வேங்கை.. அந்தக் காலத்தில.. ஆனால் என்னுடைய பேர் சி.வேங்கை இல்லை சிவ கெங்கை.. அதாவது சிவபெருமானுடைய தலையில் ஓடுறாளே.. கெங்கை.. அவள்தான்.. "
"நீங்கள் இளக்காரமா நினைக்கிறது போல நான் சாதாரண ஆள் இல்லை.."
"கப்பலில் போனவன் உலக மகாயுத்த காலத்தில நடுக்கடலிலை கப்பல் உடைந்து உயிரோடை தத்தளித்து தப்பினவன்.. இந்த ஊர் நம்பமுடியாத மயிர்க்கூச்செறியும் எத்தனையோ கதைகள் என்னுடைய வாழ்க்கையிலை இருக்கு சொன்னால் அது பெருங்கதை.. "
"நந்த கோபாலனோடு நான் ஆடுவேன்..
தரிகிட தோம் தா..தா..தெய்.. "
கைகளை அபிநயம் பிடித்து, கால்களால் சிவ தாண்டவம் ஆடுவது போல ஒரு நடனம் போட்டு.. "பேரா.. எங்கையும் கிணறு இறைக்க கிடக்கோ.." என்று கேட்பார்..
கிணறு இறைக்க வேணுமெண்டால் ஆர் கூப்பிடப் போறான்.. கண்ணைச் சிமிட்டியபடி "ஏதாவது காகம் கீகம் விழுந்து கிடந்தா கூப்பிடுங்கோ.. " என்பார்.
கிணறு இறைப்பவன் அல்ல சிவகெங்கை அழுக்கான கிணறுகளை இறைக்க வைப்பவன்..!!
கிணறு இறைப்பது.. செத்தவீட்டுக்கு மணி அடிப்பது, சவம் எரிப்பது, ஏதாவது கிடைக்கும் வேலையை செய்து, கள்ளடித்து ஆடிப்பாடி வாழ்வது.. "என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை.." என்று வாழ்ந்த மனிதர்தான் இந்த சிவகெங்கை அப்பா.
இவருடைய வாழ்வில் நாம் அறிய வேண்டிய சொல் "அறிவறிவு..." என்ற திருக்குறளில் வரும் சொல்தான்.
அறிவுள்ள பிள்ளைகள் ஆயிரம் பிறந்தால் அறிவறிவுள்ள பிள்ளை ஒன்றுதான் பிறக்கும்.. எந்தச் சூழல் வந்தாலும் அதை எதிர்கொண்டு அதற்குள் வாழத்தெரிந்த பிள்ளையே அறிவறிவுள்ள பிள்ளை.. இந்த சிவகெங்கை அப்பாவும் அறிவறிவுள்ளவர் எந்தச் சூழலுக்குள்ளும் வாழத் தெரிந்தவர்.
ஐரோப்பாவில் ஒரு வேலை பறி போனாலே தற்கொலை செய்வது பலரது இயல்பு.. அத்தகையோர் படிக்க வேண்டிய புத்தகமே சிவகெங்கை அப்பா..
"வானும் நிலமும் வீடு
காற்றும் மழையும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு வெரி சிம்பிள்.. "
அரை வழுக்கை விழுந்த தலை, ஆங்காங்கு பற்கள் போன வாய், திடகாத்திரமான தேகம், சிரித்த முகம், மற்றவர்களை சிரிக்க வைத்து வாழும் வாழ்வு, அழுக்கு வேஷ்டி, வெறும்மேல், ஒரு சால்வை.. இவருக்கு ஒரு மகன் பெயர் ராமச்சந்திரன்.. அன்றாடங்காய்ச்சி வாழ்வு..
சும்மா குத்துமதிப்பாக ஒரு மனிதனை அலட்சியமாக பார்ப்பது போல பார்த்தால் இவரிடம் ஒன்றுமில்லை.. ஆனால் பரந்த வாசிப்பு ஞானத்துடன் கூர்ந்து பார்த்தால் இந்த மனிதனின் வாழ்வு அதிசயம் தருவதாக அமையும்.
அந்தக்காலத்தில் டிங்கிரி - சிவகுரு என்று இரண்டு காமடி நடிகர்கள், இவர்கள் இலங்கைத் திரைப்படங்களிலும் முத்திரை பதித்தவர்கள், காகத்தை பிடித்து கிணற்றுக்குள் வீசி கிணறு இறைப்பது போல நடித்து நகைச்சுவையை ஏற்படுத்தியவர்கள்.
இவர்களுக்கு சிந்தனைக்குள் காகம் வரும் முன்னரே அதை வல்வையில் அறிமுகம் செய்தவர் சிவகெங்கை அப்பா..
அந்தக்காலத்திலே சிவகெங்கை அப்பாவுக்கு காகம் பிடித்துக் கொடுத்தால் ஒரு ரூபா கிடைக்கும் என்று சிறுவர்கள் பேசுவார்கள்.
காகத்தை எப்படிப் பிடிப்பது.. அது ஒரு தனிக்கலை..
வீடுகளில் எங்காவது உணவு போட்டால் காங்கள் வந்து சுவரில் நிற்கும் சுவருக்குக் கீழாக குனிந்து குனிந்து மறைந்து போனால் காகங்களால் பார்க்க முடியாது.
காகத்திற்கு இரண்டு பக்கங்களும் கண்கள் இருந்தாலும் கண்ணின் கருமணி ஒன்றுதான் அது நடுவில் இருக்கும், தலையை சாய்த்து அதை உருட்டிவிட்டு பக்கம் மாற்றி மாற்றிப் பார்க்கும்.
ஆகவே சுவருக்குக் கீழால் பதுங்கிப் போனால் காகத்தால் மட்டுக்கட்ட முடியாது பின்புற வாலில் பிடித்து பைக்குள் போட்டால் சரி.. சிவகெங்கை அப்பாவிடம் கொடுத்தால் கிணறு இறைத்து முடிய ஒரு ரூபா கிடைக்கும்.
அந்தக் காகத்தை நீண்ட காலமாக இறைக்காமல் இருக்கும் கிணற்றில் போட்டு பின் கிணறு இறைக்க வேண்டுமோ என்றபடி அப்பகுதியில் அலைவார்.
வாய்ப்பு கிடைக்கும்.. அவருடைய அன்றாட சீவியம் முடிந்துவிடும்..
இது தவறல்லவா..? நீதியற்ற செயல் அல்லவா..?
"இல்லை இதிலும் ஒரு அடிமட்ட நீதி இருக்கிறது, அசுத்தமான கிணற்றில்தான் போடுகிறேன்.. இதனால் அவர்களுக்குத்தான் நல்லது.." என்பார்.
ஒருவன் திருடாமல் உழைத்து வாழ விரும்புகிறான்.. ஆனால் நாங்கள் தொழிலை வழங்கும் சமுதாயமாக இல்லை..
இது வாழ்க்கைப் போராட்டம்...! தொழில்களை மலர்விக்கும் போராட்டம்..!!
இருப்பினும் தனது செயலில் ஒரு தவறு இருப்பதை மனதார புரிந்து திசை திரும்புகிறார்.. அடுத்து செத்த வீட்டுக்கு சேமக்கலம் அடிப்பது..
சேமக்கலம் என்ற மணி அடிப்பது அக்காலத்தே மிகப்பெரிய தொடர்பு சாதனமாக இருந்தது..
அக்காலத்தே தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தை முன்னேற்றப்புறப்பட்ட இளைஞர் குழுவினர் பெற்றோரை அழைத்து பேசுவதற்காக, நோட்டீஸ் அச்சடித்து போட்டு கூடவே பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரத்தினத்தையும் அழைத்திருந்தார்கள்.
கூட்டம் ஆரம்பித்த நேரம் தாண்டி அரை மணி நேரம் ஆகிவிட்டது நாலைந்து பேரைத்தவிர யாருமே வரவில்லை.
துரைரத்தினம் தொண்டைமானாற்றை கரைத்துக் குடித்தவர், ஏதோ தவறு நடந்துவிட்டதை உடனடியாகக் கண்டு பிடித்துவிட்டார்.
"தொண்டைமானாத்துக்கு ஏன் நோட்டீஸ்.. சேமக்கலத்தை அடிச்சால் சனம் குவிஞ்சிருக்குமே.. தம்பிமாரே எங்கடை சமூகத்திலை சேமக்கலம் பிடிச்ச இடத்தை என்னமும் அச்சு ஊடகம் பிடிக்கவில்லை, அடுத்த முறை சேமக்கலம் அடிச்சுப்போட்டு என்னைக் கூப்பிடுங்கோ " என்றார்.
நமது சமுதாயம் வாசித்து அறிவு பெற்று வாழும் சமுதாயம் என்பதைவிட காதால் கேட்டு வாழும் "செவிவழி" சமுதாயம் என்பது அதன் கருத்தாகும்.
சேமக்கலச் சத்தம் கேட்டால் யாரோ சிவபதம் அடைந்துவிட்டார்கள் என்பது தெரியும் சனம் தானாக வீதிக்கு ஓடிவரும்.
செத்தவீட்டு செய்தியும், சேமக்கலமும் சிவகெங்கைக்கு சிறப்பான வாழ்வை கொடுத்தன.. சில காலம் அது அமோகமாக ஓடியது.
எப்படி காகத்தை போட்டு சிவகெங்கை கிணறு இறைக்கிறார் என்ற செய்தி அம்பலமாக அவருடைய கிணறு இறைக்கும் தொழில் பட்டதோ... அது போல சேமக்கலம் அடிக்கும் தொழிலும் பட வேண்டிய நிலை வந்தது.
பணத்தைக் கொடுத்து கூடவே செத்தவர் பற்றிய தகவலையும் கொடுத்துவிட்டால் சிவகெங்கை முன் பின் தெரியாமல் தனது அறிவிப்பை ஆரம்பித்துவிடுவார்.
இது பிரிவினைக் கூறும் மணியோசை - இவன்
உயிரினைக்காக்கும் மணியோசை.. வல்வை முழுதும் ஒலித்தது அவருடைய சேமக்கலம்..
இதை நன்கு கவனித்த சில இளைஞர்கள் உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக பொய் சொல்லி பணத்தைக் கொடுத்துவிட, இவரும் அதை எல்லா இடமும் மணியடிக்க, உயிரோடு இருப்பவரின் குடும்பத்தவரோடு பிரச்சனை ஏற்பட்டு அந்தத் தொழிலிலும் பின்னடைவு ஏற்படுகிறது.
அடுத்து சவம் எரிக்கும் இடத்திற்கு தொழில் நகர்கிறது..
"டேய் சிவகெங்கை அப்பா என்ன கேட்டாலும் ஒழுங்கா கொடுங்கோ.. செத்தா அந்தாளட்டை சவத்தை கொடுத்துப்போட்டு சனம் போயிடும் பிறகு சுடலையிலை கிடந்து தடியாலை அடிதான் வேண்ட வேண்டி வரும் " என்று பலர் அவருக்கு பயப்படும் நிலையும் வந்ததது.
அரிச்சந்திர மயான காண்டத்தை மேடையில் நடித்து பெயரெடுத்தவர் பலர்.. ஆனால் அதையே வாழ்வில் செய்து பெயரெடுத்தவர் இவர்..
" செய்யும் தொழிலே தெய்வம்.. சவம் எரித்தாலும் அது தொழிலே ..!" என்று இவர் களமிறங்கினார்... சாதிக்கொரு சுடலை வைத்து பெருமை காட்டிய அக்காலத்து மனிதர்களை சுடலையில் வைத்து தோற்கடித்தார் இந்த மனிதர்.
இவருடைய வாழ்வின் இன்னொரு சிறப்பம்சமாக நாம் கவனிக்க வேண்டியது சிறு பிள்ளைகளை தனியாகக் கண்டால் நடனமாடி பாட்டுப்பாடி மகிழ்விப்பது இவருடைய இன்பம்.
அக்காலத்தே சிறு பிள்ளைகளை தனியாகக் கண்டால் ஓங்கி அடிப்பது, துரத்தி அடிப்பது, கடற்கரையில் விளையாடும் போது கட்டு மரத்தில் ஏறினால் அடிப்பது, கோயிலில் அடிப்பது என்று சிறு பிள்ளைகளுக்கு அடிக்கும் உளவியல் பாதிப்படைந்தோர் அனைத்து ஒழுங்கைகளிலும் வாழ்ந்தர்கள்.
இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்... வேறொன்றும் இல்லை.. இவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது அடி வாங்கியிருப்பார்கள்.. அதன் உளவியல் தாக்கம் தொடர்கிறது என்பதே பொருளாகும்.
இத்தகைய மோசமான மனிதர்கள் வாழும் தெருக்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல இவர் சிறு பிள்ளைகளை ஆடிப்பாடி மகிழ்வித்து வாழ்ந்த ஏழைத் தொழிலாளி.
"ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது.." என்ற அரிய தத்துவத்தை கண் முன் வாழ்ந்து காட்டியவர்.
இரண்டாவது பெரிய முக்கியம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்பதை விடுத்து தான் வாழ்ந்த சமுதாயத்தையே சரியாக அவதானித்து அங்கு செய்ய ஆளில்லாமல் கிடந்த எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்தார்..
சவம் எரித்தாவது வாழலாம் என்று நினைத்தார்.. அரிச்சந்திர மகாராசா கூட போனதுதானே சுடலை..
இப்படி பல தொழில்களை செய்தாலும் யாரிடமும் பிச்சை கேட்டு கையேந்தும் வாழ்வை வாழாது உழைத்து வாழ்ந்தார்.. இது பெரிய சிறப்பல்லவா.. ?
இந்தப் பூமியில் வாழ நமக்கு இடமிருக்கிறது என்பதை ஒரு புதிய கோணத்தில் வாழ்ந்து காட்டினார், படம் பிடித்துக்காட்டினார்.
இவருடைய வாழ்க்கைத் தத்துவம் இந்தப் பாடலில் இருக்கிறது..
"நேரம் காலம் பார்த்தும் - அந்த
ராகு கேதை கேட்டும்
வாழ்க்கை வாழ நினைத்தால் - உன்
வயது முதிர்ந்து போகும்."
"துணிந்தால் உழைக்க துணிந்தால்
கரைந்தால் தொந்தி கரைந்தால் - இந்த
உலகம் உனக்கு வணங்கும்.. "
ஆம்.. சிவகெங்கை என்ற தெருவோரத்து மனிதரை இன்றும் நாம் மதிக்க அவருடைய சமரசக் கொள்கையே பிரதான காரணம்.
ஏழை - பணக்காரன், கற்றவன் - கல்லாதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி சமரச வாழ்வு கண்ட மனிதர் அவர்..
வாழ்க்கை என்றொரு பயணத்திலே - சிலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்தில் நிலவாய் சிலர் இருப்பார் - அந்த
வரிசையில் முதல்வன் தொழிலாளி
எத்தனை டாக்டர் பட்டம் பெற்றாலும் சிவகெங்கைபோல சுடலையிலும் ஒரு வாழ்வுண்டு என்பதை வாழ்ந்து காட்ட எல்லோராலும் முடியாது..
பணத்திற்காக உலகப் போர்களை நடத்திய மேலை நாட்டவர் படிக்க வேண்டிய பாடப்புத்தகம் நமது சிவகெங்கை அப்பா...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.S.Thurai (Denmark)
Posted Date: June 24, 2016 at 22:35
முதலில் உங்களுக்கு என் வணக்கம்..
இந்தப்படைப்பில் கவனிக்க வேண்டிய முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்தது மகிழ்வு தருகிறது.. பொற்காலம் ஒன்று பேசப்படுகிறது என்பதை கண்டு உரைத்துள்ளீர்கள்.. மேலும் இந்த ஆக்கங்கள் தமிழ் மொழியில் எடுத்துரைப்பின் வீரியம் எப்படியுள்ளது என்ற கேள்வியை கேட்டு நிற்கின்றன.. நீங்கள் அதைச் சரியாக அடையாளம் கண்டுள்ளீர்கள்..
சாதாரண மனிதர்களை மொழி சாமானியர்களாக்கும், மொழிப்பிரயோகத்தின் அழகு அதற்கு அடிப்படை.. படிக்கும் ஒவ்வொருவரும் மொழி நடை, பிரயோகம், கற்பனை வளம், சாதுரியமான நகர்வு போன்றவற்றை கண்டறிய வேண்டும்..
எதிர்கால படைப்பாளிகளுக்கு இது அவசியம்..
Mylerumperumal velupillai (UK)
Posted Date: June 23, 2016 at 22:24
I read your article about 'manappada manitharkal' and i really enjoyed reading it. You have reminded me about my golden old days in my town vvt. Very well written and keep up the good work
Velupillai Mylerumperumal ( channdi anna)
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.