கொழும்பில் நடைபெற்ற Childer’s Hackethon போட்டியில் சிறந்த இடத்தைத் தக்கவைத்த யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, Hackethon என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2014 (புதன்கிழமை)
இலங்கையில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கணினிப் போட்டிகளில் முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை (Jaffna Vembadi Girls High School) முதல் பத்து இடங்களில் இடம்பிடித்ததோடு, வேம்படி உயர்தர பாடசாலை மாணவிகளின் கணினித் தீர்வுகளும் முக்கிய இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
Hackathon என்றால் என்ன?
Hackathon (hack day அல்லது hack fest அல்லது code fest என்று சொல்லலாம்) என்பது கணணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வாகும். இதில் Computer programmers மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட Graphic designers, Interface designers மற்றும் Project managers ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கணணி மென்பொருள் திட்டங்களை (Software projects & Software development) வடிவமைப்பதாகும்.
சில நேரங்களில் Hackathons கல்வி அல்லது சமூக நோக்கங்களுக்காகவும் பயன் படுத்தப்படுகின்றன.
படம் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி நடைபெற்ற Hackathon போட்டி ஒன்று ஆகும்.
இலங்கையில் நடைபெற்ற போட்டி
சர்வதேச சிறுவர் உரிமை மாநாட்டின் 25ஆவது வருடத்தை முன்னிட்டு (25th Anniversary of the Convention on the Rights of the Child - CRC@25) ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் (UNICEF) 2014 ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஞாபகார்த்த வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனை அனுஷ்டிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் பங்குபற்றச் செய்து குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக கணினி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை சிறுவர்கள் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் முகமாக இலங்கையில் முதன் முறையாக 'ஹெக்கதோன்" போட்டியொன்றை நடாத்தியது.
இலங்கை முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் இந்த போட்டியில் பங்குபற்றியிருந்தன. இந்த போட்டியில் முதல் சுற்றில் 25 சிறந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இந்த பாடசாலைகள் மத்தியில் கடும் போட்டி நிலவியதோடு, பல தீர்வுத் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்தத் தீர்வுத் திட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்கு 10 பாடசாலைக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
Childer’s Hackethon போட்டியின் அரையிறுதிச் சுற்றுப் போட்டி 30-10-2014 அன்று கொழும்பின் கொட்டாவ (Kottwa) வில் அமைந்துள்ள வோட்டர் எட்ஜ் (Water Edge) இல் நடைபெற்றது.
இந்த போட்டி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.30 அளவில் பரிசளிப்பு வைபவத்துடன் முடிவடைந்ததோடு, இதில் பங்குபற்றிய 10 குழுக்களும் தமது கணினித் தீர்வுகளை நடுவர்களுக்கு விளக்கியதோடு, வர்ணனையொன்றையும் அளித்தனர். அத்தோடு நடுவர்கள் கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தையும் அளித்தனர்.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு பெரும் வரவேற்பு
யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நடுவர்கள் முன்னிலையில் சரளமாகவும் தைரியமாகவும் ஆங்கில மொழியில் தமது படைப்பாற்றல்களை விளக்கியமையானது ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றிருந்தது .
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் முன்வைத்த கணினித் தீர்வானது பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்கள் தமது திறமைகளை எவ்வாறு உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்பதாகும்.
அதில் பல்வேறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. இசை, நாடகம், பேச்சு, கவிதை, நடனம் உட்பட பல்வேறு பகுதிகள் அதில் உள்ளடங்குகின்றன.
குறிப்பாக மேடையில் ஏறி தமது ஆற்றலை வெளிப்படுத்த தயங்கும், மற்றும் கூச்ச சுபாவமுள்ள மாணவர்களுக்கு தமது திறமைகளை தைரியமாக வெளிப்படுத்துவதற்கு இதுவொரு சிறந்த மேடையாகவும், தளமாகவும் அமையுமென்பதே அவர்களது தீர்வுத் திட்டமாகும்.
இந்த தீர்வுத் திட்டத்தை முன்வைத்த போது, நடுவர்கள் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பின அதற்கு தைரியமாகவும், நேர்மையாகவும் பதிலளித்தனர். அத்தோடு அதனை எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 அணிகளின் விபரங்கள் வருமாறு,
முதலாம் இடம் - பெந்தர மிரிஸ்வத்த பாடசாலை
இரண்டாம் இடம் - கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
மூன்றாம் இடம் - கிரிபத்கொட விகாரமஹா தேவி மகளிர் பாடசாலை
இந்த ஹெக்கதோன் போட்டியை கல்வி அமைச்சு (Ministry of Education), இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்(ICTA) மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா (Microsoft Srilanka), கூகில் (Google) ஆகிய நிறுவனங்களை இணைத்துக் கொண்டு UNICEF நிறுவனம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Iswaran (UK)
Posted Date: November 12, 2014 at 21:36
‘Hats off’ to you ValvettithuraiOrg! This type of detailed news will be welcome by young computer enthusiasts. Thanks for your article and hope to publish more technology and educational news.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.