ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
‘தலைவர் என்றோ கை காட்டினார்’ என்பதைக் கூறி, தற்போதுள்ள சுமந்திரன், சம்பந்தன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்புவது பாதகம். ‘ஒரு சில எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்களையாவது (தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதாவது சைக்கிள்) தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும், அப்பொழுதுதான் இப்பொழுது உள்ளவர்கள் அடுத்த தேர்தல் பற்றி யோசித்து செயற்படுவார்கள்’ என்றேன் – கடந்த மூன்று வருடங்கள் முன்பு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது.
‘தமிழ் தேசியக் கூடமைப்புக்கு (குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு) தேர்தலில் ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். இந்தக் கூட்டமைப்பு நிலைத்து நிற்காது, மக்கள் வெகு விரைவில் இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள்’ – என்றெல்லாம் நண்பர்கள் வட்டத்தில் வாதிட்டேன். எனது கருத்துடன் பலரும் அப்பொழுது உடன்படவில்லை, ஓரிருவரைத் தவிர.
ஆனாலும் என்னைப்போல் பரவலாக வடக்கில் வேறும் சிலர், குறிப்பாக நடுத்தர வயதினர், அப்போது எனது கருத்தை ஒத்து கருத்திட்டார்கள், செயற்பட்டார்கள். சைக்கிள்காரர் அன்றைய பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது 2 சீற்றுக்களையாவது எடுப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது திரு.சிவாஜிலிங்கத்தையும் ஒதுக்கிவிட்டார்கள் என்ற ஆதங்கம். ஒரு எதிர்க்கட்சி (நான் குறிப்பிடுவது சைக்கிள்) உறுப்பினராவது பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற நோக்கில், இருந்த குறுகிய விடுமுறையில் மீண்டும் ஊர் சென்றேன்.
நேரடியாக அரசியல் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் எனது வட்டத்தில் பலருக்கு தெளிவு படுத்தமுனைந்தேன்.
ஏமாற்றம், சம்பந்தனும் சுமந்திரனும் தான் எங்களுக்கு ஏதாவது பெற்றுத் தருவார்கள் என்று கூறி, அந்தத் தேர்தலில் சைக்கிளை மக்கள் படுதோல்வி அடையச்செய்தார்கள்.
அன்று பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், நண்பர் ஒருவர் உடனடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு – (உனது) ‘முடிவைப் பார்த்தாயா’ என்றார். சற்றுக் கூனிக்குறுகிவிட்டேன். ஆனாலும் நம்பிக்கை இருந்தது. எனது எதிர்பார்ப்புக்கள் என்றும் நிரந்தரமாக பிழைத்ததில்லை என்பதால்.
கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் – சைக்கிள்காரர் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை ‘முதலாவது இடம்’ என்றளவுக்கு கைப்பற்றியுள்ளார்கள் . ஏனைய இடங்களில் ‘இரண்டாவது’ அல்லது ‘மூன்றாவது இடம்’ பெற்றுள்ளார்கள். மூன்று வருடத்துக்கு முன்னர் என்னைப் போன்றவர்களுக்கு இருந்த தெளிவு – இப்பொழுது பலருக்குப் பிறந்துள்ளது. எனக்குத் திருப்தி.
வல்வெட்டித்துறை பலவற்றுக்கு ஆரம்பப்புள்ளி இட்டது என்று திரும்பத் திரும்பக் கூற வேண்டியுள்ளது. அதில் இன்னொரு விடயத்தையும் இங்கு சேர்கின்றேன்.
தற்பொழுது பலமான தமிழ் கட்சியாக பிரகாசிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், கடந்த பாராளுமன்ற முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் வல்வெட்டித்துறையில் (ரேவடிக் கடற்கரையில்) தான் இடம்பெற்றது. வரலாற்றில் பதித்துவிடுங்கள்.
(சைக்கிள் அன்று தோற்றபோதிலும், அதிக வாக்குகள் எடுத்த தொகுதி - பருத்தித்துறை தொகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குள் தான் வல்வெட்டிதுறையும் அடங்குகின்றது).
அப்பொழுது பருத்தித்துறை தொகுதிக்கு சைக்கிள் சார்பில் போட்டியிட்டவர் திரு.அமிர்தலிங்கம் இராசகுமாரன். பல்கலைக் கழக விரிவுரையாளர். அவர் தொண்டைமனாற்றைச் சேர்ந்தவர் என்பது அநேகமானோருக்குத் தெரிந்திருக்கவில்லை.
என் வீடு தேடி தனக்கு ஆதரவு கேட்டு வந்திருந்தார். அவர் தோற்றதும் மனதளவில் வருத்தம்
தற்போது கூட்டமைப்பின் நிலை
சில மாதங்கள் முன்பு கூத்தமைப்பிலும் (என்று தான் பதிவிடுவார் எனது சிறிய தந்தையார்) ஒரு துண்டு உடைந்துவிட்டது. இறுதி நேரத்தில் மிகுதியாக இருந்த துண்டுகளும் உள்ளுக்குள் உடைந்து பின்னர் தற்காலிகமாக கொழும்பில் ஒட்டிக்கொண்டன. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிகளில் அவைகளும் உடையும். அல்லது கடந்த வாரம் கொடுத்த தேர்தல் முடிவுகள் பல துண்டுகளை மீண்டும் பலமாக ஒன்றாக்கும்.
‘உலகிற்கு தமிழர் பிரதநிதியாக கூட்டமைப்பு காட்டப்பட வேண்டும், அப்பொழுதான் தீர்வு திட்டம் கிடைக்கும். அதற்காகவே அவர் இதை உருவாக்கினார்’. பாராளுமன்றத்தில் எமக்குப் பலம் வேண்டும். என்றார்கள் பலர்.
2009 ற்குப் பின்னர் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் சென்றுள்ளார்கள். இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள். தமிழர்களுக்காக என்னத்தைச் செய்துள்ளார்கள். எனக்குத் தெரிய ஒன்றுமில்லை.
கடந்த வார தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு (குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் போன்றோருக்கு) ஒரு பாடம் கற்பிக்கும் என்று இவர்களுக்கு ஆதரவு கொடுத்த பலர் நினைப்பார்களேயானால் அதுவும் முட்டாள்தனம்.
ஏன் என்றால் இவர்கள் அரசியல் சாணக்கியர்கள்.
கடந்த வார முடிவுகளைக் கணக்கில் கொண்டு, தமிழர் பிரச்சனையை தள்ளிவைத்துவிட்டு, அடுத்த தேர்தலில் எவ்வாறு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் - என்றளவுக்கு குறைந்தது சிந்திக்கத் தெரிந்தவர்கள், காயை நகர்த்தத் தெரிந்தவர்கள். ‘வளம்’ உம் பெற்றவர்கள்.
சில விடயங்களில் குழம்பித்தான் தெளியவேண்டும், சிலவற்றை இழந்துதான் பெறவேண்டும். 2009 இல் இழந்ததை விடவா இவர்களை இழப்பதால் நாம் இழக்கப் போகின்றோம்?.
வல்வை நகரசபை தேர்தல் முடிவுகள்
வல்வை நகரசபை தேர்தல் முடிவுகள் ஓரளவுக்குப் பலரும் எதிர்பார்த்ததுபோல் தான் வந்துள்ளது. முக்கியமாக ‘வரிசை’ நான் பலருக்கு கூறியதுபோல சரியாக வந்துள்ளது.
ஆனாலும் விகிதாசாரத்தில் விளைந்த சிக்கலால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது.
உங்கள் சிலரின் குழப்பங்களுக்கு விளக்கம்
‘7 வட்டாரங்களில் வென்றுவிட்டார்கள், பின்னர் ஏன் ஆட்சி அமைக்க முடியாது. ஏன் விகிதாசாரத்தில் ஒரு சீற்றையும் பெறவில்லை’ என்ற குழப்பம் பலருக்கு உண்டு.
இலகுவான உதாரணம் ஒன்று.
ஒரு போட்டியில் இருவர் (A, B) போட்டி இடுகின்றனர். ஒருவர் (A) 51 புள்ளிகள் பெறுகின்றார். மற்றவர் (B) 49 பெறுகின்றார்.
A முதலாவது என்பது தெளிவு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றார். ஆனாலும் B பெற்றது A யை விட வெறும் 2 புள்ளிகள் தான குறைவு, 49 புள்ளிகள். ஆகவே B யையும் அவர் பெற்ற புள்ளிகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப தகுந்த ஒரு நிலைக்கு உயர்த்தப்படுகின்றார்.
மேற்குறித்த இலகுவான நடைமுறைதான், இந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது நல்ல விடயம் பலரின் உழைப்பு, விருப்பு உள்வாங்கப்படுகின்றது இதில் என்பது ஒரு அனுகூலம். பிரதான வேட்பாளர்களான Dr.மயிலேறும்பெருமாள், திரு,தர்மலிங்கம், திரு.செல்வேந்திரா போன்றோர் வட்டாரத்தில் போட்டியிடாமல், விகிதாசாரத்தில் தமது பெயர்களைப்போட்டு, இலகுவாக உறுப்பினர் ஆகலாம் என்பது மற்றொரு அனுகூலம்.
பிரதான பிரதிகூலம் - பல இடங்களில் தொங்குசபைகள் தான் தோன்றும். தோன்றியுள்ளது.
உதாரணம் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை.
கூட்டணி ஆட்சிகள், குட்டி குட்டி சபைகளில் எல்லாம் அமையும். தேர்தலுக்கு முன்னர் எதிரிகளாக இருந்தவர்கள் ஒன்றாவர்கள். கொள்கைகள் காற்றில் பறக்கும். சபைகள் உருப்படியாக நான்கு வருடங்கள் இயங்காது.
மாற்றம் கண்ட வல்வை நகரசபை
எனக்கும் சில வருடங்கள் முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட விரக்தி காரணமாக - வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் வருகின்றபொழுது, ‘சுயேட்சைக் குழு’ ஒன்றை நாம் இறக்கி, வல்வை நகரசபையைக் கைப்பற்றி, கூடமைப்புக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். அவ்வாறான பாடம் முதலில் வல்வெட்டித்துறையில் இருந்துதான் செல்லவேண்டும் என இந்தத் தேர்தலுக்கு முன்பாகவே பலரிடம் கூறினேன். பெரிதுபடுத்தவில்லை.
தேர்தலுக்கு நான்கு மாதங்கள் முன்பு திடீர் என்று செல்வேந்திரா தலைமையில் ‘சுயேட்சைக் குழுவாம்’ என்ற செய்தி.
சிவாஜிலிங்கம் அவர்கள் (வல்வையில் கூட்டமைப்பு என்றால் அது சிவாஜிலிங்கம் தான்) கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரை அந்த நேரம் தெரிவுசெய்திராத நிலையில், செல்வேந்திரா மிகப் பொருத்தமானதொரு தலைமை வேட்பாளராக அடையாளம் காணப்பட்டார். இது உண்மை. சிவாஜிலிங்கம், செல்வேந்திரா இருவரிடமும் இதை நேரடியாகக் கூறியிருந்தேன்.
திரு.செல்வேந்திரா அவர்கள் நாணயமானவர். 88 களில் வல்வை பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்து செயற்ப்பட்டவர். சிவாஜிலிங்கம் போல் குடும்பத்துக்கு என்று எதுவும் செய்ய வேண்டிய கடமைப்பாடு இல்லாதவர். ஆகவே நேர்மையான சேவையை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் சுயேட்சைக் குழுவின் ஆரம்ப உருவாக்கத்தில் வேறு அரசியல் பின்னணி இருந்தது என்று நான் கருதி, சுயேட்சைக்குழு மீது அக்கறை காட்டவில்லை. (நான் கருதிய அரசியல் பின்னணி பின்னர் அகன்றுவிட்டது என்று நம்புகின்றேன்). பொதுவாக கூட்டமைப்பில் அதிருப்தி இருந்தாலும், வல்வை என்றளவில் தற்பொழுது சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எதிராக செயற்படுவதும் நல்லதல்ல என்ற சங்கடமும் உண்டு. ஏனெனில் கூட்டமைப்புக்கு பாடம் என்பது வேறு, வல்வை நகரசபை மற்றும் அதன் வளர்ச்சிகள் என்பது வேறு.
கூட்டமைப்புக்கு வல்வையில் வெற்றியா தோல்வியா
தேர்தல் முடிவுகளின் படி, வாக்குகள் அடிப்படியில் கூட்டமைப்புக்கு வல்வையில் தோல்விதான்.
பரவலாக கூட்டமைப்புக்கு எதிராக இருந்த வெறுப்பு இங்கும் பிரதி பலித்துள்ளது. ஆனாலும் சிவாஜிலிங்கம் என்ற அரசியல் சக்தி, கூட்டமைப்பின் இருப்பை குறைந்தது முதலிடம் என்று தக்க வைத்துள்ளது.
வட்டார ரீதியில் 7 இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், விகிதா சாரத்தில் ஒரு இடத்தைக்கூட பெறமுடியாமல் போய்விட்டது.
முக்கிய காரணம் தொண்டைமானாறு மற்றும் ஆதிகோவில் வட்டாரங்கள் உட்பட சில வேட்பாளர் தெரிவில் சிவாஜிலிங்கம் தவறிவிட்டார்.
தொண்டைமானாறு வட்டாரத்தில் EPDP சார்பில் போட்டியிட்ட வென்ற இளைஞர் கமல். பல பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டுள்ளவர். எனது நண்பர் (எனது தந்தையார் பெயரிட்ட தொண்டைமானாறு பொன்னொளி வாசிகசாலையின் தற்போதைய தலைவரும் கூட). செல்வசந்நிதி கோயில் அடியைச் சார்ந்தவர். தொண்டைமானாறு சம்பந்தப்பட்ட பலவிடயங்களை அறிந்து வைத்துள்ளார். பிரதேச சம்பந்தமான பல கூட்ட வாதங்களில் கலந்து கொண்டுள்ளார். பலமான ஒரு வேட்பாளார். இதைவிட EPDP க்கு குறிப்பிட்டளவு நிரந்த வாக்கு வங்கியும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆகவே இவருக்குப் ஓரளவு போட்டியாக இருக்கக் கூடிய ஒருவரை, சிவாஜிலிங்கம் அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.
அதேபோலஆதி கோவில் வட்டாரம்.
சுயேட்சை வேட்பாளாராக நின்ற திரு.சுந்தரலிங்கம் அவர்கள் 88 களில் வல்வை பிரஜைகள் குழுவில் இருந்து செயற்பட்டவர், ஆதிகோவிலில் நன்கு அறியப்பட்டவர். அத்துடன் இங்கு கடந்த 2 தடவைகளிலும் EPDP தான் வென்றுள்ளது.
இங்கும் வேறு ஒருவரின் பெயரை வேட்பாளாராக போடலாம் என்று கூறியிருந்தேன். அப்படி வேட்பாளர்கள் தெரிவில் மிகவும் துல்லியமாக செயற்பட்டிருந்தால், சில வாக்குகள் ஏனும் பெற்று, விகிதாதாசாரத்தில் ஓரிரு சீற்றைப் பெற்றிருக்கலாம்.
தொண்டைமானாறு மற்றும் ஆதிகோவில் ஆகிய 2 வட்டாரங்களில் கூட்டமைப்பு வெல்வது கடினம் என்று, நான் பலருக்கும் திடமாகக் கூறியிருந்தேன்.
கூட்டமைப்பு பல இடங்களில் தோல்வி பெறக் காரணம் சம்பந்தன், சுமந்திரன் என்று பலர் கூறினாலும், பிரதான காரணம் – அவர்கள் தற்போதைய தலைமுறையினரை அடிமட்டத்தில் இருந்து அரசியலுக்கு கொண்டுவரத் தவறியதே.
என்னைப் போன்ற நடுத்தர வயதினருக்கே தமிழரசுக்கட்சி பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. தந்தையார் முன்னர் தமிழரசுக் கட்சியில் இருந்ததால் சொற்பம் தெரியும். என்னைப் போன்றவர்களுக்கு கண்களில் தெரிவது இயக்கம் தான். ஏனெனில் நாங்கள் வளர்ந்த காலத்தில் இருந்தவர்கள் இவர்கள் தான். கூட்டமைப்புக்கு உயிர் கொடுத்தவர்களும் அவர்கள்தான்.
கூட்டமைப்பை இங்கு வல்வையில் எடுத்துக்கொண்டால், தமிழரசுக் கட்சியில் திரு.குலநாயகம், ரெலோவில் திரு.சிவாஜிலிங்கம் என்று ‘One man show’ தான். PLOTE அப்படி என்று ஒன்று இங்கில்லை.
இவர்களது அலுவலகமோ அல்லது அடிமட்டத் தொண்டர்கள் என்றோ ஏதும் இங்கு இருப்பதாகவோ அல்லது இதற்கு ஏதும் முயற்சி எடுக்கப்பட்டதாகவோ எனக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி.
ஆனால் சைக்கிள் இந்த விடயத்தில் மெதுவாக ஆனால் திடமாக நகர்ந்து வருகின்றது.
சுயேட்சைக் குழு
கூட்டமைப்பு மீதான வெறுப்பு, கடந்த நகரசபையில் இடம்பெற்ற குழப்பம் என்பன சுயேட்சைக் குழுவுக்கு மிகப்பலத்தைச் சேர்த்திருந்தன. இவற்றை விட பலம் நான் முன்னர் கூறியதைப் போல - குழுவின் பிரதான வேட்பாளர் திரு.செல்வேந்திரா அவர்கள்.
செல்வேந்திரா அவர்கள் ‘ஆகத்திறம்’ என்று சிலர் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் தற்பொழுது இருப்பவர்களில் சிறந்தவர். இதையும் நான் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தேன்.
சுயேட்சையும் சில விடயங்களில் சொதப்பிவிட்டது. ‘வளமான வல்வெட்டித்துறை’ இதுதான் சுயேட்சையின் தேர்தல் கருப்பொருள்.
வல்வெட்டித்துறை நகரசபை என்பது பொலிகண்டி, வல்வெட்டியின் ஒருபகுதி, கொம்மந்தறை, பொலிகண்டி, மயிலியதனை போன்ற பகுதிகளை உள்ளடகிய ஒரு பிரதேசம்.
சுயேட்சை உருவாக்கத்தில் இருந்தவர்கள் ‘வல்வெட்டித்துறை’ யை மட்டும் சேர்ந்தவர்கள் தான்.
‘மீன்’ சின்னமும் இயற்கையாகவே இதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துவிட்டது.
சுயேட்சையின் வீச்சு என்பது ‘வல்வெட்டித்துறை’ க்கு அப்பால் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை.
திரு.செல்வேந்திரா அவர்களோடும் தேர்தலுக்கு முன்னர் கதைத்தபொழுது, இவைபற்றி எல்லாம் கூறியிருந்தேன்.
சுயேட்சை தனியாக வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இந்த முறைதான் செய்திருக்க வேண்டும். ஏனெனில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இனிவரும் காலங்களில் சுயேட்சைக்குழு தனியாக ஆட்சி அமைக்கக் கூடியளவில் சீற்றுக்களைப் பெறமுடியும் என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.
சைக்கிள்
வல்வையைப் பொறுத்தவரை சுயேட்சைக் குழு, தேர்தலில் களம் இறங்காது விட்டிருந்தால், வல்வை நகரசபையை சைக்கிள் இலகுவாக கைப்பற்றியிருக்கும் என்பது மிகத்தெளிவு.
அப்படி வென்றிருந்தால் உலக ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய செய்தி ஒன்று கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதாவது ‘வல்வெட்டித்துறை நகரசபையை சைக்கிள் கைப்பற்றியுள்ளது’ என்று.
இது சைக்கிளுக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தினைக் கொடுத்திருக்கும். அத்துடன் எதிர்வரும் தேர்தல்களிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
வல்வை நகரசபை - எப்படி ஆட்சி அமையப்போகின்றது
பெரும்பான்மை ஒருவருக்கும் இல்லை.
சைக்கிளும் வீடும் ஒருவருக்கு ஒருவர் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, வலிகாமம் தெற்கு ஆகிய சபைகளில் கை நீட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். ஆகவே இங்கு சைக்கிள் வெளியில் இருந்தோ அல்லது சேர்ந்தோ, கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கின்றேன் .
கூட்டமைப்பு தவிர்ந்த, சுயேட்சை உட்பட்ட ஏனைய எல்லாம் கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ‘கணக்குப்’ படி சாத்தியம் உள்ளது. அல்லது கூட்டமைப்புடன் சுயேட்சை ஆட்சி அமைக்கலாம். ஆனால் அப்படி சேர்ந்தால் ‘சுயேட்சை’யின் கொள்கை காற்றில் பறந்ததாகிவிடும்.
‘ஏன் நீங்கள் TNA வில் போட்டியிடலாமே, நான் சிவாஜி அண்ணாவுடன் கதைக்கட்டுமா’ என்று திரு செல்வேந்திரா அவர்களிடம் கேட்டபொழுது, ‘எனக்கு கட்சி அரசியலுக்குள் செல்ல விருப்பமில்லை, ஊருக்கு சேவை செய்வதே என் நோக்கம்’ என்றார்.
ஆகவே நான் இரண்டாவதாக மேலே குறிப்பிட்ட - ஏனைய கட்சிகள் கூட்டுக்கு சாத்தியம் குறைவு.
ஆனாலும் ‘அரசியலில் இது எல்லாம் சகஜம் அப்பா’ என்று கவுண்டமணி கூறுவது போல் நடந்தாலும் நடக்கலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வல்வை சுமன் (Uk)
Posted Date: February 13, 2018 at 06:16
மிக நீண்ட ஓர் நேர்த்தியான அரசியல் அலசல் மிகச்சிறப்பு அண்ணா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.