ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
கடந்த நான்கு வருடங்கள் முன்பு என்னோடு பெரும்பான்மை இனைத்தைச் சேர்ந்த ஒருவர் பணிபுரிந்தார். எனக்கு அடுத்த நிலை அதிகாரி. பல விடயங்களைக் கதைப்பது வழக்கம். அன்னபூரணி பற்றி கூறியபோது வியந்து போனார்.
அவ்வாறு கதைக்கும்பொழுது ஒரு நாள் அவர் ‘தான் அண்மையில் தெற்கில் புராதான வேலைப்பாடுகளுடன் கூடிய தங்குமிடம் (Resort) ஒன்றுக்குச் சென்றதாகவும் அங்கு யாழ்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘Antiques’ (புராதான சின்னங்கள்) வைக்கப்பட்டிருந்ததாகவும்’ கூறினார். ‘அவற்றில் 6 அடி உயர செம்பிலான குத்துவிளக்கும் ஒன்று இருந்ததாகவும், பல லட்சங்கள் கொடுத்து தாம் இதனை யாவாரிகளிடம் வாங்கியதாக அந்த ஹோட்டல்காரர் தன்னிடம் கூறியதாகவும்’ அவர் மேலும் என்னிடம் கூறினார்.
அத்துடன் மட்டுமல்லாமல், நாம் எமது பகுதிகள் சூறையாடப்பட்டுள்ளது என பரவலாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை என்றார் அவர். ஏனெனில் வடக்கின் பல புரதான பொருட்களை, தான் தெற்கில் இது போன்ற சில இடங்களில் கண்டுள்ளதாகவும் மேலும் அவர் என்னிடம் குறிப்பிட்டார்.
செம்பு, பித்தளை போன்றவற்றாலான குத்துவிளக்குகள், பெட்டகங்கள் போன்றவற்றுடன் மட்பாண்டங்களாலான கூசா மற்றும் சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்கள், இரும்பு போன்ற ஏனைய உலோகங்களாலான பொருட்கள் – இவை வெறும் பழைய ஞாபகார்த்தப் பொருட்கள் அல்ல – இவை தமிழரின் வரலாற்றை, வருடங்களை பறைசாற்றி நின்றவை, நிற்பவை.
கடந்த வருடம் கலைக்கேசரியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆராச்சிக் கட்டுரையில், வல்வெட்டித்துறையின் தொன்மைபற்றித் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆராச்சியை மேற்கொண்டிருந்த பேராசிரியர் குழாமினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தவை இது போன்ற பழைய வரலாற்றுச் சின்னங்கள் தான் – நாம் தேவையில்லை என்று ஒதுக்கி வீசப்பட்டிருந்தவைதான்.
குண்டடிகளில் ஒரு புறம், உள்ளூர் திருடர்களால் மறுபுறம், சனம் விட்டுச்சென்றபொழுது இருந்தவர்களால் களவாடப்பட்டது இன்னொரு புறம்......எனப்பலவற்றால் தமிழர்களின் அடையாளங்களைப் வெளிப்படுத்தி நின்ற பல தொன்மையான (Antiques ) பொருட்களை நாம் காவு கொடுத்துவிட்டோம்.
எமது சக்திக்கு அப்பாற்பட்டு நடந்துவிட்டன இவை.
ஆனால் தொடரும் கொடுமை என்னவென்றால், ‘பழைய இரும்பு, பித்தளைக்கு பேரீச்சம்பழம்’ என்ற கதையைப்போல், பலர் குறிப்பாக தெற்கில் இருந்து வரும் வியாபாரிகள், இப்பொழுதும் எஞ்சியுள்ள எமது தொன்மையான சொத்துக்களை வழித்தெடுத்துச்செல்வதை அறியாமல் நாம் எல்லோரும் கைகட்டிப்பார்த்து நிற்பதுதான்.
சாதாரண யாவாரிகள் போல் கபடம் செய்யும் இவர்கள், ‘பழைய போத்தல்கள், பெட்டிகள், பேப்பர்கள் போன்றவற்றுக்கு காசு’ எனக்கூறி இருக்கும் மீதியையும் விடாது தொடர்ந்து தேடித்துருவி எடுத்துச்செல்கின்றார்கள்.
இங்குள்ள அறியாமை, வறுமை போன்றவை யாவாரிகளுக்கு இதற்கு ஆதாயமாக இருந்து வருகின்றது.
இதைத்தடுக்க வேண்டியவர்கள் இங்கு ஆட்சிசெய்துவரும் வடமாகாணசபையினரும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினரும் தான். ஆனால் இவர்களில் எத்தனை பேருக்கு இவற்றின் மதிப்புத்தெரியும்? யாவரும் மெளனம்.
பலவற்றை மீளப்பெற முடியாதளவுக்கு இழந்துவிட்டோம். இருக்கும் இவை போன்ற தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றக் கொள்ளக்கூடியவற்றையும் மெதுவாகவும்ம் முழுவதுமாகவும் இழந்துவருகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.